குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுமா? எதிர்பார்ப்பில் விவசாயிகள்!

கோரிக்கை
காவிரி டெல்டா விவசாயிகள் மிகவும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்படுவதால், குறுவைச் சாகுபடி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகளில் ஈடுபட விவசாயிகள் ஆயத்தமாகி வருகிறார்கள். அதேசமயம் குறுவைச் சாகுபடியை வெற்றிகரமாக மேற்கொள்ள இப்பகுதி விவசாயிகள் தமிழக அரசிடம் சில கோரிக்கைகளை வலியுறுத்துகிறார்கள்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் குறுவை நெல் சாகுபடிக்காக, ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரிநீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் போதிய அளவு நீர் இருப்பு இல்லாத ஆண்டுகளில், மேட்டூர் அணை திறப்பு பல வாரங்கள் தள்ளிப்போன வரலாறும் உண்டு. இதனால் டெல்டா விவசாயிகள் குறுவைச் சாகுபடியைக் கைவிட்டு, மன உளைச்சல் அடைவார்கள்.

இந்நிலையில்தான் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதியளவு நீர் இருப்பு உள்ளதால், குறுவை பாசனத்திற்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் அதே நேரத்தில், ஒரு கோரிக்கையையும் அரசுக்கு வைக்கிறார்கள்.
இது தொடர்பாகப் பேசிய தஞ்சாவூர் மாவட்டம் ராயமுண்டாம்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் சங்க நிர்வாகி வெ.ஜீவக்குமார்,
‘‘2011-ம் ஆண்டுத் தமிழ்நாடு முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும், குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அடுத்த ஐந்தாண்டுகள் தொடர்ச்சியாகச் செயல்படுத்தினார். சிறு, குறு விவசாயிகளுக்குக் குறுவை நெல் சாகுபடிக்கான ஆரம்பக்கட்ட செலவுகளுக்கு அது உறுதுணையாக இருந்தது. தற்போதைய திமுக அரசு, டெல்டா விவசாயிகளின் நலன் கருதி அத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளைக் களைந்து, மேம்படுத்தி மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். கடைமடைப் பகுதிகளுக்குத் தண்ணீர் கொண்டு செல்லும் அதே நேரத்தில் தலைமடை பகுதியிலும் தண்ணீரைப் பகிர்ந்து வழங்க வேண்டும். கல்லணை அருகே பாலம் கட்டும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்’’ என்றார்.

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தஞ்சாவூர் செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமல்நாதன், ‘‘மேட்டூர் அணை திறப்பால் டெல்டா விவசாயிகள் மிகுந்த நம்பிக்கையோடு குறுவைச் சாகுபடிக்கான ஆரம்பக்கட்ட பணிகளில் ஈடுபடத் தொடங்கியிருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக, குறுவைச் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்குத் தேவையான பயிர்க்கடன்கள், இடுபொருள்களை வழங்கத் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குறுவை மற்றும் சம்பா சாகுபடி காலம் முழுமைக்கும், மேட்டூர் அணையின் தற்போதைய நீர் இருப்பையோ, பருவ மழையையோ முழுமையாக நம்பியிருக்க முடியாது. எனவே கர்நாடகம் தமிழ்நாட்டிற்குச் சட்டப்படி தர வேண்டிய காவிரி பங்கு நீரைப் பெறத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். இந்த ஆண்டுப் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கு உரியப் பங்கு நீரைக் கர்நாடகாவிடமிருந்து தமிழக அரசு பெற வேண்டும்’’ என்றார்.
‘‘கடைமடைப் பகுதிகளுக்கு உரிய நேரத்தில் தண்ணீர் வந்து சேருமா என விவசாயிகளுக்குச் சந்தேகமாக உள்ளது. இதை அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும்.’’
தமிழகக் காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன், ‘‘மிகுந்த நம்பிக்கையுடன் குறுவை நெல் சாகுபடி பணிகளை மேற்கொள்ள உத்தரவாதம் வழங்கியுள்ள தமிழக முதல்வருக்கு டெல்டா விவசாயிகள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். குறுவை நெல் அறுவடை நேரத்தில் பெய்யக்கூடிய மழையால் நெல்மணிகள் ஈரமாகின்றன. இதனைக் கொள்முதல் செய்ய மறுப்பதால் விவசாயிகள் சிரமம் அடைகிறார்கள். இந்நிலையில்தான் ஈரமான நெல்மணிகளை உலர்த்தக்கூடிய நவீன இயந்திரங்களுடன் உலர் களங்கள் மற்றும் மிகப்பெரிய அளவிலான சேமிப்புக் கிடங்குகள் அமைப்பதற்குத் தமிழக அரசுச் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்திருப்பதை வரவேற்கிறோம். மேலும், குறுவைக்குத் தேவையான குறுகிய கால விதைகள் தரமானவையாகக் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் வழங்கவும், ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்ட வேளாண் நகைக் கடன்களுக்கு ஈடான நகைகளை விவசாயிகளுக்குத் திரும்ப வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என வேண்டுகோள் வைத்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், பொன்னவராயன் கோட்டையைச் சேர்ந்த முன்னோடி விவசாயியும், நசுவினி ஆறு படுக்கை அணை விவசாயிகள் சங்கத் தலைவருமான வீரசேனன், ‘‘காவிரி மற்றும் கல்லணைக் கால்வாயில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால், ஆறுகளின் கரைகள் பலவீனமாக உள்ளன. கரைகளைப் பலப்படுத்தும் பணி இதுவரை தொடங்கவில்லை. எனவே, மேட்டூர் அணை ஜூன் 12-ல் திறக்கப்பட்டாலும் பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட கடைமடைப் பகுதிகளுக்கு உரிய நேரத்தில் தண்ணீர் வந்து சேருமா என இப்பகுதி விவசாயிகளுக்குச் சந்தேகமாக உள்ளது. இதனை அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும்’’ என்றார்.
மேட்டூர் அணையைத் திறந்தால் மட்டும் போதாது... குறுவைச் சாகுபடி வெற்றிகரமாக நடைபெற, விவசாயிகள் வலியுறுத்தும் கோரிக்கைகளை உடனடியாகத் தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.