ஆசிரியர் பக்கம்
நாட்டு நடப்பு
மகசூல்
Published:Updated:

மரத்தடி மாநாடு: விளைபொருள்களை அரசே கொள்முதல் செய்யுமா?

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு

அப்படி என்னத்த இப்படி உத்து பார்த்துட்டு இருக்காப்ல’’ மீண்டும் கேட்டார் வாத்தியார்.

ரேசன் கடையில் கொடுத்த நிவாரண நிதி 2,000 ரூபாயை வாங்கிக்கொண்டு வீட்டை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தார் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. அப்போது ஓர் இடத்தில் கையில் கூடையும், கோலுமாக நின்றபடி ‘காய்கறி’ கண்ணம்மா எங்கோ வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். அதைப் பார்த்த வாத்தியார், அந்த இடத்தை நோக்கி வந்தார்.

‘‘என்ன கண்ணம்மா... அப்படி என்னத்த பார்த்துட்டு இருக்க’’ என்றபடியே காய்கறி பார்த்த திசையில் பார்வையைத் திருப்பினார். அங்கு, ‘ஏரோட்டி’ ஏகாம்பரம் குனிந்து எதையோ பார்த்துக்கொண்டிருந்தார்.

‘‘அப்படி என்னத்த இப்படி உத்து பார்த்துட்டு இருக்காப்ல’’ மீண்டும் கேட்டார் வாத்தியார்.

‘‘அந்த இடத்துல மயில் முட்டை இருக்காம் வாத்தியாரே... அதைப் பார்த்துட்டுதான் என்ன பண்றதுன்னு யோசிச்சிட்டு இருக்காரு’’ என்று காய்கறிச் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அங்கு வந்து சேர்ந்தார் ஏரோட்டி.

ஒரு தகவலைச் சொல்லி மாநாட்டை தொடங்கி வைத்தார் வாத்தியார்.

‘‘டெல்டா குறுவைச் சாகுபடி மற்றும் மேட்டூர் அணை திறப்பு தொடர்பா மே 16-ம் தேதி தஞ்சாவூர்ல விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்துச்சாம். அதுல வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகிட்டாங்களாம். அந்தக் கூட்டத்துல வேளாண்மைத்துறை தொடர்பா விவசாயிகள் நிறைய கோரிக்கைகளை முன் வெச்சிருக்காங்க. அடுத்து, பட்டுக்கோட்டையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவாக்கிய தென்னை வணிக வளாகம், போன அ.தி.மு.க ஆட்சியில் முடக்கப்பட்டது. 2015-ம் வருஷம் ஸ்டாலினே நேர்ல வந்து பார்த்துட்டுப் போனாரு. அதைத் திறக்கணும்னு விவசாயிகள் கோரிக்கை வைச்சிருக்காங்க’’ என்றார் வாத்தியார்.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு

‘‘இப்பதானே ஆட்சிக்கு வந்திருக்காங்க. ஒவ்வொரு கோரிக்கையா, வேளாண் துறை அமைச்சர் நிறைவேத்துவாருனு நம்புவோம்’’ என்றார் ஏரோட்டி.

“ஊரடங்கு நேரத்துல விளைய வெச்சதை விக்க முடியாம விவசாயிங்க போராடிகிட்டு இருக்காங்க. அதை அரசே வாங்கி, வண்டி வெச்சு விற்பனை செய்யலாம். அப்படிச் செஞ்சா விவசாயிகளுக்கும் நஷ்டம் வராது. காய்கறி வாங்கறப் பொதுமக்களும் வீட்டை விட்டு வெளியே வரமாட்டாங்க. கொரோனாவும் குறையும். அமைச்சரும், அதிகாரிகளும் அதைச் செஞ்சா பரவாயில்லை’’ என்று சொன்னார் காய்கறி.

“உன்னோட கோரிக்கையும் நியாயமானதுதான், கண்ணம்மா. ஊரடங்கு நேரத்துல விவசாயிகளுக்கு உதவி செய்யும் வகையில ஓர் அறிவிப்பை அரசு வெளியிட்டிருக்கு. அதைப் படிக்கிறேன், கேளுங்க..

‘மாவட்டங்களில் உள்ள ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில், நவீன சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்பட்டு, அவை பயன்பாட்டில் உள்ளன. விவசாயிகள் விளைபொருள்களை, இக்கிடங்குகளில், 180 நாள்கள்வரை சேமித்து வைத்துப் பாதுகாத்திடலாம். அதிக விலை கிடைக்கப் பெறும் காலங்களில், விளைபொருள்களைக் கிடங்கிலிருந்து எடுத்து, விற்பனை செய்யலாம். கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள விளைபொருள்களை அடமானமாக வைத்து, விவசாயிகள் சந்தை மதிப்பில், 75 சதவிகிதம், அதிகபட்சம் 3 லட்சம் ரூபாய் வரை பொருளீட்டுக் கடன் பெறலாம். கடனுக்கான கால அளவு 180 நாள்கள். 5 சதவிகித வட்டி செலுத்த வேண்டும்.

குளிர்சாதன கிடங்கு வசதி

பழங்கள் மற்றும் காய்கறிச் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயன்பெற, ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில், குளிர்சாதனக் கிடங்கு வசதிகள் ஏற்படுத்தபட்டுள்ளன. விரைவில் அழுகக்கூடிய பொருள்களை, கிடங்குகளில் வைத்துப் பாதுகாத்திடலாம். விநியோகத் தொடர் மேலாண்மை திட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள, முதன்மை பதப்படுத்தும் நிலையங்களிலும், குளிர்சாதனக் கிடங்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

விவசாயிகள் இதைப் பயன்படுத்தி, விளைபொருள்களைப் பாதுகாத்திடலாம். விவசாயிகள் தங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைத்திட, மாநில அளவில், 044 2225 3884 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்’னு அந்த அறிவிப்புல குறிப்பிட்டிருக்கு’’ என்ற வாத்தியார், ‘‘வெயில் வெளுத்து வாங்குது, வீட்டுக்குப் போலாமா?” என்றபடி நடையைக் கட்ட முடிவுக்கு வந்தது மாநாடு.

புருஷோத்தமன்
புருஷோத்தமன்

இயற்கையில் கலந்தார்!

தமிழ்நாடு இயற்கை வேளாண்மை சங்கத்தின் தலைவரும், ஓய்வுபெற்ற உதவி வேளாண்மை அலுவலருமான வேலூரைச் சேர்ந்த புருஷோத்தமன் கடந்த 19.05.2021 அன்று இயற்கையில் கலந்தார். தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவராகப் பல ஆண்டுக் காலம் பொறுப்பேற்றுச் சிறப்பாக நடத்தியவர். கடும் உழைப்பாளி. இயற்கை வேளாண்மையை விவசாயிகளிடம் கொண்டு சென்று சேர்த்ததில் முக்கியப் பங்காற்றியவர். அவரது மறைவுக்கு அஞ்சலியைச் செலுத்துகிறது பசுமை விகடன்.

கன ஜீவாமிர்தம்-

திட நுண்ணுயிர் கலவை

தேவையான பொருள்கள்:

நாட்டு மாட்டுச் சாணம் - 100 கிலோ

வெல்லம் - 1 கிலோ

பயறு மாவு 1 கிலோ

சாகுபடி செய்யும் நிலத்தின் வரப்பு மண் ஒரு கைப்பிடி. இவற்றோடு உப்புமா பதத்தில் தேவையான அளவு மாட்டுச் சிறுநீரையும் கலந்து, ஒரு குவியலாக நிழலில் இரண்டு நாள்கள் வைக்க வேண்டும். பிறகு எடுத்து நிழலில் உலர்த்தி, தூளாக்கிப் பயன்படுத்தலாம். விதைப்பதற்கு முன்னரும், நாற்றங்காலிலும் கன ஜீவாமிர்தத்தைப் பயன்படுத்தலாம்.