நாட்டு நடப்பு
Published:Updated:

சிறுத்தை மரணம்... சிறை வைக்கப்பட்ட அப்பாவி விவசாயி!

சிறுத்தை விவகாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுத்தை விவகாரம்

பிரச்னை

‘கடைசி விவசாயி’ திரைப்படத்தில் மயில்களைக் கொன்று புதைத்ததாக விவசாயி ஒருவர் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை, நீதிமன்ற விசாரணை என அலைகழிக்கப் படுவார். அந்தக் காட்சி பார்வையாளர்களைப் பெரும் கொந்தளிப்பிலும் வேதனையிலும் ஆழ்த்தும். அதேபோல் வேலூர் மாவட்ட விவசாயி ஒருவர் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட சம்பவம் இப்பகுதி விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்துப் பேசிய பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த தமிழக விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் உதயகுமார், ‘‘பேரணாம்பட்டு வனச்சரகக் காப்புக்காட்டு பகுதியில சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமா இருக்கு. காட்டையொட்டி மேய்ச்சல் நிலங்கள்ல மேயக்கூடிய ஆடு, மாடுகளை இந்தச் சிறுத்தைங்க கடிச்சு குதறக்கூடிய கொடுமையும் அப்பப்போ நடக்குது. சிறுத்தைங்க சிலநேரங்கள்ல, இங்க இருக்கிற கிராமங்கள்லயும் புகுந்து பொது மக்களைத் தலைதெறிக்க ஓடவிட்டுக்கிட்டு இருக்கு. இந்த நிலையிலதான் சில வாரங்களுக்கு முன்னாடி, பேரணாம்பட்டு வனப்பகுதிக்கு பக்கத்துல இருக்கிற சேராங்கல் கிராமத்துல சிறுத்தை ஒண்ணு மர்மமான முறையில செத்துக் கிடந்துச்சு.

பாதிக்கப்பட்ட விவசாயிக்கான போராட்டம்
பாதிக்கப்பட்ட விவசாயிக்கான போராட்டம்

சிறுத்தை இறந்து கிடந்த இடத்துக் குப் பக்கத்துல விவசாயி வேணு மூர்த்தியோட எலுமிச்சைத் தோட்டம் இருக்குது. அதைச் சுத்திலும் மின் வேலி ஏதாவது அமைச்சிருக்கிறாங் களான்னு வனத்துறை அதிகாரிங்க ஆய்வு பண்ணாங்க. அப்படி எதுவும் இல்ல. மின்வேலியில சிக்குனதுக்கான தடயங்களோ, துப்பாக்கிக்குண்டு பாய்ஞ்சதுக்கான காயங்களோகூட, அந்தச் சிறுத்தை உடல்ல இல்ல. சிறுத்தை இயற்கையாதான் செத்துப் போயிருக்குனு உடற்கூறாய்விலும் உறுதி பண்ணிட்டாங்க.

ஆனா, பேரணாம்பட்டு வனச்சரகர் என்னமோ ஒரு உள்நோக்கத்தோட, சிறுத்தை செத்ததுக்கு விவசாயி மோகன்பாபுதான் காரணம்னு பொய் வழக்குப் பதிவு செஞ்சு மோகன்பாபுவையும் அவருடைய தம்பி சுரேஷையும் கைது பண்ணி ஜெயில்ல தள்ளிட்டாரு. மோகன்பாபுவுக்கு 19 நாள்கள் கழிச்சுதான் நிபந்தனை ஜாமீன் கிடைச்சது. தினமும் அவரு ஃபாரஸ்ட் ஆபீஸுக்குப் போயி கையெழுத்துப் போட்டுட்டு வர்றாரு. இது ஒரு அப்பாவி விவசாயிக்கு இழைக்கப் பட்டிருக்கிற மிகப் பெரிய அநீதி.

இறந்த சிறுத்தை
இறந்த சிறுத்தை

2014-ம் வருஷம், காட்டுப்பகுதியில இருந்து கூட்டமா வந்த யானைங்க மோகன் பாபுவோட மாந்தோட்டத்துக்குள்ள புகுந்து துவம்சம் பண்ணிடுச்சு. பயிரை காப்பாத்துறத்துக்காக யானைகள விரட்ட போன மோகன்பாபுவோட அப்பா துரைசாமி, யானைங்ககிட்ட மிதிப்பட்டு செத்துப்போயிட்டாரு. அந்தத் துயர சம்பவத்துக்குப் பிறகு, மோகன்பாபு தன்னோட தோட்டத்துல ஒலி எழுப்புற கருவியை அமைச்சாரு. இதனால விலங்குகளுக்கோ, மனிதர்களுக்கோ எந்த ஒரு பாதிப்புமே ஏற்படல. மின்சாரம் கடத் தாத கம்பியை, அந்தக் கருவியில இணைச்சு வீடு, நிலத்தைச் சுத்தி கட்டிவிட்டிருக்கார். வனவிலங்குகள் தோட்டத்துக்குள்ளார நுழைஞ்சவுடனேயே... அந்தக் கம்பி மூலமா அந்தக் கருவியிலிருந்து அலாரம் மாதிரியான சத்தம் வரும். உடனே ஓடியாந்து வனவிலங்குகள விரட்டியடிச்சிடலாம்.

எட்டு வருஷமா இந்தக் கருவிய மோகன் பாபு பயன்படுத்தி வர்றாரு. இதுவரை எந்தப் பிரச்னையும் ஏற்பட்டதில்ல. இதுக்கு முன்னாடி இருந்த ஃபாரஸ்ட் அதிகாரிங்க, மோகன்பாபுவோட இந்த அருமையான கண்டுபிடிப்பை நேர்ல வந்து பார்த்துட்டு பாராட்டியிருக்காங்க. இந்தக் கருவி மூலமா விலங்குகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதுங் கறதை உறுதிப்படுத்திட்டாங்க. ஆனா, இப்ப இருக்குற வனச்சரகர் சதிஷ்குமார் இந்தக் கருவியைக் காரணம் காட்டிதான் மோகன்பாபுவை கைது செஞ்சிருக்கிறாரு. மோகன்பாபு நிலத்துல, சிறுத்தை செத்துக் கிடக்கலை. சம்பவம் நடந்த இடத்துக்கும் அவரோட நிலத்துக்கும் ரொம்ப தூரம். பொய் வழக்கு புனையிற, இப்படியான அராஜக அதிகாரிகள் மேல கடும் நடவடிக்கை எடுக்கணும்’’ எனத் தெரிவித்தார்.

மோகன்பாபு
மோகன்பாபு

பாதிக்கப்பட்ட விவசாயி மோகன்பாபுவிடம் பேசினோம். ‘‘ஒலி எழுப்புற கருவி யாலதான் சிறுத்தை செத்துடுச்சினு வனத்துறை அலுவலர் சதிஷ்குமார் குற்றஞ் சாட்டுறாரு. வனத்துறை அதிகாரிங்க முன்னாடி இதைப் பல தடவை இயக்கிக் காட்டியிருக்கிறேன். தோட்டத்த சுத்தி கட்டி யிருக்கிற கம்பியை வாயில வச்சு கடிச்சுகூடக் காட்டியிருக்கிறேன் அதுலருந்து மின்சாரம் வராது. ஒலி எழுப்புற கருவியில சின்னதா ஒரு பேட்டரி செட் பண்ணி வெச்சிருக்கிறேன். ஆனா, அதிலருந்து கம்பிகளுக்கு மின்சாரம் வராது. யானைகளால என்னோட அப்பா செத்துப் போயிட்டதுனால, என் குடும்பத்துல உள்ள மத்தவங்க உசுரையும் பயிரையும் பாதுகாக்கதான் இந்தக் கருவிய வெச்சேன். இது ஒரு குற்றமா’’ எனப் பரிதாபமாகக் கேள்வி எழுப்பினார்.

ராணிப்பேட்டையைச் சேர்ந்த விவசாயிகள் சங்க நிர்வாகி சுபாஷ், ‘‘யானை, காட்டுப் பன்னி மாதிரியான வனவிலங்குகளால விவசாயிகளுக்கு ஏற்படுற பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்துக்கிட்டு வர்றோம். ஆனா, எந்த நடவடிக்கையும் இல்ல. வன விலங்குகள விவசாய நிலங்கள்லயிருந்து எந்த விதமான நெறிமுறைகளைப் பின்பற்றி விரட்டணும்னு வனத்துறையினர் தெளிவு படுத்தணும். வனவிலங்குகளால ஏற்படுற பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கிற வரைக்கும் இனி எந்தத் தேர்தல்லயும் விவசாயிங்க ஓட்டுப் போட மாட்டோம்னு முடிவெடுத்து... வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள்ல உள்ள கிராமங்கள்ல பிரசாரம் செய்யத் திட்ட மிட்டுக்கிட்டு இருக்கோம்” எனத் தெரிவித்தார்.

குற்றச்சாட்டுக்குள்ளான பேரணாம்பட்டு வனச்சரகர் சதிஷ்குமாரிடம் விளக்கம் கேட்டோம். ‘‘சிறுத்தை செத்ததுக்கும் மோகன்பாபுவை கைது பண்ணதுக்கும் எந்தத் தொடர்பும் இல்ல. மோகன்பாபு மேல வேற வழக்குப் பதிவு பண்ணிருக்கிறேன். வனத்துறையினர்கிட்ட அனுமதி பெறாம சட்டவிரோதமா மின்கடத்துற பெட்டி மூலம் ஒலி எழுப்புற கருவியைப் பொருத்தியிருக் கிறாரு. அதுக்கு அவர்கிட்ட ஐ.எஸ்.ஓ சான்றிதழ் இல்ல. இது, யானைகள் நடமாட்டம் அதிகமிருக்கிற பகுதி. மோகன் பாபு நிலத்தையொட்டிருக்கிறதும் ஃபாரஸ்ட் ஏரியாதான். எங்ககிட்ட அனுமதியோ, தடையில்லா சான்றோ வாங்கியிருக்கணும்’’ என்றவரிடம்,

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

‘‘மோகன்பாபு அந்தக் கருவியைப் பொருத்தி 8 ஆண்டுகள் ஆகுதுனு சொல்றாரு. இத்தனை வருஷமா இல்லாம, சிறுத்தை செத்ததுக்குப் பின்னாடி இவர் மேல நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதற்கான காரணம் என்ன?’’ என்று கேள்வி எழுப்பினோம். ‘‘இதுக்கு முன்னாடி இருந்த அதிகாரிங்க எப்படி அனுமதிச்சாங்கனு தெரியலை. நான் இந்த ஊருக்கு வந்து சில மாசங்கள்தான் ஆகுது. என்னைப் பொறுத்த வரைக்கும் அவர் செஞ்சது சட்டவிரோதம். இதனாலதான் வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் 1972-ன் கீழ் வழக்குப் பதிவு செஞ்சு மோகன்பாபுவைக் கைது பண்ணேன். அவர் மீதான கைது நடவடிக்கையைச் சிறுத்தை மரணத்தோட தொடர்புபடுத்த வேண்டியதில்ல’’ என்றார்.

தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச் சந்திரனின் கவனத்துக்கு இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றோம். ‘‘நீங்க சொல்லிதான் இப்படியொரு சம்பவம் நடந்திருக்குதுனு எனக்குத் தெரிய வந்திருக்கு. அந்த மாவட்டத்துல இருக்கக்கூடிய எங்க ஆட்களும் இத்தனை நாள்களா சொல்லாம விட்டுட்டாங்க. உடனே விசாரிக்கிறேன். அதேபோல, பாதிக்கப்பட்ட விவசாயி தரப்பு சென்னைக்கு நேர்ல வந்து என்னைச் சந்திக்கலாம். அவங்க பிரச்னைய சரி செய்றேன்’’ என்றார் நம்பிக்கை கொடுக்கும் விதமாக!

வனவிலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு ஓர் நிரந்தரத் தீர்வு காண்பதற்கும் அமைச்சர் ராமச்சந்திரன் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்.