நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

வெங்காயச் சூதாட்டம்... பயனடையும் பணமுதலைகள்!

வெங்காயம்
பிரீமியம் ஸ்டோரி
News
வெங்காயம்

பிரச்னை

வெங்காயத்துக்கு இந்திய அளவில் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்ட தால், அதன் விலை அதிகரித்துக் கொண்டே போகிறது. சின்ன வெங்காயம் ரூ.120-க்கும் பெரிய வெங்காயம் ரூ.90-க்கும் விற்பனை ஆகிறது.

இந்நிலையில்தான் மக்களின் வெங்காயத் தேவையைப் பூர்த்திச் செய்ய, வெளிநாடு களிலிருந்து முதல் கட்டமாக, 7,000 டன், இரண்டாம் கட்டமாக 25,000 டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இறக்குமதி விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. ‘இதன் பின்னணியில் பெரும் நிறுவனங் களின் வணிகச் சூதாட்டம் இருக்கிறது, விலையேற்றத்தால் விவசாயிகளுக்கு எந்தப் பலனும் இல்லை’ என்ற விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன. இது தொடர்பாகச் சிலரிடம் பேசினோம்.

கார்த்தி
கார்த்தி

பெரம்பலூர் மாவட்டம் உப்போடை கிராமத்தைச் சேர்ந்த வெங்காய சாகுபடி விவசாயி கார்த்தி, ‘‘இந்த வருஷம் வெங்காய உற்பத்தி ஓரளவுக்குக் குறைஞ்சிருக்குறது உண்மைதான். ஆனா, பற்றாக்குறையோ ரொம்ப அதிகமா இருக்கு. ஏன் இவ்வளவு பெரிய இடைவெளினுதான் தெரியலை. எங்க பகுதியில சின்ன வெங்காயம் அதிகமா பயிர் பண்ணுவோம். சரியான மழை இல்லாததால, இந்த வருஷம் மகசூல் குறைஞ்சது. ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள்ல பெரிய வெங்காயம் சாகுபடி செய்றாங்க. அந்தப் பகுதிகள்ல அதிகமா மழை பெய்ஞ்சதுனால, உற்பத்தி குறைஞ்சது. இந்திய அளவுல ஒட்டுமொத்தமா பார்த்தா, 20 சதவிகிதம்தான் வெங்காய உற்பத்தி குறைஞ்சிருக்க வாய்ப்பிருக்கு. ஆனா, கொரோனா பிரச்னையினால, ஹோட்டல்கள், பள்ளி, கல்லூரி ஹாஸ்டல்களெல்லாம் பெரும்பாலும் மூடியே கிடக்கு. வீடுகளைவிட, ஹோட்டல், ஹாஸ்டல்கள்லதான் வெங்காயம் அதிகமா பயன்படுத்துவாங்க. அதெல்லாம் மூடிக் கிடக்குறதுனால, வெங்காயத்தோட தேவை பெருமளவு குறைஞ்சிருக்கு. நிறைய பேர் கலந்துக்கக்கூடிய கல்யாணம், காது குத்து மாதிரியான விசேஷங்கள், கோயில் திருவிழாக்களும் அதிகம் நடக்கலை. இது மாதிரியான காரணங் களாலயும் வெங்காயத் தோட தேவை பெரிய அளவுல குறைஞ்சிருக்கு.

இப்படிப்பட்ட சூழ்நிலையில வெங்காயத்துக்குப் பெரிய அளவுல பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை. விவசாயிகளும் கண்டிப்பா பதுக்கி வைக்க வாய்ப்பே இல்லை. காரணம் விளைஞ்சதை உடனே வித்துக் காசு பார்த்தாதான் வாழ்க்கை ஓட்ட முடியும். சின்ன வியாபாரிகளாலும் பதுக்கி வைக்க முடியாது” என்றார்.

வேளாண் பொருளியல் ஆய்வாளர் கி.வெங்கட்ராமன், ‘‘அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலிலிருந்து வெங்காயம் உள்ளிட்ட இன்னும் பல விளைபொருள்களை மத்திய அரசு நீக்கியது. இதனால் கடும் பாதிப்புகள் ஏற்படும் என ஆரம்பத்திலிருந்தே பல தரப்பினரும் எதிர்த்தோம். அதன் பாதிப்புகள் இப்போதே தெரியத் தொடங்கிவிட்டது. வெங்காயம் மட்டுமல்ல, உருளைக்கிழங்கு உள்ளிட்ட இன்னும் பல விவசாயப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு சமயத்திலும்கூட, மற்ற துறைகளையெல்லாம் விட வேளாண் உற்பத்தி ஓரளவுக்கு இயல்பாகவே நடந்தது. அப்படி இருக்கும்போது எப்படி வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவற்றுக்கு இந்தளவுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு என்பது செயற்கையானது. கோடிக்கணக்கில் பணப் புழக்கத்தில் உள்ள பெரு வணிகர்கள், வெங்காயத்தைப் பதுக்கி வைத்து, செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி, அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.

வெங்காயச் சூதாட்டம்... பயனடையும் பணமுதலைகள்!

இந்தத் தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி, வெளிநாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய, சிலருக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இவர்கள் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்கள். விலையேறினாலும், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்தாலும் பயன் அடைவது, வியாபார சூதாட்டக்காரர்கள்தாம். இவர்கள் செய்வதற்குப் பெயர் வணிகம் அல்ல. கடத்தல் என்றுதான் சொல்ல வேண்டும். உணவுப்பொருள் பதுக்கல், செயற்கையான தட்டுப்பாடு, விலையேற்றம் என்ற வணிகச் சூதாட்டம் கடந்த காலங்களிலும் நடைபெற்றுள்ளது. ஆனால், முன்பு அது சட்டவிரோதமாக நடந்தது. தற்போது அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலிலிருந்து, அரிசி, கோதுமை, வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பல விளைபொருள்கள் நீக்கப்பட்டுள்ளதால், இனி வணிகச் சூதாட்டம் சட்டபூர்வமாக நடக்கும்’’ என்றார்.

கி. வெங்கட்ராமன், ரமேஷ் கருப்பையா,
கி. வெங்கட்ராமன், ரமேஷ் கருப்பையா,

இயற்கை வேளாண் செயற்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா, ‘‘ஒரு வருடத்துக்கு எந்தெந்த விளைபொருள்கள் எவ்வளவு தேவை, எவ்வளவு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது, இயற்கைச் சீற்றங்களால் எவ்வளவு பற்றாக்குறை ஏற்படும், அதைத் தீர்க்க, கூடுதலாக எவ்வளவு விளைவிக்கலாம், அதை எப்படிப் பாதுகாத்து, பரவலாக விநியோகிக்கலாம் என்பதை யெல்லாம் மத்திய, மாநில அரசுகள் முன்கூட்டியே தீர்மானிக்க வேண்டும். இதற்கேற்ப விவசாயிகளை முறைப்படுத்தி, அதற்கேற்ப ஊக்கப்படுத்த வேண்டும்.

வெங்காயம், காய்கறிகள் விலையேற்றத்தால், சாதாரண மக்கள் கடுமையாகப் பாதிக்கப் படுகிறார்கள். விலையேற்றத்தால் பெரும் பணமுதலைகள் மட்டுமே பயனடைகிறார்கள். வெங்காயம் உற்பத்தி செய்யும் விவசாயிகள், அதை உடனடியாக விற்பனை செய்துவிடாமல், வெங்காயத்தைப் பட்டறை கட்டிப் பாதுகாத்து, கூடுதலான விலை கிடைக்கும்படிப்படியாக விற்பனை செய்யலாம்’’ என்றார்.

வெங்காயச் சூதாட்டத்துக்கு எப்போது நிரந்தரத் தீர்வு வரும்.