4,542 ஹெக்டேர்...9,094 விவசாயிகள்! கண்மாய்த் தண்ணீரில் இரண்டாம் போகம்... வழிகாட்டிய ஆட்சியர்!

சாதனை
ராமநாதபுரம் என்றதும் வறட்சியான மாவட்டம் என்ற பிம்பம்தான் மனதில் தோன்றும். பெரும்பாலும் மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்யும் வானம் பார்த்த பூமி. மானாவாரியில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெல் சாகுபடி நடக்கும் மாவட்டம். இயற்கை விவசாயிகளின் எண்ணிக்கையும் இங்கு அதிகரித்து வருகிறது. இதற்கு அடிநாதமாக இருந்தது முன்னாள் மாவட்ட ஆட்சியர் நந்தகுமார். அவரது முயற்சியால் மாவட்ட நிர்வாகமும் பசுமை விகடனும் இணைந்து இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மூலமாக மாவட்டத்தில் உள்ள 100 நபர் களுக்குக் கொடுத்த இயற்கை விவசாயப் பயிற்சியும் முக்கியக் காரணம்.
இதற்குக் கட்டியம் கூறும் வகையில், முதல் போகப் பயிர் சாகுபடியில் ஈடுகட்ட முடியாத பெரும் இழப்பு ஏற்பட்டும் இரண்டாம் போகப் பயிர் சாகுபடியில் சாதித்துள்ளது ராமநாதபுரம் மாவட்டம். இதற்குக் காரணமாக இருப்பவர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.
ஆண்டுதோறும் ஜனவரி மாதம் கிடைக்க வேண்டிய மழையின் அளவு 48.5 மி.மீ. இந்த ஆண்டு ஜனவரியில் பெய்த மழையின் அளவு 248.74 மி.மீ. அதனால் மாவட்டத்தில் உள்ள 1,694 கண்மாய்கள் உட்பட அனைத்து நீர்நிலை களும் முழுவதுமாக நிறைந்தன. நீர்நிலைகள் நிறைந்துவிட்டன என்ற மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், கண்மாய்களைச் சுற்றியுள்ள அனைத்து விவசாய நிலங்களும் நீரில் மூழ்கிச் சேதமடைந்து விவசாயிகளுக்குப் பெரும் நஷ்டம் உண்டானது. இச்சூழலில் இந்த நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில் இரண்டாம் போகப் பயிர் சாகுபடியைச் செய்தே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் களம் இறங்கினார் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

பாசனத்துக்குப் பயன்பட்ட
கண்மாய்த் தண்ணீர்
ஆட்சியரின் ஆர்வம், முயற்சியின் விளைவாக மாவட்டத்தில் முதன் முறையாக 4,542 ஹெக்டேர் நிலங்களில் இரண்டாம் போகச் சாகுபடி நடந்துள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. இரண்டாம் போகச் சாகுபடியைக் கனவிலும் நினைத்துப் பார்த்திராத விவசாயிகளுக்கு அதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் கிராமம்தோறும் நடத்தப்பட்டது. மாவட்டத்தில் உள்ள கண்மாய் நீரை விவசாயிகள் பாசனத்துக்குப் பயன் படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப் பட்டது.
50 சதவிகித மானியம்
இதுதொடர்பாகப் பேசிய மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முனைவர் டாம் பி.சைலஸ், ‘‘இந்த மாவட்டத்தில் இரண்டாம் போகப் பயிர் சாகுபடி என்பது இதுதான் முதல் முறை. இங்குள்ள விவசாயிகள் இரண்டாம் போகம் சாகுபடி செய்வதற்குத் தயக்கம் காட்டினார்கள். வானம் பார்த்த பூமி... மழை இல்லையென்றால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுவிடும். மேலும், பயிர் ஆடு, மாடுகளுக்கு இரையாகிவிடும் என அச்சப்பட்டார்கள். இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி கிராமம் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தி விவசாயி களைத் தயார் செய்தோம். உயர் விளைச்சல் தரும் உளுந்து, எள், பருத்தி ஆகிய மூன்று பயிர்களைப் பரிந்துரைத்தோம்.
வம்பன்-8, வம்பன்-10, மதுரை-1 ரக உளுந்து, டி.எம்.வி-7, வி.ஆர்.ஐ-3 ரக எள், எம்.சி.யு-7, எஸ்.வி.பி.ஆர்-2 ரகப் பருத்தி விதைகளைத் தேர்வு செய்து 50 சதவிகித மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப் பட்டது. மேலும், இடுபொருள்களான உயிர் உரம் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களான ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா போன்ற வற்றையும் 50 சதவிகித மானியத்தில் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விநியோகம் செய்யப்பட்டது.

மேலும், மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்மைத்துறை சார்பாக விதை நேர்த்தி, சரியான அளவு விதைகளைப் பயன்படுத்துதல், பயிர் எண்ணிக்கையைப் பராமரித்தல், வரிசை நடவு செய்தல், இடுபொருள் இடுதல் போன்ற தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்பட்டன. பயிர் அறுவடைக் காலம்வரை தினமும் நேரில் சென்று அறிவுரை வழங்கினோம். அவற்றைத் தவறாமல் கடைப்பிடித்ததால் கூடுதல் மகசூல் மற்றும் கூடுதல் வருமானம் கிடைத்து வருகிறது. மேலும், இரண்டாம் போகப் பயிர் விளைச்சலின் காரணமாகக் கூடுதல் வருமானம் மட்டுமல்லாமல், மண்ணில் உள்ள சத்துகள் அதிகரித்தன. இதோடு பூச்சி, நோய் மற்றும் களைகளும் கட்டுப்படுத்தப்பட்டன.
வருமானம் மட்டுமல்ல,
தன்னம்பிக்கையும் அதிகரித்தது
இந்த முறை சேமிக்கப்பட்ட மழைநீரைப் பயன்படுத்தி 4,542 ஹெக்டேர் அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 9,094 விவசாயி கள் இதனால் பலனடைந்துள்ளார்கள். இதன் மூலம் சாகுபடி செய்துள்ள அனைத்துப் பயிர்களிலிருந்து 51,605.36 குவின்டால் மகசூல் எதிர்பார்க்கிறோம். இரண்டாம் போகச் சாகுபடி என்பது இந்த மாவட்டத்தைப் பொறுத்தவரை ஒரு சாதனை நிகழ்வு. இதனால் விவசாயி களின் வருமானம் மட்டும் அதிகரிக்கவில்லை. தன்னம் பிக்கையும் அதிகரித்துள்ளது. இனி வரும் காலங்களில் இரண்டாம் போகச் சாகுபடி செய்ய ஆர்வமாக முன் வருவார்கள்’’ என்றார்.
விவசாயத்துல ஒரே வருஷத்துல ரெண்டாவது வருமானம் கிடைக்கிறது இதுதான் முதல்முறை.
வழக்கத்தை விட
அதிக மழை
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் பேசினோம். ‘‘வறட்சியான மாவட்டத்தை வளமான மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பல முயற்சிகளை முன்னெடுத்து வருகிறேன். விவசாயத்தைத் தவிர மாவட்ட வருவாயை அதிகரிக்க வேறு வாய்ப்பு இல்லை. அதனால் மாவட்டத்தில் வருவாயை அதிகரிக்க விவசாயத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினேன். இந்நிலையில், கடந்த வருடம் ஜனவரி மாதம் வழக்கத்தைவிடச் சுமார் 200 மி.மீ மழை அதிகமாகப் பெய்தது. மழை காரணமாக, அதிக இழப்பைச் சந்தித்த விவசாயிகள் தவித்துக் கொண்டிருந்தார்கள். அந்தளவுக்கு விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது மழை. அந்த மழைநீர் மூலமாகவே நஷ்டத்தை ஓரளவு சரிசெய்யலாம் எனத் தோன்றியது. அதன் விளைவாக உருவானதுதான் இரண்டாம் போகப் பயிர் சாகுபடி முயற்சி. இது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசியபோது, மாவட்டத்தில் இரண்டாம் போகம் இதுவரை செய்ததில்லை. விவசாயிகள் அதற்கு முன்வர மாட்டார்கள் என்றார்கள். ஆனாலும், முயற்சி செய்து பார்க்கலாமெனக் களத்தில் இறங்கினேன்.
ராமநாதபுரம் பெரிய கண்மாய் சுமார் 3,000 ஏக்கருக்கு மேல் பாசன வசதிகொண்டது. அந்தக் கண்மாய்த் தண்ணீரைப் பயன்படுத்தி அந்தப் பாசன நிலங்களில் இரண்டாம் போகச் சாகுபடியைச் செயல்படுத்த முயற்சி செய்தோம். இரண்டாம் போகப் பயிர் சாகுபடி என்பது இம்மாவட்டத்தில் முதல் முறை என்பதால் விவசாயிகளிடம் தெளிவுபடுத்த மிகவும் சிரமமாக இருந்தது. அந்தப் பகுதியில் இந்த ஆண்டுச் சுமார் 300 ஏக்கர் மட்டுமே சாகுபடி செய்ய முடிந்தது. ஆனால், அடுத்த ஆண்டு மொத்த பரப்பிலும் இரண்டாம் போகம் பயிர் செய்ய முயற்சி எடுப்பேன்.

மழையால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும்
மாவட்டம் முழுவதும் நம்பிக்கையை ஏற்படுத்தி, மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் மூலமாக இரண்டாம் போகப் பயிர் சாகுபடியைப் பற்றித் தெளிவுபடுத்தினோம். தொடர் வழிகாட்டுதல், ஆலோசனைகள், மானிய விலையில் விதை, இடுபொருள்கள் வழங்கினோம். விவசாயிகளும் ஒத்துழைக்கத் தொடங்கினார்கள். எனது நேரடி பார்வையில், அதிகாரிகள், விவசாயிகளின் கூட்டு முயற்சியின் விளைவாக முதன் முறையாக இரண்டாம் போகச் சாகுபடி சாத்தியமாகியுள்ளது.
கடந்த வருடம் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்டும் அளவுக்கு அதிக மகசூல் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. சில பகுதிகளில் அறுவடை நடந்துகொண்டிருக்கிறது. இனிவரும் காலங்களில் விவசாயிகளுக்குத் தேவையான அனைத்துவிதமான உதவிகளும் மானியங்களும் பெற்றுத் தரப்படும். அடுத்த ஆண்டு இன்னும் அதிக பரப்பளவில் இரண்டாம்போகப் பயிர் சாகுபடி நிச்சயம் நடைபெறும்.
ராமநாதபுரம் மாவட்டம் விவசாயத்தில் முதன்மையான மாவட்டமாக மாறுவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறேன்’’ என்று சொல்லிமுடித்தார்.

“நான் கனவுலயும் நினைக்கல!”
இரண்டாம் போகச் சாகுபடியில் பருத்திச் சாகுபடி செய்துள்ள அச்சுந்தன்வயல் கிராமத்தைச் சேர்ந்த கஜேந்திரன், ‘‘எனக்குச் சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில பருத்தி விதைச்சிருக்கேன். என் வாழ்நாள்ல இதுவரைக்கும் ரெண்டாம் போகப் பயிர் சாகுபடி செஞ்சது கிடையாது. இப்பதான் மொத தடவையா ரெண்டாம் போகம் விதைக்கிறேன். இப்படியொரு போகம் நெல்லு, ரெண்டாவது போகம் வேற பயிருன்னு மாத்தி மாத்தி விதைச்சா மண்ணோட வளம் குறையாது. எங்க மன தைரியமும் குறையாது. என்னோட நிலத்தில விளைஞ்சிருக்க ஒவ்வொரு பருத்திச் செடியிலும் குறைஞ்சது 800 கிராம் பருத்தி கிடைக்கும். ஆக, ஏக்கருக்கு 50,000 வெச்சாலும், 4 ஏக்கருக்கும் சேர்த்து 2 லட்சம் ரூபாய்க்கும் குறையாம வருமானம் கிடைக்கும்னு நம்புறேன். இந்த வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்த எங்க கலெக்டருக்குத்தான் நன்றி சொல்லணும்’’ என்றார் நெகிழ்ச்சியாக.
தொடர்புக்கு, கஜேந்திரன், செல்போன்: 63830 95165
இரண்டாவது வருமானம்
ராமநாதபுரம் மாவட்டம் அச்சுந்தன்வயலைச் சேர்ந்த விவசாயி சிவக்குமாரிடம் பேசினோம். ‘‘விவசாயத்துல பெருசா வருமானம் கிடைக்கலைன்னு வெளிநாட்டுக்கு வேலைக்குப் போயிட்டேன். 4 வருஷத்துக்கு முன்ன உடம்பு சரியில்லாம ஊருக்கு வந்துட்டேன். இங்க கட்டட வேலை இல்லைன்னா விவசாயம், இது ரெண்டைத் தவிர பொழப்புக்கு வேற வழியில்ல. அதனால மறுபடியும் விவசாயம் பார்க்க ஆரம்பிச்சேன். வருஷத்துக்கு ஒருபோகம்தான் நெல்லு விதைப்போம். அதை வெச்சுதான் குடும்பத்தை ஓட்டணும். இந்தத் தடவை கலெக்டர் முயற்சியில ரெண்டாம் போகம் சாகுபடி செஞ்சிருக்கோம். நானும் 4 ஏக்கர்ல உளுந்து போட்டிருக்கேன். இன்னும் அறுவடை ஆகல. இதுக்கு அதிக செலவு இல்லை. மானிய விலையில விதை, உரம் எல்லாம் விவசாயத்துறையில கொடுத்தாங்க. அப்பப்ப வந்து ஆலோசனை கொடுத்தாங்க. விளைச்சல் நல்லா இருக்குது. விவசாயத்துல ஒரே வருஷத்துல ரெண்டாவது வருமானம் கிடைக்குறது இதுதான் முதல்முறை. இந்தப் பணம் ரொம்பவும் உதவியா இருக்கும். இந்த ஊர்ல பொறந்து வளர்ந்த நாங்களே ரெண்டாம் போகம் பத்தி நினைச்சுக்கூடப் பார்க்கல. ஆனா, கலெக்டர் ரெண்டாம் போகச் சாகுபடி செய்யச் சொல்லி, தண்ணி வசதிக்கும் ஏற்பாடு செஞ்சாரு. அப்படி ஏற்பாடு பண்ணுனதுனால இந்த வருமானம் கிடைச்சிருக்கு’’ என்றார் மகிழ்ச்சியுடன்.
தொடர்புக்கு, சிவக்குமார், செல்போன்: 88706 97364.