ஆசிரியர் பக்கம்
மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

மூலிகைச் சாகுபடி அதிகரிக்கும்... ஊக்கப்படுத்தும் புதுச்சேரி அரசு!

நிகழ்வில் பேசும் புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஜெயக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
நிகழ்வில் பேசும் புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஜெயக்குமார்

கூட்டம்

மூலிகைச் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால், சந்தைப்படுத்துவதில் தெளிவான வழிகாட்டு தல்கள் இல்லாததால்தான், விவசாயிகள் இவற்றைப் பயிரிட தயங்குகிறார்கள். இந்நிலையில், இதிலுள்ள இடர்ப்பாடுகளைக் களைந்து, விற்பனை வாய்ப்பை ஏற்படுத்தி, மூலிகைச் சாகுபடியை ஊக்குவிக்கும் நல்லதோர் முயற்சியைக் கையில் எடுத்துள்ளது புதுச்சேரி அரசின் மூலிகை தாவர வாரியம்.

விவசாயிகள், மூலிகைச் சாகுபடி செய்து, லாபகரமான முறையில் வருமானம் பார்ப் பதற்கான, ஒருநாள் பயிற்சி கடந்த ஜூன் 18-ம் தேதி, புதுச்சேரியில் உள்ள மாநில கூட்டுறவு வங்கியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மூலிகை தாவரங்களின் வளங்கள், அவற்றுக்கான தேவைகள், பயன்பாடுகள், அவற்றை விவசாயம் செய்யும் முறை மற்றும் விற்பனை வாய்ப்புகள் குறித்து விளக்கிக் கூறப்பட்டது.

நிகழ்வில் பேசும் புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஜெயக்குமார்
நிகழ்வில் பேசும் புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஜெயக்குமார்

இந்நிகழ்ச்சியில் பேசிய புதுச்சேரி மாநில வேளாண்துறை அமைச்சர் ஜெயக்குமார், “பாரம்பர்ய வேளாண்மை யையும் உணவு முறைகளையும் கைவிட்டதால் பலவிதமான பாதிப்புகளைச் சந்திக்கிறோம். தற்போது இதை உணரத் தொடங்கியதால் தான், இயற்கையில் விளைந்த சத்தான பொருள்களைத் தேடிச் சாப்பிடுகிறோம். நம் முன்னோர்கள், ‘உணவே மருந்து’ என்பதைப் பின்பற்றி வாழ்ந்தார்கள். ஆனால், இன்று தவறான உணவு முறையைப் பின்பற்றி, நம் உடலை நாமே கெடுத்துக்கொள்கிறோம். இன்று யாராவது கூழ், பழைய சோறு சாப்பிடுகிறோமா என்றால் கிடையாது. இப்போதெல்லாம் தெருவுக்கு நான்கு அலோபதி டாக்டர்கள், மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி வந்துவிட்டது. நிறைய இளம் வயதினருக்கே சர்க்கரை நோய் வந்துவிடுகிறது. இதை யெல்லாம் போக்க வேண்டும் என்றால் மூலிகை சார்ந்த மருத்துவம் அவசியம். இந்த மூலிகைகளை விவசாயிகள் உற்பத்தி செய்து மூலிகை மருந்துகள் தயார் செய்யும் நிறுவனங்களோடு இணைந்து செயல்பட வேண்டும். இதன் மூலம் மூலிகைகளின் தேவை அதிகரிக்கும். இதனால் நோயாளிகள் மட்டுமல்லாமல், விவசாயிகள், மருந்து உற்பத்தி நிறுவனங்களும் பயன் அடைவார்கள். மூலிகை உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகரித்துப் புதுச்சேரி மாநிலத்துக்கு இந்திய அளவில் பெருமை சேர்க்க வேண்டும்’’ என்றார்.

புதுச்சேரி அரசின் மூலிகை தாவர வாரியத்தின் திட்ட இயக்குநர் டாக்டர் ஶ்ரீதரனிடம் பேசினோம். “விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் மூலிகைகளை எளிமை யாகவும் லாபகரமாகவும் விற்பனை செய்யும் வகையில் தனியார் நிறுவனங்களுடன் நேரடி இணைப்பை ஏற்படுத்துகிறோம். இன்று நான்கு பெரிய தனியார் நிறுவனங்கள் இங்கு வந்திருக் கின்றன. இனி புதுச்சேரியில் மூலிகைச் சாகுபடி அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன” என்றார்.

நிகழ்வில் சிறப்பு பேச்சாளர்கள்
நிகழ்வில் சிறப்பு பேச்சாளர்கள்

இந்நிகழ்வில் கலந்துகொண்ட ‘நேச்சுரல் ரிமெடீஸ்’ நிறுவனத்தின் பொது மேலாளர் நரேஷிடம் பேசியபோது, “நாங்கள் 40 ஆண்டுகளாக மூலிகைப் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பழைமையான நிறுவனம். எங்களுக்குத் தேவையான மூலிகைகள் விளையும் பகுதி களுக்கு நேரடியாகச் சென்று, விவசாயிகளைச் சந்தித்துத் தேவைகளைக் கூறுகிறோம். விவசாயிகளுக்கு அதில் உடன்பாடு என்றால் அவர்கள் அந்த மூலிகையை உற்பத்தி செய்து தருவார்கள். அதற்கான வழிமுறை களையும் அவ்வபோது தேவைப் படும் தொழில்நுட்ப ஆலோசனை களையும் நாங்கள் அவர்களுக்கு வழங்குகிறோம்.

தனியாக ஒரு விவசாயியை அணுகும்போது, நம்பகத்தன்மை என்பது இரு தரப்பிலும் இல்லாமல் போகலாம். எனவேதான் புதுச்சேரி அரசுடன் இணைந்து இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.

ஶ்ரீதரன், நரேஷ், கனகசுந்தரம்
ஶ்ரீதரன், நரேஷ், கனகசுந்தரம்

தேவை ஓர் அமைப்பு

பயிற்சியில் கலந்துகொண்ட காரைக்கால் விவசாயி டி.கே.எஸ்.எம்.கனகசுந்தரம் என்பவரிடம் பேசினோம். “வழக்கமாகச் சாகுபடி செய்யும் நெல் போன்ற பயிர்களுக்கு மாற்றாக, மூலிகைச் சாகுபடிக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து விவசாயிகளை ஊக்குவிப்பதை வரவேற்கிறோம். விவசாயிகள் தொய்வடைந்துள்ள இந்தச் சமயத்தில், மூலிகைச் சாகுபடியில் வருவாய் ஈட்டுவதற்கு... விவசாயிகளுடன், புதுச்சேரி அரசும், தனியார் நிறுவனங்களும் கூட்டாக இணைந்து செயல்படுவது நம்பிக்கையைத் தருகிறது. விவசாயிகள் கோரிக்கை வைப்பதற்கு முன்பாகவே இப்படி ஒரு நல்ல முயற்சியை முன்னெடுத்த அரசுக்கு நன்றி. அதேசமயம், இந்த விஷயத்தில் விவசாயிகள் மற்றும் நிறுவனங்கள் என யாருக்கும் எந்தவிதமான நஷ்டமும் வராமல் இருப்பதையும் அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

மூலிகைச் சாகுபடி என்றதும் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும் என்கிற நம்பிக்கையோடுதான் விவசாயிகள் களத்தில் குதிப்பார்கள். ஆனால், பெரும்பாலும் விவசாயிகளுக்கு ஏமாற்றமே விஞ்சி நிற்கும். எனவே, மூலிகை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கும் அதை முன்னெடுக்கும் நிறுவனங்களுக்கும் இடையே நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அதேபோல, சந்தையை உறுதிப்படுத்துவதும், விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய சரியான தொகையை உறுதிப்படுத்துவதும் அரசாங்கத்தின் கடமையாகவே இருக்கவேண்டும். இதற்காகவே ஓர் அமைப்பை புதுச்சேரி அரசு ஏற்படுத்திக் கொடுத்தால் வசதியாக இருக்கும்” என்றார்.