மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

மானிய நிலுவை, கடன் சுமை... கதறும் கறிக்கோழி விவசாயிகள்! -மரத்தடி மாநாடு

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு

மாநாடு

பேருந்திலிருந்து இறங்கி ஊரை நோக்கி நடந்துகொண்டிருந்தார் ‘வாத்தியார்’ வெள்ளைச் சாமி. அப்போது, காய்கறி வியாபாரத்தை முடித்துக்கொண்டு சைக்கிளில் ஊருக்கு வந்துகொண்டிருந்த ‘காய்கறி’ கண்ணம்மா, வாத்தியார் நடந்து போய்க்கொண்டிருப்பதைப் பார்த்து, சைக்கிளிலிருந்து இறங்கி அவருடன் பேசிக்கொண்டே நடக்கத் தொடங்கினார்.

‘‘என்ன வாத்தியாரே... ரெண்டு மூணு நாளா ஆளைக் காணோம். வெளியூர் எங்கயும் போயிட்டீங்களா?’’ என்றார் காய்கறி.

‘‘மகள் வீட்டுக்குப் போயிருந்தேன் கண்ணம்மா. ஆமா, என்னை எதுக்குத் தேடுன... ஏதும் முக்கியமான விஷயமா?’’ ஆர்வமாகக் கேட்டார் வாத்தியார்.

‘‘முக்கியமான விஷயமெல்லாம் எதுவும் இல்ல. தினமும் ஒருதடவையாவது ஏரோட்டியோட உங்களைப் பார்த்திடுவேன். இப்ப, ரெண்டு நாளா பார்க்கல... அந்தாளு தனியாதான் இருந்தாரு. அதான் கேட்டேன்’’ காய்கறி பதில் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, ‘‘பக்கவாட்டுப் பாதையில் தன்னு டைய மோட்டார் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வந்தார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம்.

‘‘அங்க பாரு... அவரே வர்றாரே... ஏன்யா வண்டியைத் தள்ளிக்கிட்டு வர்றே...’’ அக்கறையோடு விசாரித்தார் வாத்தியார்.

‘‘பெட்ரோல் இல்ல... வாத்தியாரே... மொதல்ல 100 ரூபாய்க்கு போட்டா மூணு, நாலு நாளைக்கு வரும். ஆனா, இப்ப ரெண்டு நாள்கூட வரமாட்டேங்குது. விலைவாசி கூடிப்போச்சு. இப்ப வரவுக்கும், செலவுக்கும் சரியா இருக்கு, விவசாயத்தோட கூடுதலா எதாவது தொழில் செஞ்சாதான் இனிமே வர்ற காலங்கள்ல பிழைக்க முடியும்போல இருக்கு. எதாவது, தொழில் ஆரம்பிக்க ஐடியா கொடுங்க வாத்தியாரே’’ ஆர்வமாகக் கேட்டார் ஏரோட்டி.

‘‘ஆட்டுப்பண்ணை, மாட்டுப் பண்ணை, பால் பண்ணை ஆரம்பிக்க நினைக்குறவங்களுக்குத் திட்ட மதிப்புல 90 சதவிகிதம் வரை கடன் கிடைக்குமாம். தொழில் ஆரம்பிக்குறவங்க 10 சதவிகிதம் பணம் போட்டாப் போதும். கடன் தொகைக்கான வட்டியில 3 சதவிகிதத்தை மானியமா மத்திய அரசு கொடுக்குதாம்’’ என்றார்.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு

அதுவரை ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்த ஏரோட்டி, ‘‘இப்படித்தான்யா ஒவ்வொரு திட்டமும் ஆரம்பிக்கும்போது, அரசாங்கம் மானியம்னு விளம்பரம் செய்றாங்க. ஆனா, நடைமுறையில பல திட்டங்கள்ல சொன்ன மாதிரி மானியம் கிடைக்கிறதில்ல. உதாரணமா, கறிக்கோழி வளர்க்குறதை சொல்லலாம். 2013-ம் வருஷம், பின்தங்கிய மாவட்டங்களான அரியலூர், கடலூர், தஞ்சாவூர் மாவட்டங்கள்ல, எல்லோரும் கறிக்கோழி வலர்ப்புல இறங் குங்க... நஷ்டம் வந்தா, மத்திய அரசு சார்பா 25 சதவிகிதம், மாநில அரசு சார்பா 25 சத விகிதம் மானியம் கொடுக்குறோம்னு சொல்லித்தான் விவசாயிகளைக் கோழி வளர்ப்புல இறக்கிவிட்டாங்க. ஆனா, ஒப்பந்த நிறுவனங்கள் நியாயமான வளர்ப்புத் தொகை தரலை. இதுக்காகக் கறிக்கோழி வளக்குறவங்க அங்கங்க போராட்டம் பண்ணிட்டு இருக்குறது உங்களுக்குத் தெரியும். இப்ப, கறிக்கோழி வளர்ப்பு விவசாயிக கடுமையான நஷ்டத் தைச் சந்திச்சுட்டு இருக்காங்க. காரணம், ஒப்பந்த நிறுவனங்கள் கோழிக் குஞ்சுகளை வளர்க்கக் கொடுத்தவுடனே, அவங்க வேலை முடிஞ்சதுன்னு போயிடுறாங்க. குஞ்சுகளுக்குத் தேவையான தீவனம், மருந்து உள்ளிட்ட மத்த எல்லாச் செலவுகளும் சம்சாரி தலையில விழுகுது. குஞ்சுகளையும் தரமில்லாத குஞ்சுகளைக் கொடுத் திடுறாங்க.

அதுக்கு ஏதாவது நோய்வாய்ப் பட்டு இறந்தாலோ, நாய், பாம்பு, கீரி பிடிச்சுட்டுப் போனாலோ அதுக்கான இழப்பீட்டுத் தொகையையும் சம்சாரிக கணக்குல சேர்த்துக்குறாங்க. இப்ப, ரெண்டு வருஷமா விலைவாசி அதிகமானதால செலவைச் சமாளிக்க முடியல. ஒரு கோழி வளர்த்துக்கொடுக்க 6.50 ரூபாய்தான் கொடுக்குறாங்க. அதை 12 ரூபாயாக உயர்த்திக் கொடுங்கன்னு 8 வருஷமா போராடுறாங்க. ஆனா, எந்தக் கம்பெனிக்காரங்களும் கண்டுக்கவேயில்ல. ஏற்கெனவே விவசாயிக பேங்க்ல வாங்குன கடனுக்கு வட்டி கட்ட முடியாம திணறிப்போயிருக்காங்க. இந்த நேரத்துலயாவது மத்திய, மாநில அரசுகள் நிலுவையில வெச்சிருக்க மானிய தொகையை உடனே கொடுக்கணும்னு அரியலூர் மாவட்டத்துல ஆர்ப்பாட்டம் செஞ்சிருக்காங்க’’ என்றார் ஏரோட்டி.

மாடுகள்
மாடுகள்

‘‘இன்னொண்ணு ஒரு கண்ணுல வெண்ணையும், இன்னொரு கண்ணுல சுண்ணாம்பும் வெக்குற வேலையை எல்லா அரசாங்கமும் சரியா செய்யுது’’ என்றார் காய்கறி.

‘‘நீ எந்த விஷயத்தைச் சொல்ற கண்ணம்மா. சொல்றதை தெளிவாச் சொல்லு தாயீ’’ என்றார் வாத்தியார்.

‘‘தக்காளி விலையைத்தான் சொல்றேன். விலை அதிகமாப் போனதால, பண்ணைப்பசுமை கடைகள்ல தக்காளியை விற்பனை செய்யுது கூட்டுறவுத்துறை. இதே தக்காளி ரெண்டு மாசத்துக்கு முன்ன சீந்துவாரில்லாம சாலையோரமாக் கொட்டிட்டுப் போனாங்க விவசாயிங்க. அப்ப அரசாங்கம் கண்டுகிச்சா? பருத்தி விலை ஏறுனதும், ஏற்றுமதியை தடைச் செய்யச் சொல்றாங்க மில் முதலாளிங்க, கோதுமை விலை கூடுனதும் ஏற்றுமதியை தடை பண்ணிட்டாங்க. இப்படி விவசாயி விலை கிடைக்காம கஷ்டப் படும்போதெல்லாம் அதுக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லனு... விவசாயிங்க ஏதோ வேற தேசத்துக்குகாரங்க மாதிரி நடந்துக்குற மத்திய-மாநில அரசாங்கங்கள், விலை ஏறுனதும் முதல் ஆளா, களத்துல குதிச்சு, ஏற்றுமதிக்குத் தடை, அது இதுன்னு நடவடிக்கையில இறங்கிடுதுங்க. விலை அதிகமானா பொதுமக்கள் கஷ்டப் படுவாங்க... அதை நாங்க ஒப்புக்கிறோம். நாங்களும் அந்தப் பொதுமக்கள்ல ஒரு அங்கம்தானே... அதுனால விவசாயிகள், பொதுமக்கள் ரெண்டு தரப்பும் பாதிக்காத அளவுக்கு என்ன செய்யலாம்னு அரசு யோசிக்கணுமா இல்லையா? ஆனா, அதைச் செய்றதில்லையே... மாற்றம் வரும்... விடியல் வரும்னு தேர்தல் வாக்குறுதியில மட்டும் தான் கேட்க முடியுது. யதார்த்தத்துல அது எங்கயும் நடக்குறதில்ல’’ வேதனையில் வெடித்தார் காய்கறி.

‘‘நீ புலம்புற மாதிரியேதான் முதலமைச்சரின் தனிச்செயலர் உதயச்சந்திரனும் புலம் புறாராம். மத்த துறைகள்லாம் ஏதாவது ஒருவகையில வளர்ந்துகிட்டு இருக்கு. ஆனா, விவசாயத்துறை மட்டும் 20 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்துச்சோ, அப்படியே தான் இன்னும் இருக்கு. அரசாங்கம் ஆயிரக் கணக்கான கோடிகளைக் கொட்டிக் கொடுக்குது. தனி பட்ஜெட்டும் போட்டாச்சு. இனியாவது இந்தத் துறையை முன்னேத்தப் பாருங்கன்னு ஒவ்வொரு தடவையும் உயர் அதிகாரிகள் கூட்டத்துல வறுத்தெடுக் குறாராம்’’ என்றார் வாத்தியார்.

மாடுகள்
மாடுகள்

‘‘அரசாங்க ஆணையையே பல இடங்கள்ல அதிகாரிகள் மதிக்கிறதில்ல. இதுல இவர் சொல்றதை செஞ்சிடப் போறாங்களா என்ன? தனியார் நிலம், அரசு நிலம், பொது இடம்னு எந்த இடமா இருந்தாலும் பனை மரங்களை வெட்டக் கூடாது... வேற வழியே இல்ல... வெட்டித்தான் ஆகணும்ங்கிற அவசியம் இருந்தா, கலெக்டர்கிட்ட மனு கொடுக்கணும். அவரு அதை ஆய்வு பண்ணி, அனுமதிக் கொடுத்த பிறகுதான் வெட்ட ணும்’னு தமிழக அரசு அரசாணை போட்டுருக் குது. ஆனா, திருவாரூர் மாவட்டத்துல பல இடங்கள்ல பனை மரங்களை அழிச்சுட்டு இருக்காங்க. இப்ப, வெவ்வேறு இடங்கள்ல செழிப்பா விளைஞ்சிருக்க ரொம்ப வருஷ பனை மரங்களைத் தீ வெச்சும், திராவகம் ஊத்தியும் அழிக்குறாங்க. இதைப் பார்த்துக் கொதிச்சுப் போயிருக்காங்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். பனை மரங்களைப் பாதுகாக்க தமிழ்நாடு பனைப் பொருள்கள் வளர்ச்சி வாரியம் உடனடி நடவடிக்கை எடுக்கணும்னு வலியுறுத்துறாங்க’’ என்று ஏரோட்டி சொல்லிக்கொண்டு இருக்கும்போதே ஊர் வந்துவிட, அவரவர் வீட்டுக்குக் கிளம்ப முடிவுக்கு வந்தது மாநாடு.