நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

கருத்தரங்கு : கிராம சபையை நடத்துவதே உண்மையான ஜனநாயகம்!

‘ஓடந்துறை’ சண்முகம்
பிரீமியம் ஸ்டோரி
News
‘ஓடந்துறை’ சண்முகம்

ஜெ.லெவின்

கிராமம் சார்ந்த பணிகளை முன்னெடுப்பதற்குக் கிராம சபை நடத்துவது மிகவும் அவசியம். ஆனால், கடந்த அக்டோபர் 2-ம் தேதி கிராம சபை நடத்துவதை ரத்து செய்துவிட்டது தமிழக அரசு. இது ஊராட்சித் தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து தன்னாட்சி இயக்கம், தோழன் இயக்கம், மக்களின் குரல், அறப்போர் இயக்கம் மற்றும் பசுமை விகடன் சார்பில் கடந்த அக்டோபர் 10 முதல் 17-ம் தேதிவரை ‘கிராம சபை மீட்பு வாரம்’ முன்னெடுக்கப் பட்டது. அதன் தொடர்ச்சியாகத் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் ஊராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் பங்குபெற்ற ‘கிராம சபை மீட்பும் ஊராட்சிகளின் உரிமைகளும்’ என்ற இணையவழி கருத்தரங்கு கடந்த நவம்பர் 1-ம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்வுகளுக்கு ஊடக ஆதரவு வழங்கி வருகிறது பசுமை விகடன்.

விஜயானந்த்
விஜயானந்த்

நேரலை நிகழ்ச்சியில் பேசிய தோழன் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராதா கிருஷ்ணன், ‘‘மாவட்ட ஆட்சியர், தலைமைச் செயலர் எனப் பலருக்கும் கிராம சபை நடத்த வேண்டி மனு அளித்துவிட்டோம். ஓர் இயக்கமாக இதை முன்னெடுத்துச் செல்கிறோம். 5,000 ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு இதைத் தெரிவித்து, கிராம சபையைப் பேசுபொருளாக்கி இருக்கிறோம்” என்றார்.

தன்னாட்சி இயக்கத்தின் தலைவர் கே.சரவணன், “அரசியல் சாசன சட்டம் 73 மற்றும் 74-வது சட்டத் திருத்தத்தில் மூன்றாவது அரசாகப் பஞ்சாயத்துகள் உருவாக்கப்பட்டன. ஆனால், இன்று பஞ்சாயத்து முழுவதும் அரசு அதிகாரிகளிடம்தான் இருக்கிறது. கிராம சபை நடத்தும் அதிகாரம்கூட மாவட்ட ஆட்சியரிடம்தான் இருக்கிறது. மாநில சுயாட்சி பற்றிப் பேசும் தமிழக அரசு உள்ளாட் சிகளுக்கான உரிமைகளை அளிப்பதற்குத் தயாராக இல்லை என்பது கவலைக்குரிய விஷயம்” என்றார்.

ஆறாவது கேரள மாநில நிதி ஆணையத் தலைவர் மற்றும் கேரள அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் முன்னாள் செயலாளருமான எஸ்.எம்.விஜயானந்த், “கிராம சபை போன்று ஓர் அமைப்பு உலகத்தில் வேறெங்கும் இல்லை. அது நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தனிச் சிறப்பு. ஒரு பஞ்சாயத்துக்கு வீடு கட்டும் திட்டம் வருகிறது என்றால் யாருக்குக் கொடுப்பது உள்ளிட்ட விஷயங் களைக் கிராம சபை விவாதித்து முடிவெடுக்கும். அதுதான் சமூகத்தின் கடமையும் மக்களின் உரிமையும் ஆகும். ‘கொரோனா இருக்கு; கிராம சபை வேண்டாம்’ என்று மக்கள் சொல்லலாம். ஆனால், அரசுகள் இதில் அவ்வளவு அவசரம் காட்டக் கூடாது. ஒவ்வொரு கிராமத்துக்கும் சில பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் இருக்கின்றன. அதன்படி அவர்கள் விவாதித்து முடிவுகளை எடுப்பார்கள். அதை என் அனுபவத்திலும் கண்டிருக்கிறேன். கிராம சபை என்பது ஜனநாயகத்தின் திருவிழா. மக்களின் பங்களிப்பு. கிராம சபை நாளில் எடுக்கக்கூடிய தீர்மானத்தைத்தான் அதிகாரிகள் கேட்பார்கள். அதனால் அதை நடத்துவதே உண்மையான ஜனநாயகம்” என்றார்.

‘ஓடந்துறை’ சண்முகம்
‘ஓடந்துறை’ சண்முகம்

முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் ‘ஓடந்துறை’ சண்முகம் ‘‘கிராம சபை என்பது உள்ளாட்சியின் ஆணிவேர். ஆணிவேர் இல்லையென்றால் அரசு என்ற மரங்கள் இல்லை. ஊராட்சியில் ஊழல் இல்லாமல் இருந்ததால்தான் நிர்வாகத்தைச் சிறப்பாக நடத்த முடியும். ஊழல் நுழைந்துவிட்டால் நிர்வாகம் செய்ய முடியாது என்பதைப் பஞ்சாயத்துத் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். கிராமங்கள் நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்க முடியும்” என்றார்.

தர்மபுரி மாவட்டம், சிட்லிங்கி ஊராட்சி மன்றத் தலைவர் மாதேஸ்வரி மஞ்சுநாத், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் முகமது ஜியாவுதீன், சதீஸ்குமார் ஆகியோர் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். நிகழ்வைத் தன்னாட்சி இயக்கத்தின் பொதுச் செயலாளர் நந்தகுமார் ஒருங்கிணைத்தார்.

இந்த நிகழ்வைப் பசுமை விகடன் முகநூல் பக்கத்தில் பார்க்கலாம்.

லிங்க் https://www.facebook.com/PasumaiVikatan/videos/353126812641086/

கருத்தரங்கு : கிராம சபையை நடத்துவதே உண்மையான ஜனநாயகம்!

நிகழ்வு குறித்த வீடியோவைக் காண ஸ்கேன் செய்யவும்.

மாதிரி கிராம ஊராட்சி மன்றத் தீர்மானம்

கிராம சபை குறித்து அடுத்தகட்ட செயல்திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டன. இதில் கிராம சபை நடத்தத் தயாராக இருக்கும் ஊராட்சிகள், ஊராட்சி மன்றத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி மாவட்ட ஆட்சியருக்குக் கோரிக்கை மனு அனுப்புவது என ஆலோசிக்கப்பட்டது.

அதன்படி மாதிரி கிராம ஊராட்சி மன்றத் தீர்மானம் மற்றும் மாவட்ட ஆட்சியருக்குக்கான கடிதம் ஆகியவற்றை இந்த இணைப்பின் மூலமோ, க்யூ.ஆர் கோடை ஸ்கேன் செய்தோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கருத்தரங்கு : கிராம சபையை நடத்துவதே உண்மையான ஜனநாயகம்!

லிங்க் https://drive.google.com/drive/folders/1qyjkhOsLJDowI2jSEm7ud4_W2YLhk8XC?usp=sharing

எந்தெந்த ஊராட்சிகளில் இதைச் சாத்தியப்படுத்த முடியுமோ, அந்தந்த ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட ஆட்சியருக்குக் கோரிக்கையைப் பதிவுத் தபாலாக அனுப்ப வேண்டுகிறோம். மாவட்ட ஆட்சியருக்குத் தீர்மானத்துடன் அனுப்பிய கடிதத்தின் நகலையும், பதிவுத் தபாலின் ரசீது நகலையும் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.

தன்னாட்சி, 69, அங்கப்ப நாயக்கன் தெரு, சென்னை - 600001.

தொடர்புக்கு: 94457 00758