இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் பாசுமதி அல்லாத அரிசி வகைகள் மற்றும் குருணை போன்றவற்றின் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது.
இயற்கை முறை அரிசியின் உள்நாட்டுத் தேவையை கருத்தில் கொண்டு கடந்த செப்டம்பர் மாத தொடக்கத்தில் பாசுமதி ரகம் அல்லாத ஆர்கானிக் அரிசியின் ஏற்றுமதிக்குத் தடை விதித்தது. இதனால் ஏற்றுமதி செய்யப்படும் அரிசியின் அளவு குறைந்தது.

இதனைத் தொடர்ந்து உள்நாட்டுச் சந்தையில் அரிசியின் விலை படிப்படியாக குறைந்தது. எனவே தற்போது செப்டம்பர் மாதம் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு, தடைக்கு முன்பு ஏற்றுமதி செய்ய வகுக்கப்பட்ட விதிகள் மீண்டும் நிர்வகிக்கப்படும் என வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் அறிவித்துள்ளது.
இது குறித்து அகில இந்திய ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் விஜய் சேத்தியா கூறுகையில், ``இந்தியா ஆண்டுதோறும் சுமார் 10,000 முதல் 15,000 டன் பாசுமதி மற்றும் பாசுமதி அல்லாத இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட அரிசியை ஏற்றுமதி செய்கிறது. கடந்த 4 - 5 ஆண்டுகளில் அரிசியின் ஏற்றுமதி வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில் ஏற்றுமதிக்கான தடையை விலக்கி அரசு சரியான நடவடிக்கையை எடுத்துள்ளது’’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய உணவு கழகத்தின் நிர்வாக இயக்குனர் அசோக் கே.கே.மீனா கூறுகையில், ``அத்தியாவசிய பொருட்களின் விலை நிலவரத்தை அரசு தொடர்ந்து கண்காணித்து, தேவைக்கேற்றார் போலத் திருத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த மாதத்தோடு ஒப்பிடுகையில், கோதுமை மற்றும் அரிசியின் சில்லறை மற்றும் மொத்த விலையில் சிறிதளவு ஏற்றம் உள்ளது. சில்லறை வணிகத்தில் அரிசியின் விலை சிறிதளவு ஏற்றம் இருந்தாலும், விலை கட்டுக்குள் உள்ளது’’ என்று கூறியுள்ளார்.
இயற்கை விவசாய முறையில் தயாரிக்கப்படும் பாசுமதி ரகமில்லாத அரிசி வகைகளின் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை மத்திய அரசு நீக்கியதால் விவசாயிகள் பலரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.