
மரத்தடி மாநாடு
இரண்டு நாள்களாக விடாமல் பெய்து கொண்டிருந்த மழை சற்று இடைவெளி விட்டிருந்தது. ஆனாலும், சுத்தமாக நின்ற பாடில்லை. கனமழையாக இல்லாமல் தூறலாக இருந்தது. ஊருக்கு வெளியே களத்தில் நின்றிருந்த மாட்டு வண்டியில் தேங்கியிருந்த மழைநீரை வெளியேற்றிக்கொண்டிருந்தார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். மழை குறைந்ததும், ‘நடந்து வரலாம்... அப்படியே மழைப் பாதிப்பையும் பார்த்து வரலாம்’ எனக் கிளம்பிய ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி, குடை பிடித்தபடியே நடந்துகொண்டிருந்தார்.
அப்போது தோட்டத்திலிருந்து வீட்டை நோக்கி நனைந்தபடியே வேகமாக வந்துகொண்டிருந்தார் ‘காய்கறி’ கண்ணம்மா. ‘‘என்ன கண்ணம்மா... ஒரு குடை எடுத்துட்டுப் போகக் கூடாது. இப்படி நனைஞ்சுட்டியே’’ என்று அக்கறையுடன் கேட்டார் வாத்தியார்.
‘‘நான் போறப்ப மழை இல்ல. கோழிகளுக்கு ரெண்டு நாளா தீவனம் போடல. இங்கன இருக்கத் தோட்டம்தான... ஒரு ஓட்டத்துல போயிட்டு வந்திடலாம்னு குடை எடுக்காம வந்திட்டேன். திரும்புறப்ப மழை வந்திடுச்சு வாத்தியாரே’’ என்ற காய்கறி, பக்கவாட்டில் பார்த்துக் கொண்டே, ‘‘அங்க பாருங்க வாத்தியாரே... உங்க கூட்டாளி வண்டியோட சண்டைப் போட்டுக்கிட்டு இருக்காரு’’ என்றார் சிரித்தபடியே.
திரும்பிப் பார்த்த வாத்தியார், ‘‘அட இந்தத் துறல்ல வண்டியில என்ன பண்ணிகிட்டு இருக்காரு. வா போய்ப் பார்க்கலாம்’’ எனக் காய்கறியையும் அழைத்துக்கொண்டு வண்டி இருந்த இடத்துக்கு வந்தார்.
‘‘இங்க என்னய்யா பண்ணிட்டு இருக்க’’ வாத்தியார் குரல் கேட்டு நிமிர்ந்துப் பார்த்த ஏரோட்டி, ‘‘அத ஏன் கேக்குறீங்க வாத்தியாரே... மழை கொஞ்சம் விட்டதும் வண்டிகிட்ட வந்து பார்த்தா, வண்டி முழுக்கக் குளம் மாதிரி தண்ணி தேங்கிக் கிடக்கு. அன்னிக்கு நெல் கொண்டு வரும்போது தார்ப்பாய் சாக்கு போட்டுக் கீழே ஓட்டையெல்லாம் அடைச்சிருந்தோம். அதுல தண்ணி தேங்கிடுச்சு. அதைத்தான் வெளியேத்திக்கிட்டு இருக்கேன். இந்த மழை எப்பவும் இப்படித்தான் ஒண்ணு பெய்ஞ்சு கெடுக்கும்... இல்லைன்னா காய்ஞ்சு கெடுக்கும்’’ எரிச்சலாகச் சொன்னார் ஏரோட்டி.
‘‘மழையை ஏன்யா திட்டுற. அது, அதோட வேலையைச் செய்யுது. நாமதான் நம்ம வேலையைச் செய்றோமோ இல்லியோ தேவையில்லாத எல்லா வேலையையும் பார்த்திடுறோம். அப்புறம் ‘அங்க குத்துது... இங்க குடையுது’னு மழையைத் திட்டுறோம். பல மாவட்டங்கள் மழையால பாதிக்கப் பட்டிருக்குய்யா... சென்னை, வேலூர், கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள்னு இந்தத் தடவை பெரியளவுக்குப் பாதிப்பு. மழை பாதிப்பைப் பார்வையிடுறதுக்கு மத்தியக்குழு வந்திருக்கு. அந்தளவுக்குக் கடுமையான மழை’’ என்றார் வாத்தியார்.
நெல் கொள்முதல் நிலையங்கள்ல அரசுகிட்டயும் பணம் வாங்கிட்டு, விவசாயிககிட்டயும் பணம் வாங்கிக்கிறாங்க. இதை அரசாங்கம் முதல்ல சரிசெய்யணும்.
‘‘டெல்டா மாவட்டங்கள்ல அமைச்சர்கள் குழு, முதலமைச்சர் குழு ஆய்வு பண்ணி நிவாரணம் எல்லாம் அறிவிச்சாங்க. ஆனா, அந்த அறிவிப்புனால விவசாயிகளுக்கு எந்தப் பிரயோசனமும் இல்லைன்னு சொல்றாங்களே வாத்தியாரே’’ என்றார் காய்கறி.
‘‘ஆமா கண்ணம்மா... பொதுவா அறுவடைக்குத் தயாரான நெல் பயிர் களைத்தான் நிவாரணம் கொடுக்கக் கணக்குல எடுத்துக்குறாங்க. ‘அறுவடை நிலையில் பாதிப்பைச் சந்தித்த நெற்பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு 20,000 ரூபாய் வழங்கப்படும் எனவும், மழைநீரில் இளம் பயிர்களை இழந்த விவசாயி களுக்கு, மறு சாகுபடிக்காக, விதைநெல், நுண்ணூட்ட சத்துகள், ரசாயன உரங்கள் வழங்கப்படும்’னு அரசு அறிவிச்சிருக்கு.
டெல்டா மாவட்டங்கள்ல குறுவை பயிர் 80 சதவிகிதம் அறுவடை முடிஞ்சு போச்சு. இப்ப சம்பா, தாளடி பட்ட இளம் பயிர்கள்தான் இருக்கு. இந்தப் பயிர்களுக்கு உழவு, விதைநெல், நாற்றுப் பறிப்பு, நாற்று நடவு, அடியுரம், மேலுரம், களையெடுப்பு உட்பட இதுவரைக்கும் ஒரு ஏக்கருக்கு 20,000 ரூபாய்க்கு மேல விவசாயிகள் செலவு செஞ்சிருக்காங்க. ஆனா, இந்தத் தொகையை அரசாங்கம் கணக்குலயே எடுத்துக்கலன்னு விவசாயி கள் வருத்தத்துல இருக்காங்க’’ என்றார் வாத்தியார்.
‘‘அரசாங்கம் நிவாரணம் கொடுக்குறது ஒருபக்கம் இருக்கட்டும். நெல் கொள்முதல் நிலையங்கள்ல நடக்குற கொள்ளை தொடர்பா இப்ப இருக்க அரசாங்கம் சில நடவடிக்கை எடுத்தது. ஆனாலும், இன்னமும் கொள்ளை நடந்துகிட்டுதான் இருக்கு. மதுரை மாவட்டம், சோழவந்தான், வாடிப்பட்டி பகுதிகள்ல நெல்லை தூற்ற, தூத்துக்கூலி ஒரு சிப்பத்துக்கு 18 ரூபாய், கொள்முதல் மைய பொறுப்பாளருக்கு 22 ரூபாய், ஏத்துக்கூலி, இறக்குக்கூலிக்கு 10 ரூபாய்னு ஒரு சிப்பத்துக்கு 50 ரூபாய் வரைக்கும் வாங்கிட்டுதான் இருக்காங்க. நெல் கொள்முதல் மையங்கள்ல இருந்து குடோனுக்கு நெல்லைக் கொண்டு் போற லாரிகளுக்கு வாடகை அரசாங்கம் கொடுக்குது. அந்த வாடகையில ஏத்துக்கூலி, இறக்குக்கூலியும் அடக்கம். ஆனா, அரசு கிட்டயும் பணம் வாங்கிட்டு, விவசாயிக கிட்டயும் பணம் வாங்கிக்கிறாங்க. இதை அரசாங்கம் முதல்ல சரிசெய்யணும். இப்படியே போயிட்டு இருந்தா நெல் சாகுபடியை விட்டுட்டு வேற பயிருக்குப் போயிடுவாங்க விவசாயிங்க’’ கோபமாகச் சொன்னார் ஏரோட்டி.

‘‘ ‘திருடனாய் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’னு சும்மாவா சொன்னாங்க’’ என்றார் காய்கறி.
‘‘அப்படியெல்லாம் விட்டுட முடியாது கண்ணம்மா. இவங்க எப்பவும் திருந்த மாட்டாங்க. அரசாங்கம்தான் இதுக்கு சரியான முடிவ எடுக்கணும். அரசாங்கம் நல்லது பண்ண நினைச்சாலும், அதிகாரிங்க விடமாட்டாங்க. உதாரணமா ஒவ்வொரு மந்திரியோட பி.ஏ-க்கள் போடுற ஆட்டம் தாங்க முடியலயாம். துறை மூலமா இடமாற்றம் வந்தா, அதுக்கும் காசு கேக்குறாங்களாம். இடமாற்றம் ஆகி ‘ஆர்டர்’ வந்தாலும், சம்பந்தப்பட்ட அமைச்சர்களோட பி.ஏ-க் கள் ஒப்புதல் இல்லாம வேலையில சேர முடியாதாம். ‘ஆர்டர்’ வந்தாலும், அமைச்சரைக் கவனிக்காம எப்படி ‘ஜாயின்ட்’ பண்ணுவீங்க... முறையை மாத்தாதீங்க’னு துறை மேலதிகாரிகளே சொல்றாங்களாம். ஆட்சி மாறியும் காட்சி மாறல. இதுக்கு அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுத்தாதான் திருந்துவாங்க’’ என்றார் வாத்தியார்.
‘‘இடமாற்றம்னு சொன்னதும் ஞாபகத்துக்கு வருது. நல்லது செய்ற ஐ.ஏ.எஸ் ஆபீஸருங்களையெல்லாம் இடமாற்றம் பண்ணிகிட்டு இருக்காங்களே வாத்தியாரே... சமூகத்துக்கு நல்லது செய்ற அதிகாரிகளை இப்படிச் செய்யுறதுதான் மக்களுக்கான அரசா?’’ எரிச்சலாகக் கேட்டார் காய்கறி.
‘‘யானைகள் வழிதடம் அழியாம பாதுகாக்க நினைச்ச நீலகிரி கலெக்டரா இருந்த இன்னசென்ட் திவ்யா ஐ.ஏ.எஸ், வேளாண் விளைபொருள்கள் விற்பனைக்கான பல புதிய திட்டங்களைத் தீட்டுன வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையரா இருந்த வள்ளலார் ஐ.ஏ.எஸ் இப்படிச் சமூகத்துக்கு நல்லது பண்ற அதிகாரிகளை மாத்திட்டாங்க. இதுல இன்னசென்ட் திவ்யா இருக்குற வரைக்கும் கல்லா கட்ட முடியாதுன்னு நினைச்ச தனியார் காட்டேஜ் உரிமையாளர்கள், தி.மு.க முக்கியப் புள்ளிகள் சேர்ந்து அழுத்தம் கொடுத்து அவரை மாத்திட்டாங்க. ஆனா, சமூகத்துக்கு நல்லது பண்றதெல்லாம் சரி, ஆனா, துறையோட ‘பெருந்தலை’ சார்ந்த சமூகம் இல்லாததுனால வள்ளலாரை மாத்திட்டாங்க. மக்களைப் பத்தி யாரு யோசிக்கிறா... இது மக்களுக்கான ஆட்சியா... இல்லை மந்திரிகளுக்கான ஆட்சியான்னு முதலமைச்சர்தான் சொல்லணும். இப்படியே நிலைமை போச்சுன்னா மக்களுக்கான ஆட்சினு முதலமைச்சர் காட்டிகிட்டு இருக்குற படம் சீக்கிரம் ரீலு அறுந்துபோகும்’’ என்றார் வாத்தியார்.
அதுவரை தூறலாக இருந்த மழை வேகம் எடுக்க, அனைவரும் வீட்டை நோக்கி நகர்ந்தார்கள். முடிவுக்கு வந்தது மாநாடு.