கீழ்பவானி... ரூ.900 கோடியில், கால்வாய் சீரமைப்புத் திட்டம் விவசாயிகளின் ஆதரவும் எதிர்ப்பும்...

அரசு என்ன செய்யப்போகிறது?
ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய மண் அணை எனப் போற்றப்படுகிறது, ஈரோடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் பவானிசாகர் அணை. இந்த அணையிலிருந்து வெட்டப்பட்டுள்ள கீழ்பவானி கால்வாய் மூலமாக ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2,07,000 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகின்றன. கால்வாய் வெட்டப்பட்டு 65 ஆண்டுகளாகியும் சீரமைப்புப் பணிகள் இதுவரை நடைபெறாததால், கடைமடை வரை போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை என அப்பகுதி மக்களிடையே ஆதங்கக் குரல்கள் எழுந்தன. இந்நிலையில்தான் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் சுமார் 900 கோடி மதிப்பீட்டில் ‘கீழ்பவானி கால்வாய் சீரமைக்கும் திட்டம்’ அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விவசாயிகளில் ஒரு தரப்பினர் இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் எனவும், இன்னொரு தரப்பினரோ இத்திட்டத்தை நிறைவேற்றியே தீர வேண்டும் எனவும் சொல்கிறார்கள்.

சீரமைப்புத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கீழ்பவானி விவசாயிகள் நல சங்க தலைவர் செ.நல்லசாமி, “இந்தக் கீழ்பவானி கால்வாய் பாசனத் திட்டம் என்பது மழைநீர் அறுவடை மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் ஆகும். கீழ்பவானி பாசனத்தின் மொத்தப் பரப்பளவான 2,07,000 ஏக்கர் நிலங்களை இரண்டு மண்டலமாகப் பிரித்து, வருடத்திற்கு ஒரு மண்டலத்துக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்படுகிறது. தண்ணீர் திறக்கப்படாத இன்னொரு மண்டலத்தைச் சேர்ந்த விவசாய நிலங்களில், நிலத்தடி நீர் செறிவூட்டல் அடிப்படையில் கிணறு, உரம்பு நீர், ஆழ்துளைக் கிணறு மூலமாகப் பாசனம் பெறுகின்றன. இந்தக் கால்வாயை நம்பித்தான் 34 கசிவுநீர்ப் பாசனத் திட்டங்கள் இருக்கின்றன. சீரமைப்பு என்ற பெயரில், இந்தக் கால்வாயில் கான்கிரீட் போடும்போது, இந்த மறைமுகப் பாசனங்கள் எல்லாம் கடுமையாகப் பாதிக்கப்படும். கடந்த 67 ஆண்டுகளில் ஒரு முறை கூடக் கீழ்பவானி கால்வாயைத் தூர்வாரி, கரையைப் பலப்படுத்தவே இல்லை. பாசனப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் கூட அகற்றியதே இல்லை. இதைச் செய்தாலே கால்வாயில் திறந்து விடப்படும் தண்ணீர் தாராளமாகக் கடைமடை வரைக்கும் போய்ச் சேரும். பவானி சாகர் அணையிலிருந்து நீரை எடுப்பதில் நிறைய தவறுகள் நடக்கின்றன. அதனை விடவும் சாயப் பட்டறை, தோல் தொழிற்சாலை, சர்க்கரை ஆலை மற்றும் காகித ஆலை உரிமையாளர்கள் தான் அதிகம் பலன் அடைகிறார்கள். இதையெல்லாம் சரி செய்தாலே கண்டிப்பாகக் கடைமடைக்குத் தண்ணீர் கிடைத்துவிடும்’’ என்றார்.

கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரவி, ‘‘கால்வாயில் கசிவு அதிகமாக இருக்கிறது. அதனால்தான் கடைமடை வரை தண்ணீர் போய்ச் சேர்வதில்லை’ என்ற காரணத்திற்காக, இந்தக் கான்கிரீட் திட்டத்தினை அறிவித்துள்ளதாக அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால், கடைமடை வரை தண்ணீர் பாய்ந்ததற்கான பொதுப்பணித் துறையின் ஆவணங்கள் எங்களிடம் இருக்கின்றன. கடைமடைக்குத் தண்ணீர் போகவில்லை என்றால் பயிர்கள் பாதிக்கப்பட்டு, இழப்பீடு கொடுக்கப்பட்டிருக்க வேண்டுமல்லவா! அப்படிக் கடந்த 65 ஆண்டுகளில் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என வருவாய்த் துறை ஆவணங்களைக் காட்ட வேண்டும். அதேபோல, ‘மண் இயல்பு தன்மையை இழந்து, நீரைக் கடத்தும் திறனை இழந்திருக்கிறது’ எனப் பொதுப்பணித்துறையினர் அறிக்கை கொடுத்துள்ளனர். ‘எந்தெந்த தேதிகளில், எந்தெந்த இடங்களில் மண் பரிசோதனையைச் செய்திருக்கிறீர்கள்’ எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக நாங்கள் கேட்ட கேள்விக்கு இப்போது வரை பதிலே இல்லை. அதேவேளையில், 200 கி.மீ நீளமுள்ள கால்வாயில் 2 கி.மீ-க்கு ஓர் இடத்தில் என நாங்கள் மண் பரிசோதனை செய்து, அந்த ரிப்போர்ட்டை ஈரோடு ஆட்சியரிடம் கொடுத்திருக்கிறோம்’’ என்றார்.

கீழ்பவானி ஆயக்கட்டுப் பாசனதாரர்கள் சங்க செயலாளர் கி.வே.பொன்னையன், “கீழ்பவானி கால்வாய் முழுவதும் கான்கிரீட் போட போகிறார்கள் என்கிற பொய்யான பிரசாரத்தைத் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். கால்வாயில் எந்தெந்த இடங்களிளெல்லாம் அதிகளவில் கசிவு இருக்கிறதோ, அந்த இடங்களில் மட்டுமே கான்கிரீட் போட இருக்கிறார்கள். அதாவது கால்வாயின் மொத்த நீளமான 200 கிலோமீட்டரில், 13 சதவிகிதம் மட்டுமே அதாவது 27 கி.மீ தூரத்திற்கு மட்டுமே கான்கிரீட் போட இருக்கிறார்கள். கீழ்பவானியில் கான்கிரீட் போட்டால் விளைநிலங்கள் பாலைவனம் ஆகும்’ என்கின்றனர். இன்றைக்குக் கீழ்பவானி கால்வாயில் பாயக்கூடிய 36 டி.எம்.சி தண்ணீர் தான், நாளை வாய்க்கால் சீரமைத்த பிறகும் பாயப் போகிறது. பிறகு எப்படிப் பாலைவனம் ஆகும்’’ எனக் கேள்வி எழுப்புகிறார்.

தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் அறச்சலூர் செல்வம், “கீழ்பவானி வாய்க்கால் வெட்டப்பட்டபோது அனுமதிக்கப்பட்ட 33 சதவிகித கசிவின் அளவானது இன்றைக்கு 50-60 சதவிகித அளவில் இருக்கிறது. இதுமட்டுமில்லாமல் இந்தப் பாசன பகுதிகளில் இருபுறமும், குளிர்பான கம்பெனிகள், தண்ணீர் பாட்டில் கம்பெனிகள், கல்வி நிறுவனங்கள் என இந்தக் கீழ்பவானி பாசனத்தில் உரிமையில்லாத பலரும், சட்டவிரோதமாக ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுக்கின்றனர். கால்வாயில் கசிவு அதிகமானதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம். இந்தச் சீரமைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தண்ணீர்த் திருட்டுத் தடுக்கப்படும்.

இத்தனை நாளாக இலவசமாகத் தண்ணீரைப் பெற்று வந்தவர்கள், இனி லட்சக்கணக்கில் பணம் கொடுத்துத் தண்ணீர் வாங்க வேண்டிய சூழல் உண்டாகும். கீழ்பவானி கால்வாயின் இடது பக்கம் மட்டுமே பாசனம் நடைபெறுகிறது. மேடாக இருப்பதனால் வலது பக்கம் பாசன வசதி இல்லை. கீழ்பவானி கால்வாயின் கசிவுநீரை வைத்தே, வலது பக்கம் சிறு குறு விவசாயிகள் பாசனம் செய்து வந்தனர். காலப்போக்கில் சிறு குறு விவசாயிகளின் நிலங்களை எல்லாம் பெரும் பணக்காரர்கள் விலைக்கு வாங்கி வாழை, கரும்பு, தென்னை போன்றவற்றைப் போட்டு, கீழ்பவானி கால்வாயில் தண்ணீரை உறிஞ்ச ஆரம்பித்துவிட்டார்கள். காங்கேயத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் கால்வாயின் கரையோரம் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி அங்கு கிணறு வெட்டி, தண்ணீரை எடுத்து 10 கி.மீ தூரத்திற்கு எடுத்துச் சென்று விவசாயம் செய்கிறார். கால்வாயின் இருபுறமும் இப்படிச் சட்டவிரோதமாக நூற்றுக்கணக்கான கிணறுகளை வெட்டி, ஆயக்கட்டு இல்லாத பகுதிக்கு தண்ணீரை எடுத்துச் செல்கின்றனர். இதையெல்லாம் முறைப்படுத்தும் திட்டம் தான் இந்தக் கீழ்பவானி கால்வாய் சீரமைக்கும் திட்டம். 33 சதவிகித அளவுக்குக் கசிவுநீர் அனுமதிக்கப்பட்டுதான் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது’’ எனத் தெரிவித்தார்.
விவசாயிகளிடம் பிளவு ஏற்படாத வகையில் ஒத்த கருத்தின் அடிப்படையில் தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும்.
பேசினால் பிரச்னை முடிந்துவிடும்!
அரசின் நிலைப்பாடு குறித்து அறிய வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியிடம் பேசினோம். “கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் போட வேண்டும் என ஒரு தரப்பு விவசாயிகளும், கான்கிரீட் போடக்கூடாது என இன்னொரு தரப்பு விவசாயிகளும் சொல்கின்றனர். இந்த இரண்டிலுமே எனக்கு உடன்பாடு இல்லை. இரு தரப்பையும் சமாதானம் செய்து, கால்வாயில் எங்கெல்லாம் உடைப்பு ஏற்படும் நிலை இருக்கிறதோ!... எங்கெல்லாம் அதிகமாக தண்ணீர் கசிவு இருக்கிறதோ... அந்த இடத்தை சீரமைத்து கான்கிரீட் போட வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு. ஆனால், இதற்கு இரண்டு தரப்பு விவசாயிகளும் ஒத்துழைக்காமல் போனால் நான் என்ன செய்ய முடியும்..? தேவைப்படும் இடத்தில் கான்கிரீட் போட சம்மதித்தால் நாளைக்கு கால்வாய் முழுக்க கான்கிரீட் போட்டு விடுவோம் என இத்திட்டத்தை எதிர்க்கும் விவசாயிகள் நினைக்கிறார்கள். அப்படி நடக்காது என்கின்ற உத்திரவாதத்தை நான் கொடுக்கிறேன்.

ஒரு தொழில் நிறுவனத்துக்கும், விவசாயிகளுக்கும் பிரச்னை என்றால் நாங்கள் விவசாயிகள் பக்கம் முழுதாக நின்றிருப்போம். ஆனால், இது இரண்டு தரப்பு விவசாயிகளுக்கு இடையேயான பிரச்னை. இரண்டு தரப்பிலிருந்தும் தலா 10 விவசாயிகள் வந்து மனதார உட்கார்ந்து பேசினால் பிரச்னை முடிந்துவிடும்” என முடித்துக்கொண்டார்.