நிலத்தை அளந்து பட்டா பெறுவது இன்றைய சூழ்நிலையில் மிகப்பெரிய பிரச்னை. நிலத்தை அளக்காததால், நிலத்துக்கேற்ற பணம் கிடைக்காமல் இன்றுவரை மக்கள் அவதிப்படுவது அரசுக்குத் தெரிவதில்லை. நிலத்துக்கேற்ற பணம் கிடைக்கவில்லை என்பது மட்டும் இங்கு பிரச்னையாக இருக்க முடியாது. பங்காளி சண்டை, வாய்க்கால் வரப்பு சண்டை என்று உறவுகளைப் பாதிக்குமளவுக்கு நிலம் அளப்பதில் உள்ள சிக்கல் பெருந்தலைவலியாக விவசாயிகளைப் பாடுபடுத்துகிறது. சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் முதியவர் ஒருவர் பிச்சை எடுத்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நிலத்தை அளப்பதற்காக அதிகாரிகள் லஞ்சம் கேட்க, நெருக்கடியில் முதியவர் பிச்சை எடுத்தது, செய்தித்தாளில் வெளியானது. இதை அறிந்தவுடன், தெரிந்த வட்டங்கள் மூலம் முதியவரின் தகவலை திரட்டினோம்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் கண்ணம்பாக்கம் கிராமம் இருக்கிறது. அந்தக் கிராமத்தில் அரசு கட்டித்தந்த குடியிருப்பில் வாழ்ந்து வரும் சுப்பிரமணிதான் அதிகாரிகளின் நெருக்கடியால் பிச்சை எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். தன்னுடைய நிலத்தை அளப்பதற்கு இருமுறை பணம் கட்டியும் அளக்காததால் வேறு வழியில்லாமல் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
சுப்பிரமணியிடம் பேசினோம். ``எனக்கு 6 சென்ட் நிலம் உள்ளது. எனக்கும் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கும் நிலப்பிரச்னை ஏற்பட்டது. அதனால் நிலத்தை அளப்பதற்கு 2021-ம் ஆண்டு பணம் கட்டியிருந்தேன். நிலத்தை அளக்காமல் என்னை அலைக்கழித்தனர். 2022-ம் ஆண்டு நிலத்தை அளக்குமாறு மறுபடியும் பணம் கட்டினேன். அப்போதிருந்த தாசில்தார் போலீஸ் பாதுகாப்புடன் அளந்து கொடுத்தார். நிலத்தை அளந்து வைத்த கல், பகைவரால் புடுங்கிப் போடப்பட்டது.
அதனால் கடந்த ஜனவரி மாதம் மீண்டும் நிலத்தை அளப்பதற்கு பணம் கட்டினேன். ஆனால், இன்றுவரை அளக்கவில்லை. அரசு அலுவலகங்களுக்கு ஓயாமல் அலைந்துகொண்டிருக்கிறேன். அதிகாரிகள் எனக்கு முறையாகப் பதிலளிக்கவில்லை. தற்போதிருக்கும் தாசில்தார் 5,000 லஞ்சம் கொடுத்தால் மட்டுமே நிலத்தை அளப்பதாகக் கூறினார். எனக்கு நுரையீரல் பாதிப்பு இருக்கிறது. என்னால் வேலைக்குச் செல்ல முடியாது. பிள்ளைகளின் பராமரிப்பற்று இருக்கிறேன். 5,000 ரூபாய் பணம் புரட்ட முடியாததால் காந்தி போல் சட்டையில்லாமல் தெருவில் பிச்சை எடுத்தேன். இன்னும் அலைந்துகொண்டுதான் இருக்கிறேன். ஆனால், இன்னும் நிலம் அளந்தபாடில்லை" என்றார்.
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் துளசிநாராயணிடம் பேசினோம். ``தொழில்மயமாதல், நகரமயமாதல் ஆகிய இரண்டுக்கும் நிலம் தேவைப்படுகிறது. தொழில் வளர்ச்சிக்காக முதலாளிகள் நிலத்தை விவசாயிகளிடம் வாங்குகிறார்கள். ஆனால், விவசாயிகளிடம் நிலத்துக்கான ஆவணங்களில் குளறுபடி இருக்கிறது. அதுவே விவசாயிகளுக்கு பெரிய சவாலாக உள்ளது. இந்நிலையில், நிலம் விற்பதற்காக அளக்காமல் அதிகாரிகள் புறக்கணிப்பது கூடுதல் சிரமமாகும். ஆவணங்களில் உள்ள நிலத்தின் தகவலை நம்பி யாரும் வாங்க முன்வருவதில்லை.
நிலத்தை அளந்தால் மட்டுமே வாங்குகிறார்கள். ஆனால், நிலத்தின் உரிமையாளர் நிலம் அளந்து தருமாறு அதிகாரிகளை நாடினால், விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். 15 நாள்களுக்குள் அளந்து தந்தால் மட்டுமே விவசாயிகள் அடுத்த வேலையைப் பார்க்க முடியும். ஆனால், நில அளவையாளர்கள் குறைவாக இருக்கிறார்கள்.
சென்னைக்கு அருகில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் ஏக்கர் கணக்கில் நிலம் விற்பனையாக இருக்கிறது. ஆனால், அதை அளப்பதற்கும் பட்டா மாற்றுவதற்கும் அதிகாரிகள் குறைவாக இருப்பதால் விவசாயிகளுக்கு மட்டுமல்ல, அதிகாரிகளுக்கும் சுமையாகிறது. இருபது பேர் செய்ய வேண்டிய வேலையை இரண்டு பேர் செய்வது உழைப்புச்சுரண்டலாக மட்டுமே பார்க்க முடியும். இந்த உழைப்புச்சுரண்டலுக்கு கட்சி பேதமின்றி மாநிலத்தில் பொறுப்பில் இருக்கும் அரசுதான் பொறுப்பேற்க முடியும்.

இவ்வாறு உள்கட்டமைப்பு வலுவாக இல்லாதபோது தேவை அதிகரிக்கிறது. அதனால் ஊழல் அதிகரித்து விவசாயிகளின் கழுத்தை நெருக்குகிறது. அளப்பதற்கும் பட்டா மாற்றுவதற்கும் அதிகாரிகளை அதிகம் நியமிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. நிலம் அளப்பதற்கு, பட்டா பெயர் மாற்ற, பட்டாவை கணினியில் ஏற்றுவதற்கு என்று தனித்தனியாக வசூலிக்கப் படுகிறது. இதைச் சமாளிக்க முடியாமல் விவசாயி கடனை வாங்குகிறார். அரசுக்கு நிலம் தேவைப்படும் விவசாயிகளுக்கு நிலத்துக்கேற்ற பணம் கிடைப்பதில்லை. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது விவசாயிகளிடம் தகுந்த ஆவணம் இல்லை என்பதுதான். எவ்வளவு நிலம் இருக்கும் என்பது விவசாயிக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால், கிராம நிர்வாக அலுவலருக்கு தெரியும். இவரிடம் உள்ள சான்றிதழ்களை அடிப்படையாக வைத்து பட்டா வழங்கப்பட்டால் இந்த பிரச்னையே இருக்காது" என்றார்.