
அடுத்தகட்டம்
ஆறு மற்றும் வாய்க்கால்கள் முறையாகத் தூர்வாரப்பட்டால் தான், விவசாயிகளின் விளை நிலங்களுக்குத் தேவையான அளவு தண்ணீர் வந்து சேரும்... வெற்றிகரமாகப் பயிர் சாகுபடி செய்ய முடியும். இதனால்தான் ஆண்டுதோறும் தமிழக அரசு தூர்வாரும் பணிக்காகப் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்குகிறது. ஆனால், இப்பணிகள் பெரும்பாலும் நேர்மையாக நடைபெறுவதில்லை. அதனால் பாசனத்துக்குத் தண்ணீர் வந்து சேராமல், விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள்.
இதுகுறித்துப் பசுமை விகடன், விகடன் இணையதளத்தில் விவசாயிகளின் ஆதங்கங்களைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்து வருகிறோம். இந்நிலையில் இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆறுகள், வாய்க்கால்களைத் தூர்வாரும் பணிக்காகத் தமிழக அரசு 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதோடு, இப்பணிகளைக் கண்காணிக்க 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமனம் செய்தது. ‘இதனால் மட்டுமே முறைகேடுகளைத் தடுத்துவிட முடியாது, அந்தந்தப் பகுதிகளில் உள்ள விவசாயிகளைக் கொண்ட கண்காணிப்புக் குழு அமைத்தால் தான், தூர்வாரும் பணி ஓரளவுக்காவது முறையாக நடைபெறும்’ எனப் பசுமை விகடன் சார்பில் தமிழக அரசுக்குப் பரிந்துரை வழங்கினோம். இது தொடர்பாகத் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ்ஸுக்குக் கடிதம் அனுப்பினோம். இந்நிலையில்தான் தூர்வாரும் பணிகள் நடைபெறும் பகுதிகளில் உள்ள விவசாயிகளை உள்ளடக்கிய உழவர் குழு அமைக்கக் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா உத்தரவிட்டுள்ளார்.
அந்தந்தக் கிராமங்களில் உள்ள உழவர்களையும் அதிகாரிகளையும் உள்ளடக்கிய குழுக்கள் அமைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவு டெல்டா விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
உழவர் குழு உறுதுணையாக இருக்கும்
இது தொடர்பாகத் தமிழகப் பொதுப் பணித்துறையின் தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தியிடம் பேசினோம். ‘‘பசுமை விகடன் எடுத்த முயற்சிக்குப் பாராட்டுகள். கண்டிப்பாக, இது பலன் கொடுக்கும். தூர்வாரும் பணி சிறப்பாக நடைபெற்று, விவசாயிகள் முழுமையாகப் பலன் அடைய வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். இப்பணிகளில் குறைபாடுகள் இருந்தால், அதைச் சரிசெய்து உடனடியாக மேம்படுத்த, தற்போது புதிதாக அமைக்கவுள்ள உழவர் குழு உறுதுணையாக இருக்கும். தூர்வாரும் பணி நடைபெறும் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் உழவர் குழு அமைக்கப்படும். இக்குழுவில் அந்தந்த கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள் மூன்று பேர் இடம்பெறுவார்கள். பொதுப்பணித்துறை, வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை அலுவலர்களும், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளும் இக்குழுவில் இடம்பெறுவார்கள். தங்கள் பகுதியில் நடைபெறும் தூர்வாரும் பணியை உழவர் குழு தொடர்ச்சியாகக் கண்காணிக்கும். பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே இக்குழுவில் உள்ள விவசாயிகள், அதில் ஏதேனும் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டினால், உடனடியாக அதைச் சரி செய்ய, கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்’’ என்றார்.

தமிழக அரசுக்கு நன்றி
அரசின் இந்தச் செயல் விவசாயிகள் மத்தியில் மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளது. இது தொடர்பாகப் பேசிய காவிரி டெல்டா பாசன விவசாயச் சங்கங்களின் கூட்ட மைப்பின் தலைவர் இளங்கீரன், ‘‘விவசாயிகளோட குரலாகப் பசுமை விகடன் தொடர்ச்சியாக ஒலிச்சிக்கிட்டே இருக்கு. அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே பசுமை விகடன் பாலமா இருந்து, விவசாயிகளுக்கு நிறைய நன்மை களைச் செஞ்சிக்கிட்டு இருக்கு.
தூர்வாரும் பணியில முறைகேடுகள் நடக்காமல் இருக்க, விவசாயிகள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்கப் பரிந்துரை செஞ்சதுக்குப் பாராட்டுகள். இதை ஏற்று நடைமுறைப் படுத்திய தமிழக அரசுக்கு விவசாயிகளின் சார்பில் நன்றி தெரிவிச்சிக்குறோம். இனிமேலாவது தூர்வாரும் பணி ஒழுங்கா நடக்கும்னு நம்புறோம்’’ என்றார்.
கட்சி சார்பற்றவர்களை நியமிக்க வேண்டும்
தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் துணைச் செயலாளர் சுகுமாறன், ‘‘உழவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழு அமைப்பது பாராட்டுக் குரியது. ஆனால், இக்குழுவில் விவசாயிகள் என்ற போர்வையில் அரசியல்வாதிகள், அரசியல் சார்புடையவர்களை எக்காரணம் கொண்டும் நியமித்துவிடக் கூடாது. கட்சி சார்பற்ற உண்மையான விவசாயிகள் நியமிக்கப்படவில்லை யென்றால், இக்குழுவும் ஊழலுக்குத்தான் வழி வகுக்கும்.

பணி நடைபெறும் இடங்களில் உடனடியாகத் தகவல் பலகை வைக்கப்பட வேண்டும். அதில், கண்காணிப்புக் குழுவில் இடம் பெற்றுள்ள விவசாயிகள் மற்றும் அதிகாரிகளின் பெயர், தொலைபேசி எண்களைக் குறிப்பிட வேண்டும். தூர்வாரும் பணியில் ஏதேனும் விமர்சனங்கள் இருந்தால் அப்பகுதியில் உள்ள மற்ற விவசாயிகள் இக்குழுவினரை தொடர்புகொள்ள வசதியாக இருக்கும்’’ என்றார்.
புதிய ஆட்சி மாற்றம், கொரோனா இரண்டாம் அலை தீவிரம் போன்ற காரணங்களால், இந்த ஆண்டு மிகவும் தாமதமாகத் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது. இந்நிலையில் பசுமை விகடனின் பரிந்துரையை ஏற்று விவசாயிகள் அடங்கிய கண்காணிப்புக் குழு அமைக்கப் பட்டுள்ளது. வாய்க்கால்களுக்குத் தண்ணீர் வருவதற்குள் தூர்வாரும் பணி முடிக்கப்பட வேண்டும். குறுகிய நாள்கள்தான் உள்ளன. உழவர் குழு அமைக்கப்பட்டதன் பலன்களை இனிவரும் ஆண்டுகளில்தான் கண்கூடாக, முழுமையாக உணர முடியும்.
‘‘இக்குழுவில் விவசாயிகள் என்ற போர்வையில் அரசியல்வாதிகள், அரசியல் சார்புடையவர்களை எக்காரணம் கொண்டும் நியமித்துவிடக் கூடாது.’’
உழவர் குழு அமைக்கப்பட்டாலும்கூட, நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு நிறைவாக இப்பணிகள் நடைபெறாமலும் போகலாம். இனிவரும் ஆண்டுகளில் இதற்கான பலன்கள் கிடைக்க, விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரும் களத்தில் இறங்கி குரல் கொடுக்க வேண்டும். இது நம் அனைவரின் கடமையாகும்.
தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின், நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கு உழவர்கள் சார்பில் நன்றி!