மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு : கூட்டுக் கிணறு மின் இணைப்புக்கு இனி வி.ஏ.ஓ சான்றிதழ் போதும்..!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு

‘‘ஏற்கெனவே இருக்கும் மின் இணைப்பைத் தமிழ்நாட்டுக்குள்ள எந்தப் பகுதிக்கும் இடமாற்றம் பண்ணிக்கவும் இப்ப அனுமதி கொடுக்குறாங்களாம்.’’

னது மானாவாரி நிலத்தில் சிறுதானிய விதைப்பில் முனைப்பாக இருந்தார் ‘காய்கறி’ கண்ணம்மா. ‘ஏரோட்டி’ ஏகாம்பரம் மாடுகளைக் கட்டிய ஏர் மூலம் உழவு செய்துகொண்டு இருந்தார். அப்போது ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி அங்கு வந்து சேர்ந்தார்.

‘‘என்ன கண்ணம்மா... ஒரு மழை கிடைச்சதும் விதைக்க ஆரம்பிச்சுட்ட போலிருக்கே...’’ பேச்சைத் தொடங்கினார் வெள்ளைச்சாமி. ‘‘ஆமாங்கய்யா... மொத மழைக்கே விதைச்சு விட்டுட்டா, நம்ம பொழப்பை நாம பார்க்கலாம்... பயிர் தன்னால வளர்ந்திடும்ல. அதான் விதைச்சுட்டு இருக்கேன்’’ என்றார்.

இருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போதே உழவு முடித்துவிட்டு வந்தார் ஏகாம்பரம். ‘‘இன்னும் சாப்பிடலை. பசிக்குது வாத்தியாரே... பனைமரத்துக்குக் கீழே கூடையில சாப்பாடு இருக்குது. வாங்க அங்க போய்ச் சாப்பிட்டுகிட்டே பேசலாம்’’ என ஏகாம்பரம் அழைக்க, மூவரும் பனைமரத்து நிழலில் ஒதுங்கினார்கள்.

‘‘நான் காலையிலயே வீட்டுல சாப்பிட்டு தான் வந்தேன். நீங்க சாப்பிடுங்க’’ என்று வாத்தியார் சொல்ல, வற்புறுத்தாமல் கண்ணம்மாவும் ஏகாம்பரமும் சாப்பிட்டுக் கொண்டே பேச மாநாடு தொடங்கியது.

‘‘எங்க நிலைமையைப் பார்த்தீங்களா வாத்தியாரே... ஒரு காலத்துல வெங்காயத்தைப் பட்டிப்போட்டு வெச்சிருப்போம். இப்ப என்னடான்னா கஞ்சிக்குக் கடிச்சிக்கக்கூட வெங்காயம் கிடைக்க மாட்டேங்குது.

விலை விர்ர்னு ஏறிப்போச்சு. எங்களை மாதிரி ஏழைகளுக்கு வெங்காயம்தான் வெஞ்சனம். ஆனா, அதுக்கே வழியில்லாமப் போச்சு’’ நொந்துகொண்டே கஞ்சியைக் குடித்தார் ஏகாம்பரம்.

‘‘உண்மைதான்யா... மத்திய அரசு வேளாண் சட்டம்னு போட்டு எல்லாத்துக்கும் ஆப்பு வெச்சிடுச்சு. வழக்கமா இந்தக் காலத்துல வெங்காய விலை அதிகமாதான் இருக்கும். ஆனா, புதுச் சட்டத்துல வெங்காயத்தை அத்தியாவசியப் பொருள் பட்டியல்ல இருந்து எடுத்துட்டுதுனால இது செயற்கையா உருவாக்கப்பட்ட விலையேற்றம்னு சொல்றாங்க. பெரும் வியாபாரிக செய்ற சித்துவேலைன்னு சொல்றாங்க’’ என்றார் வாத்தியார்.

‘‘விவசாயிகளைவிட வியாபாரிங்க தானய்யா பிரதமருக்கு முக்கியம். விவசாயி வருமானத்தை ரெட்டிப்பாக்குறேன்... அதைப் பண்றேன்... இதைப் பண்றேன்னு வெத்து சவடாலுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை. ஆனா, ஊரடங்கு நேரத்துல பேங்க்ல வாங்குன கடனுக்கு வட்டிக்கு வட்டி போட்டாங்கள்ல அதை மத்தவங்களுக்கு எல்லாம் திரும்பக் கொடுத்துட்டாங்க. ஆனா, விவசாயிகளுக்கு மட்டும் இல்லைனு சொல்லிட்டாங்க.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு

கோடி கோடியா வாங்கி, வியாபாரம் பண்ணி கோடியில சம்பாதிக்குறவங்க பாவம்... வட்டிக்கு வட்டி கட்ட முடியாது. அவங்ககிட்ட வசூல் செஞ்ச பணத்தைக் கொடுத்திடுங்க. ஆனா, விவசாயிகளை விட்டுடாதீங்க. பைசா பாக்கி இல்லாம பாத்துக்கங்கன்னு மாற்றான் தாய் மனப்பான்மையில தான்யா பாக்குது மத்திய அரசு’’ பொங்கினார் கண்ணம்மா.

“கோபப்படாம கஞ்சியைக் குடி கண்ணம்மா. அமெரிக்காவுலயும் இப்படித் தான் அதிபர் உதார் விட்டு கிட்டு இருந்தார். அதிபர் சொல்றதெல்லாம் அண்ட புளுகு... ஆகாச புளுகுனு உன்னை மாதிரி கோபப்பட்ட மக்கள் அவங்க வேலையைக் காட்டிட்டாங்க. ஆனா, நாம என்னத்த பேசினாலும் தேர்தல் நேரத்துல மறந்திடு வோம்ல’’ நக்கலாகச் சொன்னார் வாத்தியார்.

‘‘எல்லாம் நம்ம தலை யெழுத்து. சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு நான் போய் மோட்டார் போட்டு விடணும். இப்ப கரன்டும் நேரத்துக்கு வர்றதில்லை’’ எரிச்சலாகச் சொன்னார் ஏரோட்டி.

‘‘இலவச மின்சாரம் வர்ற நேரத்தை மாத்தியிருக் காங்கய்யா... ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு நேரம் ஒதுக்கி இருக்காங்க. டெல்டா மாவட்டங்கள்ல காலையில 8.30 மணியில இருந்து மதியம் 2.30 மணி வரைக்கும்தான் இலவச மின்சாரம் கிடைக்கும். மத்த மாவட்டங்களை ரெண்டு பிரிவா பிரிச்சிருக் காங்க. முதல் பிரிவுல காலை 9 மணியில இருந்து மதியம் 3 மணி வரைக்கும் கிடைக்கும். ரெண்டாவது பிரிவுல காலையில 9.30 மணியில இருந்து மதியம் 3.30 மணி வரையிலும் கிடைக்கும்னு அறிவிச்சிருக்காங்க’’ என்றார் வாத்தியார்.

‘‘ஏற்கெனவே இருக்கும் மின் இணைப்பைத் தமிழ்நாட்டுக்குள்ள எந்தப் பகுதிக்கும் இடமாற்றம் பண்ணிக்கவும் இப்ப அனுமதி கொடுக்குறாங்களாம்.’’

‘‘அப்படியா வாத்தியாரே... இனிமே அந்த நேரத்துல தண்ணி பாய்ச்சிக்க வேண்டியது தான்’’ என்றார் ஏரோட்டி.

‘‘இன்னொரு தகவலும் இருக்கு. புதுசா மின் இணைப்பு வாங்குறதை இப்ப சுலபமாக்கி இருக்காங்க. மின்சார வழங்கல் மற்றும் பகிர்மான விதிகள்ல திருத்தங்கள் பண்ணி ஒரு உத்தரவு போட்டிருக்குது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம். விவசாயக் கிணறு கூட்டுப்பட்டாவுல இருந்து பங்குதாரர் ஒப்புதல் கொடுத்தாதான் மின் இணைப்பு வாங்க முடியும். இதுதான் இதுவரைக்கும் இருந்த நடைமுறை. ஆனா, இனிமேல் பங்காளி ஒப்புதல் தேவையில்லை. விண்ணப்ப தாரர் பிணைமுறிவு பத்திரம் கொடுத்தா போதுமாம். அதோட சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ, நிலம், கிணறு உரிமைச்சான்று கொடுத்தால் போதும். அதோட விண்ணப்பத்தைக் கொடுத்தா இனிமேல் ஏத்துக்குவாங்களாம். ஒரு கிணத்துல நாலு பேருக்குப் பங்கு இருக்குன்னு வெச்சிக்குங்க. அவங்க ஒவ்வொருத்தருக்கும் தலா அரை ஏக்கருக்குக் குறையாம பாசன நிலம் இருந்தா, ஒரே கிணற்றுக்கு நாலு பேரும் தனித்தனியா மின் இணைப்பு வாங்கிக்கலாம்.

ஒரே சர்வே நெம்பர் இல்லைன்னா உட்பிரிவு சர்வே நெம்பர்ல ஒருத்தருக்கு 2 கிணறு இருந்தா, தலா அரை ஏக்கர் பாசன நிலம் இருந்தால் ஒவ்வொரு கிணற்றுக்கும் தனித்தனி மின் இணைப்புக் கிடைக்குமாம். அதே மாதிரி ஏற்கெனவே இருக்கும் மின் இணைப்பைத் தமிழ்நாட்டுக்குள்ள எந்தப் பகுதிக்கும் இடமாற்றம் பண்ணிக்கவும் இப்ப அனுமதி கொடுக்குறாங்களாம்’’ என்றார் வாத்தியார்.

‘‘உண்மையிலயே இது நல்ல செய்திதான் வாத்தியாரே... அரசு, அரசியல்வியாதிகளைப் பத்தி பேசி டென்ஷன் ஆக்குனாலும் ஒவ்வொரு தடவையும் இதுமாதிரி ஏதாவது ஒரு நல்ல தகவலைச் சொல்லிக் கூல் பண்ணிடுறீங்க’’ புன்னகையுடன் சொன்னார் கண்ணம்மா.

‘‘பாருடா... புள்ள இங்கிலிபீசுல எல்லாம் பேசுது’’ ஏரோட்டி நக்கலடிக்கவும் மூவர் முகத்திலும் சிரிப்பு.

‘‘கடைசியா ஒண்ணு சொல்லிக்கிறேன். நம்ம பசுமை விகடன் ஒரு யூடியூப் சேனல் வெச்சிருக்காங்க. அதுல ‘பச்சைத்துண்டு பழனிச்சாமி’னு ஒருத்தர் பேசுற வீடியோ வாராவாரம் சனிக்கிழமை அன்னிக்குப் போடுறாங்க. அந்த நிகழ்ச்சிக்கு ‘ஜன்கி பாத்’னு பேர். அதுல அந்த மனுஷன், நாம பேசுற மாதிரியே விவசாயப் பிரச்னைகளைத் துவைச்சு காயப்போடுறாரு. பிரதமர், முதலமைச்சர், ஆளும்கட்சி, எதிர்க்கட்சினு யாரையும் விட்டு வைக்கிறதில்லை. பொளந்து கட்டுறாரு. அதோட லிங்க்கும், க்யூ.ஆர் கோடும் கொடுக்குறேன். நீங்களும் பாருங்க’’ என்றார் வாத்தியார்.

லிங்க் https://www.youtube.com/channel/UCxtrdyWigPOh9VuWlCHp1DA

‘‘சரிங்க வாத்தியாரே... வேலையை முடிச்சுட்டுப் போய்த் தண்ணி பாய்ச்சணும்’’ என்றபடி ஏரோட்டி எழுந்து நிலத்துக்குள் நடக்க முடிவுக்கு வந்தது மாநாடு.

மரத்தடி மாநாடு :  கூட்டுக் கிணறு மின் இணைப்புக்கு இனி வி.ஏ.ஓ சான்றிதழ் போதும்..!

பசுமை விகடன் யூடியூபுக்கு செல்ல ஸ்கேன் செய்யவும்.