
அரசாங்கத்தின் உத்தரவும் ஆக்ரோஷமான விவசாயிகளும்!
அக்கரைச் சீமை
இந்தியாவில் பா.ஜ.க அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து லட்சக்கணக்கான விவசாயிகள் ஒன்று திரண்டு நீண்டகாலம் போராடியதன் விளைவாக, அந்தச் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டன. அதேபோல இப்போது நெதர்லாந்து நாட்டின் விவசாயிகள் உணர்ச்சி மிக்க நெடியதொரு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது இப்போராட்டம் தீவிர மடைந்து வருகிறது. நெதர்லாந்து விவசாயி கள் தங்கள் டிராக்டர்களோடு சாலைக்கு வந்துவிட்டார்கள். நாட்டின் பல்வேறு நெடுஞ்சாலைகளிலும் ஏராளமான டிராக்டர்கள் மெல்ல ஊர்ந்து செல்கின்றன. வழக்கமாக நெடுஞ்சாலைகளில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் கார்கள், தற்போது இப்போராட்டத்தின் காரணமாகப் பலமணிநேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறுகின்றன. இப்போராட்டத்தின் அடுத்தகட்டமாக, நாட்டின் விமான நிலையங்களுக்குச் செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகளையும் டிராக்டர்கள் ஆக்கிரமிக்கும் எனத் தகவல் பரவியதால் நெதர்லாந்து ஆட்சியாளர்கள் மேலும் பதறிப்போனார்கள்.

சிற்றுண்டி வழங்கி நூதன போராட்டம்
போராட்டக் களத்தில் உள்ள டிராக்டர்களில், “விவசாயி இல்லையென்றால் உணவு இல்லை... விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்காதே!” போன்ற வாசகங்கள் கொண்ட பேனர்கள் கட்டப் பட்டுள்ளன. “இப்போராட்டத்தின் ஒரு முக்கிய அம்சமாக... விவசாயிகள்தான் உங்களுக்கு உணவு கொடுப்பவர்கள்” என்பதை உணர்த்தும் விதமாக, பொது மக்களுக்கு இலவசமாகக் காலை சிற்றுண்டி வழங்கி விவசாயிகள் உபசரித்து வருகிறார்கள். நாங்கள் இல்லையென்றால் உங்களுக்குச் சாப்பாடு கிடைக்காது. எங்களுக்காக நீங்களும் குரல் கொடுங்கள்” என்பதன் எச்சரிக்கைக் குறியீடே இது.
நெதர்லாந்தில் தனியாக மளிகைக் கடைகளே கிடையாது
இப்போராட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சம்... சூப்பர் மார்க்கெட்கள் முற்றுகைப் போராட்டம்... பொதுவாக நெதர்லாந்தில் தனித்தனியாக மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், பேக்கரி என்பதெல்லாம் கிடையாது. எல்லாம் கலந்த சிறிய மற்றும் பெரிய அளவிலான சூப்பர் மார்க்கெடடுகள்தான் செயல்படுகின்றன. பால், தயிர், பிரட் உள்ளிட்ட தங்களது அத்தியாவசிய அன்றாடத் தேவைகளுக்குச் சூப்பர் மார்கெட்களை மட்டுமே முழுதாக நம்பி உள்ளனர். எனவே, விவசாயிகள் சூப்பர் மார்க்கெட்களுக்குத் தங்களது உற்பத்திப் பொருள்கள் வழங்குவதை நிறுத்தி, நெதர்லாந்து அரசுக்கு நெருக்கடி கொடுக்க முடிவு செய்தனர். இதன் காரணமாகவே சூப்பர் மார்க்கெட்கள் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயம்தான் முதுகெலும்பு
ஏன் இந்தத் தொடர் போராட்டம்? நெதர்்லாந்து விவசாயிகளின் கோபத்துக்கு என்னதான் காரணம்? இதுகுறித்துப் பார்ப்பதற்கு முன், நெதர்லாந்து நாட்டின் பொருளாதாரத்தில் விவசாயம் எந்தளவுக்கு முக்கிய இடம் வகிக்கிறது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். நெதர்லாந்தின் மிக முக்கியத் தொழில் விவசாயம். ஏற்றுமதி மற்றும் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் கால்நடை வளர்ப்பு, பால் பண்ணைத் தொழில், மீன் வளர்ப்பு... இவற்றை உள்ளடக்கிய விவசாயத்தின் பங்களிப்பு கணிசமானது வேளாண் விளைபொருள்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு ஊக்கமும் முக்கியத்துவமும் அளிக்கும் வகையில் ஏராளமான திட்டங்களை நெதர்லாந்து அரசு செய்து வருகிறது. குறிப்பாக, பசுமைக் குடில் மற்றும் பால் பண்ணை தொழிலுக்குக் கடந்த பல ஆண்டுகளாகவே தங்கு தடை யற்ற தாராள அனுமதி வழங்கப் பட்டுவந்தது.
அதிநவீன தொழில்நுட்பங் களைப் பயன்படுத்தி, இங்கு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் விளைபொருள்களில் பெரும்பகுதி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கே ஏராள மான மக்கள், வேறு எந்த வேலைக் கும் போகாமல், தங்கள் குடும்பத் தினருடன் சேர்ந்து முழு நேர விவசாயிகளாகவே உழைத்து, வாழ்க்கை நடத்துகிறார்கள். மொத்த ஜனத்தொகையில், தனி நபர்களும், கம்பெனிகளுமாக மொத்தம் 54,000 பேர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர் எனப் புள்ளி விவரங்கள் தெரிவிக் கின்றன. விவசாயப் பொருள்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் அமெரிக்காவை அடுத்து உலகின் இரண்டாவது நாடாக நெதர்லாந்து விளங்குகிறது.

நைட்ரஜன் பிரச்னை
இந்நிலையில்தான் ஐரோப்பிய யூனியன் ஒரு முக்கியத் தகவலை சமீபத்தில் வெளியிட்டது. இதில் உறுப்பு வகிக்கும் 27 நாடுகளில் சுற்றுச்சூழல் பாதிப்புகள் காரணமாக, எந்தெந்த நாட்டின் எந்தெந்தப் பகுதிகளில் உள்ள தாவரங்கள் மற்றும் அரிய விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என ஒரு பட்டியலை வெளி யிட்டுள்ளது. அதில் மிகவும் அதிக பாதிப்புக்குள்ளாகி இருக்கும் நாடுகளில் ஒன்றாக நெதர்லாந்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நெதர்லாந்தின் சுற்றுச் சூழல் பிரச்னைக்கு மிகவும் முக்கியக் காரணமாக அங்குள்ள ஏராளமான பால் பண்ணைகள்தான் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்து விவசாயிகளில் பெரும்பகுதியினர், பயிர் உற்பத்தியுடன் பால் பண்ணை தொழிலையும் செய்து வருமானம் ஈட்டி வருகிறார்கள். இந்தப் பண்ணைகளில் வளர்க்கப்படும் கால்நடைகளின் கழிவுகளில் இருந்து வெளியேறும் வாயு, காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் கலந்து நைட்ரஜன் ஆக்சைடு உருவாகிறது எனவும், இதுதான் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது எனவும் ஐரோப்பிய யூனியன் குற்றம் சாட்டுகிறது. இதைக் கட்டுப்படுத்த வேண்டும் என நெதர்லாந்து அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

கால்நடைகளைக் குறைக்க நெதர்லாந்து எடுத்துள்ள நடவடிக்கை
கால்நடைகளின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்க வேண்டும் என நெதர்லாந்து அரசாங்கம் வலியுறுத்துகிறது. கால்நடைப் பண்ணைகள் வைத்திருக்கும் விவசாயிகள்... தங்கள் பண்ணையின் அளவைக் குறைத்துக்கொண்டாலும், பண்ணையையே மூட முன்வந்தாலும், அரசு நஷ்ட ஈடு தருவதற்குத் தயாராக உள்ளது. இதற்கெனச் சுமார் 24 பில்லியன் யூரோ அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது தற்போதைய நெதர்லாந்து அரசு.
“ஐரோப்பிய யூனியனில் உள்ள மற்ற நாடுகள் விவசாயிகள் மீது இவ்வளவு கடுமை காட்டவில்லையே! நெதர்லாந்தில் மட்டும் ஏன் இத்தனை கெடுபிடி?” என்று கேட்கிறார்கள் விவசாயிகள். மேலும் சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் தொழிற்சாலைகள் போன்ற இதர பிரிவினரைக் கட்டுப்படுத்தாமல் விவசாயிகள் மீது ஏன் பாய்கிறீர்கள்? எனவும் நெதர்லாந்து விவசாயிகள் கோபத்தோடு கேள்வி எழுப்புகிறார்கள்.
இது எந்த விதத்திலும் நியாயமில்லை
விவசாயமும் கால்நடையும்தான் எங்களுடைய வாழ்வாதாரம். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஏற்றுமதிக்கும் பெருமளவில் உதவுகிறது. ஏராளமான தொழிற்சாலைகள் மற்றும் வாகனப் போக்குவரத்தால்தான் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கிறது. ஆனால், கால்நடைகள் வளர்ப்பை மட்டும் இந்தளவுக்குக் குறி வைத்துக் குற்றம் சொல்வது எந்த விதத்திலும் நியாயமில்லை. இதில் வேறு ஏதோ திட்டமிட்ட சதி இருக்குமோ’’ என நெதர்லாந்து விவசாயிகள் சந்தேகிக்கிறார்கள்.
2030-க்குள் 50 சதவிகிதமாகக் குறைத்தே ஆக வேண்டும்
ஆனாலும், நெதர்லாந்து ஆட்சி யாளர்கள், இந்த விஷயத்தில் விடாப்பிடியாக இருக்கிறார்கள். ஐரோப்பிய யூனியனின் தீர்மானம், கோர்ட் உத்தரவுகள் இவற்றின் பேரில், 2030-ம் ஆண்டுக்குள் சுற்றுச்சூழலைக் கெடுக்கும் நைட்ரஜன் மற்றும் அமோனியா உற்பத்தியைத் தற்போதுள்ள அளவில் இருந்து 50% அளவுக்குக் குறைக்க வேண்டும். அதற்கு ஒரே வழி கால்நடைப் பண்ணைகளைக் கட்டுப்படுத்துவதுதான்” என்கிறது அரசாங்கம். இதை ஏற்காத விவசாயிகளின் போராட்டமோ நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

கடுமையான எச்சரிக்கை
“உங்கள் பிரச்னைக்காக நீங்கள் போராட்டம் நடத்துவது உங்கள் உரிமை; இதை நாங்கள் ஒடுக்க மாட்டோம்; ஆனால், சமீப காலமாகப் போராட்டக்காரர் களின் செயல்பாடுகள் எல்லை மீறிப் போவதாகவும், இதனால் பொது மக்கள் பாதிக்கப்படுவ தாகவும் நெதர்லாந்து அரசாங்கம் குற்றம் சுமத்துகிறது. மேலும் இதை ஒருபோதும் அரசு அனுமதிக்காது. கடும் நடவடிக்கைகள் எடுக்கப் படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விவசாயி களின் போராட்டம் தொடருமா, பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படுமா, விவசாயிகள் வாழ்வாதரத்துக்கு உத்தரவாதம் கிடைக்குமா? இதுதான் நெதர்லாந்து மக்களின் தற்போதைய பேசுபொருள்.
வேகக் கட்டுப்பாடு
அதிக எண்ணிக்கையிலான வாகனங்களின் அதிவேக போக்குவரத்தாலும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகக் குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இதனால் நெடுஞ்சாலைகளில் அதிகபட்ச வேகம் மணிக்கு 130 கி.மீ என்பதற்குப் பதிலாக இனிமேல் மணிக்கு 100 கிலோ மீட்டர்தான் என நெதர்லாந்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வாகனங்களின் இன்ஜின்களிலிருந்து வெளியேறும் புகை மூலமான சுற்றுச்சூழல் பாதிப்புக் கட்டுப் படுத்தப்படும் என்கிறார்கள் நெதர்லாந்து ஆட்சியாளர்கள்.
எஸ்.சந்திரமௌலி