ஆசிரியர் பக்கம்
மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

ஆடு வளர்ப்பில் லாபமடைய இதைச் செய்யுங்கள்! வழிகாட்டும் சாத்தூர் அரசு ஆட்டுப்பண்ணை!

ஆட்டுப்பண்ணை
பிரீமியம் ஸ்டோரி
News
ஆட்டுப்பண்ணை

கால்நடை

விவசாய வருமானத்தைவிட, உபதொழிலான கால்நடை வளர்ப்பு பல நேரங்களில் அதிக வருமானத்தைக் கொடுக்கிறது. இதனால் கால்நடை வளர்ப்பில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகிறார்கள் விவசாயிகள். அதிலும், குறைவான முதலீடு, குறைவான பராமரிப்பில் இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும் ஆடு வளர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் ஆடு வளர்ப்பவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறது 57 ஆண்டுகள் பழைமையான சாத்தூர் அரசு ஆட்டுப்பண்ணை.

விருதுநகர் மாவட்டம், சாத்தூரிலிருந்து இருக்கன்குடி செல்லும் சாலையில் 5 கி.மீ தொலைவில் உள்ளது அரசு ஆட்டுப்பண்ணை. இந்தப் பண்ணையின் முதுநிலை கால்நடை மருத்துவர் கார்த்திக்கைச் சந்தித்துப் பேசினோம். ‘‘இந்தப் பண்ணை, தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் 1964-ம் ஆண்டு காமராஜரால் தொடங்கப்பட்டது. இதன் மொத்தப் பரப்பு 542.48 ஏக்கர். இதில், இருக்கன்குடி நீர்த்தேக்கத் திட்டத்துக்கு 388.48 ஏக்கர் கொடுத்தது போக, தற்போது 154 ஏக்கர் பரப்பளவில் பண்ணை இயங்கி வருகிறது.

இப்பகுதியைச் சேர்ந்த நாட்டு இனங்களான ‘கன்னி’ (வெள்ளாடு), ‘வெம்பூர்’ (செம்மறி ஆடு) இனங்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்ப துடன், இன விருத்திச் செய்து தரம் உயர்த்தி எண்ணிக்கையைப் பெருக்குவதுதான் இந்தப் பண்ணையின் முக்கிய நோக்கம். தற்போது பண்ணையில் வெம்பூர் இனத்தில் 4 கிடாக்கள், 160 பெட்டை ஆடுகள், 33 கிடாக்குட்டிகள், 14 பெட்டைக் குட்டிகள் என 211 உருப்படிகளும், கன்னி இனத்தில் 5 கிடாக்கள், 228 பெட்டை ஆடுகள், 37 கிடாக்குட்டிகள், 24 பெட்டைக்குட்டிகள் என 294 உருப்படிகளும் இருக்கின்றன’’ என்றவர், பண்ணையின் செயல்பாடுகள்பற்றிப் பேசினார்.

பண்ணையில் ஆடுகளுடன் கார்த்திக்
பண்ணையில் ஆடுகளுடன் கார்த்திக்

‘‘கன்னி, வெம்பூர் இன ஆடுகளை வளர்த்து, இனப்பெருக்கம் செய்து, நல்ல தரமுள்ள மரபு இனங்களைக் கொண்ட கிடாக்களை ஆடு வளர்ப்போர் மற்றும் விவசாயிகளுக்குக் கொடுக்கிறோம். தரமான ஆடு வளர்ப்பு குறித்த பயிற்சியின் மூலம் அவர்களின் வருமானத்தை அதிகமாக்குகிறோம்.

இங்கு, தீவன மேலாண்மை, நோய்த் தடுப்பு முறைகள், தீவனப் பயிர் உற்பத்தி குறித்த பயிற்சிகளும் அளிக்கிறோம். ஆடு வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்கள், அரசு வேலை நாள்களில் பண்ணைக்கு வரலாம். ஆடு வளர்ப்பு குறித்த பயிற்சி அளிக்கத் தயாராக இருக்கிறோம்” என்றவர், ஆடு வளர்ப்பு குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

மேய்ச்சல் முறையே சிறந்தது

“மாடு வளர்ப்பைவிட ஆடு வளர்ப்பது சுலபமானது. பராமரிப்பு, செலவு குறைந்த, அதிக லாபம் தரக்கூடிய தொழில். லாபம் தரும் இனங்களைத் தேர்வு செய்து வளர்ப்பதே ஆடு வளர்ப்பில் லாபம் அடைவதற்கான சூட்சுமம். குறுகிய காலத்தில் வேகமாக வளர்ந்து எடை அதிகரிக்கும் இனங்களைத் தேர்வு செய்ய வேண்டும். கொட்டில், பரண் முறையைவிட மேய்ச்சல் முறை வளர்ப்பே சிறந்தது. செம்மறி ஆடுகளைப் பொறுத்த வரையில் மேய்ச்சலின்போது எளிதாகக் கட்டுப்படுத்தலாம். ஒரு நபர் 50 முதல் 60 ஆடுகள் வரையிலும் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல முடியும்.

இரவில் கொட்டகையில் அடைக்கலாம். அதிக முதலீட்டில் கொட்டகை தேவை யில்லை. தரைதளத்தில் தண்ணீர்த் தேங்காதபடி, காற்றோட்டமுள்ள தகரக் கொட்டகைகளாக அமைத்தால் போதும். பெட்டை ஆடுகள், கிடாக்கள், சினை ஆடுகள், குட்டிகள் என 4 அறைகள் அமைத்துக்கொள்ள வேண்டும். சிமென்டால் ஆன தீவனத்தொட்டிகள் வேண்டாம். 200 லிட்டர் கொள்ளவுள்ள பிளாஸ்டிக் டிரம் களை இரண்டாக அறுத்துத் தீவனத் தொட்டிகளாகப் பயன்படுத்தலாம்.

பண்ணையில் ஆடுகள்
பண்ணையில் ஆடுகள்

சுழற்சி முறை தீவனம்

அடர்தீவனம், பசுந்தீவனம், உலர் தீவனம் ஆகியவற்றைச் சுழற்சி முறையில் கொடுக்க வேண்டும். குட்டி போட்ட மூன்றாவது மாதத்திலிருந்து, மூன்று மாதத்துக்கு ஒருமுறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். இதனால், ஆடுகளின் எடை விரைவாக அதிகரிக்கும். அந்தந்தப் பருவ காலங்களில் அடைப்பான், துள்ளுமாரி, ஆட்டுக்கொல்லி, ஆட்டம்மை ஆகியவற்றுக்கான தடுப்பூசிகளைத் தவறாமல் போட வேண்டும். இந்தப் பராமரிப்பு முறைகளைப் பின்பற்றினாலே போதும். ஆடு வளர்ப்பில் வெற்றி பெறலாம்’’ என்றவர் நிறைவாக,

‘‘பள்ளியில் சரியாகப் படிக்காத மாணவரைப் பார்த்து, ‘நீயெல்லாம் ஆடு மேய்க்கத்தான் லாயக்கு’ என ஆசிரியர்கள் கோபத்தில் சொல்வார்கள். அந்த வார்த்தை, இன்று லாபகரமான தொழிலுக்கான தூபமாகப் பார்க்கலாம். படித்துவிட்டு வேலை இல்லை என்று சொல்பவர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள் எனச் சுயதொழில் செய்ய நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் தயங்காமல் ஆடு வளர்ப்பைத் தொடங்கலாம். அவர்களுக்கு வழிகாட்டவும், பயிற்சி அளிக்கவும் தயாராக இருக்கிறோம்” என்றார்.

தொடர்புக்கு:

துணை இயக்குநர்,

அரசு ஆட்டுப்பண்ணை,

சாத்தூர் - 626202

விருதுநகர் மாவட்டம்.

செல்போன்: 89407 98444

மாடு மறு வருடம்... ஆடு அவ்வருடம்..!

ஆடு வளர்ப்பு குறித்துப் பேசிய தூத்துக்குடி மாவட்டம் அயன்வடமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கரிசல்பூமி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வரதராஜன், “தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் 70 சதவிகிதம் மானாவாரி விவசாயமே நடந்துட்டு வருது. மழையை மட்டுமே நம்பி செய்யும் இந்த விவசாயத்துல போதிய மழை பெய்யலேன்னா விவசாயிங்களுக்கு நஷ்டம்தான். அதனால், இந்தப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், மானாவாரி விவசாயத்தை மட்டும் நம்பியிருக்காம உப தொழிலா கோழி, ஆடு, மாடு வளர்ப்பையும் செஞ்சுட்டு வர்றோம். இதுல மாடுகளைவிட ஆடு, கோழிகள் வளர்ப்புதான் அதிகமா நடந்துட்டு வருது.

எந்தக் கிராமத்துக்குப் போனாலும், வீட்டுக்கு வீடு குறைந்தபட்சம் 5-லிருந்து 100 ஆடுகள் வரைக்கும் இருக்கும். மேய்ச்சல் முறையிலதான் வளர்த்துட்டு வர்றாங்க. ‘மாடு மறு வருஷம்… ஆடு அவ்வருஷம்’னு கிராமங்கள்ல ஒரு சொலவடைச் சொல்வாங்க. மாடு வளர்த்தா அடுத்த வருஷத்துல இருந்துதான் பலன் கிடைக்கும். ஆனா, ஆடு வளர்த்தா அந்த வருஷத்துலயே குட்டிகள்மூலம் பலன் கிடைக்கும். பசு, எருமை மாதிரியான கால்நடைகளை வளர்க்க முடியாத நிலையிலக்கூட ஆடுகளை வளர்க்கலாம். வறண்ட நிலத்துல மேய்ச்சல் முறையில ஆடுகளை வளர்க்க முடியும். கிராமங்கள், நகரங்கள்ல ஆட்டிறைச்சியோட தேவை அதிகரிச்சுட்டு வருது.

ஆட்டிறைச்சிக்குன்னு மக்கள் மத்தியில தனி இடம் இருக்கிறதுனால ஆடு வளர்ப்புல நல்ல லாபம் பார்க்க முடியும். விவசாயிகளோட அவசரத் தேவைக்குகூட ஒண்ணு, ரெண்டு ஆடுகளை வித்துத் தேவையைப் பூர்த்தி செஞ்சுக்கலாம். யாருகிட்டயும் வட்டிக்கோ, கை மாத்தாவோ கடன் வாங்கிக் கஷ்டப்பட வேண்டிய அவசியமில்ல. யாரையும் நம்பி இருக்க வேண்டியதில்ல. இதனாலதான் ஆடுகளை ‘ஏழைகளின் பசு’, ‘ஏழைகளின் ஏ.டி.எம்’னு சொல்றாங்க” என்றார்.

வெம்பூர் ஆடுகள்
வெம்பூர் ஆடுகள்

வெம்பூர்

தூத்துக்குடி மாவட்டம் வெம்பூர், மேலக்கரந்தை, கீழக்கரந்தை; விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஆகிய பகுதிகளில் ‘வெம்பூர்’ இனச் செம்மறி ஆடுகள் பரவலாகக் காணப்படும். உடல் முழுவதும் பழுப்பு நிறத்துடன் இருக்கும். உடல் முழுவதும் கறுப்பு அல்லது வெள்ளை நிறப் புள்ளிகள் படர்ந்திருக்கும். உறுதியான, உயரமான கால்களைக் கொண்டவை. நீளமான உடல், இறுகிய வயிறு, குறுகிய வால் இருக்கும். கிடாக்கள் உறுதியான திருகிய கொம்பு உடையதாகவும், பெட்டை ஆடுகள் கொம்பு இல்லாமலும் இருக்கும்.

ஆல் இன்... ஆல் அவுட்!

‘‘செம்மறிக் கிடாக்களுக்கு ரம்ஜான், பக்ரீத் போன்ற இஸ்லாமியப் பண்டிகைக் காலங்களில் இரண்டு முதல் மூன்று மடங்குவரை கூடுதல் விலை கிடைக்கும். இதற்கேற்ப திட்டமிட்டு 3 முதல் 6 கிலோ எடையுள்ள கிடா குட்டிகள் 50 அல்லது 100 என்ற எண்ணிக்கையில் வாங்கி வளர்க்க வேண்டும். அவற்றைப் பண்டிகைக் காலத்தில் மொத்தமாக விற்பனை செய்துவிடலாம். இதை ‘ஆல் இன்... ஆல் அவுட்’ முறை என்கிறார்கள்.

50 எண்ணிக்கையிலான ஆடுகளை விற்றால், அந்தப் பணத்தில் குறைந்தபட்சம் 10 முதல் 15 குட்டி ஆடுகளையாவது வளர்ப்புக்காக வாங்கிக்கொள்ள வேண்டும். செம்மறி ஆடுகளைப் போலவே தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையைக் குறி வைத்துக் கன்னி ஆட்டுக் கிடாக்களையும் முன்கூட்டியே திட்டமிட்டு வளர்த்து விற்பனை செய்தால் கூடுதல் லாபம் பார்க்கலாம்’’ என்கிறார் கார்த்திக்.

பரிந்துரைக்கப்பட்ட பசுந்தீவனங்கள்

தானிய வகைகள்: மக்காச்சோளம், சோளம், கம்பு, கேழ்வரகு, தினை, சாமை.

புல் வகைகள்: கம்பு நேப்பியர், ஒட்டுப்புல், கினியாப்புல், கொழுக்கட்டைப் புல், ஊசிப்புல், தீனாநாத் புல், கோ-4, கோ-5.

பயறு வகைகள்: குதிரை மசால், வேலிமசால், முயல்மசால், அவரை, கொத்தவரை, நரிப்பயறு, சணப்பு, கொள்ளு, சங்குபுஷ்பம், ஸ்டைலோ, சிராட்ரோ, சென்ட்ரோ.

மர வகைகள்: அகத்தி, சூபாபுல், கிளரிசீடியா, கொடுக்காப்புளி, ஆச்சா, முருங்கை, கல்யாண முருங்கை, அரசு, வாகை, வேம்பு, வெள்வேல், கருவேல், ஆல், அத்தி, பலா, புளி, இலந்தை, நாவல், நெல்லி.

இன விருத்திக்காகக் கிடாக்கள் பெறுவது எப்படி?

ஆடுகள் இனவிருத்தி பற்றிப் பேசிய கார்த்திக், ‘‘கன்னி, வெம்பூர் இன ஆடுகளின் விருத்திக்காக, ஒரு நபருக்குக் குறைந்தபட்சம் ஒன்று முதல் அதிகபட்சம் மூன்று கிடாக்குட்டிகள் வரை தருகிறோம். இதற்காக ஒரு விண்ணப்பம் எழுதி, ஆதார் அட்டை நகலுடன், உள்ளூர் கால்நடை மருத்துவரின் பரிந்துரைக் கடிதத்தையும் இணைத்துப் பண்ணை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். வெளிமாவட்ட விவசாயிகள் விண்ணப்பத்தைத் தபாலி லும் அனுப்பலாம். பதிவு முன்னுரிமை மற்றும் கிடாக்களின் இருப்பு அடிப்படை யில் விண்ணப்பதாரர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும். 3 முதல் 6 மாதக் கிடாக்களை எடை போட்டு, உயிர் எடை ஒரு கிலோ 350 ரூபாய் விலையில் கொடுக்கிறோம்’’ என்றார்.

பால் கன்னி ஆடுகள்
பால் கன்னி ஆடுகள்

கன்னி ஆடு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், எட்டயபுரம், புதூர், நாகலாபுரம்; விருதுநகர் மாவட்டம் சாத்தூர், ஏழாயிரம் பண்ணை, வெம்பக்கோட்டை, அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளில் கன்னி ஆடுகள் அதிகளவு வளர்க்கப்படுகின்றன. உடல் முழுவதும் கறுப்பு நிறத்துடன் முகம், காது, கழுத்துப் பகுதியில் வெள்ளை நிறத்தில் நாமம் போட்டதுபோல இருக்கும். வயிற்றுக்குக் கீழ், கால்களில் வெள்ளை நிறம் காணப்படும். இந்த இன ஆடுகள் மந்தையாகச் செல்லும்போது அதன் கால் அசைவுகள் ராணுவ வீரர்களைப்போல வரிசையாக இருக்கும். இதனால், ‘சிப்பாய் நடை ஆடுகள்’ எனவும், முகப் பகுதியில் கோடுகள் இருப்பதால் ‘வரி ஆடுகள்’ எனவும் அழைக்கப்படுகின்றன. இதை ‘பால் கன்னி’ என்றும் சொல்கிறார்கள். வெள்ளை நிறத்துக்குப் பதிலாகப் பழுப்பு நிறத்துடன் இருப்பதை ‘செங்கன்னி’ என்கிறார்கள். இதில், ‘பால் கன்னி’தான் பரவலாக வளர்க்கப்படுகிறது.