மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

தூத்துக்குடியில் நடந்த குறைதீர் கூத்து!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு

மரத்தடி மாநாடு

தன்னுடைய வீட்டின் அருகே உள்ள விளையாட்டுத் திடலின், புல் தரையில் அமர்ந்து செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருந்தார், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. அந்த வழியாக வந்த ‘ஏரோட்டி’ ஏகாம்பரம், ‘‘என்ன வாத்தியா ரய்யா... காலையிலயே இவ்வளவு சீக்கிரமா நியூஸ் பேப்பரும் கையுமா உட்காந்து இருக் கீங்க’’ என்று கேட்க அதை வாத்தியார் கவனிக்க வில்லை.

‘‘அப்படியென்னதான் ஆர்வமா படிச்சுக் கிட்டு இருக்கீங்க. மணமகன் தேவைனு போட்டுருப்பாங்களே... அதைப் பார்த்துக் கிட்டு இருக்கீங்களா’’ என்று கொஞ்சம் சத்தமாக ஏரோட்டி சொல்ல, கவனம் கலைந்தவராக நிமிர்ந்த வாத்தியார், ‘‘இந்தக் குசும்புதானே வேணாங்கறேன். தூத்துக்குடி மாவட்டத்து விவசாயிங்க, அங்க நடந்த விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்துல, அதிகாரிகளைப் பார்த்து ரொம்ப துணிச்சலா கேள்வி கேட்டு மடக்கி இருக்காங்க. அதைத் தான் ரசிச்சு படிச்சுக்கிட்டு இருந்தேன்’’ என்று சிலாகித்துச் சொன்னார். காதில் வாங்கியபடியே வந்து சேர்ந்த ‘காய்கறி’ கண்ணம்மா, ‘‘அப்படியென்னதான் அங்க நடந்துச்சு’’ என கேட்டபடி அமர, தொடங்கியது அன்றைய மாநாடு.

‘‘தூத்துக்குடி மாவட்டத்துல உள்ள கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத் துல விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்திருக்கு. தலைமை தாங்கி அந்த கூட்டத்தை நடத்த வேண்டிய கோட்டாட்சியர் ரொம்ப தாமதமா அங்க வந்ததோடு மட்டு மல்லாம, விவசாயிங்களைப் பார்த்து போதை ஒழிப்பு உறுதி மொழி எடுத்துக்குங்கனு சொல்லியிருக்காரு. அதைக் கேட்டு விவசாயிங்க ரொம்பவே கடுப்பாயிட்டாங் களாம். ‘போதையை ஒழிக்கணும்னா, முதல்ல டாஸ்மாக்கை மூடணும். அரசாங்கமே கடையைத் திறந்து வச்சு, மக்களுக்கு போதையைக் கொடுத்து யாவாரம் பண்ணி கிட்டு இருக்கு. எப்படி போதையை ஒழிக்க முடியும். நாங்க உறுதிமொழி எடுத்தா போதை ஒழிஞ்சிடுமா? இது விவசாயிங்களோட பிரச்னையைப் பேசுறதுக்கான கூட்டம். போதை ஒழிப்புங்கற பேர்ல எங்களோட நேரத்தை வீணடிக்காதீங்க. நீங்க வந்ததே ஏற்கெனவே லேட்டு’னு சொல்லி உறுதிமொழி எடுக்க மறுத்துட்டாங்களாம்’’ என வாத்தியார் விவரமாகச் சொல்லி முடிக்க...

‘‘ ‘புலி புத்தி சொன்னுச்சாம் பூனைக்கு... எலியை புடிச்சு சாப்பிடாத’னு. அந்தக் கதை யால்ல இருக்கு... நம்ம அரசாங்கம் உபதேசம் பண்றது’’ எனத் தன்னுடைய வழக்கமான பாணியில் ஒரு பழமொழியை எடுத்துவிட்டார் காய்கறி.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு

‘‘தமிழ்நாட்டுல வேற எங்கயும் நடக்காத, ஓர் அதிசய கூத்து இதே தூத்துக்குடி மாவட்டத்துல நடந்துகிட்டு இருக்கு. அது உங்களுக்கு தெரியுமா வாத்தியாரய்யா’’ என கேள்வியெழுப்பிய ஏரோட்டி, ‘‘விவசாயிங்க தங்களோட பிரச்னைகளை, கோரிக்கைகளை மாவட்ட அளவுல உள்ள உயரதிகாரிகளோட கவனத்துக்குக் கொண்டு போனாதான் ஓரளவுக்காவது தீர்க்க முடியும்... குறிப்பா, கலெக்டரோட கவனத்துக்கு போயாகணுங்கற நோக்கத்துலதான் ஒவ்வொரு மாசமும் மாவட்ட அளவுல விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் எல்லாம் மாவட்டங்கள்லயும் நடத்தப்பட்டுக்கிட்டு இருக்கு. ஆனா, தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ், ஒரே நாள்ல, ஒரே நேரத்துல தூத்துக்குடி, கோவில் பட்டி, திருச்செந்தூர்னு மூணு கோட்டங் கள்லயும் அந்தந்த கோட்டாட்சியர் தலைமை யில விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தி யிருக்காரு. இனிமே ஒவ்வொரு மாசமும் இப்படிதான் நடத்தப்போறாங்களாம். இதுக்கு அங்கவுள்ள விவசாயிங்க எதிர்ப்பு தெரிவிக்குறாங்க. மாவட்ட அளவுல பெரிய அதிகாரிகளைச் சந்திக்க முடியலை. ஆட்சிய ரோட நேரடி கவனத்துக்கு எங்க பிரச்னையைக் கொண்டு போக முடியலைனு புலம்புறாங்க. கோட்ட அளவுல கூட்டம் நடத்துறதகூட சகிச்சிக்கலாம். ஆனா, ஒரே தேதியில நடத்துறதை எப்படி சகிச்சிக்கிறது? அதனால வேற வேற தேதியிலாவது நடத்துங் கனு அந்தப் பகுதி விவசாயிங்க வலியுறுத் துறாங்க’’ என்றார் ஏரோட்டி.

‘‘நான் ஒரு முக்கியமான சேதி சொல்றேன் கேக்குறீங்களா’’ என்று தனக்கு தெரிந்த ஒரு தகவலை சொல்ல ஆரம்பித்த காய்கறி,

‘‘விழுப்புரமும் கடலூரும் சந்திக்குற எல்லையில தளவானூர்னு ஓர் ஊர் இருக்கு. அங்க தென்பெண்ணை ஆறு ஓடுது. ஆத்துக்கு குறுக்கே தடுப்பணை கட்டுனா, 50 கிராமங்கள் பயன் அடையும்னு அந்தப் பகுதி விவசாயிங்க ரொம்ப காலமா கோரிக்கை வச்சதுனால, போன அ.தி.மு.க ஆட்சியில 2020-ம் வருஷம் 25 கோடி ரூபாய்ல ஒரு தடுப்பணையைக் கட்டினாங்க. அடுத்த மூணு மாசத்துல அந்த அணையோட ஒரு மதகு ஆத்துல அடிச்சுக் கிட்டு போயிடுச்சு. அணை கட்டுமான பணிகள்ல முறைகேடு நடந்துருக்குனு தி.மு.க-காரங்க தாம் தூம்னு குதிச்சு போராட்டம் நடத்தினதோடு மட்டுமல்லாம, தி.மு.க ஆட்சிக்கு வந்தா தளவானூர் தடுப்பணை உடனடியா சீரமைக்கப்படும்னு தேர்தல் வாக்குறுதியும் கொடுத்தாங்களாம்.

உடைந்த நிலையில் தளவானூர் தடுப்பணை
உடைந்த நிலையில் தளவானூர் தடுப்பணை

ஆனா, ஆட்சிக்கு வந்த பிறகு, அதைக் கண்டுக்கவே இல்லையாம். அடுத்த ஒன்பது மாசத்துல அந்த அணையில இருந்து மூணு மதகுகள் ஆத்துல அடிச்சுகிட்டு போனதால, அந்தப் பகுதியில உள்ள கரும்புத் தோட்டம், நெல் வயல்கள் எல்லாம் தண்ணில மூழ்கிடுச்சாம். இந்தச் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு வருஷம் நெருங்கப் போகுது.

ஆனா, தி.மு.க அரசாங்கம் இன்னும் அந்த அணையை சரி பண்ணாமலே வச்சிருக்கு. இன்னும் நாலஞ்சு வாரத்துல மழை அதிகமா பெய்ஞ்சு, தென்பெண்ணை ஆத்துல அதிகமா தண்ணி வந்தா பெரிய பாதிப்ப சந்திக்க வேண்டியிருக்கும்னு அந்தப் பகுதி விவசாயிங்க கவலைப்படுறாங்க’’ எனச் சொல்லி முடித்தார்.

உடைந்த நிலையில் தளவானூர் தடுப்பணை
உடைந்த நிலையில் தளவானூர் தடுப்பணை

‘‘நீ ஆதங்கப்படுறதைப் புரிஞ்சிக்க முடியுது கண்ணம்மா. அ.தி.மு.க ஆட்சியில கட்டின அணையை நாம ஏன் சீரமைக்கணும்னு இப்ப உள்ளவங்க நினைக்குறாங்க போல. ஆனா, டாஸ்மாக்ல மட்டும் வறட்டு கௌரவம் பார்க்க மாட்டாங்க. அவங்க தொடங்கினதா இருந்தாலும், இவங்க அதை சீரும் சிறப்புமா நடத்துவாங்க. சரி நமக்கெதுக்கு அந்த வம்பு. போன ஆட்சியில நெல் கொள்முதல்ல முறைகேடு செஞ்சு 8 கோடி ரூபாயை சுருட்டின அதிகாரிங்களை இப்ப சி.பி.சி.ஐ.டி போலீஸ்காரங்க விரட்டி விரட்டி கைது பண்ணிகிட்டு இருக்காங்க. இது சம்பந்தமா விளக்கமா சொல்றேன் கேளுங்க’’ என்று சொன்ன வாத்தியார், சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேச்சை தொடர்ந்தார்.

‘‘வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்கள்ல... நெல் கொள்முதல் செய்யாமலேயே விவசாயிங்க பேர்ல போலியா ரசீது தயாரிச்சு, பல கோடி ரூபாயை அதிகாரிங்க ஆட்டையை போட்டுட் டாங்க. ஆட்சி மாறின பிறகு, கணக்கு வழக்கு பார்த்தப்பதான் முறைகேடு நடந்தது தெரிய வந்திருக்கு.

இது சம்பந்தமா, தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகத்தோட வேலூர் மண்டல மேலாளரை சில மாசங் களுக்கு முன்னாடி சி.பி.சி.ஐ.டி போலீஸ்காரங்க கைது செஞ்சாங்க. அந்த விவகாரத்துல சம்பந்தப் பட்ட 6 அதிகாரிங்க இப்ப சிக்கி இருக்காங்க’’ என்று சொன்ன வாத்தியார், தன்னுடைய குடையையும் செய்தித் தாளையும் கையில் எடுத்துக்கொண்டு கிளம்ப ஆயத்த மானார். அத்தோடு அன்றைய மாநாடு கலைந்தது.