
பிரச்னை
ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய மண் அணை ‘பவானிசாகர் அணை.’ இந்த அணையிலிருந்து வெட்டப்பட்டுள்ள கீழ்பவானி வாய்க்கால் மூலமாக ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2,07,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறந்துவிடப்படும் தண்ணீர், கடைமடை விவசாயிகளுக்குச் செல்வதில்லை என்பது பல ஆண்டுக்கால குற்றச்சாட்டு.
அதிக கசிவுநீர் அளவு, சிதிலமடைந்த வாய்க்கால்கள், மறைமுகத் தண்ணீர் திருட்டு போன்றவையே இதற்குக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. இதைச் சரிசெய்ய ‘கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்புத் திட்டத்துக்கு’ நிதி ஒதுக்கப்பட்டு வேலைகள் நடந்து வருகின்றன. இதற்கு விவசாயிகள் பலர் வரவேற்பு கொடுத்தாலும், தி.மு.க, சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி மற்றும் சிலர் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். இது கீழ்பவானி பாசன விவசாயிகளிடையே பெரும் சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது.

கீழ்பவானி வாய்க்காலில் என்னதான் பிரச்னை? இரண்டு தரப்பிலும் பேசினோம்.
இதுதொடர்பாகப் பேசும் கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கத் தலைவர் செ.நல்லசாமி, “புஞ்சை பாசனத்துக்காக வடிவமைக்கப்பட்டதுதான் கீழ்பவானி வாய்க்கால். 1964-ம் ஆண்டு நஞ்சை, புஞ்சை என இரு பாசனங்களையும் இணைத்தார்கள். ஆண்டுக்கு 29 டி.எம்.சி தண்ணீர் என்பதை 36 டி.எம்.சி என மாற்றினார்கள். ஆனால், கால்வாயின் கொள்ளளவைக் கூட்டவில்லை. இதுதான் கடைமடை வரை நீர் போகாததற்கான முதல் காரணம். ஆக, முதலில் கீழ்பவானி வாய்க்காலை அகலப்படுத்திக் கொள்ளளவைக் கூட்டினால்தான் கடைமடை விவசாயிகளுக்கும் தண்ணீர் கிடைக்கும்.
தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர் கி.வே.பொன்னையன், “கீழ்பவானி பாசனக் கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டத்துக்குத் தொடக்கப் புள்ளி வைத்தது 1996-2001 ஆண்டு ஆட்சியிலிருந்த தி.மு.க அரசுதான். வாய்க்காலைச் சீரமைக்க 2010-ம் ஆண்டு ரூ.610 கோடி நிதியையும் தி.மு.க அரசு ஒதுக்கீடு செய்தது. ஆட்சி மாற்றத்தால் அது கிடப்பில் போடப்பட்டது. எடப்பாடி அரசு 2020-ல் ரூ.710 கோடி நிதி ஒதுக்கி வாய்க்காலை மேம்படுத்தும் வேலைகள் நடந்து வந்தன. ஆக, இது புதிதாகக் கொண்டு வரப்பட்ட திட்டம் இல்லை. தற்போது வாய்க்காலில் விடக்கூடிய தண்ணீரில் கிட்டத்தட்ட 55 சதவிகிதம் கசிவாக வீணாகிறது. ஆகவே அதிக கசிவு உள்ள இடங்களில் மட்டுமே கான்கிரீட் போட போகிறார்கள். ஆனால், கார்த்திகேய சிவசேனாபதியோ `வாய்க்கால் முழுக்க கான்கிரீட் போடப் போகிறார்கள்’ எனப் பிரச்னையைத் திசை திருப்பி விவசாயிகளைத் தூண்டிவிட்டுப் பதற்றத்தை ஏற்படுத்துகிறார்.

வாய்க்கால் கரையோரம் வசதியான தொழிலதிபர்கள் பலர் நிலங்களை வாங்கிக் கிணறு வெட்டித் தண்ணீர் கொண்டு செல்கின்றனர். கார்த்திகேய சிவசேனாபதியும் மறைமுகமாக அவரது நிலத்துக்குத் தண்ணீர் கொண்டு போகிறார். அதற்காகத்தான் குரல் கொடுக்கிறார். தன்னுடைய தனிப்பட்ட சுய லாபத்துக்காகத் தி.மு.க சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளர் என்னும் பதவியைக் கார்த்திகேய சிவசேனாபதி தவறாகப் பயன்படுத்துகிறார்” என்றார்.
தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் அறச்சலூர் செல்வம், “கீழ்பவானி வாய்க்காலில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட 33 சதவிகிதக் கசிவுநீர் கிடைக்கும் வகையிலேயே வாய்க்கால் சீரமைக்கப் படவிருக்கிறது. பொதுப்பணித்துறை இதை விளக்கமாகச் சொல்லி, மூன்று கூட்டங்களையும் நடத்தியிருக்கிறார்கள். ஆனால், தனிப்பட்ட ஆதாயத்துக்காகக் கார்த்திகேய சிவசேனாபதி தேவையற்ற கருத்துகளைப் பரப்பி வருகிறார்” என்றார்.

இந்த விவகாரம் குறித்து தி.மு.க சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதியிடம் பேசினோம். “இந்தத் திட்டத்தில் கிடைக்கும் மிகப்பெரிய கமிஷனுக்காக, போலி விவசாயச் சங்கத்தைச் சேர்ந்த 4 பேர் இந்த விவகாரத்தைக் கையிலெடுத்து வருகிறார்கள். கலைஞர்தான் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தார்கள் எனப் பொய்ப் பிரசாரத்தையும் செய்து வருகிறார்கள். கீழ்பவானி வாய்க்காலில் செல்லும் தண்ணீரால் நிலத்தடிநீர் கிடைத்து மறைமுகப் பாசனம் பலருக்கும் கிடைத்து வருகிறது. கிட்டத்தட்ட 10 லட்சம் பேருக்குக் குடிநீர் ஆதாரமாகவும், கால்நடைகளுக்கு நீராதாரமாகவும் இருக்கிறது. 30-க்கும் மேற்பட்ட மிகப்பெரிய குளங்கள் இதை நம்பித்தான் இருக்கின்றன. மண் வாய்க்காலாக இருக்கும் வரைதான் இது சாத்தியம். வாய்க்காலில் கான்கிரீட் போட்டுவிட்டால் ஆடு மாடுகளுக்குக்கூடத் தண்ணீர் கிடைக்காது. உலக அளவில் வாய்க்காலில் கான்கிரீட் போடுவது என்பது சரியான திட்டம் கிடையாது.

கீழ்பவானி வாய்க்காலின் கரையோரம் 4 லட்சம் மரங்கள் இருக்கின்றன. அதில் பலவற்றை வெட்டி வீசப் போகிறார்கள். கலைஞரே இத்திட்டத்தைக் கொண்டு வந்திருந்தாலும்கூட, அன்றைக்கு இருந்திருந்த சூழலும் புரிதலும் வேறு. இன்றைக்கு வேறு. அதற்காக நாம் அதையே தொடர்ந்து முன்னெடுக்க முடியுமா? கீழ்பவானி பாசனத்துல எனக்கு 22.7 ஏக்கர் நிலம் இருக்கிறது. எனக்குத் தண்ணீர் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, நான் பேசுவது 4 லட்சம் மரங்களுக்காக” என்றார்.
ஆடு மேய்ச்ச மாதிரியும் ஆச்சு... அண்ணனுக்கு பொண்ணு பாத்தா மாதிரியும் ஆச்சு’ என்பதுபோல, ‘சுற்றுசூழலைக் காப்பாத்துன மாதிரியும் ஆச்சு... கடைமடைக் குத் தண்ணி கொண்டுபோன மாதிரியும் ஆச்சு’ என்று சொல்லுமளவுக்கு அனைவரும் கொஞ்சம் மாற்றி யோசிப்பதுதான் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும்.

மீண்டும் அளவீடு செய்ய வேண்டும்
தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் சுபி.தளபதியோ, “1955-ல் கீழ்பவானி பாசனப் பகுதிகளாக இருந்த பல பகுதிகள் இன்றைக்கு நகராட்சிப் பகுதிகளாக, வீட்டு மனைகளாக, கல்வி நிறுவனங்களாக, சாலைகளாக மாறிவிட்டன. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகமே கீழ்பவானி முறைநீர் மதகு எண் 147-ன் கீழ் பாசனப் பரப்பாக இருந்து வருகிறது. இப்படிக் கீழ்பவானி பாசனத்துக்குட்பட்ட 2,07,000 ஏக்கர் நிலங்களில், சுமார் 50,000 ஏக்கர் நிலங்கள் பாசனப் பகுதியிலிருந்து வெளியேறிவிட்டன. 50 ஆண்டுகளுக்கு முன்பு 2,07,000 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 2,300 கன அடி தண்ணீர் திறந்துவிட்டபோது கடைமடைக்குத் தண்ணீர் சென்றது. இன்றைக்கு அதே அளவு தண்ணீர் திறந்துவிட்டும் 1,50,000 ஏக்கருக்கும் முழுமையாகக் கிடைக்கவில்லை. கீழ்பவானி பாசனப் பகுதிகளை அளவீடு செய்து கீழ்பவானி ஆயக்கட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலங்கள் எவ்வளவு, கீழ்பவானி பாசனத்துக்கு உட்பட்ட நிலங்கள் எவ்வளவு என முறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு கிடைக்கும்” என்றார்.