ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து சுமார் 200 கி.மீ நீளத்துக்கு கீழ்பவானி வாய்க்காலின் இரு கரைகளும் முழுக்க மண்ணால் கட்டப்பட்டதாகும். நீர்க்கசிவை தடுக்க வாய்க்காலின் இரு கரைகளிலும் கான்கிரீட் தளம் அமைக்க ரூ.750 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து கீழ்பவானி விவசாயிகள் சிலர் நீதிமன்றத்துக்குச் சென்றனர். அதில், கீழ்பவானி வாய்க்காலின் கரைகளில் கான்கிரீட் தளம் அமைக்க நீதிமன்றம் ஒப்புதல் அளித்ததுடன், மே 1-ம் தேதி முதல் காவல் துறை உதவியுடன் தமிழக அரசு பணியைத் தொடங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

2010-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் தொடங்கி கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு விவசாயிகளின் எதிர்ப்பால் அத்திட்டம் கைவிடப்பட்டது. இந்தத் திட்டத்தால், கீழ்பவானி வாய்க்காலைச் சுற்றியுள்ள விவசாய நிலங்களும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று தி.மு.க சுற்றுச்சூழல் அணியின் செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி தொடக்கத்தில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பது தொடர்பாக ஈரோடு, மேட்டுக்கடையில் உள்ள தனியார் மண்டபத்தில் கீழ்பவானி பாசனப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கான்கிரீட் திட்டம் எதிர்ப்பு ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், கார்த்திகேய சிவசேனாதிபதி கலந்துகொண்டு பேசுகையில், ``ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மூன்று மாவட்ட விவசாயிகள் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் போடுவதை எதிர்த்து வருகின்றனர்.

2013-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் கான்கிரீட் திட்டம் கொண்டு வரப்பட்டு விவசாயிகளின் எதிர்ப்பால் அத்திட்டம் கைவிட்டப்பட்டது. மீண்டும் 2020-ல் எடப்பாடி பழனிசாமி கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதற்கான அரசாணை வெளியிட்டார். தற்போது, உயர் நீதிமன்ற உத்தரவின்படி வாய்க்காலில் கான்கிரீட் அமைக்கும் பணி தொடங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் கீழ்பவானி வாய்க்காலால் பாசனம் பெறும் 98 சதவிகித விவசாயிகள் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு பல கட்ட கூட்டங்கள் நடத்தி கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து புரிய வைத்தோம். போலி விவசாய சங்கங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என உத்தரவு வந்துள்ளது.
உத்தரவு நகல் இதுவரை வழங்கப்படவில்லை. அவ்வாறு கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும்பட்சத்தில் இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம், குடிநீர்ப் பிரச்னை, லட்சக்கணக்காண மரங்களை வெட்ட வேண்டிய நிலை ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, இதுதொடர்பான அரசாணையை ரத்து செய்து கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.

கீழ்பவானி கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட காரணத்தால் மே 15-ம் தேதி வரை தண்ணீர்த் திறப்பை நீட்டிக்க வேண்டும். இந்த விஷயத்தில் அமைச்சர் துரைமுருகனுக்கும் எனக்கும் மாறுபட்ட கருத்து உள்ளது. நான் இங்கு பிறந்தவன் என்பதால் என் வாழ்வாதாரத்தை இழக்க நான் தயாராக இல்லை. கீழ்பவானி வாய்க்காலில் ஏற்கெனவே கான்கிரீட் தளம் உள்ள இடங்களில் மீண்டும் கான்கிரீட் தளம் கட்ட ஆட்சேபனை இல்லை. புதிதாக கான்கிரீட் தளம் அமைக்க வேண்டாம் என்பதே பெரும்பான்மையான விவசாயிகளின் கருத்தாகும்'' என்றார்.