
அரசு, அலட்சியம், அநியாயம்... தோலுரிக்கலாம் வாங்க!
அநியாயமா இருக்கே? இதை யார்கிட்டப் போய்ச் சொல்றது’ எனப் பல நேரங்களில் புலம்பும்படியான நிகழ்வுகளை நாமும் நம்முடைய சுற்றமும் நட்பும் அடிக்கடி சந்தித்தபடிதான் இருக்கிறோம். பட்டா மாறுதல், நில அளவை, பயிர்க்கடன், மானியம், சலுகைகள், கருவிகள், பாசனம் என்று நம்முடைய வேளாண்மை சார்ந்த விஷயங்களில் ஆரம்பித்துப் பல தளங்களிலும் தொல்லைகளை அனுபவித்துதான் வருகிறோம். குறிப்பாக, அரசாங்க அதிகாரிகள், விதை வியாபாரிகள், ஒப்பந்தப் பண்ணைய நிறுவனத்தினர், சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கும் நபர்கள் என்று விதிமுறைகளை மீறி செயல்படுவது தொடர்கதையாகவே இருக்கிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நம் கையில் இருக்கும் மொபைல் போன்தான் ஆயுதம். ஆம்... உங்கள் பார்வையில் படும் அலட்சியங்கள், அநியாயங்கள் என்று அனைத்தையும் படம்பிடியுங்கள். அதேபோல உங்கள் கவனத்துக்கு வரும் தகவல்கள், சந்திக்கும் அனுபவங்களையும் படம் பிடியுங்கள். அவை அனைத்தையும் விளக்கத்துடன் இங்கே நீங்கள் பதிவு செய்யலாம். உங்கள் பெயர், முகவரி மற்றும் அடையாளங்கள் வெளியிடத் தேவையில்லை என்றால் அதையும் அதிலேயே குறிப்பிடுங்கள். உங்களின் பதிவுகளை ஆசிரியர் குழு பரிசீலித்து உரிய வகையில் பசுமை விகடன் இதழ், இணையதளம், பசுமை விகடன் ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற இடங்களில் பதிவுசெய்யும். வாருங்கள் அநியாயக்காரர்களைத் தோலுரிப்போம்...
விதை தான் விவசாயத்தின் உயிர். அதில் சிறு பாதிப்பு என்றாலும், விவசாயிகளின் பல மாத உழைப்பும் முதலீடும் வீணாகிவிடும். வாழ்வாதாரம் கைவிட்டுப் போய்விடும். இதனால்தான் நம் விவசாயிகள் காலம் காலமாக, விதையை தெய்வமாகவே போற்றி வருகிறார்கள். தரமான, நன்கு முளைப்புத்திறன் மிக்க, கலப்பு இல்லாத... அந்தந்த மண்ணுக்கும், பருவச் சூழலுக்கும் ஏற்ற விதைகள் கிடைத்தால்தான் தரமான மகசூல் எடுக்க முடியும். இதன் அவசியத்தை உணர்ந்ததால்தான் தமிழக வேளாண்மைத்துறையில் விதைகளுக்கு என்றே பல பிரிவுகள் செயல்படுகின்றன. அதற்காகப் பல கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. விவசாயிகளுக்குத் தரமான விதையைக் கிடைக்கச் செய்வதும், அதில் ஏதேனும் குளறுபடிகள் நடைபெறாமல் தடுப்பதும் தமிழக வேளாண்மைத்துறையின் தலையாயக் கடமை. அதனால்தான் விதைச் சட்டம் உருவாக்கப்பட்டது.
ஆனால் வேளாண்துறையில் தலை விரித்தாடும் அலட்சியத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவது தொடர்கதையாக இருக்கிறது. உச்சக்கட்ட கொடுமை என்ன வென்றால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்காதது. அதே நேரம் தவறு செய்யும் தனியார் விதை நிறுவனங்கள், சட்டரீதியாகத் தண்டிக்கப்படுவதும் இல்லை. இதற்காக விதை உற்பத்தி மற்றும் விதை வர்த்தகத்தைக் கண்காணிக்கும் பொறுப்பில் இருக்கக்கூடிய அலுவலர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, பாதிக்கப்பட்ட விவசாயிகள் மீதே பழிப்போட்டு விட்டுக் கோப்புகளை மூட்டைக்கட்டி விடுவது அநியாயத்தின் உச்சம்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் தாலுகா, இளனாங்கூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அசோக்குமார். விதைநெல் குளறுபடியால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்துத் தனது ஆதங்கத்தை இங்கே பதிவு செய்கிறார். “எங்க பகுதியில சம்பாப் பட்டத்துல ஒரு போகம் நெல் சாகுபடி செஞ்சிட்டு, அதோட தாள்ல உளுந்து விதைக்குறது வழக்கம். அடுத்தடுத்து இந்த ரெண்டையும் செஞ்சாதான், விவசாயிகள் ஓரளவுக்குக் குடும்பச் செலவுகளைச் சமாளிச்சி வாழ்க்கை ஓட்ட முடியும். சம்பாப் பட்டத்துல பொன்மணிங்கற ரகம் சாகுபடி செய்றது வழக்கம். அதோட வயசு 150 நாள்கள். ஆவணி மாசம், ரெண்டு அல்லது மூணாவது வாரம், எங்க பகுதியில இருக்கும் வடக்கு ராஜன் வாய்க்கால்ல தண்ணீர் வந்தால்தான் இந்த ரகம் சாத்தியம். காரணம் இது நீண்டகால ரகமா இருக்குறதுனால, பொங்கல் சமயத்துல அறுவடையை முடிச்சிட்டு, உளுந்து விதைக்க முடியும். ஆனால், இந்த வருஷம், புரட்டாசி 15 தேதியில தான் வடக்கு ராஜன் வாய்க்கால்ல தண்ணீர் வந்துச்சு.
இதனால் பொன்மணி நெல் ரகம் சாகுபடி செய்ய முடியல. அதனால சம்பாப் பட்டத்துக்கு ஏற்ற அதேமயம் குறைந்த வயதுடைய நெல் ரகம் சாகுபடி செய்ய வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்பட்டுச்சு. கடந்த காலங்கள்ல இதுமாதிரி பிரச்னை வந்தப்ப, 120 நாள்கள் வயதுடைய குறுகிய கால ரகமான டி.கே.எம்-13 சாகுபடி செஞ்சிருக்கோம். ஆனால், அதை விற்பனை செய்றது ரொம்ப கஷ்டம்.
அலைபேசியை எடுங்க... அத்தனையும் படம் புடிங்க... அப்படியே அனுப்புங்க... வாட்ஸ் அப் எண்: 99400 22128
இந்தப் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க மாட்டாங்க. தனியார் வியாபாரிகள், டி.கே.எம்-13 ரகத்தை வாங்க மாட்டாங்க. அப்படியே வாங்கினாலும் குறைவான விலைதான் கொடுப்பாங்க. இதுமாதிரியான பிரச்னையினால, இந்த வருஷம் சம்பாப் பட்டத்துல ஆர்.என்.ஆர்-15048 என்ற நெல் ரகத்தைச் சாகுபடி செஞ்சோம்.

கடந்த சில ஆண்டுகளா புவனகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் சம்பாப் பட்டத்துல இந்த நெல் ரகத்தைச் சாகுபடி செஞ்சு, நல்ல மகசூல் எடுத்திருக்காங்க. இது சம்பாப் பட்டத்துக்கு ரொம்ப நல்லா விளைச்சல் கொடுக்கும்னு, விதைநெல் கடைக்காரங்களும் சொன்னாங்க. இதனாலதான் நம்பிக்கையோட இந்த ரகத்தைச் சாகுபடி செஞ்சோம். நான் 5 ஏக்கர்ல இதைப் பயிர் செஞ்சேன். இளனாங்கூர், பூர்த்தாங்குடி, கீரப்பாளையம் உள்ளிட்ட கிராமங்கள்ல பல விவசாயிகள் இதைச் சாகுபடி செஞ்சாங்க. விதையில என்ன கோளாறோ தெரியல. ரொம்பச் சீக்கிரமா பூப்பூத்துடுச்சு. 60 நாள்ல பூப்பூக்க வேண்டிய பயிர், ரொம்ப முன்னதா 30 நாள்லயே பூத்துடுச்சு. இதனால் கதிர்கள் ஒழுங்கா வரல.
எனக்கு ஏக்கருக்கு 5 மூட்டைதான் மகசூல் கிடைச்சது. இன்னும் பல விவசாயிகளுக்கு இந்தளவுகூட மகசூல் கிடைக்கல. விளைஞ்ச நெல்லு கறுப்பா இருக்கு. இது தொடர்பா வேளாண்மைத்துறை அதிகாரிகள்கிட்ட புகார் தெரிவிச்சோம். விதை ஆய்வு அலுவலர்கள் இங்க வந்து விவசாயிகள்கிட்ட நேரடியா விசாரணை செஞ்சிட்டுப் போனாங்க. எங்களுக்குக் கண்டிப்பா நியாயம் கிடைக்கும்னு ரொம்ப நம்பிக்கையா இருந்தோம்.
ஆனா, அவங்க வேளாண்மைத்துறை இணை இயக்குநருக்குக் கொடுத்திருந்த அறிக்கையைப் பார்த்து அதிர்ச்சி அடைஞ்சிட்டோம். ஆர்.என்.ஆர்-15048 ரக நெல், சம்பாப் பட்டத்துக்கு உரியது அல்ல. காரிப் மற்றும் ரபி பட்டத்துக்கு உகந்தது. ஆனால், விவசாயிகள் சம்பாப் பட்டத்தில் சாகுபடி செய்துள்ளார்கள். இதற்கான நாற்றுகளை 18-20 நாள்களுக்குள் நடவு செய்திருக்க வேண்டும்.

ஆனால், 30 நாளில் இயந்திரம் மூலம் நடவு செய்துள்ளார்கள். இதனால் ஏற்பட்ட அதிர்வுகளால் முன் கூட்டியே பூத்துவிட்டது’ இப்படி என்னென்னமோ காரணங்களை அறிக்கையில சொல்றாங்க. இதெல்லாம் உண்மையில்ல. யாரையோ காப்பாத்த, பாதிக்கப்பட்ட எங்களையே பலிகடா ஆக்குறாங்க. இது சம்பாப் பட்டத்துக்கு உரியது இல்லைனு சொன்னால், இதை ஏன் இந்த சீஸன்ல விற்பனை செய்ய, விதைநெல் கடைக்காரங்களை, வேளாண்மைத்துறை அனுமதிச்சது? காலாவதி தேதி, விதைப்புப் பருவம் என எதுவுமே இல்லை.இப்படி இல்லாததே விதிமீறல் இல்லையா? இதைக் கண்காணிச்சி தடுக்க வேண்டியது வேளாண்மைத்துறையோட கடமைதானே! இதுக்குதானே இந்தத் துறை செயல்படுது. இது காரிப், ரபி பட்டத்துக்குதான் ஏற்றதுனு விதை ஆய்வு அலுவலர்கள் சொல்றாங்க. தமிழ்நாட்டு விவசாயிங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம், குறுவை, சம்பாதான். காரிப், ரபியெல்லாம் தெரியாது.
உண்மையைச் சொல்லணும்னா, வேளாண்மைத்துறை அனுமதிச்சதுனால தான், கடலூர் மாவட்டத்துல மட்டுமே சம்பாப் பட்டத்துல இந்த நெல் ரகம், 2,000 பைகள் விற்பனை செய்யப்பட்டிருக்கு. 30 நாள்கள் வயசுல இயந்திரம் மூலம் நடவு செஞ்சதுனாலதான் அதிர்வுல, சீக்கிரத்துல பூ பூத்துடுச்சினு சொல்றது பொய். நான் கையாலதான் நடவு செஞ்சேன். எங்க பகுதி களிமண் பூமி. நாள்களை மட்டும் கணக்குல வெச்சிக்கிட்டு நாத்து நடவு செஞ்சிட முடியாது. ஓரளவுக்காவது நாத்துகள் வளர்ந்த பிறகுதான் நடவு செய்ய முடியும்.
ஒரு சில நாள்கள் தள்ளிப்போறதுனால, இந்தளவுக்கெல்லாம் பெருசா பாதிப்பு வந்துடாது. விதையில ஏதோ குளறுபடி நடந்திருக்கு. இவ்வளவுக்கும் நாங்க வாங்கின விதைநெல், வேளாண்மைத்துறையினால் ஆய்வு செய்யப்பட்டு, சான்றளிக்கப்பட்ட விதைநெல். இதுல தவறு செஞ்ச தனியார் விதை நிறுவனம், வேளாண்மைத்துறை அதிகாரிகள் எல்லாருமே சட்டப்படி தண்டிக்கப்படணும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 50,000 ரூபாய் இழப்பீடு தரணும்’’ என்றார் ஆதங்கத்துடன்.
“சம்பாப் பட்டத்திற்கு உரியதுதான்!”
கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் விதை விற்கும் கடைகள் பலவற்றிலும் இந்த விதைநெல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவற்றில் ஒன்றுதான் சிவசக்தி அக்ரோ ஏஜென்ஸி. இதன் நிர்வாகி கலைச்செல்வனிடம் பேசியபோது ‘’இது சம்பாப் பட்டத்துக்குரிய ரகம்தான். இந்த வருஷம் மழையினால, மற்ற ரகங்களுமே மகசூல் குறைஞ்சிருக்கு, ஆர்.என்.ஆர்-15048 ரக நெல் கடந்த நாலஞ்சு வருஷமா நடைமுறையில இருக்கு. விவசாயிகள் கேட்டதுனாலதான் இந்த ரகத்தை வரவழைச்சு கொடுத்தோம். இதோட சாகுபடி காலம் 110-120 நாள்கள். 20-25 நாள்களுக்குள்ளார நாற்று நடவு செய்யணும். ஆனா சில விவசாயிகள், 35-40 நாள்ல நடவு செஞ்சிருக்காங்க. அதனால்தான் சீக்கிரத்துல பூ வந்துடுச்சினு சொல்றாங்க” என தெரிவித்தார். விதை விற்பனை செய்த கடைக்காரர்களே, ‘இது சம்பாப் பட்டத்திற்கு உரியதுதான்’ என்கிறார்கள். ஆனால் வேளாண்மைத்துறையின் விதை ஆய்வு அதிகாரிகளோ, ‘இது சம்பாப் பட்டத்திற்கு உரியதல்ல’ என முன்னுக்குப் பின் முரணாக அறிக்கை கொடுத்துள்ளார்கள்.

“நடவடிக்கை எடுக்கிறேன்!”
இது தொடர்பாகத் தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் பேசினோம். அனைத்துத் தகவல்களையும் பொறுமையாகக் கேட்டுக் குறிப்பெடுத்துக் கொண்டவர், “உடனடியாக விசாரணை நடத்தி, கண்டிப்பாக நடவடிக்கை எடுக்குறேன்” என உறுதியளித்தார். அடுத்த சில நிமிடங்களில் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைத்துறையின் விதைச் சான்று இயக்குநர் சுப்பையா நம்மைத் தொடர்புகொண்டு, “இதைப் பற்றி விசாரிக்க உடனடியா ஒரு குழு அமைக்குறோம்’’ என்றார். ஆனாலும், நாம் விடவில்லை. “ஏற்கெனவே கடலூர்ல உள்ள வேளாண்மைத்துறை அலுவலர்கள் பெயரளவுக்கு விசாரணை நடத்திட்டு, விவசாயிகள் மேலதான் தவறுனு வேளாண் இணை இயக்குநருக்குப் பொய்யான அறிக்கை கொடுத்துட்டாங்க. அதுமாதிரி மறுபடியும் நடந்துடக் கூடாது. விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்குற மாதிரி ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுங்க’’ என நாம் அன்பான குரலில் வேண்டுகோள் வைத்தோம். அதற்கு உறுதியளித்துள்ளார்கள்.

புகார் மனு இன்னும் வந்து சேரவில்லை!
பயிர்க்கடன் கேட்கும் விவசாயிகளுக்கு ரசாயன உரங்களையும் வாங்க சொல்லி கூட்டுறவு வங்கிகளில் கட்டாயப்படுத்துவதாகக் கடந்த இதழில் இயற்கை விவசாயி நல்லா கவுண்டர் தன் ஆதங்கத்தைப் பதிவு செய்திருந்தார். இதுதொடர்பாகத் தனக்கு புகார் வந்தால் நடவடிக்கை எடுப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்திருந்தார். உடனடியாக புகார் மனு அனுப்புவது தொடர்பாக நல்லா கவுண்டரிடம் தெரிவித்தோம். அவரும் புகார் மனுவைக் கூட்டுறவு வங்கி உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சருக்குப் பதிவு தபாலில் அனுப்பினார்.

இந்நிலையில் அந்த புகார் மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கேட்டோம். “நீங்கள் சொல்லும் புகார் மனு எனது கைக்கு இன்னும் வந்து சேரவில்லை. பசுமை விகடன் சார்பாக அந்தப் புகார் மனுவை வாங்கிக் கொடுங்கள். விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கிறேன்” என்றார்.