கர்நாடகாவில் விவசாயிகளிடம் இருந்து மாம்பழங்களை பெற்று மக்களுக்கு விநியோகம் செய்யும் பணியை கடந்த 2019-ம் ஆண்டு முதல் தபால் துறை செய்து வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கர்நாடக அரசின் இணையதளத்தில் மாம்பழங்களை வாங்குவோர் ஆர்டர் செய்தால் அவர்களது வீடுகளுக்கே சென்று தபால்துறை மாம்பழங்களை கொடுத்து வருகிறது.
கடந்த 2021-ம் ஆண்டு தபால்துறை மூலமாக 75 டன் மாம்பழங்களும் கடந்த ஆண்டு 70 டன் மாம்பழங்களும் விவசாயிகளிடமிருந்து நேரடியாக பெற்று மக்களிடம் வழங்கப்பட்டு வந்தது. அதன்படி ஏப்ரல் 5-ம் தேதியிலிருந்து கடந்த 12-ம் தேதி வரை சுமார் 19 டன் மாம்பழங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
ஆன்லைன் மூலம் ஒரு வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் 3 கிலோவுக்கு மேல் மாம்பழங்களை ஆர்டர் செய்தால் மட்டுமே வீடுகளில் விநியோகிக்கப்படும். 3 கிலோவுக்கும் குறைவாக இந்த திட்டத்தின் மூலம் ஆர்டர் செய்ய முடியாது.

இந்த திட்டதிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தபால்துறை உயர் அதிகாரி ராகவேந்திர ராவ் தெரிவித்துள்ளார். “மாம்பழங்கள் இடைத்தரகர்களிடமிருந்து வாங்காமல் நாங்களே நேரடியாக விவசாயிகளிடம் இருந்து பெறுவதால் விலை மற்றும் மாம்பழங்களின் தரம் சிறப்பாக இருக்கும். இப்பழங்கள் உடல் நலத்துக்கு பாதிப்பு இல்லாமல் கிடைப்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது” என ராவ் கூறியுள்ளார்.