தமிழக விவசாய சங்கங்களின் தலைவர்கள் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் 42 விவசாய சங்கங்களினுடைய தலைவர்கள் கலந்துகொண்டனர். தமிழக விவசாய சங்கங்களின் தலைவரும், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவருமான கே.வி.இளங்கீரன் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், காவிரியில் மேக்கேதாட்டூ எனும் இடத்தில் அணைக்கட்டு கட்டக் கூடாது. நெல்லுக்கு ரூ.2,500, கரும்புக்கு ரூ. 4,500 என விவசாய விலை பொருள்களுக்கு நியாயவிலை வழங்க வேண்டும். தலைவாசலில் அமைந்துள்ள கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் பயிற்சி மையத்தை செயல்படுத்த உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
வேளாண் சட்டங்களில் வேளாண் சார்ந்த பொருள்களுக்கு 12 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாக மத்திய அரசு சமீபத்தில் உயர்த்தியிருக்கக் கூடிய ஜி.எஸ்.டி வரி உயர்வைக் குறைக்க வேண்டும் போன்ற தீர்மானங்களை நிறைவேற்றினர்.
ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளுடைய கோரிக்கைகளான விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்கும் பிரச்னை, மீத்தேன் பிரச்னை, உரத்தட்டுபாடு பிரச்னை, காவிரி, நெல் கொள்முதல் பிரச்னை, குண்டாறு, வைகை ஆறு, கிருதுமால் நதி இணைப்பு போன்ற பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர்.
வீட்டு மனைகள், குடியிருப்புகளுக்கு போர் போட்டு நிலத்தடி நீர் அனுமதி வாங்க வேண்டும், பணம் கட்ட வேண்டும் என்றெல்லாம் தெளிவில்லாமல், குழப்பமான அறிவிப்பை மத்திய அரசின் ஜல்சக்தி இயக்கம் வெளியிட்டுள்ளது. இதை இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. இதனால் விவசாயிகள் போர்வெல் போட்டு நிலத்தடி நீர் பயன்படுத்துவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய சூழல் உருவாகும். எனவே, இந்த அபாயத்தைத் தடுக்க டெல்லியில் ஜல்சக்தி இயக்கக அலுவலகத்துக்கு முன்பாக மாபெரும் போராட்டத்தை விவசாயிகள் நடத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினர்.

இதற்காக அடுத்த வாரம் தமிழக முதல்வரையும் பிரதமரையும் சந்தித்து பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்தனர்.