Published:Updated:

``உயிருடன் புதைச்சாலும் சாலை அமைக்க நிலம் தரமாட்டோம்!” - பேச்சுவார்த்தையில் விவசாயிகள் திட்டவட்டம்

விவசாயிகள் ( ம.அரவிந்த் )

``எங்களுக்கு நிலம்தான் முக்கியம். அதை சாலை அமைக்க நாங்கள் தரமாட்டோம்." - விவசாயிகள்

Published:Updated:

``உயிருடன் புதைச்சாலும் சாலை அமைக்க நிலம் தரமாட்டோம்!” - பேச்சுவார்த்தையில் விவசாயிகள் திட்டவட்டம்

``எங்களுக்கு நிலம்தான் முக்கியம். அதை சாலை அமைக்க நாங்கள் தரமாட்டோம்." - விவசாயிகள்

விவசாயிகள் ( ம.அரவிந்த் )

திருவையாறில் நெற்பயிரை உயிருடன் புதைத்து புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, தற்காலிகமாக பணிகள் நிறுத்தபட்டன. இதனைத் தொடர்ந்து இன்று நடந்த பேச்சுவார்த்தையில் சாலை அமைப்பதற்கு வாழ்வாதாரமான விவசாய நிலத்தை தர மாட்டோம் என விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

சாலை அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை
சாலை அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை

பெரம்பலூர் டு மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு நகரப் பகுதி வழியாகச் செல்கிறது. திருவையாறில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் புறவழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக மத்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.191 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து பெரும்புலியூர், மணக்கரம்பை, கண்டியூர், கீழதிருப்பூந்துருத்தி, கல்யாணபுரம், திருவையாறு உள்ளிட்ட ஆறு கிராமங்கள் வழியாக புறவழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

முப்போகம் விளையக்கூடிய வளம் கொண்ட வயலில் நடவு செய்யபட்டு உயிருடன் இருந்த நெற்பயிரை அழித்து சுமார் 7 கிலோ மீட்டர் நீளம் கொண்ட சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. ``குழந்தையாக வளர்த்த பயிரைப் பிடிங்கி கொல்வது உயிருடன் இருக்கும் எங்கள் இதயத்தை உருவி எடுப்பதற்கு சமம்" என விவசாயிகள் கண்ணீர் மல்க போராட்டம் நடத்தினர்.

நெற் பயிரை அழித்து சாலை அமைக்கும் பணி
நெற் பயிரை அழித்து சாலை அமைக்கும் பணி

கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்துக்குப் பிறகு சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ ரஞ்சித் தலைமையில் இன்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது அதிகாரிகளிடம் பேசிய விவசாயிகள், ``சாலை அமைப்பதற்காக அறிவிப்பு வெளியான உடனேயே, நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். விவசாயிகளை முறையாக அழைத்துப் பேசவில்லை. எதிர்ப்பு தெரிவித்த எங்களுக்கு முறையான பதில் இல்லை.

எந்த விவசாயி நிலத்தில் எவ்வளவு நிலம் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது என்ற விவரங்கள் இல்லை. உரிய விலை நிர்ணயம் செய்து அதற்கான இழப்பீடு பணம் தரவில்லை. எந்தவிதமான ஆணையும் விவசாயிகளுக்கு தரப்படாத நிலையில், சாலை அமைக்கும் பணிகள் விதிகளை மீறி தொடங்கபட்டன.

விவசாயிகள்
விவசாயிகள்

நடவு செய்யபட்டு நெற்கதிர்கள் வைக்கக்கூடிய பருவத்தில் இருந்த பயிர் மேல் மண்ணை போட்டு மூடி புல்டோசர் கொண்டு புதைத்து சாலை அமைத்ததால், எங்கள் ஈரக்கொலையே ஆடிவிட்டது. நாங்கள் கடுமையான எதிர்ப்பை பதிவுசெய்ததையடுத்து பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. சாலை அமைப்பது தொடர்பாக விவசாயிகளை அழைத்து நடைபெறக்கூடிய முதல் பேச்சுவார்த்தை இது. அதற்காக மாவட்ட ஆட்சியருக்கு நன்றி கூறுகிறோம்.

கையகப்படுத்தபட்ட நிலங்களில் 40 ஏக்கர் நிலம் ஒரு நாள்கூட தரிசாக கிடந்தது கிடையாது. வளம்மிக்க மண்ணை அழிக்கிறீர்கள். விவசாயிகள் பெயரில் உள்ள நிலத்தில் கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற்று, பயிர் காப்பீடு செய்து நடவு செய்திருந்த வயலில் விவசாயிகள் அனுமதியின்றி சட்ட விதிகளை பின்பற்றாமல் சாலை பணி தொடங்கப்பட்டது.

ஆர்.டி.ஓ தலைமையில் பேச்சுவார்த்தை
ஆர்.டி.ஓ தலைமையில் பேச்சுவார்த்தை

ஆடு, மாட்டுக்குக்கூட பெயர் வைத்துதான் நாங்கள் அழைப்போம். போராட்டம் நடத்திய விவசாயிகளை டி.எஸ்.பி ராஜ்மோகன் ஒருமையில் பேசினார். பேச்சுவார்த்தை நடப்பதற்கு முன்பே விவசாயிகளை மிரட்டும் வகையில் விளம்பரம் கொடுக்கபட்டது. அதிகாரிகள் ஒப்பந்தகாரர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். தஞ்சாவூர் என்றாலே நெல் விவசாயம்தான் நினைவுக்கு வரும். நெற்களஞ்சியத்தில் விளை நிலத்தை அழிச்சுட்டு என்ன செய்ய போகிறீர்கள்?" என்றனர்.

திருபந்துருத்தியைச் சேர்ந்த விவசாயி சுகுமாறன், ``நிலம் கையகப்படுத்துவதற்காக வழிகாட்டு நெறிமுறைகள் தலைமை செயலாளர் இறையன்பு அவர்களால் வெளியிடப்பட்டிருக்கிறது. அதை பின்பற்றாமல் நிலம் கையகப்படுத்தபட்டிருக்கிறது. நஞ்சை நிலத்தை தரிசாக மாற்றிய பிறகே இது போன்ற பணிகளை செய்ய வேண்டும். விவசாயிகளின் அறியாமையை பயன்படுத்தி, அதிகாரிகளின் அறிவுக்கூர்மையை கொண்டு விதிமுறைகள் எதையும் பின்பற்றாமல் சாலை பணி தொடங்கபட்டது.

விவசாயி வெங்கடேஷ்
விவசாயி வெங்கடேஷ்

போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு மிரட்டல் விடுக்கபடுகிறது. எங்கள் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது. எங்களுக்கு ஏதாவது ஏற்பட்டால் அதற்கு தமிழக அரசுதான் பொறுப்பு. சாலை அமைப்பதற்கான ஆணை இன்றைக்குத்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகளை மிரட்டிய டி.எஸ்.பி ராஜ்மோகன், செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற புகாரை ஆர்.டி.ஓ மூலமாக தருகிறேன் முதல்வருக்கு" என்றார்.

வெங்கடேஷ் என்ற விவசாயி, ``2001-ல் திருவையாறு பாலப்பணிகள் நடைபெற்றபோது என்னுடைய வீடு கையகப்படுத்தப்பட்டு இடிக்கப்பட்டது. இப்போது வாழ்வாதாரமாக இருந்து வரும் மூன்றரை மா விவசாய நிலத்தினை கையகப்படுத்தி சாலை அமைக்கும் பணி மேற்கொள்கின்றனர். எல்லாத்தையும் கொடுத்துட்டு நான் எங்க போவேன். என்னோட நிலம்தான் எனக்கு வேண்டும். மீறி சாலை அமைத்தால் பூச்சி மருந்து குடிச்சுட்டு செத்துருவேன்" என உடைந்த குரலில் தெரிவித்தார்.

ஆர்.டி.ஓ ரஞ்சித்
ஆர்.டி.ஓ ரஞ்சித்

பெண் விவசாயிகள், ``பச்சை புள்ளையாக வளர்த்த பயிரை அழிச்சிட்டு சாலை போடுறீங்க. விவசாய நிலத்தை அழிச்சிட்டு எங்களை சோத்துக்கு கையேந்த வைக்க போறீங்களா" என விம்மினர். இறுதியாக விவசாயிகள், ``எங்களுக்கு நிலம்தான் முக்கியம். அதை நாங்கள் தர மாட்டோம். முதல்வருக்கு அவப்பெயர் ஏற்படுத்தக்கூடிய செயலை அதிகாரிகளும், ஒப்பந்தகாரர்களும் செய்கின்றனர். எங்களை கொன்று புதைச்சாலும் விவசாய நிலத்தை சாலை அமைக்க தரமாட்டோம்" என திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

ஆர்.டி.ஓ ரஞ்சித் கூறுகையில், ``நடவுசெய்யப்பட்ட பயிர் அறுவடை முடியும் வரை எந்த பணியும் நடைபெறாது. மரங்கள் உள்ளிட்டவை கணக்கில் எடுத்து இழப்பீடு வழங்கப்படும். நிர்ணயம் செய்யப்பட்ட பணம் போதவில்லை என்றால் நீதிமன்றத்தின் மூலம் பெறுவதற்கான செயலை விவசாயிகள் மேற்கொள்ளலாம். சாலை அமைக்கும் பணி நிச்சயமாக நடைபெறும்" என்றார்.