ஆசிரியர் பக்கம்
நாட்டு நடப்பு
மகசூல்
Published:Updated:

கூட்டுறவு வங்கியில் இன்ஷூரன்ஸ் கொள்ளையர்கள்!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு

மரத்தடி மாநாடு

நிலத்தில் தன்னுடைய மாட்டை மேய்த்துக் கொண்டிருந்த ‘ஏரோட்டி’ ஏகாம்பரம், ‘‘ஏய் இந்தப் பாரு... நீயும் என்னைக் கடுப்பேத்தாத. இந்தப் பக்கம் வா’’ எனக் கடுகடுத்தார். அப்போது அந்த வழியாக வந்த ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி ‘‘என்ன ஏகாம்பரம் ரொம்ப கோவமா இருக்கீங்க போல’’ எனப் பேச்சுக் கொடுத்தார்.

‘‘வாத்தியாரய்யா, நான் எம்புட்டு கோபக்காரன்னு உங்களுக்கே நல்லா தெரியும். என்னையே ஒரு பஸ் கண்டக்டர் சீண்டிப் பார்த்து வெறுப்பேத்திட்டாரு’’ உரத்த குரலில் ஏரோட்டி சொல்லிக்கொண்டிருந்த போது ‘காய்கறி’ கண்ணம்மாவும் அங்கு வந்து சேர தொடங்கியது அன்றைய மாநாடு.

‘‘மெட்ராஸ்ல இருக்குற என் அண்ணன் மகன் ரொம்ப ஆசையா, ‘சித்தப்பு, நாட்டுக்கோழி கிடைச்சா கொண்டு வாங்கனு சொன்னான். புள்ளை பிரியமா கேட்டுட்டானேனு, வீட்ல இருந்த சேவலை கூடையில அடைச்சு எடுத்துக்கிட்டு பஸ்ல ஏறப் போனேன். இதையெல்லாம் அனுமதிக்க முடியாதுனு அந்தக் கண்டக்டர் சொன்னதும், வந்துச்சுப் பாருங்க எனக்குக் கோபம். கோழியை பஸ்ல ஏத்தக்கூடாதுனு எந்தச் சட்டத்துல சொல்லி இருக்குனு நாக்கை புடுங்கற மாதிரி கேள்வி கேட்டேன்’’ பொங்கித் தீர்த்தார் ஏரோட்டி.

வெண்பன்றிகள்
வெண்பன்றிகள்


அவரை ஆசுவாசப்படுத்திய வாத்தியார், ‘‘பஸ்ல போயி, அந்த மெட்ராஸை சுத்திப் பார்க்க உங்க வீட்டுக் கோழிக்குக் கொடுப்பினை இல்லை. ஆனா, நம்ம தென் மாவட்டங்கள்ல விவசாயிங்க வளர்த்த 104 வெண்பன்றிங்க ரொம்ப ஜாலியா ரயில்ல பயணம் பண்ணி அஸ்ஸாம், நாகலாந்து, மணிப்பூர் மாநிலங்களுக்குப் போயிருக்கு. அதெல்லாம் அதிர்ஷ்டசாலிங்க’’ வாத்தியார் சொன்னதும், ‘‘அட இது என்ன புதுக்கதையா இருக்கு’’ ஆச்சர்யப்பட்டுப் போன காய்கறி. தன்னுடைய தாடையில் கை வைத்தார்.

‘‘இதுக்கே இப்படி அசந்து போய் உட்கார்ந்தா எப்படி. முழுசா சொல்றேன் கேளு. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்கள்ல நிறைய விவசாயிங்க சமீபகாலமா, வெண்பன்றிகள் வளர்த்துக்கிட்டு இருக்காங்க. அதை லாரிகள்ல ஏத்தி, கேரளாவுக்குக் கொண்டு போயி விற்பனை செய்றது வழக்கமாம். ஆனா, அங்க பன்றிக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிச்சதுனால, தமிழ்நாட்டுல இருந்து வெண்பன்றிகளை அங்க கொண்டு போறதுக்கு, கேரள அரசாங்கம் தடை விதிச்சிடுச்சாம். அதுக்காக அந்த விவசாயிங்க சோர்ந்து போயிடல.

உள்நாட்டு மீன் உற்பத்தியில தேசிய அளவுல சிறந்த மையமாகத் தஞ்சாவூர் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுருக்கு. தேசிய மீன்வளம் மேம்பாட்டு வாரியம் இந்த அறிவிப்பை வெளியிட்டுருக்கு.

நாகலாந்து, அஸ்ஸாம் மாதிரியான மாநிலங்கள்ல வெண்பன்றி களுக்கு அதிக தேவை இருக்குங்கறதை தெரிஞ்சுகிட்டு, ரயில்ல வெண்பன்றிகளை ஏத்தி அனுப்பினாங்களாம். இதுக்காக அந்தியோதயா ரெயில்ல கூடுதலா ரெண்டு பெட்டிகளை ரயில்வே நிர்வாகம் இணைச்சுதாம். மூணு நாள்களுக்குத் தேவையான அடர்தீவனம், டிரம்கள்ல தண்ணி, அந்த வெண்பன்றிகளைக் கவனிச்சிக்க ரெண்டு ஆளுங்கனு பக்காவா ஏற்பாடுகள் செஞ்சிருக்காங்க. அந்த 104 பன்றிகளுக்கும் தடுப்பூசி போட்டதுக்கான சர்டிஃபிகேட், கால்நடை மருத்துவரோட மெடிக்கல் சர்டிஃபிகேட்டுகளை எல்லாம் ரயில் நிலைய அதிகாரிகள்கிட்ட அந்த விவசாயிங்க சமர்ப்பிச்சு, அந்தப் பன்றிகளை ரயில்ல ஏத்தி அனுப்பி வச்சிருக்காங்க. இதுமூலமா ரயில்வே நிர்வாகத்துக்கு எட்டு லட்சம் ரூபாய்க்கு மேல வருமானம் கிடைச்சிருக்கு’’ என முழுமையாகச் சொல்லி முடித்தார் வாத்தியார்.

மீன் குளம்
மீன் குளம்

‘‘நம்ம விவசாயிங்க முன்னாடி மாதிரியெல்லாம் கிடையாது. இப்ப ரொம்ப திறமையா மாறிக்கிட்டு இருக்காங்க. என்ன செஞ்சா லாபம் கிடைக்கும்ங்கறதை புரிஞ்சு கிட்டு சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏத்தமாதிரி சமயோஜிதமா செயல்படுறாங்க. தஞ்சாவூர் மாவட்ட விவசாயிங்களையும் இதுக்கு ஒரு நல்ல உதாரணமா சொல்லலாம்’’ தனக்குத் தெரிந்த ஒரு தகவலை ஏரோட்டி சுவா ரஸ்யமாகப் பகிர்ந்துகொள்ளத் தொடங் கினார்.

‘‘முன்னாடியெல்லாம் தஞ்சாவூர் பகுதி விவசாயிங்க நெல்ல மட்டும்தான் பெரும் பாலும் நம்பியிருப்பாங்க. ஆனா, கடந்த நாலஞ்சு வருஷங்களா மீன் வளர்ப்புலயும் அதிகமா ஆர்வம் காட்டி வர்றாங்க. தங்களோட பண்னைகள்ல குட்டை வெட்டி, மீன் வளர்ப்பு மூலம் நல்ல லாபம் பார்த்துக் கிட்டு இருக்காங்க. நாளுக்கு நாள் மீன் குட்டைகளோட எண்ணிக்கை அதிகரிச்சுக் கிட்டே இருக்காம். இந்த நிலையிலதான், உள்நாட்டு மீன் உற்பத்தியில தேசிய அளவுல சிறந்த மையமாகத் தஞ்சாவூர் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுருக்கு. தேசிய மீன்வளம் மேம்பாட்டு வாரியம் இந்த அறிவிப்பை வெளியிட்டுருக்கு. அது சம்பந்தமா பேசியிருக்குற தஞ்சாவூர் மாவட்ட மீன் வளத்துறை அதிகாரி சிவக்குமார் ‘போன வருஷம் 6.50 கோடி மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யதான் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுச்சு. ஆனா, தேவை அதிகமா இருந்ததால 7 கோடி மீன் குஞ்சுகள் உற்பத்திச் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது. இதுக்கு விவசாயிகளோட ஆர்வம்தான் முதல் காரணம். மீன் வளர்க்க அரசு கொடுக்குற மானிய திட்டங்களாலும் இந்தச் சாதனை நிகழ்ந்திருக்கு’னு சொல்லியிருக்கார்’’ என்றார் ஏரோட்டி.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு

‘‘என்ன செஞ்சா எதுல லாபம் கிடைக்கும்னு விவசாயிங்க பார்த்து ஓடியாடி கடுமையா உழைச்சு சம்பாதிக்குறாங்க. ஆனா இவங்களுக்கு நியாயமா கிடைக்க வேண்டிய பயிர் இன்ஷூரன்ஸ் இழப்பீட்டுத் தொகையைச் சில கொள்ளைக்கார அதிகாரிங்க திருட்டுத்தனமா சுருட்டிக்கிட்டுப் போகுறதா நினைச்சாதான், மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்கு’’ கடும் கொந்தளிப்போடு சொல்லத் தொடங்கினார் காய்கறி.

‘‘திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பக்கத்துல உள்ள அதம்பார் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில மிகப் பெரிய முறைகேடு நடந்திருக்கு. சுமார் 200 விவசாயிங்களுக்குக் கிடைக்க வேண்டிய பயிர் இன்ஷூரன்ஸ் இழப்பீட்டுத் தொகை சுமார் 80 லட்சம் ரூபாயை, கூட்டுறவு வங்கி ஊழியர்களும் அதிகாரிகளும் விநோதமான முறையில முறைகேடு செஞ்சு, அபகரிச்சிட்டதா புகார் கிளம்பியிருக்கு.

அந்தக் கூட்டுறவு வங்கியில, சுமார் 700 விவசாயிங்க போன வருஷம் பயிர்க் கடன் வாங்கியிருக்காங்க. பயிர் இன்ஷூரன்ஸுக் கான பிரீமியத்தைப் பிடிச்சுக்கிட்டு, அதுக்கான ரசீதை, அத்தனை விவசாயிங்களுக்குமே அந்தக் கூட்டுறவு வங்கி அலுவலர்கள் வழங்கினாங்களாம். இந்த நிலையிலதான் அதம்பார் வருவாய் கிராமத்துல பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 4,500 - 12,000 ரூபாய் வரைக்கும் இழப்பீடு அறிவிக்கப்பட்டிருக்கு. ஆனா, அந்தப் பணம் நிறைய விவசாயிகளோட வங்கிக் கணக்குல வரவே இல்லையாம். அந்த விவசாயிங்க கலெக்டர் ஆபீஸுக்குப் போயி, பயிர் இன்ஷூரன்ஸ் பிரீமியம் செலுத்தினவங் களோட பட்டியலை எடுத்துப் பார்த்தப்ப தான் விவரம் தெரிஞ்சு அதிர்ச்சி அடைஞ்சுப் போயிருக்காங்க. அதுல அவங்களோட பெயர்களே இல்லையாம். தீவிரமா விசாரிச்சப்பதான் உண்மை தெரிஞ்சிருக்கு... அந்த விவசாயிகளோட பேரு, பேங்க் அக்கவுன்ட் நம்பருக்குப் பதிலா, கூட்டுறவு வங்கி அலுவலர்கள், தங்களுக்கு வேண்டப் பட்ட நபர்களோட பேரு, பேங்க் அக்கவுன்ட் நம்பர் கொடுத்துப் பிரீமியம் செலுத்தி யிருக்காங்க. அதனாலதான் விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை, அந்த நபர்களுக்குப் போயிடுச்சாம். இது திட்டம் போட்டு செஞ்ச திருட்டு வேலைனு விவசாயிகள் கொந்தளிக்குறாங்க. சரி நாம கிளம்புவோமா... வானம் கருக்கலா இருக்கு’’ எனக் காய்கறி சொல்ல, அன்றைய மாநாடு கலைந்தது.