ஆசிரியர் பக்கம்
மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

மரத்தடி மாநாடு: அதிக கொள்முதல் சாதனையா, அதிக கொள்ளை சாதனையா?

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு

மரத்தடி மாநாநான் போட்டியா கடைபோடல. தோட்டத்துல விளைஞ்சதை சந்தைக்குக் கொண்டு்போக முடியல. டு

ருக்கு வெளியே கூடைகளில் மாம்பழங் களை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். காலாற நடந்தபடியே அங்கு வந்த ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி, ‘‘என்னய்யா... நம்ம கண்ணம்மாவுக்குப் போட்டியா நீயும் கடைபோட்டுட்டியா’’ என்றார் நக்கலாக.

‘‘நான் போட்டியா கடைபோடல. தோட்டத்துல விளைஞ்சதை சந்தைக்குக் கொண்டு்போக முடியல. ஏவாரிகளும் வர்றதில்ல. அதான் இங்க வெச்சு வித்துகிட்டு இருக்கேன்’’ என்றார் ஏரோட்டி.

அந்த நேரம் பார்த்து, ‘காய்கறி’ கண்ணம்மா அங்கு வந்து சேர, அப்படியே ஆரம்பித்தது மாநாடு.

‘‘விருதுநகர் மாவட்டத்துல ராஜபாளையம், அய்யனார் கோயில், ராக்காச்சி அம்மன் கோயில், செண்பகத்தோப்பு, வத்திராயிருப்பு, கன்சாபுரம் பகுதிகள்ல ஆயிரக்கணக்கான விவசாயிகள் மா சாகுபடி செய்றாங்க. போன வருஷம் நல்ல விலை கிடைச்சும் விளைச்சல் இல்லையாம். இந்தத் தடவை மா நல்ல விளைச்சலாம். ஆனா, ஊரடங்குனால பழங்களை விற்க முடியல, விலையும் கிடைக்கலன்னு சோகத்துல இருக்காங்க. அதுல சில பேர் நம்ம ஏரோட்டி மாதிரி கிராமங்கள்ல பழங்களை விற்பனை செஞ்சிட்டு இருக்காங்களாம்’’ என்றார் வாத்தியார்.

‘‘அங்க விலையில்லாம விவசாயிக வேதனைப்படுறாங்க. விளைஞ்ச நெல்லு மழையில நனையுதேன்னு மனசொடஞ்சு போயிருக்காங்க மன்னார்குடி விவசாயிங்க’’ வேதனைக் குரலில் சொன்னார் காய்கறி.

‘‘மழையில ஏன் நெல்லை நனைய விட்டாங்க... சொல்றதை முழுசா சொல்லு கண்ணம்மா’’ என்றார் ஏரோட்டி.

‘‘திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பக்கத்துல எட மேலையூர், காரக்கோட்டை, வடுவூர், எட கீழையூர் உள்ளிட்ட பல கிராமங்கள்ல அறுவடை நடந்துகிட்டு இருக்கு. எட கீழையூர் கிராமத்தில அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஒண்ணு ரொம்ப வருஷமா இருக்கு. அந்தப் பகுதி விவசாயிங்க, அறுவடை செய்ற நெல்லை அந்தக் கொள்முதல் நிலையத்துக்குத்தான் கொண்டு வருவாங்களாம். அதே மாதிரி இந்த முறையும் கொண்டு வந்திருக்காங்க. அப்ப அங்கிருந்த கொள்முதல் நிலைய அதிகாரி, ‘இங்க இருந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் வேறு இடத்துக்கு மாறிடுச்சு’ன்னு சொல்லி இருக்காரு. அவரு சொன்ன இடம் அங்கிருந்து 10 கிலோமீட்டர் தூரமாம். இதனால அலைக்கழிப்புக்கு ஆளாகிட்டாங்க விவசாயிங்க. அங்க போனாலும் சோதனை தீரல.

இப்பதான் அடிக்கடி மழை பெய்யுதுல்ல. அந்த மழையில கொள்முதல் நிலைய வளாகத்துல திறந்தவெளியில வெச்சிருக்க 10,000 மூட்டை நெல்லு நனையுதாம். இன்னும் கொஞ்ச நாள் மழை பெய்ஞ்சா நெல்லு முளைவிட ஆரம்பிச்சிடும்னு பயந்துபோய் இருக்காங்களாம் விவசாயிங்க.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடுகொரோனாவால தமிழ்நாடு முழுக்கத் தொழில்கள் முடங்கிப் போய்க் கிடக்கு. விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமா நம்பியிருக்க எட கீழையூர் கிராம விவசாயிகள் பயன்பெறும் வகையில், ஏற்கெனவே அந்தக் கிராமத்தில் செயல்பட்டு வந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மறுபடியும் திறந்து விவசாயிகளின் நெல்லை உடனடி யாகக் கொள்முதல் செய்யணும்னு விவசாயிகள் கோரிக்கை வெச்சிருக்காங்க. எட கீழையூர் கிராமத்தைச் சுற்றி சுமார் 2,000 ஏக்கர்ல நெல் அறுவடை இனிமேதான் நடக்கப்போகுதாம். அதனால தடையில்லாம கொள்முதல் செய்யணும்னு தமிழக அரசுக்குக் கோரிக்கை வெச்சிருக்காங்களாம்’’ என்றார் காய்கறி.

‘‘நெல் கொள்முதல் நிலையம்னாலே விவசாயிகளுக்கு வேதனைதான். விவசாயி களை அலைய வைப்பது, காத்திருக்க வைப்பது, லஞ்சலாவண்யம்னு அங்கிருக்க அலுவலர்கள் சம்சாரிகளைச் சாகடிக்குறாங்க. ஒரு மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சம் கொடுத்தா தான் நெல் கொள்முதல் செய்யுறாங்கன்னு விவசாயிகள் புலம்புறாங்க. சொல்லப்போனா இவங்க நெல் கொள்முதல் செய்றதைவிட விவசாயிகளோட வேதனையைத்தான் கொள்முதல் செய்யுறாங்க.

இந்த லட்சணத்துல ‘படிக்குறது ராமாயணம்... இடிக்குறது பெருமாள் கோயில்’னு சொல்ற மாதிரி இந்த வருஷம் நெல் கொள்முதல்ல சாதனை செஞ்சிருக் குறதாச் சொல்லித் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிங்க தம்பட்டம் அடிச்சிக்குறாங்க. குறுவை, சம்பா, தாளடி முன்பட்ட கோடை நெல் கொள்முதல் மூலம் இதுவரைக்கும் 6.33 லட்சம் விவசாயி களிடமிருந்து, 32.55 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்து புதிய சாதனை படைச்சதா சொல்றாங்க. அந்தக் கணக்குப்படி பார்த்தா இந்த வருஷம் 32.55 லட்சம் டன் நெல் கொள்முதல் மூலமா, விவசாயிங்க கிட்ட இருந்து 325 கோடி ரூபாய் லஞ்சமா வாங்கியிருக்காங்கன்னு விவசாயச் சங்க பிரமுகர்கள் குற்றம் சாட்டுறாங்க. இதுதான் சாதனையா?’’ கோபமாகக் கேட்டார் வாத்தியார்.

‘‘விவசாயிகளுக்கு என்னிக்குத்தான் விடியல் வரப்போகுதோ தெரியலை’’ வேதனையுடன் சொன்னார் ஏரோட்டி.

‘‘இப்பதான் ஆட்சி மாறி புது அரசாங்கம் வந்திருக்கு. கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேத்துவோம்னு சொல்றாங்க. சில கோரிக்கைகளையும் நிறைவேத்திட்டு இருக் காங்க. விவசாயிகளோட கோரிக்கைகளையும் விரைவா நிறைவேத்துனா மகிழ்ச்சியா இருக்கும். என்ன செய்றாங்கன்னு பார்ப்போம்.

சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ‘நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சம் வாங்குறாங்களேன்னு’ ஒரு நிருபர் கேட்டதுக்கு கொதிச்சுப்போயிட்டாரு விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம். ‘கிறுக்குத்தனமா கேள்வி கேட்டா நானும் கிறுக்குத்தனமா தான் பதில் சொல்வேன்’னு லஞ்சம் வாங்குபவர்களுக்கு சப்போர்ட் பண்ணி பேசியிருக்காரு. சும்மாவே ஆடுவாங்க...இவரு சலங்கை கட்டி விட்டுட்டாரு. இனி விளங்கிடும்’’ என்றார் ஏரோட்டி.

‘‘மழை வர்ற மாதிரி இருக்கு. அப்படியே வீட்டுப்பக்கம் போறேன்’’ என்றபடி வாத்தியார் கிளம்ப முடிவுக்கு வந்தது மாநாடு.

எம்.விஜயகுமார்
எம்.விஜயகுமார்

இயற்கையில் கலந்த ‘பசுமை’ காதலன்!

பசுமை விகடன் அட்டைப் படங்களை அலங்கரித்த விகடன் குழுமத்தின் சேலம் பகுதி புகைப்படக்காரர் எம்.விஜயகுமார் கோவிட்-19 தொற்றால் 21.5.2021 அன்று காலமானார். அவருக்கு வயது 48. சேலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில், கடைகோடி கிராமங்களில் உள்ள எளிய விவசாயிகளைத் தேடி, அவர்கள் செய்யும் பயிர் சாகுபடி முறை, தொழில்நுட்பம் என்று அனைத்தையும் காட்சிப்படுத்தியவர். பசுமை விகடனில் வெளியான செம்மரம், ஆலம்பாடி மாடுகள், சாமை, பாகல், சுரைக்காய் உள்ளிட்ட அவருடைய பல புகைப்படங்கள் அட்டைப்படங்களாக வெளியாகிக் கவனத்தை ஈர்த்தன. எளிய மக்களின் பாடுகளையும் துயரத் தையும் கண்ணீரையும் புகைப்படங்களாக ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் இதழ்களில் பதிவு செய்துள்ளார். டெங்கு காய்ச்சல் உச்சத்தில் இருந்தபோது அதனால் மக்கள் படும் துயரங்களைக் காட்சிப்படுத்தியபோது பிரச்னையின் வீரியத்தை அரசுகள் உணர்ந்தன. பயணங்களின் காதலர். உதவும் மனப்பான்மை கொண்டவர். மலைக்கிராம மக்களின் வாழ்க்கையையும் நிறைய பதிவு செய்துள்ளார். பசுமை விகடன் சார்பில் அவருக்கு ஆழ்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறோம்.

மறுபயணம், அரசு அலட்சியம் அநியாயம் ஆகிய பகுதிகள், இந்த இதழில் இடம்பெறவில்லை.