ஆசிரியர் பக்கம்
நாட்டு நடப்பு
மகசூல்
Published:Updated:

பாரம்பர்ய நெல் சாகுபடியில் வெற்றி நடைபோடும் வேளாண் துறை முன்னாள் அமைச்சர்!

உழவுப் பணியில் கு.ப.கிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
News
உழவுப் பணியில் கு.ப.கிருஷ்ணன்

நானும் விவசாயி

தமிழ்நாட்டில் 1991-96-ம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க ஆட்சியில் வேளாண்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் கு.ப.கிருஷ்ணன். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், தீவிர அரசியலில் பிரவேசித்த போதிலும், விவசாயத்தின் மீதான நேசிப்பின் காரணமாக, இன்று வரையிலும் விவசாயியாகவே வலம் வருகிறார். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல அரசியல் பிரமுகரான கு.ப.கிருஷ்ணன், என்னதான் அரசியல் பணிகளில் பரபரப்பாக இருந்தாலும்கூட, வாரத்தில் 3 நாள்களாவது தன்னுடைய பண்ணைக்கு வந்து விவசாயப் பணிகளை மேற்பார்வை செய்கிறார்.

நஞ்சில்லாத உணவே நமது எதிர்காலம் என்ற உணர்வோடும், உறுதிப்பாட்டோடும் தன்னுடைய நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வரும் கு.ப.கிருஷ்ணனின் விவசாய அனுபவத்தை அறிந்துகொள்ள... மழைபொழிந்த ஈரமான ஒரு காலைப்பொழுதில் இவருடைய பண்ணைக்குச் சென்றோம்.

நோனி மரங்களுடன் கு.ப.கிருஷ்ணன்
நோனி மரங்களுடன் கு.ப.கிருஷ்ணன்
DIXITH

திருச்சி மாவட்டம், மருங்காபுரி அருகே உள்ள பளுவஞ்சி கிராமத்தில் அமைந்துள்ளது கு.ப.கிருஷ்ணனின் பண்ணை. பரந்து விரிந்து பச்சை பசேலெனக் காட்சி அளித்த இப்பண்ணையின் தோற்றம் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தியது. வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு வரப்பில் நடைபோட்டுக் கொண்டிருந்த கு.ப.கிருஷ்ணன், நம்மைக் கண்டதும் புன்னகை படர்ந்த முகத்துடன் ஒரு வாழைமரத்தின் அருகில் சென்று, அதில் விளைந்திருந்த ஒரு வாழைப் பூவை ஒடித்து நம் கையில் கொடுத்து வரவேற்றார். ``நான் ஒரு விவசாயி. என்னோட பண்ணைக்கு முதல்முறையா வர்றவங்களை, வாழைப்பூ கொடுத்து வரவேற்குறதுதான் என்னோட வழக்கம். இன்னும் எத்தனை வருஷமானாலும் என்னோட பண்ணையையும் என்னையும் நீங்க மறக்க மாட்டிங்க’’ என்றவர், நம்மிடம் பேசிக் கொண்டே கொஞ்ச தூரம் நடந்து சென்று, நாற்றங்கால் அமைக்கப்பட்டிருந்த இடத்தில் நின்றார். அங்கு வாளிப்பாக வளர்ந்திருந்த நாற்றுகளைத் தன்னுடைய கைகளால் மென்மையாகத் தடவி பார்த்தவர், ``தாளடி பட்ட நெல் சாகுபடிக்காக உற்பத்தி செஞ்ச நாற்றுகள் இது. நல்லா செழிப்பா வளர்ந்து நடவுக்குத் தயாராயிடுச்சு. மழையால நடவுப்பணிகள் நாலஞ்சு நாள்களா தள்ளிப் போயிக்கிட்டே இருக்கு’’ என்றவர்,

வயலுக்குள் இறங்கி அங்கு நின்றிருந்த டிராக்டரில் ஏறி, ‘கலப்பையை இறக்கி விடுங்கப்பா’ எனச் சொல்லி உற்சாகமாக உழவு ஓட்ட ஆரம்பித்தார். ``விவசாயம் செய்றவங்களுக்கு இது சம்பந்தமான எல்லா வேலைகளும் செய்யத் தெரிஞ்சிருக்கணும். அப்படித் தெரிஞ்சிருந்தாதான், நேர்த்தியா வேலைகள் நடக்க, விவசாயப் பணியாளர்களை நம்மால் வழிநடத்த முடியும்’’ என்றார்.

உழவுப் பணியில் கு.ப.கிருஷ்ணன்
உழவுப் பணியில் கு.ப.கிருஷ்ணன்
DIXITH

கு.ப.கிருஷ்ணனுக்குத் தற்போது 72 வயதாகிறது. இளைஞரைப்போல் கிடுகிடுவெனப் படுவேகமாகப் பண்ணை முழுவதும் நடந்து சென்ற இவருடைய வேகமும் உற்சாகமும் நம்மை வியப்பில் ஆழ்த்தியது. இதுகுறித்து நாம் கேள்வி எழுப்பியபோது, ‘`மற்ற துறைகள்ல உள்ளவங்களுக்கு எல்லாம் கிடைக்காத ஒரு வரப்பிரசாதம் இது. இயற்கையான சூழல்ல இருக்குறதுனாலதான் இதெல்லாம் கிடைக்குது.

என்னோட குடும்பத்துல உள்ள எல்லாருமே நிறைய படிச்சவங்க. நானும்கூட அந்தக் காலத்துலயே கல்லூரி போயி படிச்சிருக்கேன். ஆனாலும், எனக்கு விருப்பமான தொழில் விவசாயம்தான். ஏன்னா, இதுதான் தன்னலம் கருதாத ஒரு தொழில். பாரம்பர்யமான விவசாயக் குடும்பத்துல இருந்து வந்தவன் நான். பச்சைப் பசேலுனு பல ஏக்கர்ல பரந்து விரிஞ்ச வயல்வெளிகள், களத்துல குவிஞ்சு கிடந்த நெல்மணிகள், மலை மாதிரி அடுக்கி வச்ச வைக்கோல் போர், 100-க்கும் அதிகமான மாடுகள்னு சின்ன வயசுல இருந்தே இதையெல்லாம் பார்த்துப் பார்த்து வளர்ந்தவனுக்கு விவசாயத்து மேல ஆர்வம் வரலைன்னாதான் அதிசயம்.

காலம், என்னை ஒரு அரசியல்வாதியாக ஆக்கினாலும்கூட இன்னைக்கு வரைக்கும், விவசாயத்தை என்னோட உயிர் மூச்சா நினைச்சு, விடாமல் கெட்டியாகப் பிடிச்சசு்கிட்டு இருக்கேன். விவசாயத்தைப்போலவே தமிழ் மீதும் எனக்கு நேசிப்பு அதிகம். அதனால்தான் என்னோட இந்தப் பண்ணைக்கு ‘தமிழ்ப் பண்ணைனு பேர் வச்சிருக்கேன். என்னோட பண்ணையில... நெல், கரும்பு, வாழை, தென்னை, மா, எலுமிச்சை, கொய்யா, மாதுளை, காய்கறிகள் உட்பட பலவிதமான பயிர்கள் சாகுபடி செஞ்சுக்கிட்டு இருக்கேன். என்கிட்ட 20 மாடுகள் இருக்கு. அதனால போதுமான அளவுக்கு இயற்கை உரம் கொடுக்க முடியுது. இயற்கை விவசாயத்துனால, ஆரோக்கியமான உணவு கிடைக்குறதோடு மட்டுமல்லாம, உற்பத்தி செலவும் பெருமளவு குறையுது.

கழுகுப் பார்வையில் பண்ணை
கழுகுப் பார்வையில் பண்ணை

இப்போ 2 ஏக்கர்ல சீரகச் சம்பாவும், 10 ஏக்கர்ல திருச்சி-3 ரக நெல்லும் நடவு செய்றதுக்காக, நாற்றுகள் உற்பத்தி செஞ்சு வச்சிருக்கேன். இந்த இரண்டு ரகங்களையும் கடந்த பல வருஷங்களா தொடர்ச்சியா சாகுபடி செஞ்சுக்கிட்டு வர்றேன். சீரகச் சம்பா நெல்லை, வெளியில விற்பனை செய்றது இல்லை. இரண்டு ஏக்கர்ல விளையுற நெல் எல்லாத்தையுமே அரிசியாக்கி, எங்களோட வீட்டுத்தேவைக்கு வச்சிக்குவேன். எங்க தேவைக்குப் போக மீதியுள்ளதை, நண்பர்கள், உறவினர்களுக்குக் கொடுப்பேன்.

10 ஏக்கர்ல சாகுபடி செய்யக்கூடிய திருச்சி-3 ரக நெல்லுல பெரும்பகுதியை வெளியில விற்பனை செஞ்சிட்டு, ஒரு குறிப்பிட்ட அளவை மட்டும் அரிசியாக்கி எங்க வீட்டு இட்லிக்கு பயன்படுத்திக்குவோம். இது மோட்டா ரகம். இட்லிக்கு ரொம்ப அருமையா இருக்கும். திருச்சி-3 ரக அரிசியோட மதுரை-1 ரக உளுந்தை சேர்த்து ஆட்டி இட்லி செய்தால் அவ்வளவு அருமையாக இருக்கும். எங்க வீட்டுத் தேவைக்கான அரிசி, காய்கறிகளை முழுமையா நாமளே உற்பத்தி செய்யணும்ங்கிறதுல நான் எப்பவுமே உறுதியா இருக்கேன். இயற்கை விவசாயம் செய்றதுனாலதான் இப்படி நான் சொல்றேனு நினைக்காதீங்க. சாப்பாட்டை வாயில வைக்கிறப்ப இது நம்மளோட நிலத்துல விளைஞ்சது, உழைப்புல வந்ததுங்கிற சந்தோஷம் அப்பதான் இருக்கும்.

பண்ணையில் மாடுகள்
பண்ணையில் மாடுகள்
DIXITH

என்னோட பண்ணையில சாகுபடி செய்ற மற்ற பயிர்கள் மூலம் கிடைக்குற விளைபொருள்களை வெளியில விற்பனை செய்றது மூலமா கணிசமான வருமானம் கிடைக்குது. அந்த வருமானத்தை வச்சு, என்னோட பண்ணையை வெற்றிகரமா நடத்திக்கிட்டு இருக்கேன். இயற்கை இடர்ப்பாடுகளால ஒரு சில வருஷங்கள்ல கடுமையான நஷ்டம் ஏற்பட்டாலும், மனம் தளராம விவசாயத்தைத் தொடர்ந்து செஞ்சிக்கிட்டு இருக்கேன். விவசாயத்தை நேசிப்போட செய்றதுனாலதான். என்னோட மனசும் உடம்பும் ஆரோக்கியமா இருக்கு’’ என நெகிழ்ச்சியோடு பேசி முடித்தார்.ஒரு நல்ல விவசாயிதான் இந்திய நாட்டுக்கு திரும்பவும் பிரதமரா வரணும். இது நடந்தால்தான் விவசாயத்துக்கு ஒரு நிரந்தர விடிவுகாலம் பிறக்கும்.

நோனி மரங்கள்

``இந்தப் பண்ணையில 30 நோனி மரங்கள் இருக்கு. ஹவாய் தீவுகள்ல இருந்து வந்ததா சொல்லப்படும் இந்த நோனிப் பழங்களை ஜூஸ் போட்டு குடிச்சா உடம்புக்கு ரொம்ப நல்லது. இதுல ஏராளமான சத்துகள் நிறைஞ்சிருக்குறதா சொல்லப்படுது. நோனி மரத்தோட பூவுல தேன் மாதிரியான ஒரு திரவம் கசியும். எறும்புகள் அதை விரும்பிச் சாப்பிடும். அதனால இதைப் பராமரிக்குறதுல கொஞ்சம் கூடுதல் கவனம் தேவைப்படும்.

பண்ணையில்
பண்ணையில்
DIXITH

மா மரங்கள்

இமாம் பசந்த், ருமானி, அல்போன்சா உட்பட பல வகையான மா ரகங்கள் இந்தப் பண்ணையில இருக்கு. இங்க விளையுற மாம்பழங்களைப் பறிச்சவுடனே சாப்பிடுறதே தனி அலாதிதான்.

மாடுகள்

என்னோட அப்பா, 100 மாடுகள் வச்சிருந்தாரு. இப்போ நான் 20 மாடுகள்தான் வச்சிருக்கேன். இது எனக்கு மிகப்பெரிய மனக்குறைதான். ஆனா, இதுக்கு மேல அதிக எண்ணிக்கையில மாடுகள் வளர்த்தா, இப்பவுள்ள சூழ்நிலையில, என்னோட நேரடி கண்காணிப்புல பராமரிக்குறது சிரமம். என்னோட பேரப் பிள்ளைங்க இங்கவுள்ள மாடுகளோட பாலைக் குடிச்சு பழகிட்டதால, வெளியில எங்கயாவது போனா, வேற பாலைக் குடிக்க மாட்டேங்குறாங்க. காரணம் எங்க மாடுகளோட பால் அவ்வளவு சுவையா இருக்கும். எங்க குடும்பத்துக்குத் தேவையானது போக, மீதியுள்ள பாலை விற்பனை செய்றோம். எங்களோட மாடுகளுக்குத் தேவையான வைக்கோல், பசுந்தீவனம் எல்லாம் எங்க பண்ணையிலயே கிடைச்சுடுது. எங்க மாடுகளோட கழிவுகள் இந்தப் பண்ணைக்கு உரமா பயன்பட்டுக்கிட்டு இருக்கு’’ என்கிறார் கு.ப.கிருஷ்ணன்.

நடவுக்குத் தயாராக வயல்
நடவுக்குத் தயாராக வயல்
DIXITH

வேளாண்துறை அமைச்சராக இருந்தபோது...

“1991-ம் வருஷம் ஶ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனேன். இன்ப அதிர்ச்சியா, நான் நேசிக்கக்கூடிய, எனக்கு நேரடி அனுபவம் உள்ள வேளாண்மைத்துறையின் அமைச்சரா நியமிக்கப்பட்டேன். விவசாயிகள் பயன்பெறக்கூடிய வகையில, என்னால் இயன்றவரைக்கும், ஆக்கபூர்வமான திட்டங்களைச் செயல்படுத்தினேன். தமிழக அரசு சார்புல விவசாயிகளுக்குக் கடப்பாறை, மண்வெட்டி கொடுக்குற திட்டம், அப்பதான் அறிமுகம் செய்யப்பட்டுச்சு.

1990-களுக்கு முன்னாடியெல்லாம் தமிழ்நாட்டுல உள்ள விவசாயப் பண்ணைகள்ல சொட்டுநீர்ப் பாசனத்தைப் பார்க்குறதுங்கறது ரொம்பவே அரிது. தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்கள்ல உள்ள விவசாயிங்க, ‘பாட் சிஸ்டம்’ங்கற பேர்ல பானை வழியாக மரங்களுக்குத் தண்ணி கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. 1991-96-ம் காலகட்டத்துல நான் தமிழக வேளாண்மைத்துறை அமைச்சரா இருந்தப்பதான் என்னோட தலைமையில ஒரு குழு அமைக்கப்பட்டு, இஸ்ரேல் நாட்டுக்குப் போய், அங்க செயல்படுத்தப்பட்டுக்கிட்டு இருந்த சொட்டுநீர்ப் பாசன முறைகளைப் பார்வையிட்டோம். அதன்பிறகு தமிழ்நாட்டுல சொட்டுநீர்ப் பாசனத்தை ஊக்கப்படுத்தக்கூடிய திட்டங்களைச் செயல்படுத்தினோம்.

இந்தியாவிலேயே திருச்சியில மட்டும்தான் வாழைக்குனு தேசிய அளவிலான ஆராய்ச்சி மையம் செயல்பட்டுக்கிட்டு இருக்கு. இது தமிழ்நாட்டுக்கு கிடைச்ச மிகப்பெரிய வாய்ப்புனு சொல்லலாம். இதைக் கொண்டு வந்ததுல என்னோட பங்களிப்பு ரொம்ப அதிகம். இதுக்காக 12 நாள்கள் டெல்லியிலேயே காத்துக்கிடந்தேன். இதையெல்லாம் நான் பெருமை அடிச்சிக்குறதுக்காகச் சொல்லலை. ஒரு விவசாயி, வேளாண்துறை அமைச்சரா இருந்தாதான், விவசாயிகளுக்கு என்னவெல்லாம் தேவைனு தெரிஞ்சு செயல்படுத்த முடியும்’’ என்கிறார் கு.ப.கிருஷ்ணன்.

நடவுக்குத் தயாராக வயலும் நாற்றுகளும்
நடவுக்குத் தயாராக வயலும் நாற்றுகளும்
DIXITH

கமலைக் கட்டி தண்ணி இறைப்பேன்

“1972-ம் வருஷம், நான் கல்லூரி படிப்பை முடிச்சேன். அப்போதுல இருந்து இப்போ வரை கிட்டத்தட்ட 50 வருஷமா விவசாயம் செஞ்சுக்கிட்டு இருக்கேன். மாடு கட்டி உழவு ஓட்டியிருக்கேன். கிணத்துல கமலைக் கட்டி தண்ணி இறைச்சிருக்கேன். அதுமட்டுமல்ல... இப்ப வரக்கூடிய நவீன வேளாண் கருவிகளை எல்லாம் எனக்கு இயக்கத் தெரியும்.

விவசாயிதான் பிரதமரா வர வேண்டும்

விவசாயம்தான், மன நிம்மதியை தரக்கூடிய ஒரு தொழில். விவசாயத்து மேல எனக்கு அளவிட முடியாத மரியாதை உண்டு. இந்தியா மாதிரியான ஒரு விவசாயத் தேசத்துல... ஒரு நல்ல விவசாயிதான் இந்திய நாட்டுக்கு பிரதமரா வரணும். ஏற்கெனவே சில விவசாய பிரதமர்கள் வந்தாலும் அவங்க ரொம்ப நாள்கள் பதவியில நீடிக்கல. அதனால, முழு அதிகாரத்தோடு ஒரு விவசாய பிரதமர் வரணும். இது நடந்தால்தான் விவசாயத்துக்கு ஒரு நிரந்தர விடிவுகாலம் பிறக்கும். இந்தியாவுல உள்ள மொத்த மக்கள் தொகையில கிட்டத்தட்ட 70 சதவிகிதம் பேர் விவசாயிகள்தான். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைக்கும் விவசாயம் நடந்துகிட்டு இருக்கு” என்கிறார் கு.ப.கிருஷ்ணன்.

நடவுக்குத் தயாராக வயல்
நடவுக்குத் தயாராக வயல்
DIXITH

நியாயமான விலை

‘‘சமீபகாலமா விவசாயிகள் பலவிதமான நெருக்கடிகளைச் சந்திச்சுக்கிட்டு இருக்காங்க. இடுபொருள்களோட விலை கடுமையா உயர்ந்திடுச்சு. விவசாயத் தொழிலாளர்களோட சம்பளமும் பல மடங்கு உயர்ந்திடுச்சு. ஆனா, இதுக்கு ஏத்தமாதிரி விளைபொருள்களோட விலை உயரலை. இதனால விவசாயிகளோட உழைப்புக்கும் முதலீட்டுக்கும் ஏத்த லாபம் கிடைக்க மாட்டேங்குது. இதே நிலை நீடிச்சதுன்னா, விவசாய நிலங்கள், விவசாயிகளோட கைகள்ல இருந்து கார்ப்பரேட் கம்பெனிகளோட கட்டுப்பாட்டுக்குப் போயிடும். அப்படியொரு நிலை வந்தா, விளைபொருள்களோட விலையேற்றத்துனால, பொதுமக்கள் சிரமங்களைச் சந்திப்பாங்க அதனால விளைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்கணும். இதுதான் விவசாயிகளின் உழைப்புக்கு அரசாங்கம் கொடுக்குற மிகப்பெரிய மரியாதையா இருக்கும்” என்கிறார் கு.ப.கிருஷ்ணன்.