மண்புழு மன்னாரு : கவுனி அரிசியை ருசித்த சீன அதிபரும் தவளை வளர்க்கும் சீன விவசாயியும்!

மாத்தியோசி
மாமல்லபுரத்தில் நடைபெற்ற முறைசாரா உச்சி மாநாட்டின்போது, மாலை நேரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், பிரதமர் நரேந்திர மோடியும் மாலையில் ஈரியோபைட் சிலந்தி தாக்கிய இளநீரைக் குடித்தார்கள். அடுத்து, இரு தலைவர்களும் தமிழ்நாட்டின் பாரம்பர்ய அரிசி ரகங்களில் ஒன்றான கவுனி அரிசியில் செய்த இனிப்பை விருந்தில் உண்டுகொண்டிருந்த நேரத்தில், அடியேன் ஜே.சி.குமரப்பாவின் புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தேன்.

‘சீனாவுக்கும் நமக்கும் ஆயிரம் ஆண்டுகள் பந்தம், பட்டு தந்த சொந்தம், போதி தர்மன் தந்த ஞானம்...’ என்றெல்லாம் சீனாவுக்கும் நமக்குமான உறவு பற்றி இரண்டு நாள்களும் பேசப்பட்டன. ஆனால், 1951-ம் ஆண்டு இதே சீனாவைப் பற்றிப் புகழ்ந்து பேசியதற்காக ‘காந்தியவாதியான நீ, கம்யூனிஸ்ட்டாக மாறிவிட்டாய்; கொள்கை மாறிவிட்டாய்...’ என்றெல்லாம், காந்தி குல்லா போட்டவர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த காந்தியப் பொருளாதார மேதை ஜே.சி.குமரப்பாவைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். அதற்கு, ஜே.சி.குமரப்பா சொல்லியிருக்கும் பதில்கள் செம்மையான கட்டுரைகளாக வெளிவந்துள்ளன. அதை நீங்களும் படியுங்கள்.

‘நண்பர்களே...
சீனாவை, `கம்யூனிச நாடு’ என்பது, இந்தியாவை `காந்திய நாடு’ என்று சொல்வதற்குச் சமம். நாம் காந்தியவழியை ஏற்க விரும்புவதுபோல, கம்யூனிஸ்ட் நாடாக விரும்பும் ஜனநாயகம், சர்வாதிகாரம் கலந்த நாடு சீனா. அது காந்திய வழிமுறைகளை, அகிம்சையை ஏற்றுக்கொண்ட நாடல்ல. சீனர்களின் தேசபக்தியும், அர்ப்பணிப்பு மிக்க உழைப்பும் நாம் போற்றிப் பின்பற்றத்தக்கன. அவர்களது லட்சியம், `அகிம்சைவழியை ஏற்காத சர்வோதயம்’ என்று குறிப்பிடலாம். சீனப் புரட்சி வன்முறை மூலமே நடைபெற்றது என்பது உண்மை. அனைத்து அரசுகளுமே வன்முறையை ஏதாவது ஒரு வழியில் கையாள்கின்றன. வன்முறையால் பெறும் வெற்றி நிலையானதல்ல என்பதை சீனத் தலைவர்கள் ஒரு காலத்தில் உணரக்கூடும்.
சீன மக்கள் மட்டும் அகிம்சைவழியைப் பின்பற்றத் தொடங்கிவிட்டால், அது உலகுக்கே வழிகாட்டும் உன்னத முன்மாதிரி நாடாகிவிடும். சீன அனுபவங்களும் சாதனைகளும் நமக்கு உத்வேகமளிக்கட்டும். காந்திஜியின் உண்மை, எளிமை, அகிம்சை வழிகளில் நாம் அவரது லட்சியங்களை எட்டுவோம். சீனா, தனது வழியில் வெற்றி பெற்று முன்னேற வாழ்த்துவோம். ஒழுக்கம், கலைத்திறன், உழைப்பு ஆகியன சீனர்களின் ரத்தத்தில் கலந்துள்ளன. எனவே, வெற்றி நோக்கிய அவர்களின் பயணம் எளிதாகிறது. விடுதலை பெற்ற இரண்டே ஆண்டுகளில் அவர்கள் வியத்தகு சாதனைகளைப் புரிந்திருப்பதைக் காண்கிறோம்.

கிராமப்புற மாற்றத்துக்கு அவர்கள் நடைமுறைக்குகந்த வழிகளைக் கடைப்பிடித்திருக்கிறார்கள். ரஷ்யாவின் செயல்பாடுகளிலிருந்து பாடம் கற்று, தமக்கான புதிய மாற்றுப் பாதையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். சீனாவில் நிலம் பொதுவுடைமையாக்கப் படவில்லை. நிலம், தனியார் கைகளிலேயே உள்ளது. ஆனால், உற்பத்தியும் நிலப்பயன்பாடும் அரசின் வழிகாட்டலிலும் கண்காணிப்பிலும் நடக்கின்றன. தனியார் லாப நோக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும், அதுவே உந்துசக்தி என்பதைப் புரிந்து ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். உற்பத்தி செய்வதற்கான அரசு உதவிகள் தரப்படுகின்றன. மக்களை உறிஞ்சிக் கொழிக்கும் நில முதலைகள் ஒழிக்கப்பட்டுவிட்டன. ஆனால் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் பெரிய பணக்கார விவசாயிகள் எவ்வகையிலும் பாதிக்கப்படவில்லை.
இன்றும் குத்தகைதாரரிடமிருந்து நில உடைமையாளர்கள் தமது பங்கைப் பெற அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். நிலத்தை உழுபவர்களுக்கே தரும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறார்கள். விளைச்சலில் 13 விழுக்காடு வரியை, விளையும் தானியமாகவே அரசு பெற்றுக்கொள்கிறது. இதன் மூலம் பணவீக்கம், விலைவாசி உயர்வை சீனா கட்டுப்படுத்துகிறது. ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கும் சம்பளத்தை தானியமாகவே அரசு வழங்குகிறது. வன்முறையில் ஈடுபட்டு, அரசுக்கு எதிராகப் போரிடும் நிலச்சுவான்தாரர்களைத்தான் வன்முறையால் அடக்குகின்றனர். இப்படிப்பட்டவர்களின் நிலம் பறிமுதல் செய்யப்படுகிறது. அரசுடன் ஒத்துழைக்கும் நிலச்சுவான்தாரர்களுக்கு, பிற விவசாயிகள்போல அனைத்து உதவிகளையும் அரசு வழங்கி, ஆதரிக்கிறது.

சீன அதிகாரிகளின் சம்பளம்கூடப் பொருளாகவே வழங்கப்படுகிறது. சம்பளம் முழுவதும் பணமாகத் தரப்படுவதில்லை. அரிசி, கோதுமை என்றே வழங்கப்படுகிறது. விலைவாசி ஏற்ற இறக்கம் அரசு ஊழியர்களை பாதிப்பதில்லை. என்னுடன் பயணம் செய்த இரு அமைச்சர்களில் ஒருவருக்குச் சம்பளம் பணமாகவும், மற்றவருக்குப் பொருளாகவும் தரப்படுவதாகக் கூறினர். `ஏன் பொருளாக வாங்குகிறீர்கள்?’ என்று கேட்டபோது ‘எனக்கு அதிக குழந்தைகள், குடும்பம் பெரியது. பொருளாக வாங்கினால் அரசு உணவு, உடை, மருத்துவம், கல்வி என அனைத்தையும் பொறுப்பேற்று, கவனித்துக்கொள்கிறது. எனக்குக் கவலையில்லை. இதனால், சுமை குறைவு’ என்றார் அந்த அமைச்சர்.
‘‘சீன அதிகாரிகளின் சம்பளம்கூடப் பொருளாகவே வழங்கப்படுகிறது. சம்பளம் முழுதும் பணமாகத் தரப்படுவதில்லை. அரிசி, கோதுமை என்றே வழங்குகின்றனர்.’’
நாட்டின் தலைவர் மாவோவே, சில சமயம் தனது சம்பளத்தைத் தானியமாகப் பெறுகிறார். என்னுடன் வந்த அமைச்சர்கள், தங்கள் சம்பளம் 450 ரூபாய் மட்டுமே என்றனர். தலைவர் மாவோவின் சம்பளம் 600 ரூபாய். தலைவர்களின் வாழ்க்கை மக்கள் வாழ்க்கையுடன் கலந்து, ஏற்றத் தாழ்வின்றி உள்ளது. முன்னர் கல்வி, பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைத்தது. இப்போது கல்வி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. நிலச்சீர்திருத்தம், தானியமாக வரிவசூல், சம்பளம் ஆகியன உதவுகின்றன. சீனா போன்ற மக்கள்தொகை மிகுந்த நம் நாட்டில், இந்தச் சீன அனுபவம் பலன்தரக்கூடும்.
ரஷ்யா பற்றியும், சீனா பற்றியும் நான் அந்நாடுகளுக்குச் சென்று திரும்பிய பின்னர் கூறிய கருத்துகள், என் நண்பர்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டன. எனவே, எனது நிலையைத் தெளிவுபடுத்த இதை எழுத நேர்கிறது. இந்த நாடுகளின் பொருளாதாரம் பற்றி அவர்கள் அறிவது அவசியம் எனக் கருதுகிறேன்.
பல்வேறு பொருளாதாரப் பிரிவுகள் பற்றி எனது ‘ஏன் வேண்டும் கிராமப் பொருளாதாரம்?’ மற்றும் ‘நிலைத்த பொருளாதாரம்’ நூல்களில் விளக்கியிருக்கிறேன். சுயநலம், வன்முறை சார்ந்த பொருளாதாரப் பிரிவுகளாக ஐந்து வகைகளைக் குறிப்பிட்டுள்ளேன். அவை, 1.ஒட்டுண்ணிப் பொருளாதாரம் 2.பிடுங்கிப் பிழைக்கும் பொருளாதாரம் 3.தொழில்முறைப் பொருளாதாரம் 4.தாராள கூட்டுப்பகிர்வுப் பொருளாதாரம் 5.சேவைப் பொருளாதாரம்.முதலாளித்துவமும் ஏகாதிபத்தியமும் ஆயுதங்கள், ராணுவம் போன்றவற்றால் பாதுகாக்கப்பட்டாக வேண்டும். இதற்குத் துணை நிற்பது முதலிரண்டு வகைப் பொருளாதாரங்கள்.

மூன்றாவது வகை வணிகம், சந்தை, விவசாயம் போன்றவற்றால் நிற்பது. நான்காவது வகை சோசலிசத்தால் பெறப்படுவது. ஐந்தாவது வகை காந்தியத்தால் அடையப்பெறுவது. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் காந்திஜியின் முன்னுரையுடன் இந்நூல் வெளியிடப்பட்டது. எனது அண்மைக்கால ரஷ்ய, சீனப் பயணங்கள் இதை உறுதி செய்வதாக அமைந்தன.
ரஷ்ய அல்லது சீனப் பொருளாதாரம் இந்தியாவுக்குப் பொருந்தாது. இரண்டுமே உண்மையான கம்யூனிசத்தைத் தொட முடியாது. `அரசு, தன்னை மேன்மேலும் அதிகாரமும் பலமும் கொண்டதாக வளர்க்கும்போது கம்யூனிசம் சாத்தியமல்ல’ என விளக்கியுள்ளேன்.
நான் காந்திய வழிமுறையில் நம்பிக்கை கொண்டவன் என்பதைத் திரும்பத் திரும்ப உறுதிசெய்யத் தேவையிருக்கிறது. காந்திய அறிஞர்களான கே.ஜி.மஸ்ருவாலா, ஆச்சார்யா கிருபாளனி போன்றோர் என் கருத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் விமர்சிப்பது வருத்தமளிக்கிறது. சீனா, ரஷ்யாவின் வழிகளையோ, வன்முறைகளையோ எப்போதும் ஆதரித்ததில்லை. நான் அவர்களின் தன்னலமற்ற நாட்டுப்பற்றையே வியந்து புகழ்ந்திருக்கிறேன். மக்கள்நலனுக்காக அவர்களின் அர்ப்பணிப்பு, உறுதி, ஈடுபாடு இவற்றுடனான அவர்களின் செயல்பாடுகள் மூலம் பிரச்னைகளைத் தீர்க்க முயல்கின்றனர்...’’
என்று அற்புதமாகத் தனது விளக்கத்தைச் சொல்லியிருக்கிறார் ஜே.சி.குமரப்பா.
சில ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியாவுக்குச் சென்றிருந்தபோது, பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி அலுவலர் சுப்பாராவ், ‘‘நீங்கள் சீன விவசாயிகளைச் சந்திக்க வேண்டும்” என்று சொல்லி ஒரு பண்ணைக்கு அழைத்துச் சென்றார். சீனாவைப் பூர்வீகமாகக் கொண்ட அந்த இளம் விவசாயி, துடிப்புடன் இருந்தார். ‘‘மலேசிய அரசாங்கம், விவசாயம் செய்ய விரும்புபவர்களுக்கு, நிலத்தைக் குறைந்த விலைக்குக் குத்தகைக்குக் கொடுக்கிறது.
அப்படித்தான் இந்த நிலத்தைப் பெற்றேன். சீனாவுக்கும் எங்களுக்குமான தொடர்பு குறைவு. எனவே, சீனாவின் பாரம்பர்ய விவசாயத்தை அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் இயற்கை விவசாய நுட்பங்களை என் நிலத்தில் பயன்படுத்தி வருகிறேன். மண்புழு உரம், அமுதக்கரைசல், பஞ்சகவ்யா... போன்றவற்றைப் பயன்படுத்துகிறேன். எங்களுக்கு வழிகாட்டிய இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரை ‘சீப்பூ’ (குரு) என்று எங்கள் சீன விவசாயிகள் அழைத்து மகிழ்கிறோம்’’ என்று சொன்னவர், நிலத்தைச் சுற்றிக் காட்டினார். சில இடங்களில், குழி எடுத்து, அதில் தண்ணீர் நிரப்பி வைத்திருந்தார்.
‘‘என் தோட்டத்தில், கொசுத்தொல்லையும் பூச்சித்தொல்லையும் அதிகம். அதைக் கட்டுப்படுத்த தவளைகள் வளர்க்கிறேன். கொசுவை ஒழிக்க ஒவ்வொரு நாடும், கோடிக்கணக்கில் பணத்தைச் செலவழிக்கிறது. ஆனால், நீர் நிலைகளில் தலைப்பிரட்டையும் தவளையும் இருந்தவரை கொசுக்கள் இல்லை. நீர் நிலைகளில் பூச்சிக்கொல்லி விஷம் கலந்து, நன்மை செய்யும் தவளையை அழித்தது கொசுக்கள் பெருகின. இயற்கை முறையில் கொசுக்களைக் கட்டுப்படுத்த தவளைதான் சிறந்த வழி’’ என்றார் அந்தச் சீன விவசாயி.