
திட்டம்
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் சூளுரையாகும். அதனை நிறைவேற்றும் முயற்சியாக, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அந்த வரிசையில், உணவுப் பதப்படுத்தல் துறை அமைச்சகத்தின் மூலமாக நாடு முழுவதும் தொழில்முனைவோர்களை உருவாக்கும் திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தப்பத்தி வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தமிழக அரசின் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் மூலமாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை இயக்குநர் எஸ்.நடராஜன், சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

‘‘பிரதம மந்திரியின் உணவுப் பதப்படுத்துதல் மற்றும் சிறு குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டமானது விவசாயிகள் தங்களின் விளைபொருள்களை மதிப்புக் கூட்டிய பொருள்களாக மாற்றி விற்பனை செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கிறது. விவசாயிகள் தங்களது விளைபொருள்களை அப்படியே விற்பனைச் செய்யும்போது கிடைக்கும் வருமானத்தை விடவும் அவற்றை மதிப்புக் கூட்டி விற்பனை செய்வதன் மூலம் அதிக வருமானம் ஈட்ட முடியும். ஆனால், அதற்கான வாய்ப்பும் அனுபவமும் எல்லோருக்கும் இருக்காது. எனவே தொழில்முனைவோராகவும் மாற விரும்புபவர்களுக்கு நிதி உதவி மற்றும் வழிகாட்டுதலை வழங்குவதே இதன் நோக்கமாகும். மத்திய அரசு, இந்தியா முழுவதும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் உணவுப் பதப்படுத்துதல் துறை சார்ந்த தொழில்களை முன்னெடுக்கத் தமிழகத்துக்கு 503 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண் உற்பத்தி நிறுவனங்கள், வேளாண் உற்பத்தியாளர் கூட்டமைப்புகள், சுய உதவிக் குழுக்கள், வேளாண் கூட்டுறவு மையங்கள் ஆகியவை இந்தக் கடனை வாங்கலாம்.

ஏற்கெனவே, உணவுப் பதப்படுத்தும் தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களும் கூட இத்திட்டத்தின் கீழ் பயன் அடையலாம். உற்பத்தித் திறனை மேம்படுத்தவோ, புதிதாக யூனிட்டுகளைத் தொடங்கவோ இந்தக் கடனைப் பெறலாம். தகுதிக்கு ஏற்ப கடன் பெறலாம். ஆனால், கடன் திட்ட செலவீனங்களில் 35 சதவிகிதம் மானியமாக வழங்கப்படும். நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை மட்டுமே மானியம் வழங்கப்படும். விவசாயிகள், சுய உதவிக்குழுக்களுக்கு இந்த கட்டுப்பாடு கிடையாது. இவர்கள் பெறும் கடனில் 35 சதவிகிதம் மானியம் பெறலாம்.

மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் மானியத்தில் கடன் வழங்குவது மட்டுமல்லாமல் தொழில்முனைவுக்கான வழிகாட்டுதலையும் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை வழங்கத் திட்டமிட்டுள்ளது. சிறு, குறு தொழில்கள் மற்றும் குடிசை தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களும் இத்திட்டத்தில் பயன் அடையலாம். உதாரணத்துக்கு அப்பளம், வடகம், ஊறுகாய் உள்ளிட்ட உணவுப் பொருள்களைத் தயார் செய்பவர்களுக்கும், இத்தகைய தொழில்களைத் தொடங்க நினைப்பவர்களுக்கும் உதவிகள் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் கடன் பெற்றவர்கள் தொடர்ந்து அத்தொழிலை வெற்றிகரமாக நடத்துவதற்கான பயிற்சிகளை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை வழங்கும். மேலும், மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களைச் சந்தைப்படுத்துவதற்கும் வழிகாட்டப்படும். இதனால், கடன் வாங்கியவர்கள் சில வருடங்களிலேயே கடனைத் திருப்பிச் செலுத்தி முழுமையாகக் கடனை முடிக்கும் வகையில் தயார் செய்யப்படுவார்கள். இந்தத் திட்டத்தின் கீழ் அதிக அளவில் பெண் தொழில் முனைவோர்களையும் உருவாக்க திட்டமிடபட்டுள்ளது. சுய உதவிக் குழுக்கள் மூலமாகப் பெண்கள் தங்களுக்கு ஆர்வமுள்ள உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் தொழில்களைத் தொடங்க ஊக்கப்படுத்தப்படுவார்கள்.

இந்திய அளவில் இந்தத் திட்டத்துக்கு இதுவரை 24,233 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவற்றில் புதிதாகத் தொடங்கப்பட்ட நிறுவனங்கள் 15,399. ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள நிறுவனங்கள் 8,834. தமிழகத்தில் 360 பேருக்கு இதுவரை இந்தத் திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் இன்னுமொரு முக்கிய நோக்கம் முறைசாரா தொழில்களாகச் செயல்படும் தொழில்களை முறைப்படுத்தப்பட்ட தொழில்களாக மாற்றுவதாகும்.
இந்தத் திட்டத்தின் இலக்கை எட்டுவதற்காகவும், ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாகப் பயன்படுத்தவும் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. வேளாண் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான புத்தாக்கப்பயிற்சி மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டங்களைத் தொடர்ந்து மண்டலங்கள் வாரியாக வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பலன் பெற விரும்புபவர்கள், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையைத் தொடர்புக் கொள்ளலாம்’’ என்று அழைப்புவிடுத்தார்.
தொடர்புக்கு,
வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை.
99406 28398, 90477 41230.