மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பராமரிப்பை மறந்த சொட்டு நீர் நிறுவனங்கள்..!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு

மரத்தடி மாநாடு

பேருந்திலிருந்து இறங்கி ஊருக்குச் செல்லும் சாலையில் நடந்து கொண்டிருந்தார்கள் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியும், ‘காய்கறி’ கண்ணம்மாவும்.

‘‘ஊரடங்கு போட்டாலும் உனக்குப் பிரச்னை இல்லை. காய்கறிகளை வித்துக் கலாம்னு சொல்லிட்டாங்க. போன தடவை போட்ட ஊரடங்குல விக்க முடியலன்னு அழுத... இந்தத் தடவை கவலைப்படத் தேவையில்ல’’ என்றார் வாத்தியார்.

‘‘ஆமாங்கய்யா... போன தடவை ஏகப்பட்ட நஷ்டம். ஆனா, இந்தத் தடவை காய்கறிகளை ஓரளவுக்கு வித்திடலாம். போன ஊரடங்கு மாதிரியே இந்தத் தடவையும் பூ விவசாயிகள், வியாபாரிகளுக்குத்தான் ரொம்பக் கஷ்டம்’’ கண்ணம்மா சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, பின்னால் மாட்டு வண்டி வரும் சத்தம் கேட்டது. இருவரும் வண்டிக்கு வழி விட்டு ஒதுங்கினார்கள்.

அவர்களைக் கடந்ததும் வண்டியை நிறுத்திய ‘ஏரோட்டி’ ஏகாம்பரம் எழுந்து நின்று, ‘‘கொளுத்துற வெயில்ல ரெண்டு பேரும் எங்க போயிட்டு வர்றீங்க’’ என்று கேட்டார்.

‘‘அட டவுனுக்குப் போயிட்டு வர்றோம்யா... எங்களச் சொல்லுற நீ வெயில் தாள வண்டியை ஓட்டிட்டு வர வேண்டியதுதானே’’ என்று கடிந்துகொண்டார் வாத்தியார்.

‘‘என்ன செய்றது வாத்தியாரே... அதான் 12 மணிக்கு முன்னால போகலாம்னு வந்துட்டேன். நேரத்துல வேலையை முடிச்சா நாமளும் வீட்டுலயே முடங்கிடலாம்ல... அதான்’’ என்ற ஏரோட்டி வண்டியை விட்டு இறங்கினார். மூவரும் பேசிக்கொண்டே செல்ல மாடுகளும் அவர்களுக்கு இணையாக வண்டியை இழுத்துக்கொண்டே நடைபோட, தொடங்கியது மாநாடு.

‘‘எனக்கு ஒரு சந்தேகம் வாத்தியாரே... 12 மணிக்கு மேல காய்கறி, மளிகைக் கடைகள், மற்ற கடைகள் இருக்கக் கூடாதுனு அரசாங்கம் சொல்லிருக்கு. 20-ம் தேதி வரைக்கும் இதுதான் நிலைமை. இப்ப தோட்டத்துல மோட்டார் பழுது ஆகிடுச்சு. டிராக்டர் மாதிரியான கருவிகளை ரிப்பேர் பண்ணணும்னா என்ன செய்யுறது. இந்த 10 நாளும் ரிப்பேர் பார்க்காம விவசாய வேலையை எப்படிச் செய்யுறது? மோட்டார் ஓடாம தண்ணி எப்படிப் பாய்ச்சுற துன்னே தெரியல’’ புலம்பினார் ஏரோட்டி.

‘‘கொரோனா தொற்று அதிக மாகிட்டே வருது. பல இடங்கள்ல ஆஸ்பத்திரியில படுக்கை இல்லை. ஆக்சிஜன் இல்லை. இந்த நேரத்துல அரசாங்கம் சொல்லுற சில விதிமுறைகளை நாம மதிச்சுதான் ஆகணும். பல கிராமங்கள்ல மெக்கானிக் இருக்காங்க. தற்சார்பு தற்சார்புனு பேசுற இந்த நேரத்துல யாவது உள்ளூர்ல இருக்க வங்களுக்கு வாய்ப்பளிக்கணும்’’ என்றார் வாத்தியார்.

‘‘சரிதாங்க வாத்தியாரே... மொதல்ல நம்ம ஊர்லயே எல்லா வேலைக்கும் ஆள் இருந்தாங்க. ஆனா, நாம டவுனுக்கு ஓடுறோம். அவங்களும் டவுன்ல கடை போட்டுட்டாங்க. இப்ப ரெண்டு பேரும் முழிச்சுட்டு இருக்கோம்’’ என்றார் காய்கறி.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு

‘‘கவர்மென்ட் ஒரு வருஷத்துல 1,200 கோடி ரூபாய் செலவுல சொட்டு நீர்ப் பாசனம் அமைச்சு தர்றாங்க. இதுக்கு 100 சதவிகித மானியம்னு சொன்னாலும் கம்பெனிக் காரன் கொஞ்சம் காசைப் பிடிங்கிக்கிறான். அது தனிக்கதை. அத்தனை கோடி ரூபாய் மானியத்துல அமைக்குற சொட்டு நீர்க் குழாய் அடுத்த வருஷம் போய்ப் பார்த்தா இருக்குறதில்ல. பெரும்பாலான விவசாயிங்க சுருட்டி வெச்சிடுறாங்க. காரணம், அங்கங்க அடைப்பு மாதிரியான சிக்கல் வந்திடுது. இதுக்கு ஒரு தீர்வு இருக்கு. ஒவ்வொரு ஊராட்சியிலயும் இளைஞர்களுக்குச் சொட்டு நீர்க் குழாய்களைச் சரிசெய்யும் முறைகள், டிராக்டர், மோட்டார், வேளாண் கருவிகள் சரிசெய்யுற முறைகளைக் கற்றுக் கொடுக்கணும். இவங்களைத் தற்காலிக பணியாளர்களாக வெச்சிக்கலாம். இல்லைன்னா, வேலை செய்யுற இடத்துல பணம் வாங்கிக்கச் சொல்லலாம். இதெல்லாம் செஞ்சா எம்புட்டு நல்லா இருக்கும். புதுசா வந்திருக்க அரசாவது இதைச் செஞ்சா நல்லாயிருக்கும்’’ ஏக்கத்தோடு சொன்னார் வாத்தியார்.

‘‘ ‘சொட்டு நீர் அமைச்சு தர்ற கம்பெனிகள் ஒரு வருஷம் வரைக்கும் அதைப் பராமரிச்சுக் கொடுக்கணும்னு விதிமுறை இருக்கு’னு எங்க அக்கா பையன் சொன்னான். உண்மையா வாத்தியாரே’’ வெள்ளந்தியாகக் கேட்டார் காய்கறி.

‘‘உண்மைதான் கண்ணம்மா. ஒரு வருஷம் பராமரிக்காத கம்பெனிகளுக்கு எந்தத் தண்டனையும் இல்ல. கவர்மென்ட்டும் அதைக் கண்டுக்கறதில்ல. சொட்டு நீர்க் குழாய்களைப் பராமரிக்குறதைவிட அதிகாரிகளைக் கவனிக்குறது சுலபம்னு கம்பெனிக்காரங்க முடிவு பண்ணிடுறாங்க. சொட்டு நீர்ல மட்டும் ஏகப்பட்ட குளறுபடி நடக்குது. இதெல்லாம் வெளியே தெரியாத ஊழல். விவசாயிகளான மக்கள் பணத்துல சம்பளம் வாங்குற அதிகாரிங்க கம்பெனிக் காரனுக்குத்தான வால் ஆட்டுறாங்க’’ விரக்தியாகச் சொன்னார் வாத்தியார்.

‘‘விவசாயிகளுக்கு இருக்கிற பெரிய பிரச்னையே இன்ஷூரன்ஸ்தான். பணம் கட்ட கடைசி நாள்னு சொல்லிக் கெடு விதிச்சு விவசாயிககிட்ட பணம் வசூல் செய்யுறாங்க. ஆனா, இழப்பீடு மட்டும் வருஷக்கணக்குல இழுத்தடிப்பாங்க. இந்தப் பிரச்னையால காரைக்குடி பக்கத்துல திருவேலங்குடிங்கற ஊர்ல மட்டும் 250 ஏக்கர் நெல் சாகுபடி நடக்குமாம். போன மழைக்கு 100 ஏக்கர் நெல் பயிர்கள் தண்ணியில மூழ்கி அழுகிப்போச்சாம். அதுக்கு உரிய இழப்பீடு கிடைக்கலையாம். கேட்டுக்கேட்டுப் பார்த்து வெறுத்துப்போன விவசாயிக, கோடை விவசாயத்தையே கைவிட்டுட்டாங்களாம். இதனால பல ஏக்கர் நிலங்க தரிசா கிடக்குதாம்’’ என்றார் காய்கறி.

பேசிக்கொண்டே வந்ததில் ஊர் வந்து விட்டது. அவரவர் வீட்டுக்குப் பிரிந்துச் செல்ல முடிவுக்கு வந்தது மாநாடு.

வேளாண்மை, கால்நடை துறைக்கான அமைச்சர்கள்

தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றிருக்கிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். அவருடன் அமைச்சரவையும் பொறுப்பேற்றுள்ளது. இதில் விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளுக்காக ஆறு அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் : எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

நீர்வளத் துறை அமைச்சர் : துரைமுருகன்

மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும்

கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் : அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்.

பால்வளத் துறை அமைச்சர் : சா.மு.நாசர்

சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத் துறை அமைச்சர் : சிவ.வீ.மெய்யநாதன்

வனத்துறை அமைச்சர் : கா.ராமச்சந்திரன்