மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

சீமைக்கருவேல மரம் ஊர்முழுக்க எதிர்ப்புக்குரல் நீதிமன்றமும் உறுமுகிறது! உண்மையை உரைக்கும் கள ஆய்வு!

சீமைக்கருவேலம் கள ஆய்வு பணியில்
பிரீமியம் ஸ்டோரி
News
சீமைக்கருவேலம் கள ஆய்வு பணியில்

சுற்றுச்சூழல்

‘சீமைக்கருவேல மரம்... ஆபத்தானது. இதை அழிக்காவிட்டால், தமிழகத்தையே பாலைவனமாக்கிவிடும்’ என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேசப்பட்ட விஷயம், தற்போது, ‘சீமைக்கருவேல மரங்களை எப்போது முழுமையாக அழிக்கப்போகிறீர்கள்?’ என்று தமிழக அரசாங்கத்தை நோக்கிய உயர் நீதிமன்றத்தின் கேள்விக்கணையாக வந்து நிற்கிறது.

‘சீமைக்கருவேலம் உள்ளிட்ட அந்நிய தாவரங்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. பத்து ஆண்டுகளுக்குள் அவை அழிக்கப்படும்’ என்று தமிழக வனத்துறை சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கின் விவாதத்தை ஜூன் முதல் வாரத்துக்குத் தள்ளி வைத்துள்ளது உயர் நீதிமன்றம்.

சீமைக்கருவேல மரங்கள் ஆபத்தான வையா... இல்லையா என்கிற விவாதம், சில ஆண்டுகளாக ஓடிக்கொண்டே இருக்கிறது. இதுதொடர்பாக அறிவியல்பூர்வமான முழுமையான ஆய்வுகள் எதுவும் நடத்தப் பட்டதாகத் தெரியவில்லை. இத்தகைய சூழலில், அந்நிய தாவரங்கள் என்கிற பெயரில் ஒரு பட்டியலைத் தயாரித்து, அரிவாளோடு வனத்துறை கிளம்புவதும்... நீதிமன்றம் வரவேற்பதும்... பகீர் கிளப்பத்தான் செய்கிறது.

சீமைக்கருவேலம் கள ஆய்வு பணியில்
சீமைக்கருவேலம் கள ஆய்வு பணியில்

‘‘அந்நிய தாவரங்கள் என்று கணக்கிட ஆரம்பித்தால்... கிட்டத் தட்ட 40 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட தாவரங்கள் அந்நிய மண்ணிலிருந்து வந்தவையே. இன்றைக்கு நாம் போற்றிப் புகழும் தேக்கு, காபி, டீ உட்படப் பலவும் அந்நிய தாவரங்களே. இந்தத் தேயிலைக் காடுகள், ‘பசுமைப் பாலைவனங்கள்’ என்றே வகைப்படுத்தப்பட்டுள்ளன’’ என்கிறார்கள் சூழல் ஆர்வலர்கள்.

100 அடி ஆழத்துக்கும் மேல் வேர்கள்?

‘சீமைக்கருவேல மரங்களின் வேர்கள் நிலத்தினுள் 100 அடிக்குக் கீழ் சென்று நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது. இதனால் நிலத்தடிநீர் குறைகிறது; காற்றிலுள்ள ஈரப் பதத்தைக்கூட இது விட்டுவைப்பதில்லை; அளவுக்கு அதிகமான கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிட்டு, காற்று மாசு பாட்டை ஏற்படுத்துகிறது; இதன் அருகில் வேறு எந்தச் செடி, கொடி, மரங்களும் வளராது; இது அருகிலுள்ள தாவரங்களின் வளர்ச்சியையும் தடை செய்கிறது; நச்சுத் தன்மை உடையதாக இருக்கிறது; குருவிகள் கூட இந்த மரத்தில் கூடு கட்டுவதில்லை; கால்நடைகள் இந்த மரங்களின் அருகில்கூடச் செல்வதில்லை; இத்தகைய சீமைக்கருவேல மரங்களை அழிக்காவிட்டால், தமிழகமே பாலைவனமாக மாறிவிடும்.’

- இவையெல்லாம் எப்போதும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள். இவற்றின் உண்மைத்தன்மைதான் என்ன என்று அறிந்து கொள்வதற்காக நேரடிக் கள ஆய்வு ஒன்றை அண்மையில் மேற்கொண்டோம்.

சீமைக்கருவேலம் கள ஆய்வு பணியில்
சீமைக்கருவேலம் கள ஆய்வு பணியில்

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் உயிர் ஆற்றல் துறையின் முன்னாள் தலைவரும், உயிர் ஆற்றல் சம்பந்தமாகத் தீவிரமாக இயங்கி வருபவருமான முனைவர் ப.வெங்கடாசலம், தற்போது திருச்சி மாவட்டம், முசிறியிலிருக்கும் எம்.ஐ.டி. கல்வி நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராகப் பணியாற்றி வருகிறார். ஆய்வுக்காக அவரை அணுகியபோது, ஆர்வமுடன் ஒத்துழைப்பு கொடுத்தார்.

மூன்றரை அடிக்குக் கீழ் வேர் செல்லவில்லை!

முசிறி அருகேயுள்ள ஓரிடத்தில் வளர்ந்து நிற்கும் சீமைக்கருவேல மரங்களை வைத்து தான் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வுக்காக 60, 40 மற்றும் 4 வயது என மூன்று மரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவற்றை ஜே.சி.பி இயந்திரத்தின் மூலம் வேரோடு பறித்தோம். 60 வயதான மரத்தின் வேர் மூன்றரை அடிக்குக் கீழ் இறங்கவில்லை. இந்த மரத்தின் வேர்கள் பெரும்பாலும் சல்லிவேர்களாகவே இருந்தன. பக்கவாட்டு வேரொன்று மட்டும் 6 அடி நீளத்துக்கு இருந்தது.

அடுத்து, நீர்நிலைக்கு அருகிலிருந்த 40 வயதான சீமைக்கருவேல மரத்தை வேரோடு பறித்தோம். அதனுடைய ஆணிவேர்களும் மூன்று, நான்கு அடி ஆழத்துக்குக் கீழ் செல்லவில்லை. ஒரேயொரு பக்கவாட்டு வேர் மட்டும் 18 அடி நீளத்துக்கு இருந்தது. இந்தச் சீமைக்கருவேல மரத்தின் மேல் சுரைக்காய் செடி படர்ந்து நிறைய காய்த் திருந்தது. அதேபோல இந்த மரத்தின் அருகே வேப்பமரங்கள், தென்னை மரங்கள், பனை மரங்கள் நன்றாக வளர்ந்திருந்ததையும் காண முடிந்தது.

சீமைக்கருவேலம் கள ஆய்வு பணியில்
சீமைக்கருவேலம் கள ஆய்வு பணியில்

இறுதியாக, நான்கு வயதுள்ள ஒரு மரத்தை வேரோடு பறித்தோம். அதிலும் மூன்று, நான்கு அடி நீளமுள்ள வேர்களே இருந்தன. ஒரேயொரு பக்கவாட்டு வேர் மட்டும் 8 அடி நீளத்துக்கு இருந்தது.

ஆக, ‘சீமைக்கருவேல மரத்தினுடைய வேர் மண்ணுக்குள் 80 அடி ஆழத்துக்குப் போகும், 100 அடி ஆழத்துக்குப் போகும்’ என்று சொல்லப்படுவதில் எந்த உண்மையும் இல்லை என்பதை நேரடியாகவே தெரிந்து கொள்ள முடிந்தது.

நிலக்கரியின் இடத்தை நிரப்பும் சீமைக்கருவேல்!

இந்த ஆய்வை மேற்கொள்வதில் உதவியாக இருந்த பேராசிரியர் வெங்கடாச்சலம், “சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன், சீமைக் கருவேல மரங்களை முற்றாக அழிக்க வேண்டும் என்ற கோரிக்கையைப் பலர் முன் வைத்துப் போராடி வந்தனர். இப்போது மீண்டும் அதை அழிப்பதைப் பற்றிய விவாதம் எழுந்துள்ளது.

மனித இனம் தீயைக் கண்டுபிடித்ததிலிருந்து பயன்படுத்தப்பட்டு வரும் எரிபொருள் மர விறகுதான். நமது பொதுப் புத்தியில் ஆற்றல் என்றாலே, மின்ஆற்றல் என்ற எண்ணம் மட்டுமே உள்ளது. மின்ஆற்றலுக்குச் சற்றும் குறையாது பயன்பாட்டில் இருப்பது வெப்ப ஆற்றல். படித்தவர்கள் மற்றும் ஊடகங்கள் கூட வெப்ப ஆற்றல் பற்றி எங்கும் குறிப்பிடுவதில்லை. 50 சதவிகித கிராம மக்கள் இப்போதும் பயன்படுத்துவது வெப்ப ஆற்றல்தான். அதிக அளவு மின் ஆற்றல் உற்பத்திக்கு அடிப்படையாக இருப்பதும் வெப்ப ஆற்றல்தான். இதற்கு நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. நிலக்கரியின் இடத்தை நிரப்பும் திறன்கொண்டது சீமைக்கருவேல மரம் மட்டுமே.

சீமைக்கருவேலம் கள ஆய்வு பணியில் முனைவர் வெங்கடாசலம்
சீமைக்கருவேலம் கள ஆய்வு பணியில் முனைவர் வெங்கடாசலம்மாட்டுக்கொட்டகையே சீமைக்கருவேல மரம்தான்!

நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட மூன்று மரங்களின் வேர்களும் அதிகபட்சமாக 10 அடிகூடச் செல்லவில்லை. இவை பெரிதாக நிலத்தடி நீரை உறிஞ்சி வளரவில்லை என்பதை இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். ஒரு சாதாரண மரத்துக்கு எப்படி வேர் இருக்குமோ, அது எப்படி நிலத்திலுள்ள நீரை எடுத்துக்கொண்டு வளருமோ அப்படித்தான் இவையும் வளர்கின்றன.

இதனருகில் கால்நடைகள் செல்வதே இல்லை என்று ஒரு குற்றச்சாட்டும் இருக்கிறது. பல ஊர்களில் கால்நடைகளுக்கான கொட்ட கையாகவே இருப்பவை இந்த மரங்கள்தான். இதை இப்போதும் யார் வேண்டுமானாலும் நேரடியாகவே பார்க்கலாம். இதன் காயைக்கூடக் கால்நடைகள் நன்றாக உண்ணும்.

ஆகக்கூடி இந்த மரத்தை ஆபத்தான மரம் என்று வளரும் இடத்தை வேறு விவசாயத் தேவைக்காகப் பயன்படுத்த நினைத்தால் அழிக்கலாம். ஆனால், மொத்தமாக அழித்தால்தான் தமிழகத்தையே காப்பாற்ற முடியும் என்கிற நோக்கில் அழிக்கத் தேவையில்லை.

தென் மாவட்டங்களில், எரிகரி தயாரிக்கும் தொழில் மக்களின் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. மண் அரிப்பைத் தடுப்பது, புயல் மூலம் ஏற்படும் அழிவைத் தடுப்பது, கால்நடைகளுக்கு இதன் காய்களை உணவாகப் பயன்படுத்துவது எனப் பல பயன்பாடுகள் இருக்கின்றன. சீமைக்கருவேல மரத்திலிருந்து உயிர்க்கரி (பையோச்சார்) என்ற மண்வளப் பொருள் தயாரிக்கலாம் என்பதும் அது மண்ணில் உள்ள கரிக்கு (கார்பனுக்கு) ஒரு மாற்றாகப் பயன்படுகிறது என்பது புதிய செய்தியாகும்.

உள்நாட்டில் எந்தவித இடுபொருளும் இடாமல் உற்பத்தியாகும் ஒரே உயிர் ஆற்றல் எரிபொருள் சீமைக் கருவேல மரம் மட்டுமே. இன்னும் வேளாண் உற்பத்தியில் பெரும் பங்காற்றும் தேனீக்கள் நிலைத்திருக்க உதவுவதும் சீமைக்கருவேல் மட்டுமே. உள்நாட்டுத் தாவரங்கள், நிலத்தடி நீர் குறைவாக உள்ள பகுதிகளில் சீமைக்கருவேல மரங்களைக் காண முடியவில்லை.

இதை அழிப்பதற்குக் கூறப்படும் காரணங்கள் அனைத்தும் அறிவியலுக்கு ஒவ்வாத, பொய்யான புனைவுகளாகவே உள்ளன. கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் இந்த மரங்களை அதிகம் காண முடியாது. ஆனால், அந்த மாவட்டங் களில்தான் நிலத்தடி நீர் அதலபாதாளத்தில் உள்ளது. அப்படியென்றால், சீமைக்கருவேல மரங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றன என்பதில் உண்மையில்லைதானே. எங்கெல்லாம் தீவிர வேளாண்மை நடைமுறை யில் உள்ளதோ... அங்கெல்லாம் நிலத்தடி நீர் குறைந்துள்ளது என்பதுதான் உண்மை.

நீதிமன்றங்களும் சரி, இந்த அரசும் சரி உடனடியாகச் செயல்படுத்த வேண்டியது, மரங்களின் மீதான மரணதண்டனையை அல்ல; அவற்றை முறையாகப் பயன் படுத்துவதற்கான புதிய தொழில்நுட்பங்கள், அதற்கான ஆய்வுகள் மற்றும் திட்டங் களைத்தான் முன்னெடுக்க வேண்டும்‘‘ என்று அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

தேவை-தகுதியான குழு!

ஜூன் முதல் வாரத்தில் இந்த வழக்கின் விசாரணை மீண்டும் உயர் நீதிமன்றத்தில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊர்முழுக்க எதிர்ப்புக்குரல் கேட்கிறது... நீதிமன்றமும் உறுமுகிறது என்பதற்காக எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவெடுத்து, சீமைக்கருவேல மரங்களுக்கு மரண தண்டனையை வழங்குவது ஆபத்தான தாகக்கூட முடியலாம்.

தமிழக அரசின் சார்பில் ஒரு குழுவை அமைத்து, தீவிரமாக ஆய்வை மேற்கொள் ளலாம். அதில் தகுதி வாய்ந்த அறிஞர்கள், விவசாயிகள், சீமைக்கருவேல மரப் பயன் பாட்டாளர்கள், எதிர்ப்பாளர்கள் என்று அனைவரையும் இணைத்து நேரடியாக ஓர் ஆய்வை மேற்கொள்ளலாம். அந்த ஆய்வு முறையாக நடத்தப்பட்டு, அதிலிருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கலாம்.

உதாரணமாக, ‘அந்நிய மரங்கள்’ என்கிற பெயரில் வகைப்படுத்தப்பட்டிருக்கும் பல்வேறு தாவரங்களில் ஒன்றுதான் இந்தச் சீமைக்கருவேல மரம். இதன் மீது காட்டப்படும் வெறுப்புணர்வு எந்த அளவுக்குச் சரி என்று உறுதிப்படுத்திக் கொள்ளாமலே முடிவுகள் எடுத்துவிடக் கூடாது என்பது மட்டும்தான் பசுமை விகடனின் ஒரே நோக்கம். முறையான ஆய்வுகளே இல்லாமல் ஒரு மரத்தைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிக் கொல்லப் பார்ப்பது, நாளைய சமூகத்துக்கு நாம் செய்யக்கூடிய கேடாகவே மாறக்கூடும்- ஜாக்கிரதை!

முனைவர் வெங்கடாசலம் பேட்டி, கள ஆய்வு குறித்தான விரிவான கட்டுரையைப் படிக்க பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.

https://www.vikatan.com/government-and-politics/environment/seemai-karuvelam-tree-is-dangerous-for-land