அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

சோப்பு கம்பெனியால் பாழாகும் நிலங்கள்... சோகத்தில் டெல்டா விவசாயிகள்...

விவசாயி
பிரீமியம் ஸ்டோரி
News
விவசாயி

‘பாதுகாப்பு இல்லாத’ வேளாண் மண்டலம்! -

‘தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது’ என்று மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் ஸ்டாலின். ஆனால், அதே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திலிருக்கும் தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் சலவை சோப்பு தயாரிப்பதற்கான மூலப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஜரூராகச் செயல்பட்டுவருகின்றன. இதனால், தங்கள் விளைநிலங்கள் பாழாகிவருவதாக வேதனை தெரிவிக்கிறார்கள் விவசாயிகள்!

டெல்டா மாவட்டங்களில் சுமார் 50 தொழிற்சாலைகள் இயங்கிவரும் நிலையில், கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

சோப்பு கம்பெனியால் பாழாகும் நிலங்கள்... சோகத்தில் டெல்டா விவசாயிகள்...
சோப்பு கம்பெனியால் பாழாகும் நிலங்கள்... சோகத்தில் டெல்டா விவசாயிகள்...

மேற்கண்ட தொழிற்சாலைகளுக்கு எதிராக தொடர்ச்சியாகக் குரல் கொடுத்துவரும் விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பக்கிரிசாமியிடம் பேசினோம். “ஓ.என்.ஜி.சி நிறுவனம் பூமிக்கடியிலிருந்து கச்சா எண்ணெய் எடுக்கும்போது வெளியாகும் வாயுவை, பூமியின் மேற்பகுதியில் உயரமான குழாய்கள் அமைத்து வெளியேற்றுவார்கள். வாயு வெளியேறும்போது அது எரிந்துகொண்டே இருக்கும். இப்படி வீணாகும் அந்த வாயுவை சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு ஓ.என்.ஜி.சி நிறுவனம் விற்பனை செய்வதுடன், தொழிற்சாலை தொடங்கவும் ஊக்கப்படுத்திவருகிறது. பூமிக்கடியில் குழாய் பதித்து, அதன் வழியாக வாயுவை அந்தத் தொழிற்சாலைகளுக்கு அனுப்புகிறார்கள். இதனால், ஓ.என்.ஜி.சி கிணறுகள் அமைந்துள்ள இடத்துக்கு அருகில், வயல்வெளிக்கு அருகிலேயே அந்தத் தொழிற்சாலைகள் செயல்பட்டுவருகின்றன.

சிலிக்கான் மணல் மற்றும் வாஷிங் சோடா ஆகியவற்றுடன் கெமிக்கல் சேர்த்து, பெரிய பாய்லரில்வைத்து ஓ.என்.ஜி.சி-யிலிருந்து வரும் வாயுவைக்கொண்டு எரித்து, அவற்றை வேகவைப் பார்கள். பின்னர், தூளாகவும் தேவையான வடிவங்களிலும் சோப்பு தயாரிப்பதற்கான மூலப் பொருளான சோடியம் சிலிகேட் வெளியேறும். அதை சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பிவைக்கிறார்கள்.

இதில் வெளியேறும் கழிவுகளைத் தொட்டி அமைத்து பூமிக்கடியில் விட்டுவிடுவதால், நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. பெரும்பாலான தொழிற்சாலைகளில் சுற்றுச்சுவர்களே இல்லை. தயார்செய்யப்பட்ட சோப்புத்தூளைத் திறந்த வெளியில் கொட்டிவைக்கிறார்கள். அது மண்ணில் ஊறி மண்வளத்தை பாதிப்பதுடன், காற்றில் பறந்து அருகிலுள்ள வயல்வெளிகளின் பயிர்களில் படிந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு இது புதிய பிரச்னையாக உருவெடுத்துவருகிறது’’ என்றார்.

சோப்பு கம்பெனியால் பாழாகும் நிலங்கள்... சோகத்தில் டெல்டா விவசாயிகள்...

இந்தப் பிரச்னையால் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயி வெற்றிகொண்டான் நம்மிடம், ‘‘சோப்பு கம்பெனி தொடங்கும்போதே கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால், ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இந்தத் தொழிற் சாலையைத் தொடங்குவதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதனால், விவசாயத்துக்கு எந்த பாதிப்பும் வராது’ என்று அரசு அதிகாரிகள் உத்தரவாதம் கொடுத்து திறக்க அனுமதித்தார்கள். ஆனால், அதெல்லாம் பொய் என்பது பிறகுதான் தெரிந்தது. தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் சோப்புத்தூள், நடவு செய்யப்பட்ட நெற்பயிரில் படிந்துவிடுகிறது. அதனால், நடவுசெய்த முப்பதாவது நாளிலேயே பயிர் மஞ்சள் நிறத்துக்கு மாறிவிடுகிறது. குழாய் வழியாக வெளியேறும் புகை, அருகிலுள்ள இடங்களில் படர்ந்து அந்த இடமே கறுப்பாக மாறிவிடுகிறது. மழை பெய்யும்போது அந்த இடத்திலிருந்து கெமிக்கல் கலந்த நீர் வயலுக்குள் வடிந்து பயிர்கள் நாசமாகின்றன. இதனால் சமீபத்தில் எனது வயலில் நெல் அறுவடையின் போது கருக்காயாக மாறி, பெரிய அளவில் மகசூல் இழப்பையும் ஏற்படுத்திவிட்டது. இப்படி தீபாம்பாள்புரத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் இந்த சோப்பு கம்பெனிகளால் பாதிப்பைச் சந்தித்துவருகின்றன’’ என்றார் வேதனையுடன்.

விவசாயிகளின் பிரச்னைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தஞ்சை மாவட்டத் துணைத் தலைவர் ஜீவக்குமார் நம்மிடம், ‘‘கடந்த 2020-ல் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா பகுதி அறிவிக்கப்பட்டு சட்டமாக்கப்பட்டுவிட்டது. இந்தப் பகுதியில் விவசாயத்தைப் பாழாக்கும் எந்தத் திட்டத்தையும் அனுமதிக்கக் கூடாது. ஆனால், கடந்த ஆட்சியில் மத்திய, மாநில அரசுகள் டெல்டா பகுதிகளில் ஏராளமான சோப்புத்தூள் தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளித்துள்ளன. இதனால், விவசாயிகள் கடும் இழப்பைச் சந்தித்துவருகிறார்கள். எனவே, டெல்டாவிலுள்ள அனைத்து சோப்பு கம்பெனி தொழிற்சாலைகளுக்கும் அரசு உடனடியாகத் தடைவிதிக்க வேண்டும். புதிய அரசு இதைச் செயல்படுத்தும் என்று நம்புகிறோம்’’ என்றார்.

இந்த பிரச்னைகள் குறித்து நம்மிடம் விளக்கம் அளித்தார் மஹாராஜ் சோப்பு கம்பெனியின் மேலாளர் மருதையன். ‘‘சோப்பு மூலப்பொருள்கள் தயாரிக்கக்கூடிய தொழிற்சாலைகளால் விவசாயத்துக்கு எந்த பாதிப்பும் வராது என்பதாலேயே இதை நடத்துவதற்கு அரசுகள் அனுமதியளிக் கின்றன. ஓ.என்.ஜி.சி நிறுவனத்திடமிருந்து ஆயில் கலக்காத நேச்சுரல் காஸை வாங்கிப் பயன்படுத்துவதால் புகை வராது; சுற்றுச்சூழலுக்கு எந்தக் கேடும் கிடையாது. வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட போதே எங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

பக்கிரிசாமி, வெற்றிகொண்டான், ஜீவக்குமார்
பக்கிரிசாமி, வெற்றிகொண்டான், ஜீவக்குமார்

வேளாண் மற்றும் உழவர் நலத்துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தியிடம் இந்த பிரச்னையைக் கொண்டுச் சென்றோம். ‘‘இந்தப் புகார் தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அந்த அறிக்கை வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என உறுதியளித்தார்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பது அறிவிப்போடு நின்றுவிடக் கூடாது. விவசாயத்துக்கு பாதிப்பை உருவாக்கும் எந்த விஷயத்துக்கும் அனுமதியளிக்காமல் இருந்தால்தான், விவசாயத்தைப் பாதுகாக்க முடியும்!