மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்திருப்பதை, நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடிவருகின்றனர்.

கடந்த ஓராண்டாக பஞ்சாப்-ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த இந்திய விவசாயிகள் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிவருகின்றனர். இந்தப் போராட்டத்தில் இதுவரை 750-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்திருப்பதாக விவசாய சங்கங்கள் சார்பாகச் சொல்லப்படுகிறது. இந்த மாதம் நவம்பர் 26-ம் தேதியுடன் இந்தப் போராட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவடையவிருக்கும் நிலையில், மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்றிருப்பது, விவசாயிகள் நடத்திய சமரசமற்ற தொடர் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்து தேசிய, மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்டிருக்கும் கருத்துகளைப் பார்ப்போம்.
தமிழகத் தலைவர்களின் கருத்துகள்:
தமிழக முதல்வர், மு.க.ஸ்டாலின்:

``மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப்போவதாக பிரதமர் அவர்கள் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். இது முழுக்க முழுக்க உழவர்களின் அறப்போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாகும். மக்களாட்சியில் மக்களின் எண்ணங்கள்தான் மதிக்கப்பட வேண்டும். இதுவே வரலாறு சொல்லும் பாடம். உழவர் பக்கம் நின்று போராடியதும், வேளாண் விரோதச் சட்டங்களுக்கு எதிராக கழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதும் நாம் பெருமைகொள்ளத்தக்கதாகும். அறவழிப் போராட்டத்தின் வழியே உரிமைகளை வென்றெடுத்து, இந்தியா காந்தியின் மண் என்று உழவர்கள் உலகுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.”
அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர், ஓ.பி.எஸ்:

``இந்தியப் பிரதமருக்கு உள்ள பெருந்தன்மையும், விவசாயிகளின்பால் அவருக்கு உள்ள அக்கறையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளின் நண்பன் என்பது வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமரின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இதற்காக அதிமுக சார்பில் பிரதமருக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.''
பா.ம.க நிறுவனர், ராமதாஸ்:
``வேளாண் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். உழவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக உழவர்கள் ஓராண்டாக கடுங்குளிர் உள்ளிட்ட கொடுமைகளை அனுபவித்து போராடினார்கள்.150-க்கும் மேற்பட்ட உழவர்களை இழந்தனர். ஆனாலும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து சாதித்துள்ளனர். இது உழவர்களுக்குக் கிடைத்த பெரும் வெற்றி. உழவர்கள் முன்னேறினால்தான் நாடு முன்னேறும். இதைக் கருத்தில் கொண்டு கோதாவரி - காவிரி உள்ளிட்ட நதிநீர் இணைப்புகள், பாசனத் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும். விளைபொருள் கட்டமைப்புகளை வலுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.”
வி.சி.க தலைவர், தொல்.திருமாவளவன்:

``விவசாயப் பெருங்குடி மக்களின் உறுதிமிக்க போராட்டத்துக்கும், களப்பலியான விவசாயிகளின் அளப்பரிய ஈகங்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி! ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்! உறுதி தளராமல் நம்பிக்கையுடன் தொடர்ந்து போராடினால் வெற்றிபெற முடியும் என்பதற்கு விவசாயிகளின் போராட்டம் ஒரு சான்றாகியுள்ளது! இது காலம் கடந்த முடிவு! ஓராண்டுக்காலமாக நடந்த விவசாயிகளின் தொடர் போராட்டங்களால் நேர்ந்த அனைத்து பாதிப்புகளுக்கும் மோடி அரசே பொறுப்பேற்க வேண்டும்! விவசாயிகள் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்!"
நா.த.க ஒருங்கிணைப்பாளர், சீமான்:

``மக்கள் புரட்சிக்கு முன்னால் எத்தகைய வலிமைபெற்ற அரசும் வீழ்ந்தே தீரும் என்பதற்கு மற்றுமொரு வரலாற்றுச் சான்றாக வேளாண் சட்டங்களுக்கெதிரான விவசாயிகளின் போராட்டம் அமைந்துள்ளது. மக்களின் திரட்சியே மாற்றத்துக்கான புரட்சி என்பதை வரலாறு மீண்டும் மெய்ப்பித்துள்ளது."
அ.ம.மு.க ஒருங்கிணைப்பாளர், டி.டி.வி.தினகரன்:

``குளிர், வெயில், மழை என எதையும் பொருட்படுத்தாமல் உயிர்த் தியாகங்கள் செய்து விவசாயிகள் நடத்திய அறவழிப் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி இது! இதற்காக ஓராண்டுக்காலமாக போராடிய விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும். இதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, எதிர்காலத்தில் வேளாண்மை சார்ந்த முடிவுகளை எடுக்கும்போது விவசாயிகளை முழுமையாக கலந்தாலோசித்து, அவர்களின் தேவைக்கேற்ப ஆட்சியாளர்கள் செயல்பட வேண்டும். மேலும், தமிழக விவசாயிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ள மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ போன்ற விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்தப்போவதில்லை என்ற உறுதியான முடிவையும் மத்திய அரசு எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.’’
தமிழக காங்கிரஸ் தலைவர், கே.எஸ்.அழகிரி:

``வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுகிற முடிவு ஒரு சந்தர்ப்பவாத நடவடிக்கையாகும். இதில் அரசியல் உள்நோக்கத்துடன் பிரதமர் மோடி செயல்பட்டுள்ளார். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுகிற முடிவை எடுக்கக் காரணமாக இருந்த விவசாய சங்கங்களுக்கும், அவர்களது கோரிக்கையை தேசிய அளவில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்த ராகுல் காந்திக்கும் கிடைத்த வெற்றியாகத்தான் இதைக் கருத வேண்டும்."
சிபி(எம்) மாநிலச் செயலாளர், கே.பாலகிருஷ்ணன்:
``வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகளுக்குக் கிடைத்த வெற்றி, தாமதமான முடிவு என்றாலும் வரவேற்கத்தக்க அறிவிப்பு."

பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர், வானதி சீனிவாசன்:
``இன்றைய சூழலைக் கருத்தில்கொண்டு வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன."
தேசிய தலைவர்களின் கருத்துகள்:
காங்கிரஸ் முன்னாள் தலைவர், ராகுல் காந்தி:

``விவசாயிகள் சத்தியாகிரகம் ஆணவக்காரர்களை தலைகுனியச் செய்துள்ளது. அநீதிக்கு எதிரான இந்தப் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றிக்காக விவசாயிகளுக்கு வாழ்த்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்."
மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி:

`` வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகளை மத்திய பாஜக அரசு கொடுமை செய்தது. பாஜக உங்களுக்கு அளித்த இன்னல்களிலும் துவண்டுவிடாமல் அயராது போராடிய ஒவ்வொரு விவசாயிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இது உங்கள் வெற்றி. இந்தப் போராட்டத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்."
டெல்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால்:

``இந்த நாளில் எவ்வளவு பெரிய செய்தி வந்திருக்கிறது... மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்பட்டன. இந்தப் போராட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வீரமரணம் அடைந்தனர். அவர்களது தியாகம் அழியாது இருக்கும். விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பாற்ற இந்த நாட்டின் விவசாயிகள் தங்கள் உயிரை எப்படிப் பணயம் வைத்திருக்கிறார்கள் என்பதை வரும் தலைமுறைகள் நினைவில் வைத்திருக்கும். என் நாட்டு விவசாயிகளுக்கு நான் தலைவணங்குகிறேன்."
இவர்கள் போன்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டது தொடர்பாகக் கருத்து தெரிவித்துவருகின்றனர்.