காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டூ அணை கட்டுவதில் கர்நாடக அரசு தீவிரமாக இருந்து வருகிறது. ஆனால் தமிழக அரசு மேக்கேதாட்டூவில் அணை கட்டுவதால் தமிழகத்துக்குக் கிடைக்க கூடிய காவிரி நீர் முறையாக கிடைக்காது. இதனால் காவிரி ஆற்றுப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்று கூறுகிறது. இந்த விவகாரம் இந்திய அளவில் முக்கியமான பிரச்னையாக கருதப்படுகிறது.
மேக்கேதாட்டூ அணை குறித்து காவிரி மேலாண்மை ஆணயத்தில் ஜூன் 23-ம் தேதி விவாதிக்க போவதாக ஆணைய தலைவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான அனைத்து கட்சி குழு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை டெல்லியில் சந்தித்தது.

இந்த குழுவில் வைகோ, பழனிமாணிக்கம், தம்பிதுரை, செல்வபெருந்தகை, ஜெகன்மூர்த்தி உள்ளிட்ட பிரதிநிதிகளும் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மத்திய அமைச்சருடனான சந்திப்பிற்கு பிறகு பேசிய அமைச்சர் துரைமுருகன் "தமிழ்நாடு அனுமதிக்காமல் காவிரியில் ஒருபோதும் அணை கட்ட முடியாது. மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரும் உறுதிப்படுத்தியுள்ளார். மேக்கேதாட்டூ அணை விவகாரத்தில் மத்திய அரசு சரியாக செயல்படுகிறது. கர்நாடக அரசுதான் அரசியல் செய்கிறது" என்று தெரிவித்திருந்தார்.
அனைத்து கட்சி குழு டெல்லி சென்றதை விவசாயிகளும் விவசாய சங்கங்களும் எப்படி பார்க்கிறார்கள்? என்பது குறித்து விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேசினோம்.

தமிழ்நாடு காவிரி உழவர் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை விமலநாதன் பேசும்போது, "மாநில அரசின் இந்த முயற்சி தாமதமானாலும் பாராட்டுக்குரியது. ஆனால் அனைத்து கட்சிக்குழுக்கள் மட்டுமல்லாமல் காவிரி ஆற்றோரம் உள்ள உழவர் பிரதிநிதிகளையும் உள்ளடக்கியதாக இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
கர்நாடாகவை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் மற்றும் நீரியல் வல்லுநர் பவானி சாகர், 2003-ம் ஆண்டே 3 மாநிலங்களின் தண்ணீர் பிரச்னைக்கான தீர்வை சொல்லியுள்ளார். கர்நாடாகாவின் மேற்கு தொடர்ச்சி மலையில் கிடைக்கும் நீர் ஆண்டுக்கு 2200 டி.எம்.சி வீணாக அரபிக் கடலில் கலக்குகிறது. இந்த தண்ணீர் அளவில் சுமார் 300 டி.எம்.சி தண்ணீரை நீர் மேல் திட்டத்தின் மூலமாக சேமித்தால் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது. நீர்மேல் திட்டத்தின் மூலம் மின்சாரமும் உற்பத்தியாகும் என்று பவானி சாகர் கூறுகிறார்.

மேக்கேதாட்டூ அணைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நதிநீர் சேமிப்பான இந்த திட்டத்திற்கு ஒதுக்கினால் காவிரி பிரச்னை சுமூகமாக முடியும். இதனை வலியுறுத்தி தமிழக அனைத்து கட்சி பிரதிநிதிகள், உழவர் பிரதிநிதிகள் கொண்ட குழு ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் மட்டுமல்லாமல் இந்திய பிரதமர், குடியரசு தலைவரையும் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும். தமிழக அரசு சார்பாக மாநிலம் தழுவிய வேலைநிறுத்தம் அறிவிக்க வேண்டும்" என்றார்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நல்லா கவுண்டரிடம் பேசியபோது, "மாநில அரசு அடிக்கடி மேக்கேதாட்டூ அணை குறித்து ஒன்றிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. ஒன்றிய அரசு தமிழக உழவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பதில்லை. காவிரி ஆற்று பகுதிகளில் எத்தனையோ தடுப்பணைகள் கட்டி கர்நாடக அரசு தண்ணீரை தடுக்கிறது. இது சட்டப்படி தவறு. இது குறித்து தமிழக அரசு கேள்வி கேட்கவில்லை. இப்போது நடத்திய சந்திப்போடு இன்னும் மாநில அரசு தேவையான தரவுகளுடன் தெளிவான முறையில் ஒன்றிய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். சட்டப் போராட்டத்தை இன்னும் வலுப்படுத்த வேண்டும். அப்போதுதான் காவிரி விஷயத்தில் தமிழகத்துக்கான நியாயம் கிடைக்கும்" என்றார்.