
சந்தை
ஈரோடு மாவட்ட பொருளாதாரத்தில் மஞ்சள் முக்கிய இடத்தை வகிக்கிறது. இங்கு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் மஞ்சள், இம்மாவட்டத்தின் பெருமைமிகு அடையாளமாகவும் இப்பகுதி விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரமாகவும் திகழ்கிறது. ஆண்டுக்கு 30,500 மெட்ரிக் டன் மஞ்சள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஈரோடு மஞ்சளுக்கெனத் தனித்துவமான நிறம், மணம் இருப்பதால், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் இதற்கு வரவேற்பு அதிகம். இதனால்தான் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக, இம்மாவட்டம் முழுவதும் பரவலாகப் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் மஞ்சள் விவசாயம் நீடித்து நிலைத்து வெற்றி நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. இதற்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருப்பதால், வணிக ரீதியாக இதன் மீதான மதிப்பு மேலும் பல மடங்கு உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கரில் மஞ்சள் பயிரிடப்படுகிறது. அதில் 30 சதவிகித மஞ்சள் ஈரோடு மாவட்டத்தில் மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது. இம்மாவட்டம் முழுவதும் பரவலாக மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டாலும் ஒப்பீட்டளவில் கொடுமுடி, மொடக்குறிச்சி, கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டார கிராமங்களில் மஞ்சள் சாகுபடி பரப்பு அதிகம். ஈரோடு விரலி, சேலம் விரலி உள்ளிட்ட 8 ரகங்கள் இங்கு அதிக அளவு பயிரிடப்படுகிறது. மஞ்சளின் முக்கியமான வேதிப்பொருளான குர்குமினின் அளவு ஈரோடு மஞ்சளில் 2.5 - 3.5 சதவிகிதம் அடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மஞ்சள் உற்பத்தி செய்யும் விவசாயிகளும் வணிகர்களும் ஒன்றுகூடி வர்த்தகம் செய்துகொள்வதற்கு வசதியாக, இம்மாவட் டத்தில் நான்கு இடங்களில் மஞ்சள் சந்தைகள் கோலாகலமாகக் களைகட்டுகின்றன. ஈரோடு மஞ்சள் வளாகம், பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம்... ஆகியவற்றில் அரசு விடுமுறை தினங்களைத் தவிர, மற்ற அனைத்து நாள்களிலும் மஞ்சள் ஏல விற்பனை நடைபெறுகிறது. இவற்றின் மூலம் நாள்தோறும் 160 டன்னுக்கும் அதிகமான மஞ்சள் விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் கோடிக்கணக்கான ரூபாய் பணம் புழங்குகிறது. இங்குள்ள விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் மஞ்சள், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்படுவதோடு மட்டுமல்லாமல்.... கேரளா, கர்நாடகா, கொல்கத்தா, பீகார், டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, பங்களாதேஷ் மற்றும் வளைகுடா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவது கூடுதல் சிறப்பு.

ஈரோடு மஞ்சள் உற்பத்தி மற்றும் வணிகம் குறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமை யாளர்கள் சங்கச் செயலாளர் சத்தியமூர்த்தி, “இன்னைக்கு மஞ்சள்ல நிறைய ரகங்கள் வந்துருக்கு. ஆனா, பாரம்பர்யமான மஞ்சள்னு சொன்னா அது ஈரோடு விரலி ரகம்தான். இந்த ரகம் குறைவான மகசூல் கொடுத் தாலும்கூட, இதுல பூச்சி, நோய்த்தாக்குதல் அதிகம் இருக்காது. மற்ற மஞ்சள் ரகங்களை விட, இதுல நிறமும் மணமும் தனித்துவமா இருக்கும்.
ஈரோடு மாவட்ட விவசாயிங்க, மற்ற பயிர்களைவிட மஞ்சளுக்கு அதிக முக்கியத் துவம் கொடுத்து முதன்மைப் பயிரா இதைச் சாகுபடி செய்துறதுக்கு முக்கியக் காரணமே, இங்க கிடைக்கிற தண்ணீர் வளம்தான். மஞ்சள் பயிர் செஞ்சதுல இருந்து 10 மாசத்துக்கு மேலதான் அறுவடை செய்ய முடியும். அதனால வருஷம் முழுக்கத் தண்ணி வசதி இருந்தாதான் சாகுபடி செய்ய முடியும்.
இந்த மாவட்டத்துல காவிரியும் பவானியும் பாயுறதால விவசாயிகளுக்கு எப்படியாவது வருஷம் முழுக்கப் பாசனத்துக்குத் தண்ணி கிடைச்சிடுது. மஞ்சள் செழிப்பா விளையுற துக்கான மண்வாகும் இங்க இயல்பாவே அமைஞ்சிருக்கு. ஆரம்பகாலங்கள்ல, வியா பாரிங்க விவசாயிகளோட தோட்டங்களுக்கே தேடி வந்து மஞ்சள் வாங்கிக்கிட்டு போயிருக்காங்க. காலப்போக்குல மஞ்சள் உற்பத்தி படிபடியா அதிகரிச்சிக்கிட்டே இருந்ததாலயும், வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள்ல ஈரோடு மஞ்சளுக்கான மவுசு அதிகரிச்சதுனாலயும், இதுக்குனு ஒரு தனிச் சந்தை இருந்தா வசதியா இருக்கும்ங்கற எண்ணம் விவசாயிங்க, வியாபாரிங்க மத்தியில ஏற்பட்டுச்சு.
அந்த நிலையிலதான் ஈரோட்டுல 1954-ம் வருஷம் ஆரம்பிக்கப்பட்ட ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பா, சந்தை தொடங்கப்பட்டுச்சு. இது ஈரோடு மஞ்சள் வளாகம்னு அழைக்கப் படுது. சுமார் 50 ஏக்கர் பரப்பளவுல அமைஞ்சிருக்கு. மஞ்சள் உற்பத்தி செய்ற விவசாயிகிட்ட, அதைப் பாதுகாப்பா இருப்பு வைக்குறதுக்கான போதுமான கட்டமைப்பு வசதிகள் கிடையாது. விவசாயிகளுக்கு உதவக்கூடிய வகையில இந்த மஞ்சள் வளாகத்துல 80 கிடங்குகள் இருக்கு. ஒவ்வொரு கிடங்குலயும் 3,000 - 15,000 மூட்டைகள் வரை இருப்பு வைக்கலாம்.

முன்னாடியெல்லாம் விவசாயிங்களும் வியாபாரிங்களும் இங்க ஒண்ணா கூடி, நேரடியா பேசி மஞ்சளோட விலையை நிர்ணயம் செய்வாங்க. ஆனா, இப்ப ஆன்லைன் மூலமாக மஞ்சளுக்கு விலை நிர்ணயம் செய்யப்படுது. விவசாயிகள் சிறிய அளவில் தட்டில் (டிரே) மஞ்சளைக் கொண்டு வந்து ஏல மார்க்கெட்ல வைப்பாங்க. ஒவ்வொரு தட்டுக்கும் என்னென்ன விலைன்னு, இதுக்கான செயலியில (ஆப்) வணிகர்கள் விலையைப் பதிஞ்சிடுவாங்க. தினமும் குறைஞ்சது 40 வணிகர்களுக்கு மேல ஏலத்துல கலந்துக்குவாங்க. அந்தவகையில் ஒரு தட்டுக்கும் 40 வகையான விலைப்புள்ளிகள் கிடைக்கும். அதுல எது அதிகமான விலை இருக்கோ, அது இறுதி செய்யப்படும். இன்றைய தேதியில் ஒரு குவிண்டால் மஞ்சளோட விலை 6,000 - 7,000-ங்கிற அளவுலதான் இருக்கு. ஒருகாலத்துல 17,000 வரையெல்லாம் வித்துச்சு. மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள்ல மஞ்சள் விளைச்சல் அதிகமானதுனாலதான், விலை குறைஞ்சு போச்சு’’ என்று தெரிவித்தவர்,
“ஈரோடு மஞ்சள் விவசாயிகளை ஊக்கப்படுத்தக்கூடிய திட்டங்களைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்தணும். இங்கவுள்ள விவசாயிங்ககிட்ட இருந்து அரசாங்கமே மஞ்சளை கொள்முதல் செய்யணும். ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தணும்’’ என்று அரசாங்கத்தை நோக்கி கோரிக்கைகளையும் முன்வைத்தார்..
மஞ்சள் வணிகம் மற்றும் ஏற்றுமதி குறித்து ஈரோடு அனைத்து வணிகர்கள் கூட்டமைப்பின் தலைவர் ராஜமாணிக்கம் நம்மிடம் பேசிய போது, ‘‘ஈரோடு மாவட்டத்துல விளையுற மஞ்சள் மட்டுமல்லாம, தமிழ்நாட்டுல விளையுற ஒட்டுமொத்த மஞ்சளும் ஈரோடு மார்க்கெட்டுக்குத்தான் விற்பனைக்குக் கொண்டு வரப்படுது. பக்கத்து மாநிலமான கர்நாடகாவுல உற்பத்தியாகுற மஞ்சள்ல ஒருபகுதியும் ஈரோடு சந்தைக்கு வருது. இங்க கொள்முதல் செய்யப்படுற மஞ்சள் மற்ற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் போயிக்கிட்டு இருக்கு. 85 சதவித மஞ்சள், உணவு தேவைக்காகவும், மீதி 15 சதவித மஞ்சள் மருந்துப் பொருள்கள், அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்புக்கும் பயன்படுத்தப்படுது.

மஞ்சள் சாகுபடியில் முந்திய மகாராஷ்டிரா
ஈரோடு தவிர மற்ற பகுதிகள்ல விளையக் கூடிய மஞ்சளுக்கும்கூட, ஈரோடு நிலவரத்தைப் பொறுத்துதான் விலை நிர்ணயம் செய்யப் பட்டுச்சு. ஆனா, இப்ப அந்த நிலைமை மாறிக் கிட்டு இருக்குறது கவலை அளிக்கக்கூடிய விஷயம். சமீபகாலமா மகாராஷ்டிரா மாநிலம் தான், ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான மஞ்சள் விலையைத் தீர்மானிக்குது. காரணம் அங்க மஞ்சள் உற்பத்தி நாளுக்கு நாள் பல மடங்கு அதிகமாகிக்கிட்டே இருக்கு.
2013-ம் வருஷம் வரைக்கும் 2 - 3 லட்சம் மூட்டைகள் தான் அங்க உற்பத்தி செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. ஆனா, இப்ப வருஷத்துக்கு 30 - 40 லட்சம் மூட்டை மஞ்சள் உற்பத்தி செய்றாங்க. மகாராஷ்டிராவுல பஸ்மத், நாந்தேடு, சாங்கிலி, மராத்வாடா உட்பட இன்னும் சில பகுதிகள்ல 7 - 8 மஞ்சள் சந்தைகள் செயல்படுது. மகாராஷ்டிரா அரசாங்கம் அங்கவுள்ள மஞ்சள் விவசாயிகளுக்கு ரொம்பவே உறுதுணையா இருந்து ஊக்கப்படுத்துறதுனாலதான் உற்பத்தி அதிகரிச்சுக்கிட்டே இருக்கு. பொதுவா, இயற்கை விவசாயத்துல விளைவிக்கப்படுற மஞ்சளுக்கு வெளிநாடுகள்ல அதிக வரவேற்பு இருக்கு. இதை ஊக்குவிக்கக்கூடிய சிறப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி, ஈரோடு மஞ்சள் விவசாயிகளை இயற்கை விவசாயத்தை நோக்கி உற்சாகப்படுத்தணும்’’ எனக் கோரிக்கை வைத்தார்.

நேரடி மஞ்சள் கொள்முதல்
பெரிய செம்மாண்டம்பாளையத்தைச் சேர்ந்த மஞ்சள் விவசாயி விஜயகுமாரிடம் பேசியபோது, “எங்க தாத்தா காலத்துல இருந்து பூர்வீகமாக மஞ்சள் சாகுபடி செஞ்சுகிட்டு வர்றோம். எனக்குத் தனிப்பட்ட முறையில மஞ்சள் சாகுபடியில 20 வருஷத்துக்கு மேல அனுபவம் உண்டு. நான் 5 ஏக்கர்ல மஞ்சள் பயிர் பண்ணிக்கிட்டு இருக்கேன். ஈரோடு மஞ்சளுக்கான மவுசுங்கறது இன்னைக்கு நேத்து வந்தது இல்லை. பல தலைமுறைகளா இந்தப் பேரும் புகழும் தொடர்ந்துகிட்டு இருக்கு.
விவசாயிகள்ல பெரும்பாலானவங்க மஞ்சள் விவசாயத்தைப் பாரம்பர்யமாகச் செஞ்சிட்டு இருக்காங்க. முன்னாடி மஞ்சள் சாகுபடியில நிறைய லாபம் கிடைச்சுகிட்டு இருந்துச்சு. ஆனா, இப்ப அப்படியில்லை. இன்னைக்கு மார்க்கெட்ல இதுக்கான உரிய விலை கிடைக்க மாட்டேங்குதுங்க. அதுமட்டுமல்லாம, விவசாய வேலையாள்களுக்கான கூலி, இடுபொருள்களோட விலை எல்லாம் பல மடங்கு ஏறிப் போயிடுச்சு. மஞ்சள் சாகுபடியில ஒரு ஏக்கருக்கு 20 - 25 குவிண்டால் மகசூல் கிடைக்கும். ஒரு குவிண்டாலுக்குச் சராசரியா 7,000 ரூபாய்தான் விலை கிடைக்குது. இந்தக் கணக்குப்படி பார்த்தா, குறைந்தபட்சம் 1,40,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல பெரும்பகுதி உற்பத்தி செலவுகளுக்கே சரியா போயிடுது. ஏகப்பட்ட பணத்தை முதலீடு செஞ்சு, ஒரு வருஷத்துக்கு மேல நிலத்துல விவசாயிங்க உழைப்பு செலுத்துறோம், அதுக்கு ஏத்தபடி நிறைவான லாபம் கிடைச்சா விவசாயிங்க சந்தோஷப்படுவோம். தமிழக அரசாங்கமே விவசாயிகள்கிட்ட இருந்து நேரடியா மஞ்சளை கொள்முதல் செஞ்சா ரொம்ப உதவியாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

மஞ்சள் மதிப்புக் கூட்டலில் அசத்தும் கூட்டுறவுச் சங்கம்
ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், கருங்கல்பாளையத்தில் செயல்பட்டு வருகிறது. 1960-ல் தொடங்கப்பட்ட இந்த சங்கமானது இன்று வரை 35,000-க்கும் அதிகமான உறுப்பினர்களுடன் லாபத்துடம், சிறப்பாக இயங்கி வருகிறது. இந்தக் கூட்டுறவுச் சங்கத்தில் மஞ்சள் ஏல விற்பனை மட்டுமல்லாமல், 2014-ம் ஆண்டு முதல் மஞ்சளின் மதிப்புக் கூட்டப்பட்ட பொருளான மஞ்சள் தூளினை தயார் செய்து ‘மங்களம்’ என்ற பெயரில் பல்வேறு அளவுகளில் விற்பனை செய்து வருகின்றனர்.
உணவு தரக்கட்டுப்பாட்டுச் சான்றுடன் (FSSAI) கூட்டுறவுச் சங்கங்களுக்கும், நுகர்வோர்களுக்கும் மற்றும் தனியார் சூப்பர் மார்கெட்டுகளுக்கும் இதனை விற்பனை செய்து வருகின்றனர். மேலும், 2015-ம் ஆண்டிலிருந்து மஞ்சளிலிருந்து குங்குமமும் தயார் செய்து கடைகளுக்கும், கோயில்களுக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இந்தாண்டு செப்டம்பர் மாதம் வரை 172 டன் மஞ்சளில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயார் செய்து விற்பனை செய்தது மூலம் கோடிக்கணக்கில் வருமானத்தை ஈட்டியிருக்கின்றனர்.
மேலும் மசாலா அரவை ஆலையை நிறுவி... மசாலாப் பொருள்களுக்குத் தேவையான மூலப் பொருட்களைப் பிற கூட்டுறவு நிறுவனங்களிலிருந்து கொள்முதல் செய்து மல்லித்தூள், மிளகாய் தூள், சாம்பார் தூள், ரசப்பொடி, மட்டன் மசாலா, சிக்கன் மசாலா, ராகி மாவு, பஜ்ஜி மாவு மற்றும் கடலைமாவு ஆகியவற்றைத் தயார் செய்து ‘மங்களம்’ என்ற பெயரில் விற்பனை செய்து வருகின்றனர்.
‘‘ஈரோடு மஞ்சள் விவசாயிகளை ஊக்கப்படுத்தக்கூடிய திட்டங்களைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்தணும். இங்கவுள்ள விவசாயிங்ககிட்ட இருந்து அரசாங்கமே மஞ்சளை கொள்முதல் செய்யணும்.’’
மஞ்சளுக்கான சிறப்பு மையம்
ஈரோடு மஞ்சளின் மகத்துவத்தை உலகறியச் செய்திடவும், மஞ்சள் சாகுபடியை பேணிக்காக்கவும் ‘மஞ்சளுக்கான சிறப்பு மையம்’ ஈரோட்டில் அமையவிருக்கிறது. 14.05.2021 அன்று தமிழகச் சட்டசபையில் இதுகுறித்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுகா வடுகப்பட்டியில் ‘மஞ்சள் சிறப்பு மையம்’ அமைத்திட ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அசராணை வெளியிடப்பட்டு, இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
விவசாயிகளுக்குச் சிறப்பான விளைச்சல் கொடுக்கக்கூடிய மஞ்சள் ரகத்தேர்வு, ஏற்றுமதிக்கு உகந்த அதிக அளவிலான குர்க்குமின் கொண்ட மஞ்சள் ரகங்களை அறிமுகப்படுத்துவது, மஞ்சள் விவசாயிகளுக்குத் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை அளிப்பது, மஞ்சள் நாற்றங்கால் அமைத்து தரமான நாற்றுகள் உற்பத்தி செய்து விநியோகம் செய்வது, நவீன தொழில்நுட்பக் கருவிகளை அறிமுகப்படுத்துவது, அறுவடை செய்யப்படும் மஞ்சளை எவ்வித சேதாரமும் இன்றிப் பதப்படுத்திப் பாதுகாப்பதற்கான கட்டமைப்பு வசதிகள், மஞ்சளில் மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயார் செய்தல், மருத்துவப்பொருள் பிரித்தெடுக்கும் கட்டமைப்புகளை உருவாக்குதல் ஆகியவை இம்மையத்தின் முக்கிய நோக்கம் என்கிறார்கள் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள்.