நாட்டு நடப்பு
Published:Updated:

சோலார் மின்சாரம் மூலம் விவசாயிக்கும் வருமானம்..!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு

மரத்தடி மாநாடு

சுமை போர்வை போர்த்தியது போல் பச்சை பசேல் நெல் வயல் கண்ணுக்குக் குளிர்ச்சியைக் கொடுத்தது.

தலையில் கூடையுடன் ‘காய்கறி’ கண்ணம்மா முன்னே நடக்க, குடையைப் பிடித்தபடி ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி, அவருக்குப் பின்னால் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம் என மூவரும் வரப்பு வழியாக நடந்து வந்துகொண்டிருந்தனர்.

‘‘தேர்தல் வாக்குறுதியில சொன்னபடி வேளாண் பட்ஜெட் தாக்கல் பண்ணியிருக்கு தமிழ்நாடு அரசு. அதே மாதிரி கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை, நேரடி நெல்கொள்முதல் நிலைய ஊழல் விவகாரம் இதுக்கெல்லாம் தீர்வு கண்டா நல்லாயிருக்கும்’’ என்று அன்றைய மாநாட்டைத் தொடங்கி வைத்தார் ஏரோட்டி.

‘‘இப்பதான வந்திருக்காங்க... போகப்போக ஒவ்வொண்ணா செய்வாங்கய்யா... அவசரப்படாத’’ என்று சிரித்த வாத்தியார், ‘‘கரும்பு விவசாயிகள் நிலுவைத்தொகை தொடர்பா சட்டமன்றத்துல பேசுன பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், ‘கரும்பு நிலுவைத் தொகையை நேரடியா விவசாயிகள் வங்கிக் கணக்குல போடணும். அப்பதான் இடைத்தரகர்கள் இல்லாம நேரடியா விவசாயிகளுக்குப் பணம் கிடைக்கும். எல்லாத் துறைகளையும் டிஜிட்டல் மயமாக்குவோம்னு சொல்றது அப்பதான் நடக்கும்’னு சொன்னவங்க, ‘விளைபொருள் களுக்கு அதிக விலை கிடைக்கச் செய்வதற்காக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மத்திய அரசு ‘இ-நாம்’னு ஒரு திட்டத்தைச் செயல்படுத்திட்டு இருக்குது. அந்தத் திட்டத்தோடு இந்தத் திட்டத்தையும் சேர்த்தால் விவசாயிகளுக்கு ஆண்ட்ராய்டு போன் கொடுக்கலாம்’னு சொல்லி இருக்காங்க’’ என்றார் வாத்தியார்.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு


‘‘அப்ப நமக்கும் ஆண்ட்ராய்டு போன் கிடைக்க வாய்ப்பு இருக்குன்னு சொல்றீங்க?’’ சிரித்துக்கொண்டே கேட்டார் காய்கறி.

‘‘அட நீ வேற... ஏற்கெனவே கஜானா காலியா இருக்குன்னு வெள்ளை அறிக்கையில சொல்லிட்டாங்க. குடும்பத்துக்கு 2,63,976 ரூபாய் கடன்ல இருக்கோம்னு சொல்லி யிருக்காங்க. இப்ப போன் கொடுக்குறோம்னு கடன் தொகையை இன்னும் அதிகமாக்கிடப் போறாங்க’’ வெள்ளந்தியாகச் சொன்ன ஏரோட்டி தொடர்ந்து,

“நடிகர் வடிவேலு ஒரு படத்துல கிணத்தைக் காணோம்னு சொன்ன மாதிரி, மின்சார மந்திரி, நிலக்கரியைக் காணோம்னு சொல்றாரு. அதுவும் கொஞ்சநஞ்சமல்ல... 2,38,000 டன் காணோமாம். இதென்ன பாக்கெட்டுல மறைச்சுவெச்சு கொண்டு போற பொருளா, 10 டன் லாரியில கொண்டு போனாக்கூட 23,800 லாரிகள்ல கொண்டு் போற நிலக்கரி எப்படிய்யா காணாமப் போகும். இதுல பழைய மந்திரி, தங்கமணி, “நான் மந்திரியா பதவி ஏற்குறதுக்கு முன்னாடியே அது காணாமப் போயிடுச்சுனு சொல்றாரு. அப்பவும் அவங்க ஆட்சிதானே இருந்துச்சு. இவரு மந்திரியான பிறகாவது அதைக் கண்டுபிடிக்க முயற்சி எடுத்திருக் கணுமில்ல... எல்லாமே அரசியல் ஆகிப்போச்சு’’ வேதனையோடு சொன்னார்.

ஒரு யூனிட்டுக்கு 2.28 ரூபாயும், ஊக்கத் தொகையா ஒரு யூனிட்டுக்கு 0.50 காசும் கொடுக்குறாங்களாம். ஆக மொத்தம் ஒரு யூனிட்டுக்கு 2.78 ரூபாய் விவசாயிக்குக் கிடைக்கும்.

‘‘லட்சக்கணக்கான டன் நிலக்கரியை திருடுவாங்களாம்... விசாரணை பண்ணித் தப்பு யார் செஞ்சதுன்னு கண்டுபிடிப் பாங்களாம். பாசனத்துக்கு வாய்க்கால்ல தண்ணி எடுக்குறவங்கள திருடர்கள்னு சொன்ன நிதியமைச்சர், இவங்களைப் பற்றி ஏன் ஒண்ணும் சொல்லாம இருக்காரு? ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் பூசாரி தானே?’’ ஆத்திரமாகச் சொன்ன காய்கறி,

‘‘சரி, அதவிடுங்க வாத்தியாரே, சூரிய ஒளி மின்சாரம் தயாரிச்சு விவசாயிகளும் வருமானம் பார்க்கலாம்னு சொல்றாங்க... அதைப் பத்தி கொஞ்சம் சொல்லுங்க’’ என்றார்.

சோலார் மின்சாரம்
சோலார் மின்சாரம்


‘‘தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை மூலமா மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து சோலார் மின்சக்தி திட்டம்னு ஒரு திட்டத்தைச் செயல்படுத்திட்டு இருக்காங்க. 11 கிலோவாட் சோலார் அமைப்பை அமைக்க 5 லட்சம் ரூபாய் செலவாகுதாம். அதுல 60 சதவிகித மானியம் கொடுக்குறாங்க. அதாவது, 3 லட்ச ரூபாய் மானியமா கிடைக்கும். விவசாயிக கட்ட வேண்டிய பணம் 2 லட்சம் ரூபாய். இதிலும் 1.5 லட்ச ரூபாய் பேங்க்ல கடனாக் கொடுக்குறாங்களாம். நம்ம கையில இருந்து 50,000 ரூபாய் முதலீடு செஞ்சா போதும். இந்த அமைப்பு மூலமா கிடைக்குற மின்சாரத்துல பாசனத்துக்காக மோட்டார் ஓட்டுனது போக மிச்சமாகுற மின்சாரத்தை மின்வாரியத்துக்குக் கொடுக்கலாம். அவங்க ஒரு யூனிட்டுக்கு 2.28 ரூபாயும், ஊக்கத் தொகையா ஒரு யூனிட்டுக்கு 0.50 காசும் கொடுக்குறாங்களாம். ஆக மொத்தம் ஒரு யூனிட்டுக்கு 2.78 ரூபாய் விவசாயிக்குக் கிடைக்கும். பாசனத்துக்குப் பயன்படுத்தியது போக ஒரு நாளைக்கு 25 யூனிட் மின்சாரத்தை மின்வாரியத்துக்குக் கொடுத்தாலும் மாசம் 750 யூனிட். ஒரு யூனிட் 2.78 ரூபாய் வீதம் 2,085 ரூபாய் கிடைக்கும். வருஷத்துக்கு 25,020 ரூபாய் வருமானமாக் கிடைக்கும். நாம அமைக்கிற கிலோ வாட் பொறுத்து இந்த வருமானம் கூடவும் குறையவும் வாய்ப்பிருக்கு. இதை பத்தி கூடுதல் தகவல் ‘புறாபாண்டி’ பகுதியில கூட இடம் பிடிச்சிருக்கு’’ என்றார் வாத்தியார்.

‘‘வருமானத்தை விடுங்க வாத்தியாரே... கரன்ட் எப்ப போகும்... எப்ப வரும்னே தெரியல. மோட்டார் போடமுடியாம தவிச்சுப்போறோம். அதுக்கு பேசாம சோலார் அமைச்சிட்டா, தண்ணி பாய்ச்சுறதுக்குப் பிரச்னையில்லாமப் போயிடும்ல’’ என்று சொன்ன ஏரோட்டி,

“நான் போய் மாட்டைப் பிடிச்சுட்டு வர்றேன்’’ எனக் கிளம்பினார்.

“நானும் போய் பொழப்பைப் பார்க்குறேன்’’ எனக் காய்கறியும் கிளம்ப, வீட்டை நோக்கி நடையைக் கட்டினார் வாத்தியார்.