
தலையங்கம்
அனைவருக்கும் பசுமை வணக்கம்!
‘‘மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு, இன்னும் எத்தனை நாள்களுக்கு நிலுவையிலேயே இருக்கப்போகிறது. நதிநீர் விவகாரங்களில் அரசியலைக் கலக்காதீர்கள்’’ என்று மத்திய அரசுக்குக் கொட்டு வைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.
தென்னிந்தியாவின் முக்கியமான ஆறுகளில் ஒன்றான தென்பெண்ணை, கர்நாடகா மாநிலத்தில் தொடங்கி கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் வழியாக கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இதன் கிளை நதியான மார்க்கண்டேய நதியில் அணை கட்டும் பணியை சில ஆண்டுகளாக மேற்கொண்டிருக்கிறது கர்நாடகா. இதற்குத் தடை விதிக்கக் கோரியும், ஆற்று நீரை உரியவகையில் பங்கீடு செய்வதற்காக வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரியும்தான் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்தது.
இதைத் தொடர்ந்து, தென்பெண்ணை ஆற்றுநீர் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த 2020-ம் ஆண்டே குழு அமைக்கப்பட்டது. ஆனால், குழுவின் கூட்டம் முறைப்படி நடைபெறவில்லை. கர்நாடகாவை பி.ஜே.பி ஆட்சி செய்வதால், இந்த விஷயத்தையும் கண்டும் காணாமல் இருந்து வருகிறது மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு.
இந்நிலையில்தான், ‘‘இன்னும் 4 வார காலத்துக்குள் தீர்ப்பாயம் அமைத்து அதை அரசிதழில் வெளியிட வேண்டும்’’ என்று மத்திய அரசுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
மத்தியில் எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும், தமிழகத்தை மாற்றாந்தாய் போக்குடன்தான் நடத்துகின்றன. காவிரிப் பிரச்னைக்காக நடுவர் மன்றம் அமைக்க, அப்போது மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ், எந்த முயற்சியும் செய்யவில்லை. காவிரி போராட்டம் கால்நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்த நிலையில், வி.பி.சிங் பிரதமரான பிறகே நடுவர் மன்றம் சாத்தியமானது. உச்ச நீதிமன்றம் சுத்தியலைத் தூக்கியிருப்பதால், தென்பெண்ணைக்கு அந்த நிலை வராது என்று நம்புவோம்!
