அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் நடைபெற்ற வடகிழக்கு கவுன்சிலின் 70-வது மாநாட்டுக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார். இதற்காக 3 நாள் பயணமாகக் கடந்த 7-ம் தேதி அஸ்ஸாம் மாநிலத்துக்கு வந்திருந்தார்.

வடகிழக்கு பிராந்தியத்தின் கலாசாரம், சுற்றுலா மற்றும் மேம்பாட்டுக்கான மத்திய அமைச்சர், ஜி.கிஷன் ரெட்டி மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் கூட்டுறவு அமைச்சகத்தின் இணை அமைச்சர், பி.எல்.வர்மா, வடகிழக்கு மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் முதலமைச்சர்கள், மத்திய மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு துறைகளின் மூத்த அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
வடகிழக்கு கவுன்சிலின் 70-வது முழுமையான குழுக் கூட்டத்தில் அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
``பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, இயற்கை விவசாயம் மற்றும் டிஜிட்டல் விவசாயத்துக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. அமுல் மற்றும் 5 கூட்டுறவு சங்கங்களை இணைத்து பல மாநில கூட்டுறவு சங்கம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இயற்கை பொருள்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் பெற்ற பின் தயாரிப்புகளின் ஏற்றுமதியை பல மாநில கூட்டுறவு சங்கங்கள் உறுதி செய்யும், இதனால் லாபம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்குச் செல்லும்.

வடகிழக்கின் வளர்ச்சிப் பாதையில் பல தசாப்தங்களாக மூன்று பெரிய தடைகள் இருந்தன - வன்முறை மற்றும் தீவிரவாத குழுக்களால் அமைதியின்மை, வடகிழக்கில் ரயில், சாலை மற்றும் விமான இணைப்பு இல்லாதது. முந்தைய அரசுகளிடம் வடகிழக்கு வளர்ச்சியில் உந்துதல் இல்லாதது. முந்தைய அரசுகள் வடகிழக்கு வளர்ச்சிக்கு ஒருபோதும் முன்னுரிமை வழங்கவில்லை. ஆனால், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், இந்திய அரசு கடந்த 8 ஆண்டுகளில் வடகிழக்கில் அமைதியை ஏற்படுத்தவும், அனைத்து இணைப்புகளையும் அதிகரிக்கவும், இப்பகுதியின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கவும் பல முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
வெள்ளக் கட்டுப்பாடு, நீர்ப்பாசனம், சுற்றுலா, காடு வளர்ப்பு, விவசாயம் ஆகியவற்றில் வடகிழக்கு நிலப்பயன்பாட்டுக் கவுன்சிலின் தரவுகளை முழுமையாகப் பயன்படுத்தி பயனடையுமாறு வடகிழக்கு மாநில முதலமைச்சர்களை அமித் ஷா வலியுறுத்தினார். வடகிழக்கு மாநிலங்களின் முதலமைச்சர்கள் தங்கள் மாநிலங்களில் வடகிழக்கு நிலப்பயன்பாட்டுக் கவுன்சிலுக்கு ஒரு தொடர்பு அதிகாரியை நியமிக்க வேண்டும், இதனால் இந்தத் தளத்தை அதிகபட்சமாகவும் சிறப்பாகவும் பயன்படுத்த முடியும்'' என்று அவர் கூறினார்.

முன்னதாக, காங்டாக்கில் நடைபெற்ற வடகிழக்கு கூட்டுறவு பால் பண்ணை மாநாட்டில் அமித் ஷா பேசுகையில், ``அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டில் பால் உற்பத்தியை இரட்டிப்பாக்க வேண்டும். இது உள்நாட்டு சந்தையில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் உள்ள பால் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும். அதிலும் பூட்டான், நேபாளம், பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடுகளுக்கு பால்விநியோகம் செய்ய பெரிய வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. எனவே, இதைப் பயன்படுத்திக்கொண்டு உலக சந்தையை ஆராய, அரசு பல மாநில கூட்டுறவு சங்கங்களை நிறுவுகிறது. இது ஏற்றுமதி நிறுவனமாகச் செயல்படுகிறது” என்று தெரிவித்தார்.