
கரூரில் கவனம் ஈர்த்த சர்வதேச கண்காட்சி!
வழிகாட்டுதல்
இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்திய சர்வதேச முருங்கை கண்காட்சி அண்மையில் மூன்று நாள்கள் கரூரில் வெகு விமரிசையாக நடைபெற்றது. முருங்கையில் அதிக மகசூல் எடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் முறைகள், இதற்குத் தேவையான இயந்திரங்கள், முருங்கை மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களை வெளிநாடு களுக்குச் செய்வதற்கான வாய்ப்புகள் மற்றும் வழிமுறைகள் குறித்தும் வழிகாட்டப்பட்டதால் இந்நிகழ்ச்சி, விவசாயிகள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்றது. முருங்கை சாகுபடி மூலம் நிறைய சம்பாதிக்க முடியும் என்ற புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் விவசாயிகள் மனதில் ஏற்படுத்தியது.

முருங்கைப் பொருள்களை மையப்படுத்தி, தற்போது உருவாகியுள்ள புதிய தொழில் வாய்ப்புகள் குறித்த விவரங்களை அறிந்து விவசாயிகள் வியப்படைந்தனர். இந்நிகழ்ச்சியில் ஜப்பான், கொரியா, ஶ்ரீலங்கா, மலேசியா, துபாய், லெபனான், நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில் அதிபர்கள் கலந்துகொண்டனர்.
முருங்கை ஐஸ்க்ரீம்
இக்கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. முருங்கை ஐஸ்க்ரீம், முருங்கை ஸ்நாக்ஸ் வகைகள் (நொறுக்குத் தீனிகள்), முருங்கை பொருள்களை, மூலப்பொருள்களாகப் பயன்படுத்தித் தயார் செய்யப்பட்ட சூப் வகைகள், சாதப்பொடி உட்பட இன்னும் பலவிதமான மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள்... இக்கண்காட்சியில் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. இவற்றைத் தயார் செய்து விற்பனை செய்து வரும் தொழில்முனைவோர்கள், இவற்றின் தயாரிப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.

இயந்திரங்கள்
முருங்கை விதையிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்கும் கருவி, முருங்கை இலையை உலர வைக்கும் கருவி, முருங்கை இலைகளில் உள்ள காம்புகளை மிக எளிதாக நீக்குவதற் கான கருவி, பொடியாக்கும் கருவி, ஐஸ்க்ரீம் தயாரிக்கும் இயந்திரம் உள்ளிட்டவையும் இக்கண்காட்சியில் இடம்பெற்றது கூடுதல் சிறப்பு. இவற்றை விவசாயிகள் மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிட்டதோடு, இவை எங்கு கிடைக்கும், இவற்றின் விலை உள்ளிட்ட விவரங்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “தமிழ்நாட்டிலேயே கரூர் மாவட்டத்தில்தான் முருங்கை சாகுபடி அதிகம். இந்தப் பகுதி விவசாயிகளுக்கு உதவும் வகையில், இந்த மாவட்டத்தில் முருங்கை தொழில் பூங்கா அமைக்க வேண்டும் என அமைச்சர் அன்பரசனிடம் கோரிக்கை வைத்திருந்தேன். இடம் கொடுத்தால், முருங்கை பூங்கா அமைக்கப்படும்’ என்று உத்தரவாதம் கொடுத்திருந்தார். அதற்குரிய இடத்தைத் தேர்வு செய்துவிட்டோம்” எனத் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ‘‘முருங்கை தொழில் பூங்கா அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப் பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளதால், இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்” என்றார்.

முருங்கையை விவசாயிகளிடமிருந்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும்
இந்நிகழ்வில் உரையாற்றிய கரூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபுசங்கர், “பக்கத்து மாவட்டமான நாமக்கல் முட்டை உற்பத் திக்குப் பிரசித்திபெற்றது. அங்கே உற்பத்தி செய்யப்படும் முட்டைகளைத் தமிழக அரசு கொள்முதல் செய்து... பள்ளி மாணவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச் சத்து உணவாக வழங்கி வருகிறது. ஏராளமான சத்துகள் நிறைந்த முருங்கையை விவசாயிகளிடமிருந்து அரசே கொள்முதல் செய்து, அதையும் ஊட்டச்சத்து உணவாக வழங்க வேண்டும். இதற்குரிய திட்டத்தை அமைச்சர்கள் பரிசீலிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்
இக்கண்காட்சி நடைபெற்ற மூன்று நாள்களுமே... கருத்தரங்குகள், விவசாயிகள்- தொழில்முனைவோர்கள் கலந்துரையாடல் எனக் களைகட்டியது. முருங்கையில் நிறைந்துள்ள சத்துகள், மதிப்புக் கூட்டுவதற் கான பல்வேறு வழிமுறைகள் மற்றும் வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த தொழில் அதிபர்கள்... உலகளாவிய அளவில் தற்போது முருங்கைக்கு உருவாகியுள்ள முக்கியத்துவம், தேவை குறித்தும் தெரிவித்த தகவல்கள், முருங்கை விவசாயிகள் மத்தியில் பிரமிப் பையும், புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. இந்தக் கண்காட்சியை நடத்திய இந்திய தொழில்கூட்டமைப்பினரும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமும் இணைந்து, முருங்கை சார்ந்த செயல்பாடுகளை முன்னெடுப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

இக்கண்காட்சியில் கலந்துகொண்ட விவசாயிகளிடம் பேச்சுக் கொடுத்தோம். கரூர் மாவட்டம், தென்பாகத்தைச் சேர்ந்த முருங்கை விவசாயி துரைசாமி, ‘‘முன்னாடி ஏக்கர் கணக்குல முருங்கை சாகுபடி செஞ்சுக்கிட்டுயிருந்தேன். காய்களைச் சந்தைப்படுத்துடுறதுல நிறைய சிரமங் களைச் சந்திச்சேன். கூடலூர் சந்தை, தென்னிலையில செயல்பட்டுக்கிட்டு இருக்குற முருங்கை கமிட்டியிலயும் விற்பனை செய்றது வழக்கம். ஒரு சில நேரங்கள்ல மட்டும்தான் லாபகரமான விலை கிடைச்சது. விலை ரொம்பக் குறைவா இருக்குற, காய்களைப் பதப்படுத்தி வைக்கவோ, வேறுவிதமா மதிப்புக் கூட்டுறதுக்கான வசதிகள் இங்க இல்லை. அதனால, முருங்கை சாகுபடி பரப்பை படிபடியா குறைச்சுக்கிட்டே வந்து, இப்ப வெறும் 60 சென்ட் மட்டும்தான் முருங்கை சாகுபடி செஞ்சுகிட்டு இருக்கேன்.

இந்நிலையிலதான், இந்தக் கண்காட்சியைப் பத்தி கேள்விப்பட்டு பார்க்க வந்தேன். இங்க வந்த பிறகுதான், முருங்கைக்கு உலக அளவுல இவ்வளவு மகத்துவம் இருக்குனு தெரிஞ்சு வியந்து போயிட்டேன். முருங்கையை நாங்க காலம் காலமாக விவசாயம் செஞ்சு கிட்டு வந்தாலும், காய்களை மட்டும்தான் விற்பனை செஞ்சு வருமானம் பார்க்க முடியும்னு நினைச்சுக்கிட்டு இருந்தோம். ஆனா முருங்கைப்பூ, முருங்கை இலை, விதை, பட்டை, பிசின் உட்பட எல்லாத்தையுமே மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய முடியும்னு தெரிஞ்சிக்கிட்டேன்.
முருங்கையிலிருந்து 96 வகையான மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயார் செய்யலாம்னு சொல்றாங்க. சொல்றதோட மட்டுமல்லாம, அந்தப் பொருள்களை எல்லாம் காட்சிப்படுத்தியும் வச்சிருக்குறாங்க. முருங்கையில கிடைக்கக்கூடிய பொருள்களை மூலப்பொருள்களா பயன்படுத்தி, மிகப்பெரிய அளவுல தொழில் நிறுவனங்கள் நடத்திக்கிட்டு இருக்குறவங்களையும் இங்க சந்திச்சது, ரொம்பவே பிரமிப்பா இருந்துச்சு. முருங்கை சாகுபடிக்கு நல்ல எதிர்காலம் இருக்குங்கற நம்பிக்கையை இந்தக் கண்காட்சி ஏற்படுத்தியிருக்கு. மதிப்புக்கூட்டுறதுக்கான வசதிகள் கரூர் மாவட்டத்துலயே கிடைக்க ஆரம்பிச்சிட்டா, அதிக பரப்புல முருங்கை சாகுபடியை விரிவுபடுத்திடுவேன்’’ என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

முருங்கை மண்டலம்
கருர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 7 மாவட்டங்கள்... முருங்கை அதிகம் பயிரிடப்படும் மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டு, முருங்கை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மண்டலத்தின் மொத்த உற்பத்தியில் கரூர் மாவட்டம் 50 சதவிகிதம் பங்கு வகிக்கிறது.
கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, க.பரமத்தி ஒன்றியங்களில் அதிக அளவில் முருங்கைப் பயிரிடப்படுகிறது. இப்பகுதிகளில் முருங்கை சார்ந்த தொழில் நிறுவனங்கள், முருங்கை குளிர்பதனக் கிடங்கு ஆகியவற்றை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இங்குள்ள விவசாயிகள், பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், அதற்கான உத்தரவாதத்தை இந்த முருங்கை கண்காட்சியானது ஏற்படுத்தியிருப்பதாக, விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.