Published:Updated:

400 சதவீதம் வரையில் கூடுதல் வருமானம்; இடைப்பருவ மா சாகுபடியில் கிருஷ்ணகிரி விவசாயிகள்!

இடைப்பருவ மா சாகுபடி.

‘‘சாதாரணமாகவே மா சாகுபடிக்கு, அரசு சார்பில் தோட்டக்கலைத்துறை வாயிலாக, பெரிய அளவில் மானிய திட்டங்கள் செயல்படுத்துவதில்லை. மேலும், புதிய தொழில்நுட்பங்கள், பூச்சிக்கட்டுப்பாடு என, பல ஆலோசனைகள் கிடைப்பதில்லை,’’ விவசாயிகள் குற்றச்சாட்டு.

Published:Updated:

400 சதவீதம் வரையில் கூடுதல் வருமானம்; இடைப்பருவ மா சாகுபடியில் கிருஷ்ணகிரி விவசாயிகள்!

‘‘சாதாரணமாகவே மா சாகுபடிக்கு, அரசு சார்பில் தோட்டக்கலைத்துறை வாயிலாக, பெரிய அளவில் மானிய திட்டங்கள் செயல்படுத்துவதில்லை. மேலும், புதிய தொழில்நுட்பங்கள், பூச்சிக்கட்டுப்பாடு என, பல ஆலோசனைகள் கிடைப்பதில்லை,’’ விவசாயிகள் குற்றச்சாட்டு.

இடைப்பருவ மா சாகுபடி.

தமிழகத்தில் மாங்காய் உற்பத்தியில் தனியிடம் பெற்ற மல்கோவா மாம்பழம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் தான், அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக போச்சம்பள்ளி பகுதியில், 45 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மழை இல்லாமல் நிலத்தடி நீர் மட்டம் குறைவு, நவம்பர் முதல் ஜனவரி வரையில் பூப்பூக்கும் பருவத்தில் மழை பெய்தது உள்ளிட்ட காரணங்களால், மகசூல் வெகுவாக குறைந்து விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்தனர். மேலும், குறைந்த அளவில் அறுவடை செய்யப்பட்ட மாங்காய்களை வெளிமாநிலங்களுக்கு அனுப்பியும், உள்ளூரில் விற்பனை செய்தும் போதிய லாபம் கிடைக்காமல் சிரமத்தை சந்தித்தனர்.

இடைப்பருவ மா சாகுபடி.
இடைப்பருவ மா சாகுபடி.

தற்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குறிப்பாக போச்சம்பள்ளி, காட்டுவான்ற ஹள்ளி, ஒட்டத்தெரு, மத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில், விவசாயிகள் இடைப்பருவ மா சாகுபடியில் களமிறங்கி அசத்தி வருகின்றனர். அல்போன்சா, பெங்களூரா, செந்துாரம், நீலம் மற்றும் மல்கோவா வகைகளை சாகுபடி செய்து வருகின்றனர்.

இடைப்பருவ மா சாகுபடி.
இடைப்பருவ மா சாகுபடி.

வழக்கமான மா சாகுபடியில், டிசம்பர் முதல் ஜனவரி வரையில், பூக்கத் தொடங்கி, ஏப்ரல் – ஆகஸ்ட் வரையில் தொடர்ச்சியாக அறுவடை செய்யப்படும். இந்த பருவத்துக்கு பதிலாக தற்போது விவசாயிகள், புதிய முயற்சியாக இடைப்பருவ சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மா பூக்காத பருவமான ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் பூக்கச் செய்து அதிக அளவில் மாங்காய் மகசூல் பெற்று வருகின்றனர்.

வழக்கமான மா பருவ காலத்தில் கிடைப்பதை விட, 2 முதல் 4 மடங்கு அதிக வருமானம் கிடைப்பதாக, விவசாயிகள் மகிழ்ச்சித் தகவலை நம்மிடம் பகிர்ந்துள்ளனர்.

400 சதவீதம் வரையில் கூடுதல் வருமானம்!

இடைப்பருவ மா சாகுபடி செய்துள்ள, போச்சம்பள்ளியை சேர்ந்த விவசாயி சிவகுருவிடம் பேசினோம், ‘‘அதீத சுவையுடன் இருப்பதால், கிருஷ்ணகிரி மாம்பழம் தான் மக்களின் முதன்மை தேர்வாக இருக்கிறது. வழக்கமாக மே முதல் ஆகஸ்டு வரையில் அனைத்து விவசாயிகளும் மா அறுவடை செய்வதால், வரத்து அபரிமிதமாக அதிகரித்து கிலோவுக்கு, 15 முதல் 25 ரூபாய் தான் விலை கிடைக்கிறது.

விவசாயி சிவகுரு.
விவசாயி சிவகுரு.

மா கிடைக்காத, நவம்பர் முதல் ஜனவரி வரையிலான பருவத்தில், அறுவடை இல்லாததால் மாம்பழத்துக்கு ‘டிமாண்டு’ அதிகரித்து விலை மிகவும் அதிகரிக்கிறது. இங்குள்ள மாம்பழ கூழ் தயாரிக்கும் நிறுவனங்கள், இந்தப்பருவத்தில் ஆந்திரா சென்று மாம்பழங்களை வாங்கி வருகின்றனர். இந்த ‘டிமாண்டை’ நாங்கள் பயன்படுத்தி, இடைப்பருவ மா சாகுபடி செய்கிறோம். இதனால், ஒரு கிலோவுக்கு, 40 முதல் 80 ரூபாய் விலை கிடைக்கிறது. சாதாரண பருவத்தை விட, இடைப்பருவ சாகுபடியில் நாங்கள், 100 – 400 சதவீதம் வரையில் கூடுதல் லாபம் பெறுகிறோம்.

செலவும் அதிகம்; வருமானமும் அதிகம்!

இடைப்பருவத்தில் எங்களின் ஒரே எதிரி, பூச்சிகள் தான். மற்ற பருவத்தில் அனைத்து விவசாயிகள் பூச்சி மருந்து உபயோகப்படுத்தி, ஒருங்கிணைந்த முறையில் சாகுபடி செய்யும் போது பூச்சித்தாக்குதலின் வீரியம் வெகுவாக குறையும். இந்த பருவத்தில் குறைந்த அளவு பூச்சிக்கொல்லி, உரம் போதுமானது. ஆனால், இடைப்பருவத்தில் எங்களுக்கு அதிகப்படியான பூச்சிக்கொல்லி, உரம் மற்றும் நீர் தேவைப்படுகிறது.

இடைப்பருவ மா சாகுபடி செய்த தோப்பில் பூச்சி மருந்து தெளித்ததும், அருகில் சாகுபடியாகாத தோப்புகளுக்குச் செல்லும் பூச்சிகள், எங்கள் தோப்புகளில் மருந்தின் வீரியம் முடிந்ததும் மீண்டும் வந்துவிடுவதால் மகசூல் குறையவும் வாய்ப்புள்ளது. இதனால், சாதாரண பருவத்தை விட கூடுதல் செலவாகிறது என்றாலும், வருமானம் மிக அதிகமாகவே கிடைக்கிறது.

அறுவடைக்கு தயாராகும் மாங்காய்கள்.
அறுவடைக்கு தயாராகும் மாங்காய்கள்.

அரசு உதவுவதே இல்லை!

சாதாரணமாகவே மா சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, அரசு சார்பில் தோட்டக்கலைத்துறை வாயிலாக, பெரிய அளவில் மானிய திட்டங்கள் செயல்படுத்துவதில்லை. மேலும், புதிய தொழில்நுட்பங்கள், பூச்சிக்கட்டுப்பாடு என, பல ஆலோசனைகள் கிடைப்பதில்லை. இடைப்பருவத்தில் தான் எங்களுக்கு அதிக ஆலோசனைகள் தேவைப்படுகிறது. புதிய தொழில்நுட்ப பயன்பாடு, ஆலோசனைகள்; உரம், பூச்சிக்கொல்லி வாங்க போதிய அளவு மானியம் வழங்க அரசு முன்வந்தால், கிருஷ்ணகிரியில் ஆண்டு முழுதும் மா சாகுபடி செய்ய முடியும்.

ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து மாம்பழம் கொள்முதல் செய்வது குறைந்து, கிருஷ்ணகிரி பகுதியிலேயே மாம்பழத்தை சாகுபடி செய்யலாம். போக்குவரத்துக்கான செலவு குறைந்து இங்குள்ள கூழ் தயாரிக்கும் நிறுவனங்களின் ஆண்டு வருமானம் அதிகரிக்கும்; மக்களுக்கு ஆண்டு முழுதும் சுவையான கிருஷ்ணகிரி மாம்பழங்கள் கிடைக்கும். பல ஆண்டுகளாக அரசின் உதவிக்காக காத்திருக்கிறோம் , இனியாவது முதல்வர் உதவ வேண்டும்,’’ என்றார் ஆதங்கத்துடன்.