நீரில் மூழ்கிய நெல்... காற்றில் சரிந்த வாழை... பேரிடரில் சிக்கிய மயிலாடுதுறை விவசாயிகள்!

மழை
மயிலாடுதுறை மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால், இங்குள்ள பல கிராமங்கள் வெள்ளக்காடாக மாறின. குறிப்பாகச் சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் கடும் பாதிப்புக்குள்ளானது. உப்பனாறு, புதுமண்ணியாறு ஆகியவற்றின் கரைகள் உடைப்பெடுத்ததால், சீர்காழி சுற்றுவட்டார கிராமங்களில் வெள்ளநீர் புகுந்தது. வாய்க்கால்கள் முறையாகத் தூர்வாரப்படாததாலும், ஆக்கிரமிக்கப்பட்டதாலும் வெள்ளநீர் வடியவில்லை. அதனால் இப்பகுதி விவசாயிகளும் கால்நடைகளும் அடைந்த துயரங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால்... கரையோரக் கிராமங்களான அளக்குடி, நாணல்படுகை, மகேந்திரப்பள்ளி, காட்டூர், கோரைத்திட்டு, பழையபாளையம் ஆகிய கிராமங்களில் வெள்ளநீர் தேங்கி கிடந்தது. இதனால் இப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா நெற்பயிர்கள், வாழை உள்ளிட்டவை அழுகின.


பொன்செய் கிராமத்தைச் சேர்ந்த வாழை விவசாயி ராமச்சந்திரன், “என்னோட 4 ஏக்கர் நிலத்துல 3,000 வாழை மரங்கள பயிரிட்டுருந்தேன். இதுவரைக்கும் இரண்டரை லட்சம் ரூபாய் செலவாச்சு. எல்லாத்துலயுமே நல்ல தரமான தார்கள் உருவாகி அறுவடைக்குத் தயாராகிக்கிட்டு இருந்துச்சு. நாலஞ்சி நாள்களா கனமழை கொட்டித் தீர்த்துடுச்சு. சூறை காற்றும் பலமா வீசினதுனால, 2,000 வாழைமரங்கள் அடியோடு சாஞ்சி அழிஞ்சிடுச்சி. எங்க கிராமத்துல இன்னும் பல விவசாயிங்க பாதிக்கப்பட்டிருக்காங்க. பெருத்த நஷ்டம்தான். ஒட்டுமொத்தமா கணக்குப் பண்ணி பார்த்தா, எங்க பகுதியில உள்ள வாழை விவசாயிங்களுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல நஷ்டம். இந்த வேதனையிலிருந்து எப்படிதான் மீண்டு வரப் போறோம்னு தெரியல’’ மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார்.


நம்மிடம் பேசிய தமிழகக் காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வெட்டாத்தங்கரை விசுவநாதன், “தமிழக அரசு எங்க மாவட்டத்துல உள்ள எல்லாப் பகுதிகள்லயும் நேரடி ஆய்வு நடத்தி, பயிர் பாதிப்புகளை முழுமையா கணக்கெடுப்பு செய்யணும். கால்நடை இழப்புகளையும் கணக்கெடுப்பு செய்யணும். நெல்லுக்கு, ஒரு ஏக்கருக்கு 30,000 ரூபாயும், வாழைக்கு 50,000 ரூபாயும் நிவாரணம் தரணும்” என்றார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் பேசினோம். “பயிர் பாதிப்புகள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இது முடிந்ததும் தமிழக அரசுக்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்று தரப்படும்’’ என்றார்.