ஆசிரியர் பக்கம்
மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

விவசாயிகளிடம் நிலம் எடுத்தால், இனி சட்டப்படி இழப்பீடு! இந்திய அளவில் உருவெடுத்த கூட்டமைப்பு

விவசாய நிலம்
பிரீமியம் ஸ்டோரி
News
விவசாய நிலம்

விழிப்புணர்வு

நிலம் எடுப்பு மற்றும் அனுபவ உரிமை எடுப்பால் பாதிக்கப்படக்கூடிய விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவும், விவசாயிகளிடம் சட்டபூர்வமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயச் சங்கத் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள் ஒன்றாக இணைந்து ஓர் கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளார்கள்.

விவசாயிகளை மிரட்டி நிலம் பறிக்கும் அரசு உயரதிகாரிகளைத் தட்டிக் கேட்பதற்கும், வஞ்சிக்கப்படும் விவசாயிகளுக்காக நீதிமன்றங்களில் குரல் கொடுத்து நீதி நிலை நாட்டவும், இந்தக் கூட்டமைப்பு ஆயத்தமாகி வருகிறது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் ஈரோடு தொகுதி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் (தி.மு.க) கணேசமூர்த்தியின் டெல்லி இல்லத்தில் நடைபெற்றது. நிலம் எடுப்புக்கான நியாயமான இழப்பீடு கோரும் இயக்கம் (Fair Land Compensation Movement) என்ற பெயரில் இக்கூட்டமைப்பு உருவாக்கப் பட்டுள்ளது.

இந்தக் கூட்டமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளராகப் பாரதிய கிசான் சங்கத்தின் தேசிய பொதுச் செயலாளர் யுத்வீர்சிங்கும், தேசிய இணை ஒருங்கிணைப் பாளராகத் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதுகுறித்து வழக்கறிஞர் ஈசன் முருகசாமியிடம் நாம் பேசியபோது,

விவசாய நிலம்
விவசாய நிலம்

‘‘அரசின் வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் விளைநிலங்கள் அபகரிக்கப்பட்டு, விவசாயிகள் வஞ்சிக்கப்படுவது நீண்ட காலமாகவே தொடர்ந்துகொண்டிருக்கிறது. 1894-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நிலம் எடுப்புச் சட்டம், முற்றிலும் விவசாயிகளுக்கு அநீதி இழைக்கக்கூடியதாகவே இருந்து வந்தது. இந்நிலையில்தான் அந்தச் சட்டம் நீக்கப்பட்டு, 2013-ம் ஆண்டு புதிய நிலம் எடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. நிலம் எடுப்பு மற்றும் அனுபவ உரிமை எடுப்பால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும் என இச்சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இச்சட்டம் வந்த பின்னரும்கூட, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைப் பதில்லை என்பதுதான் வேதனையான உண்மை.

தேசிய நெடுஞ்சாலை, பெரும் தொழிற் சாலைகள் உள்ளிட்ட இன்னும் பல்வேறு விதமான வளர்ச்சி திட்டங்களுக்காக அபகரிக்கப்பட்ட நிலங்களை இழந்த விவசாயிகள், தலைமுறை தலைமுறையாக நீதிமன்றங்களுக்கு நடந்து கொண்டிருக்கிறார்கள். லட்சக்கணக்கான வழக்குகள் உரிய இழப்பீடு கோரி இன்றும் நிலுவையில் உள்ளது. சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க சட்டம் வழிவகைச் செய்து இருந்தாலும் அதிகாரிகள் நிறுவனங்களோடு கூட்டுச் சேர்ந்துகொண்டு வழிகாட்டி மதிப்பில் மட்டுமே இழப்பீடு வழங்கி வஞ்சித்து வருகிறார்கள். இதற்காக நியாயம் கேட்டு, ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனியாக விவசாயச் சங்கங்கள் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்,

இந்நிலையில்தான் தனித்தனியாக இயங்கிக் கொண்டிருக்கும் விவசாயச் சங்கங்கள் மற்றும் சட்ட வல்லுநர்களை ஒருங்கிணைத்து, நீதிமன்றங்களில் சட்டப் போராட்டம் நடத்தி, விவசாயிகளுக்குச் சந்தை மதிப்பில் இழப்பீடு பெறவும் பிற பலன்களைப் பெற்றுத் தருவதற்காகவும் இந்தக் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளோம்’’ எனத் தெரிவித்தார்.

இக்கூட்டமைப்பின் தமிழக ஒருங்கிணைப் பாளரும் தமிழகக் காவிரி விவசாயிகளும் பாதுகாப்புச் சங்கத்தின் செயலாளருமான சுமாமிமலை சுந்தர விமல்நாதன் ‘‘விவசாயி களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் அளிக்கும் வகையில் 2013-ம் ஆண்டு, நிலம் கையகப் படுத்துதல், நியாயமான இழப்பீடு வழங்குவதல், மறு குடியமர்த்துதல் மற்றும் மறுவாழ்வு சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், நடைமுறையில் இச்சட்டத்தின் எந்த ஒரு அம்சத்தையுமே அரசு அதிகாரிகள் கடைப்பிடிப்பதே இல்லை. மத்திய, மாநில அரசுகளின் எந்தவொரு வளர்ச்சி திட்டத்துக்காக விவசாயிகளின் நிலங்களை எடுத்தாலும், சந்தை மதிப்பில் இருமடங்கு இழப்பீடு தர வேண்டும் இச்சட்டம் வலியுறுத்துகிறது.

ஆனால், அரசு வழிகாட்டும் மதிப்பு என்ற பெயரில் மிகவும் குறைவான இழப்பீடுதான் வழங்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் கடுமையான பொருளாதார இழப்புகளைச் சந்திக்கிறார்கள். இதுவே மிகப்பெரிய அநீதி. அதேசமயம், இந்தச் சொற்ப இழப்பீடுகூடக் கொடுக்கப்படாமல் ஏராளமான விவசாயிகள் ஏமாற்றப்பட்டிருப்பது, வேதனையில் உச்சமல்லவா? விவசாயிகளின் அனுமதி இல்லாமலே அவர்களுடைய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள், உயர் மின்னழுத்த கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு எந்த ஒரு வாடகையும் தரப்படுவதில்லை. இதுபோன்ற நிலங்களை விவசாயிகள் விற்பனை செய்யவும் முடிவதில்லை. ஒருவித அச்சத்தோடு மற்றவர்கள் வாங்க மறுக்கிறார்கள்.

விவசாயிகள் தங்களது நிலத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்க வேண்டு மென்றால்கூட, மின்சார வாரியத்திடம் அனுமதி பெற அல்லல்படுகிறார்கள். மின்சாரம் சம்பந்தப்பட்டது என்பதால், பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்குக் கூட, விவசாயிகள் அச்சப்பட வேண்டியுள்ளது. உயர் மின்னழுத்த கம்பிகளுக்குக் கீழே டியூப்லைட் கொண்டு போனாலே, அது எரிகிறது. அந்தளவுக்கு அப்பகுதியில் மின்காந்த அலைகள் வியாபித்திருக்கிறது. இதனால் பல்லுயிர்பெருக்கம் பாதிக்கப் படுவதால், பயிர்களில் மகரந்தச் சேர்க்கை முழுமையாக நடைபெறுவதில்லை. இதனால் விவசாயிகள் மகசூல் இழப்பை சந்திக் கிறார்கள்.

இதேபோல் ஓ.என்.ஜி.சி, கெயில் உள்ளிட்ட நிறுவனங்களின் கச்சா எண்ணெய் - எரிவாயு கிணறுகள் மற்றும் குழாய்களாலும் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு நியாயம் கிடைக்க, தற்போது நாங்கள் உருவாக்கியுள்ள நிலம் எடுப்புக்கான நியாயமான இழப்பீடு கோரும் இயக்கம் சட்டபூர்வ நடவடிக்கைகளில் இறங்கும். இது தொடர்பாக விவசாயிகளிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும்’’ எனத் தெரிவித்தார்.

கூட்டமைப்பில் உள்ள உறுப்பினர்கள்
கூட்டமைப்பில் உள்ள உறுப்பினர்கள்

கூட்டமைப்பில் உள்ளவர்கள்!

இந்தக் கூட்டமைப்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் வி.என்.சுப்ரமணியம், கணேஷ் பாபு, சையத் அசமானுல்லா, அஜய் நட்டா உட்பட இன்னும் பல மாநிலங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் ராகேஷ் திகாயத், ராஜ்விந்தர்சிங், ராஜா முசாபர் பட், ரஜினிஸ் சர்மா, ராபியா சைலானி, சுபாஷ் பாண்டே, ராம்பால் ஜாட், ரத்தன் மான், விஜய் சாஸ்திரி, கேசவ் ஆரியா, அஜய் காலே, திராஜ் லாடியன் உள்ளிட்ட வேளாண் செயற்பாட்டளர்களும் இடம்பெற்றுள்ளார்கள்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சி.பி.சி.எல் நிறுவனத்தின் நில எடுப்பால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பிரதிநிதிகளாக சக்திவேல், விஜயராஜ் உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சார்பாகக் கருமத்தம்பட்டி தங்கவேலு, தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சார்ந்த விவசாயி முத்துக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். நிலம் எடுப்பால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களை அணுகலாம் என இக்கூட்டமைப்பினர் தெரிவிக்கிறார்கள்.

உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்காக நாடாளுமன்றத்தில் பலமுறை குரல் கொடுத்தவர், ஈரோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி. இது தொடர்பாக, மத்திய அமைச்சர்களுக்கும் கடிதம் எழுதி இருக்கிறார். டில்லியில் இவருக்கு வழங்கப்பட்டுள்ள வீட்டில்தான் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.