Published:Updated:

Exclusive: `100 நாள் வேலை திட்டம் பற்றி அமெரிக்காவில் பேசுகிறார்கள்!' - பொருளாதார அறிஞர் ஜான் ட்ரெஸ்

ஜான் ட்ரெஸ்

தமிழக அரசின் பொருளாதார ஆலோசனைக்குழுவில் ஒருவராக அறிவிக்கப்பட்ட பிறகு, பசுமை விகடன் வாசகர்களுக்காக அவர் அளித்துள்ள பிரத்யேகப் பேட்டி இது...

Published:Updated:

Exclusive: `100 நாள் வேலை திட்டம் பற்றி அமெரிக்காவில் பேசுகிறார்கள்!' - பொருளாதார அறிஞர் ஜான் ட்ரெஸ்

தமிழக அரசின் பொருளாதார ஆலோசனைக்குழுவில் ஒருவராக அறிவிக்கப்பட்ட பிறகு, பசுமை விகடன் வாசகர்களுக்காக அவர் அளித்துள்ள பிரத்யேகப் பேட்டி இது...

ஜான் ட்ரெஸ்

மிழக அரசின் பொருளாதார ஆலோசனைக்குழுவில் இடம் பெற்றிருக்கும் ஐவரில் ஒருவர், பேராசிரியர் ஜான் ட்ரெஸ் (Jean Drèze). 14 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்ட, தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின், உருவாக்கத்தில் மிக முக்கியப் பங்கு வகித்தவர். இது வறுமை ஒழிப்பில் மிக முக்கியமான திட்டமாக உலகெங்கும் போற்றப்படுகிறது. அனைவருக்கும் உணவு என்பதை சாத்தியப்படுத்திய தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், எல்லா குடிமகனும் அரசாங்கத்தின் அலுவல் விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம் என்பதை சாத்தியமாக்கிய தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஆகிய மக்கள் நலத் திட்டங்களை மக்கள் உரிமை சட்டங்களாகக் கொண்டு வருவதற்கு முக்கிய காரணகர்த்தாக இருந்தவர்.

ஜான் ட்ரெஸ்
ஜான் ட்ரெஸ்

பெல்ஜியம் நாட்டின் லூவென் என்னும் பழங்கால நகரத்தில் பிறந்தவர் ஜான் ட்ரெஸ். இவர் தந்தை ஜாக் ட்ரெஸ், உலகப் புகழ் பெற்ற பொருளாதார அறிஞர். ஜான் ட்ரெஸ், தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இதற்கு முன்பு, லண்டன் பொருளாதாரக் கழகம், டெல்லிப் பல்கலைக்கழகம், அலகாபாத் பல்கலைக்கழகம் முதலியவற்றில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். தன் உயர் வர்க்க வசதிகளை விட்டுட்டு, சாதாரண மக்களுடன் வாழ்ந்து, அவர்களின் உரிமைப் போராட்டங்களில் பங்கெடுத்தவர். நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்னுடன் இணைந்து, 9 புத்தகங்களை எழுதியுள்ளார். தற்போது தமிழக அரசின் பொருளாதார ஆலோசனைக்குழுவில் ஒருவராக அறிவிக்கப்பட்ட பிறகு, பசுமை விகடன் வாசகர்களுக்காக அவர் அளித்துள்ள பிரத்யேகப் பேட்டி இது...

நீங்கள் பெல்ஜியத்தில் பிறந்து வளர்ந்தவர். இங்கிலாந்து நாட்டின் எஸ்ஸெக்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்றவர். முனைவர் படிப்புக்காக, டெல்லியில் உள்ள இந்தியப் புள்ளியியல் கழகத்தை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?

ஜான் ட்ரெஸ்
ஜான் ட்ரெஸ்

ட்ரெஸ்: ``நான் 1970-களில் மாணவனாக இருந்தேன். மேற்கு ஐரோப்பா முழுவதும் வருங்காலம் பற்றிய பெரும் நம்பிக்கைகள் இருந்தன. ரொனால்டு ரீகன் (அமெரிக்க அதிபர்), தாட்சர் (இங்கிலாந்து பிரதமர்) வந்திராத காலம். வேலையின்மை பெரும் பிரச்னையாக உருவாகியிருந்திராத காலம். ஏழ்மையும் சமூக அநீதியும் இல்லாத ஒரு சமூக அமைப்பு எங்கள் வாழ்நாளில் உருவாகிவிடும் என நம்பினோம். அந்த நம்பிக்கையுடனும் இளமையின் உத்வேகத்துடனும், ஏதாவது உபயோகமாகச் செய்ய வேண்டும் என்னும் ஆவலில் இந்தியா வந்தேன். என் முழு வாழ்நாளையும் இங்கேயே செலவிட வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டு வரவில்லை... ஆனால், காலம் இந்தியாவிலேயே இருக்க வைத்துவிட்டது.''

இந்தியக் குடிமகனாகும் எண்ணம் எப்போது வந்தது?

ஜான் ட்ரெஸ்
ஜான் ட்ரெஸ்

ட்ரெஸ்: ``இந்தியக் குடிமகனாக இல்லாமல், பொது வாழ்க்கையில் ஈடுபடுவது பெரும் சிரமம் என்று இந்தியா வந்தவுடனேயே புரிந்துவிட்டது. எடுத்துக்காட்டாக, 1984-ம் ஆண்டு, பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு, நடந்த சீக்கியர்களுக்கு எதிரான படுகொலைகள் பற்றி அனைவருக்கும் தெரியும். அந்தப் படுகொலைகளுக்கெதிரான போராட்டம் மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட ஆர்வமாக இருந்தேன். ஆனால், வெளிநாட்டுக் குடிமகனான நான் `கலந்துகொள்ள வேண்டாம்’ என என் நண்பர்களே தடுத்தார்கள். அதோடு பெல்ஜியத்தில் வலூன்கள்-ஃப்ளெமிஷ்கள் என்னும் இரு பிரிவினருக்கும் இடையே காரணமின்றி நடந்த மோதல்கள், எனக்கு உவப்பாக இல்லை. பெல்ஜியத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள், இந்தியாவில் நிவாரணப் பணிகளில் ஈடுபடாமல் தடுத்தது என இந்த இரண்டு நிகழ்வுகளும் இந்திய குடிமகனாக முடிவெடுக்க வைத்தது. ஆனால், இந்திய குடியுரிமை பெறுவது அவ்வளவு எளிதானது அல்ல. 1984-ல் முயற்சி செய்த எனக்கு 2002-ல்தான் கிடைத்தது.''

1989-ம் ஆண்டு, நீங்கள் லண்டனில் இருந்தபோது `வீடற்றவனின் டயரிக் குறிப்பு’ என்னும் பெயரில் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டீர்கள். இதைச் செய்யத் தூண்டியது எது?

ட்ரெஸ்: ``க்ளாஃபம் சாலையில், பெல்க்ரேவ் என்னும் இடத்தில் நான் வாழ்ந்த நாள்களின் கதை அது. ஒதுக்கப்பட்ட மக்களுடன் இணைந்து வாழ்தலும், ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போராடுதலுமே, ஒடுக்கப்பட்டவர்கள் மேம்பாட்டில் நம் சிரத்தையைக் காண்பிக்கும் சிறந்த வழி.

வீடற்றவர்களின் போராட்டத்தில் ஒரு பகுதியாக, பெல்க்ரேவ் பகுதியில், யாரும் வசிக்காத ஒரு கட்டடத்தை, ஆக்கிரமிக்கும் போராட்டத்தைத் தொடங்கினோம். சில நாள்களுக்குப் பிறகு, மக்கள் அதைவிட்டு வெளியேற மறுத்து, அனைவரும் இணைந்து வாழும் குடியிருப்பாக (ஒரு கம்யூனாக) மாற்றினர். நானும் அவர்களுடனேயே தங்கிவிட்டேன். அந்த அனுபவம்தான் அந்தப் புத்தகம்.''

பட்டினியும், பொதுநலச் செயல்திட்டமும்
பட்டினியும், பொதுநலச் செயல்திட்டமும்

நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்னுடன் இணைந்து `பட்டினியும், பொதுநலச் செயல்திட்டமும்’, (Hunger and Public Action) என்னும் புத்தகத்தை எழுதி வெளியிட்டீர்கள். மக்கள் நலப் பொருளியலின் ஆகச் சிறந்த புத்தகமாக அது போற்றப்படுகிறது. அந்தப் புத்தகம் பேசும் கருத்துகள் என்ன?

ட்ரெஸ்: ``உண்மையில், அந்தத் திருப்புமுனை 1981-ம் ஆண்டு நடந்தது. ராஜஸ்தான் உள்பட நாட்டின் பல பகுதிகளில், தொடர்ந்து 2-3 ஆண்டுகளாக வறட்சி நிலவி வந்தது. அப்போது, நான் ராஜஸ்தான் மாநிலத்தில் சைக்கிள் பயணம் மேற்கொண்டிருந்தேன். பயணம் முடிந்தவுடன், அமர்த்தியா சென் எழுதிய, `ஏழ்மையும் பஞ்சமும்’, (Poverty and Famines) என்னும் புத்தகத்தை வாசித்தேன். பஞ்சம் என்பது உணவுப் பொருள் பற்றாக்குறையினால் அல்ல, ஏழைகளினால் உணவு தானியங்களை வாங்க முடியாமல் போவதே என்பதை மிகவும் வலுவான ஆதாரங்களுடன் முன் வைத்திருந்தார். ஆனால், அந்தப் புத்தகம், பஞ்சங்களைத் தவிர்ப்பது எப்படி என்பதை அதிகம் பேசவில்லை. 1979-ம் ஆண்டு இந்தியா வந்தபோது, இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் பெரும் வறட்சி நிலவியது. இந்தியாவில் வறட்சியைத் தவிர்க்க அரசுத் திட்டங்களும், கட்டமைப்புகளும் தயாராக இருந்தன. இதுகுறித்து ஒரு கடிதம் எழுதினேன். அந்தக் கடிதம்தான் எங்கள் நீண்டகால நட்பின் முதல் படி.

நாங்கள் இருவரும் இணைந்து `பட்டினியும், பொதுநலச் செயல்திட்டமும்’ (Hunger and Public Action) என்ற புத்தகத்தை எழுதினோம். இது 1989-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஏழ்மையை, பட்டினியைத் தவிர்க்க வேண்டுமென்றால், பொருளாதாரம் வளர வேண்டும், சந்தைப் பொருளாதாரம் சிறக்க வேண்டும் என்றெல்லாம் சுத்தி வளைத்துக் கொண்டிருக்காமல், பட்டினியைப் போக்கும் நேரடியான நடவடிக்கைகளை உடனே செய்ய வேண்டும் என்பதுதான் புத்தகத்தின் மையக் கருத்து. இதிலென்ன புதுமை என வியக்கலாம்? தாராளமயமாக்கல் மதம் போலவும், பொதுத்துறை நிறுவனங்களை இழிவுபடுத்துவதும் நடக்கும் இந்தக் காலத்தில், இது போன்ற நேரடியான மக்கள் நலச் செயல்பாடுகள் சமூகத்தில் மதிக்கப்படுவதில்லை. எனவே, இதை உரத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது.

பஞ்ச காலத்தில், அரசுகள், அரசர்கள், மக்களுக்கு உணவளிக்க, பொதுக்கட்டமைப்புகளை உருவாக்குதல், கால்வாய்களை வெட்டுதல் எனப் பல முன்னெடுப்புகளை இந்தியாவில் செய்திருக்கிறார்கள். இந்த வழிமுறைகளை, பஞ்சத்தைச் சமாளிக்க ஒரு முக்கியமான வழியாகக் கொள்ள முடியுமா என இந்தப் புத்தகத்தில் விவாதித்திருக்கிறோம்.

அதேபோல, சீனா, இலங்கை, இந்தியாவில் கேரளம் போன்ற மாநிலங்கள், ஊட்டச்சத்து மேம்பாட்டுத் திட்டங்களை மக்களுக்கு அளிக்கும் பொதுநலத் திட்டங்களாக முன்னெடுத்துள்ளன. அதுபோன்ற வெற்றிகரமான நேர்நிலை அனுபவங்களையும் இதில் விவாதித்திருக்கிறோம்.

சமூக மேம்பாட்டில், அரசின் பொதுநலக் கொள்கைகளின் பங்களிப்பை, சாத்தியங்களை, அவற்றை உலகம் சிந்திக்க வேண்டிய அவசியத்தை இந்தப் புத்தகம் பேசுகிறது.''

உங்கள் பொருளாதார ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, உத்தரப்பிரதேசத்தில் சில ஆண்டுகள் விவசாயம் செய்தீர்கள் எனக் கேள்விப்பட்டோம். அதில் நீங்கள் அறிந்துகொண்டது என்ன?

ட்ரெஸ்: ``உத்தரப் பிரதேச மாநிலம், பாலன்பூரில், நான் ஓர் ஆண்டுதான் வாழ்ந்தேன். ஒரு போக வேளாண்மையில்தான் ஈடுபட்டேன். பந்த் நகர் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இருந்து வீரிய ரக மக்காச்சோள விதைகளை வாங்கி விதைத்தேன். என் நிலத்தில் பயிர்கள், மற்ற விவசாயிகளின் வயல்களைவிட உயரமாக வளர்ந்தன. அனைவரும் வியந்து பார்த்தனர். ஆனால், அதன் பிறகு மழை பொய்த்துப்போனது. என் வயலில் இருந்த பயிர்கள் கருகிப் போயின. அதிக விலை கொடுத்து விதைகளை வாங்கிப் பயிரிட்டதால், மற்ற விவசாயிகளைவிட எனக்கு அதிக நஷ்டம். தொடக்கத்தில் எல்லோராலும் வியந்து பார்க்கப்பட்ட நான். இறுதியில், எல்லோரும் பார்த்துச் சிரிக்கும் நிலைக்கு ஆளானேன்.

இந்த அனுபவம், வேளாண் தொழிலில் உள்ள அபாயங்கள், அதன் நிச்சயமற்ற தன்மை முதலியன பற்றிய ஆழ்ந்த புரிதலை என்னுள் உருவாக்கியது. இது போன்ற இடர்களை எதிர்கொள்ள, விவசாயிகளுக்குச் சரியான காப்பீட்டுத் திட்டங்கள் இல்லையென்பது வியப்பாக இருந்தது.

இன்னொரு முக்கியமான புரிதலும் எனக்கு ஏற்பட்டது. ஊரகச் சமூகத்தில் ஒருவர் மற்றொருவரைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுதல். அது மெள்ள சமூக அறிவின் களஞ்சியமாக மாறுகிறது. அதில் புதுமைகள் சாத்தியமில்லை, ஆனாலும், அதற்கு சமூகத்தில் முக்கிய இடம் உள்ளது.

புதுமைகளைக் கொண்டு வர வேண்டிய வேளாண் விரிவாக்கக் கட்டமைப்புகள் சிதைந்து போயுள்ளன. இது அரசுப் பொதுநலக் கட்டமைப்பின் மிகப் பெரும் தோல்வி. இந்தப் பரிசோதனையின் மிகப் பெரும் அறிதல் என்பது, வேளாண்மை செய்யும் திறமை எனக்கில்லை என்பதுதான். பரிசோதனை அத்துடன் முடிந்தது.''

ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்
ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்

தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் என்னும் இந்தியாவின் மிக வெற்றிகரமான பொதுநலத்திட்ட உருவாக்கத்தில் நீங்கள் முக்கியப் பங்கு வகித்திருக்கிறீர்கள். அதன் சாதனைகள் என்ன?

ட்ரெஸ்: ``அதன் சாதனைகள், மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகின்றன. இந்தத் திட்டம் ராஜஸ்தானிலும், தென் மாநிலங்களிலும் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. ஊரக உழைப்பாளிகளுக்குப் பொருளாதாரப் பாதுகாப்பை, முக்கியமாக ஊரகப் பெண்களுக்கு வருமானம் ஈட்டிக்கொள்ளும் வாய்ப்பை அளித்திருக்கிறது. இதன் மூலம், உற்பத்திக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. கிராமப் பஞ்சாயத்து நிறுவனங்கள் உயிர் பெற்றுள்ளன. ஊரகத் தொழிலாளர்கள் அமைப்பாகத் திரள உதவியிருக்கிறது.

இந்தத் திட்டம், சமூகப் பாதுகாப்புக்கு எவ்வளவு முக்கியம் என்பது, சென்ற ஆண்டு கொரோனா காலத்தில், பொருளாதாரம் முடங்கியபோது வெளிப்பட்டது. இந்தியாவில் இதுவரை கண்டிராத அளவில், இந்தத் திட்டத்தால் ஊரக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.

ஆனால், வளர்ச்சியுறாத பீஹார், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில், இந்தத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட முடியவில்லை. அங்கே, இத்திட்டம், தனியார் ஒப்பந்தக்காரர்களின் கைகளில் சிக்கி, ஊழல் மிகுந்ததாக மாறிவிட்டது.

மத்திய அரசின் மையப்படுத்தும் போக்காலும், தொழில்நுட்ப மேலாதிக்கத்தாலும், தாமதமாக அளிக்கப்படும் ஊதியம் போன்ற அரசு மெத்தனத்தாலும், மங்கிப் போயுள்ளன. இன்று இத்திட்டம், இதன் தொடக்கக் கால நோக்கங்களில் இருந்து திசை மாறிப் போகத் தொடங்கியிருக்கிறது. ஆனாலும், உலக நாடுகளுக்கு, இது உத்வேகமளிக்கும் ஒரு பொதுநலத் திட்டமாக இருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அமெரிக்காவில் கூட ஊரக வேலைவாய்ப்பு உரிமை பற்றிய விவாதங்கள் தொடங்கியிருக்கின்றன. அமெரிக்காவில் இதைப் பற்றிய பேச்சு தொடங்கியிருப்பது இந்தத் திட்டத்தின் பெரிய சாதனைதான்.''

ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்
ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்

தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், ஊரக, வேளாண் தொழிலாளர்களின் கூலியை ஏற்றிவிட்டது. இது வேளாண்மையின் லாபகரத்தை மேலும் பாதித்துவிட்டது எனக் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன. உங்களுடைய பதில் என்ன?

ட்ரெஸ்: ``பணவீக்கம் தவிர்த்து, ஊரக வேளாண் தொழிலாளர்களின் கூலி அளவு, பல காலமாக வளராமல் தேங்கி நின்றிருந்தது. தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் வந்தபின், அது ஓரளவு உயரத் தொடங்கியது. அது ஒன்றும் பெரிய தவறல்ல. விளிம்பு நிலை உழவர்கள் பலரும் வேளாண் கூலி தொழிலாளர்களாகவும் இருக்கிறார்கள். இந்தத் திட்டத்தின் மூலமாக நீர்ச் சேகரிப்பு அமைப்புகள், நீர்நிலைகள் மேம்படுத்தப்பட்டன. அதனால், வேளாண்மைக்கான நீர் கிடைப்பது மேம்பட்டு, உற்பத்தி அதிகரித்திருக்கிறது. எனவே, நஷ்டத்தைவிட, இந்தத் திட்டத்தால் கிடைத்த பயன்கள் அதிகம். நஷ்டப்பட்டவர்கள் பெரும்பாலும், பெரும் உழவர்கள். அதை, குறைந்தபட்ச விலை, காப்பீடு, கட்டமைப்பு வசதிகள், கடன் போன்றவற்றை வழங்கிச் சரி செய்துவிட முடியும்.''

காந்தியப் பொருளாதார அணுகுமுறை பற்றிய உங்கள் கருத்துகள் என்ன?

ட்ரெஸ்: ``காந்தியப் பொருளியல், மரபான பொருளாதாரத் தத்துவத்துக்கு முற்றிலும் எதிரானது. மரபான பொருளாதாரம், மனிதன் சுயநலவாதி. எனவே, அவன் தன் சுயநலத்தை மட்டுமே முன்னிறுத்தி, மற்ற அனைத்தையும் புறக்கணித்து, தன் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முனைகிறான் என்னும் அடிப்படையில் இயங்குகிறது.

காந்தியம் மானுட அறத்தின் உச்சம். அவர் அனைவரையும் அந்த வழியைப் பின்பற்றுமாறு அழைத்தார். ஆனால், நிஜ உலகம், சுயநலன், பொதுநலன் என்னும் இரு நிலைகளுக்கும் இடைப்பட்ட புள்ளியில் இயங்கி வருகிறது என டாக்டர் அம்பேத்கர் கருதுகிறார்.

வேளாண் தொழிலாளர்கள்
வேளாண் தொழிலாளர்கள்

சொல்லப்போனால், இந்த இரண்டு நிலைகளுக்கும் இடையில் பல்வேறு நோக்கங்களும் சிந்தனைகளும் உருவாகி வந்துள்ளன. ஒற்றுமை, கூட்டுறவு, பொதுநல உணர்வு, சமூக அறிவு, அறநிலைச் செயல்பாடுகள் என.

எடுத்துக்காட்டாக, ஊருக்குள் வந்து பயிரை நாசம் செய்யும் வன விலங்குகளை, ஊர் மக்கள் இணைந்து விரட்டுகையில், அங்கே இருப்பது சுயநலமல்ல. ஏனெனில், சுயநலவாதி, மற்றவர்கள் அதைச் செய்யட்டும் என இருந்துவிடுவார். அதற்காக, அவர்கள் இணைந்து செயல்படுவது முழுக்க முழுக்கப் பொதுநலமும் அல்ல... ஏனெனில், அந்தச் செயலின் பயன்கள் அனைவருக்கும் கிடைக்கும் என்பது ஒரு முக்கியக் காரணமாக உள்ளது.

எனவே, சுயநலனும் பொதுநலனும் இணக்கமாக இணையும் புள்ளியில், ஒரு மேம்பட்ட சமூகத்தை உருவாக்க முயல வேண்டும். காந்தி தன் பொருளாதாரத் தத்துவத்தை நடைமுறைப்படுத்தத் தொடங்கிய கூட்டுறவு ஊரகத் தொழில் முனைப்புகள் அதை மிகச் சரியாகச் செய்துவருகின்றன.''

நீங்கள் பிரதமர் மன்மோகன் சிங் காலத்தில், தேசிய ஆலோசனைக்குழுவில் உறுப்பினராக இருந்தது, ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம் முதலியவற்றை உருவாக்குவதில், முக்கியப் பங்கு வகித்துள்ளீர்கள். மக்கள் நலத் திட்டங்கள், உரிமைகளாக மாறியதன் முக்கியத்துவம் என்ன?

ட்ரெஸ்: ``அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றைக் கொண்டு, ஒரு கண்ணியமான வாழ்க்கையை அமைத்துக்கொள்வது ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமையாகும். நமது அரசியல் சட்டத்தின், வழிகாட்டு நெறிகள் இதைத்தான் சொல்கின்றன. இந்தக் கருத்துகள், மக்கள் உரிமைச் சட்டங்களாக மாறியது ஒரு முக்கியமான நிகழ்வு. அவை சட்டமாக ஆகும்போது, வருங்காலத்தில் எந்த அரசியல்வாதியினாலோ, அதிகாரியினாலோ, மிக எளிதில் மாற்றிவிட முடியாதவைகளாகிவிடுகின்றன.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஒரு முக்கியமான உதாரணம். அரசு செயல்பாடுகள் பற்றிய தகவல்களைப் பெறுவது குடிமகனின் உரிமை என்பது, மக்கள் மனநிலையில், வியக்கத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்திருப்பதை நம் கண் முன்னே காணமுடிகிறது. நடைமுறையில், இதன் செயல்பாடுகள் வெற்றிகரமாக ஆனதற்குக் காரணம், தகவல் தரமறுக்கும் அதிகாரிகளுக்கு, இச்சட்டத்தின் வழியே தண்டனை கிடைக்கும் என்னும் விதிகள் இருப்பதுதான். இச்சட்டத்தின் வடிவமைப்பு வலுவாக இருப்பதால், இச்சட்டத்தைச் செயலிழக்க வைக்கும் முயற்சிகள் இதுவரை வெற்றி பெற முடியவில்லை. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் இன்னொரு வெற்றிகரமான உதாரணம்.''

ஜான் ட்ரெஸ்
ஜான் ட்ரெஸ்

1991-ம் ஆண்டு பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்குப் பின்னர், இந்தியா, உலகில் மிக முக்கியமான சக்தியாக மாறியிருப்பதாகப் பொதுவான கருத்து நிலவுகிறது. இதை ஏன், `நிச்சயமற்ற பெருமிதம்’ எனச் சொல்கிறீர்கள்?

ட்ரெஸ்: ``அமர்த்தியா சென்னுடன் இணைந்து எழுதிய, `நிச்சயமற்ற பெருமிதம்’ என்னும் புத்தகத்தில், இந்திய முன்னேற்றத்துக்குப் பங்களித்த பல்வேறு பொருளாதார அணுகுமுறைகளை ஆவணப்படுத்தியிருந்தோம். இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்படும், `பெருமிதம்’, என்பது, இந்தியா வல்லரசாக வேண்டும் என்னும் மேட்டிமைக் கனவல்ல. `நிச்சயமற்ற பெருமிதம்’ என்னும் வார்த்தைகள் ஷேக்ஸ்பியருடையவை. கதகதப்பான, நல்ல வெளிச்சமான நாளாக இருந்தாலும், எதிர்பாராமல் மழைபெய்யும் சாத்தியத்தைக் கொண்ட இங்கிலாந்து நாட்டின் வசந்த காலத்தைக் குறிப்பவை. எனவே `நிச்சயமற்ற பெருமிதம்’, என்பதை, எந்த நேரமும் குலைந்து போகலாம் என்னும் நிலையில் சுடரும் ஒளிக்கீற்று எனக் கொள்ளலாம்.

2004-ம் ஆண்டுத் தேர்தல் முதல், `இந்தியா ஒளிர்கிறது’ அல்லது `விரைவில் ஒளிரப்போகிறது’, என்னும் கோஷங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஊட்டச் சத்துக்குறைபாடு, வேலையின்மை, பொதுநலக் கட்டமைப்பின்மை என்னும் காரிருள் நம் நாட்டைச் சூழ்ந்திருக்கிறது என்பதுதான் உண்மை. இந்தியா உண்மையிலேயே ஒளிர வேண்டுமானால், இந்தக் காரிருள் விரட்டப்பட்டு, அனைவருக்குமான அடிப்படைத் தேவைகள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படும் நிலைமை உருவாக வேண்டும். உயர் வர்க்கத்துக்கான ஒளிரும் வாழிடங்கள் மட்டுமே உருவாவதில் பயனில்லை.''