நாட்டு நடப்பு
Published:Updated:

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2023-24 - முக்கிய அம்சங்களும்... விவசாயிகளின் எண்ணங்களும்!

பட்ஜெட் உரையை வாசிக்கும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
News
பட்ஜெட் உரையை வாசிக்கும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

அறிவிப்பு

*தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், 2023-24-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை மார்ச் 21-ம் தேதி தமிழகச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்...

* ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்கப்படும். சிறுதானிய உணவுத் திருவிழாக்கள் நடத்தப்படும். 5 மாவட்டங்களில் சிறுதானிய மண்டலங்கள் விரிவாக்கம் செய்யப்படும்.

* சிறுதானிய விவசாயிகளை ஒருங்கிணைத்துப் பயிற்சிகள் வழங்கப்படும். அரசு விடுதிகளில் சிறுதானிய உணவுகள் அளிக்கப்படும். கம்பு, கேழ்வரகு ஆகியவை விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்யப்பட்டுக் கல்வி நிலையங்களுக்கு வழங்கப்படும்.

* கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தில் 2,504 கிராமங்களில், 230 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இலவச தென்னங்கன்றுகள், மரக்கன்றுகள் உள்ளிட்டவை வழங்கப்படும். தென்னை மரங்கள் அதிகம் இல்லாத கிராமங்களில் ஒரு குடும்பத்துக்குத் தலா 2 தென்னை கன்றுகள் என 2.15 லட்சம் கன்றுகள் 254 கிராம பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்படும்.

* பாரம்பர்ய நெல் ரகங்களைப் பாதுகாக்கும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும். கம்பு, குதிரைவாலி பயிர்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்.

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் - ஸ்டாலின்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் - ஸ்டாலின்

* பயிர் விளைச்சல் போட்டி, சிறுதானியத்துக்கும் நீட்டிக்கப்படுகிறது.

* விவசாயிகள் அங்கக சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கை 10,000 ஹெக்டேருக்கு விரிவுபடுத்தப்படும். இதற்கு 26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.

* அங்கக வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.

* நீலகிரி மாவட்டத்தில் அங்கக வேளாண்மையை ஊக்கப்படுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 50 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், அங்கக சான்றிதழ் பெறுதல், இயற்கை அங்காடி தொடங்குதல் உள்ளிட்டவற்றுக்கு நிதி ஒதுக்கப்படும்.

* நம்மாழ்வார் அங்கக வேளாண் விருது வழங்கப்படும். இந்த விருது குடியரசுத் தினத்தன்று வழங்கப்படும்.

* சிறுதானிய உற்பத்திக்கு 82 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* தேக்கு போன்ற உயர் ரக மரக்கன்றுகள் மாநிலம் முழுவதும் வழங்க 15 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* மாற்றுப்பயிர் சாகுபடிக்கு 14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* ஆதி திராவிட விவசாயிகளின் நலன்களுக்காக 14 கோடி நிதி ஒதுக்கீடு. பழங்குடியின விவசாயிகளின் நலன்களுக்கு 1 கோடி நிதி ஒதுக்கீடு.

* வேளாண் கருவிகள் வழங்க 15 கோடி நிதி ஒதுக்கீடு.

* பயறு வகைப் பெருக்குத் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதில் கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களுக்கு முன்னுரிமை. குறைந்தபட்ச ஆதார விலையில் பயறு வகைகள் கொள்முதல் செய்யப்படும்.

* எண்ணெய் வித்துப் பயிர்கள் உற்பத்தி செய்ய 31 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

* திருவண்ணாமலை, ஈரோடு, திருச்சி, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களை ஒருங்கிணைத்து எண்ணெய் வித்துச் சிறப்பு மண்டலங்கள் உருவாக்கப்படும்.

* தென்னை வளர்ச்சி மேம்பாடு என்ற பெயரில் புதிய திட்டம் தொடங்கப்பட்டு, இதற்கு 20 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

* கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, வட்டியில்லா கடன் தர 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* கரும்பு டன்னுக்கு ரூ.195 ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

* பாரம்பர்ய நெல் ரகங்களைப் பாதுகாத்துப் பரவலாக்கம் செய்ய, ரூ.50 லட்சம் ஒதுக்கப்படும்.

* கோவையில் கறிவேப்பிலை சாகுபடியை அதிகரிக்க 2.54 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* மல்லிகை சாகுபடிக்கு மதுரையில் தொகுப்பு ஒன்று தொடங்கப்படும். மல்லிகை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்கப்படுத்த, 7 கோடி நிதி ஒதுக்கீடு. தரமான மல்லிகைச் செடிகளை ராமநாதபுரத்தில் உற்பத்தி செய்து விரைவில் வழங்கப்படும்.

* பண்ருட்டி பலாவுக்கு ஒருங்கிணைந்த தொகுப்பு ஏற்படுத்தப்படும். பலா தொடர்பாகப் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்தப்படும். புதிய ரகங்களைப் பயன்படுத்த விவசாயிகள் ஊக்கப்படுத்தப்படுவார்கள்.

* பண்ருட்டி பலா சாகுபடி செய்யும் விவசாயிகள், மதிப்புக்கூட்டலில் ஈடுபட ஊக்கப்படுத்தப்படுவார்கள்.

* கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க 3 கோடி நிதி ஒதுக்கீடு.

* ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மிளகாய் உற்பத்தியை அதிகரிக்க மிளகாய் மண்டலமாக மாற்றபடும். இப்பகுதிகளில் உள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றபட்டு மிளகாய் பயிர் செய்யப்படும்.

* 21 மாவட்டங்களை உள்ளடக்கி, பலா சாகுபடியை 2,000 ஹெக்டேராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* கரும்பு சாகுபடி மேம்பாடு திட்டத்துக்கு ரூ.10 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* முருங்கை சாகுபடி, மதிப்புக்கூட்டல் மற்றும் ஏற்றுமதிக்கு 11 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* தக்காளி, வெங்காயம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் வகையில் அரியலூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இதற்கான சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த 29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* சௌசௌ, பட்டாணி, பீன்ஸ் உள்ளிட்ட மலைப்பிரதேச காய்கறிகள் உற்பத்தியை அதிகரிக்கப் பின்னேற்பு மானியமாக 2.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* டிராகன் ப்ரூட், அவகடோ, பேரீச்சை உள்ளிட்ட சிறப்புப் பயிர்கள் சாகுபடியை அதிகரிக்க 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

* நுண்ணீர் பாசனம் திட்டத்துக்கு 450 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* கோடையில் குளிர்ச்சியான பழங்களும்... குளிர்காலங்களில் வெப்பத்தை அதிகரிக்கும் பழங்களும் மக்களுக்கு எளிதாகக் கிடைக்க... 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, விவசாயிகளுக்குப் பழமரக்கன்றுகள் வழங்கப்படும்.

* ஏற்காடு அரசு தாவரவியல் பூங்கா சீர் செய்ய 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* 150 முன்னோடி விவசாயிகளுக்கு... இஸ்ரேல், மலேசியா, பிலிப்பைன்ஸ், எகிப்து உள்ளிட்ட வெளிநாடுகளில் தொழிற்நுட்ப பயிற்சிகள் வழங்க 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* பாரம்பர்ய காய்கறிகளைப் பரவலாக்க, மாவட்டம்தோறும் விதைத் திருவிழாக்கள் நடத்தப்படும்.

* பாரம்பர்ய காய்கறிகளின் விதைகளைப் பாதுகாக்கும் விவசாயிகளுக்குப் பரிசுதொகை வழங்கப்படும். மீட்கப்பட்ட விதைகள் தோட்டக்கலை பண்ணைகளில் மறு உற்பத்தி செய்யப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்படும்.

* பவானி ஆற்றுப் படுகையில் காய்கறிகள், மஞ்சள் பயிரிட 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

* வாழை உற்பத்தியில் தேனி மாவட்டம் முதலிடத்தில் இருக்கிறது. அங்கு வாழை உற்பத்தியை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* முந்திரி சாகுபடியை 550 ஹெக்டேராக அதிகரிக்கவும் உயர் விளைச்சல் செடிகளை விவசாயிகள் பயிர் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்குப் பண்ணைச் சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* பனை மதிப்புக்கூட்டல் தொழிலுக்கு 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

* தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிக்குளம் வேளாண்மைக் கல்லூரியில் பனை ஆராய்ச்சிக்கு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* சிறு குறு விவசாயிகளுக்கு மானிய விலையில் இயந்திரங்கள் வழங்குவதற்கான முன்னுரிமை திட்டம் செயல்படுத்தப்படும்.

* வேளாண் இயந்திரங்கள், மதிப்புக்கூட்டு இயந்திரங்களை மானியத்தில் வழங்க 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

* வேளாண் கருவிகள் பழுது பார்க்க, கிராமப்புற இளைஞர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படும்.

* இ-வாடகை செயலி மூலம் குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு டிராக்டர் போன்ற வாகனங்கள் வழங்கப்படும்.

* அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தில் ஒரு கிராம ஊராட்சிக்கு 2 பவர் டில்லர் வீதம் வழங்கப்படும்.

* ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் சேமிப்புக் கிடங்குகள் உருவாக்க 36 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* பண்ருட்டி பலா, சாத்தூர் வெள்ளரி, அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, வேப்பங்குளம் தென்னை, வீரமாங்குடி அச்சு வெல்லம், விளாத்திகுளம் மிளகாய், கோட்டை மலை கத்திரி, மதுரை செங்கரும்பு உள்ளிட்ட பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

பட்ஜெட் உரையை வாசிக்கும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
பட்ஜெட் உரையை வாசிக்கும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

* 9 கோடி ரூபாய் நிதியில் உழவர் சந்தைகள் புதுப்பிக்கப்படும்.

* செங்காந்தள் மலர் விதைகள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் விற்பனை செய்யப்படும்.

* உழவர் சந்தைகளுக்கு வரும் விவசாயிகளுக்குச் சிற்றுண்டி, மூலிகை சூப் வழங்கப்படும்.

* கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள பூச்சி அருங்காட்சியகத்தை கணினி மயமாக்க 3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிள்ளிக்குளம் வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வாழைக்கான ஆராய்ச்சிக்காக 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

* கால்நடைக்கான தீவன உற்பத்தியை பெருக்க 55 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஆறுகளில் நாட்டின மீன் வகைகளின் உற்பத்தியைப் பெருக்க 1.2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* தடுப்பணைகள், கால்வாய், கல் வரப்பு, மண் வரப்பு, தனிநபர் கிணறு, பொதுக்கிணறுகள், தோட்டக்கலை பயிர்கள் நடவு செய்தல் ஆகிய பணிகளுக்கு... 100 நாள் வேலையாள்கள் பயன்படுத்தப்படுவார்கள்.

* ஒரு குவிண்டால், சன்ன ரக நெல்லுக்கு ரூ.100, பொது நெல்லுக்கு ரூ.75 கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும்.

* ரூ.14,000 கோடி கூட்டுறவுக் கடன் வழங்கப்படும்.

* தமிழ்நாட்டின் வனப்பரப்பை அதிகப்படுத்த சந்தனம், செம்மரம், ஈட்டி மரக்கன்றுகள் தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. வேளாண் காடுகள் திட்டத்தின் கீழ் விவசாயிகள் வருமானம் எடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* காவிரி டெல்டா மாவட்டங்களில் வேளாண் தொழிற்சாலைகள் உருவாக்கப்படும். தஞ்சாவூர் வட்டார அளவில் புத்துயிர் மையம் அமைக்கப்படும். திருச்சி-நாகப்பட்டினம் வேளாண் தொழில் பெருந்தடம் அமைக்க 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* அனைத்து மாவட்ட ஆட்சியரகங்களிலும் சிறுதானிய சிற்றுண்டி உணவகங்கள் தொடங்கப்படும். உழவர் சந்தைகளில் தொன்மைசார் உணவகங்கள் அமைக்கப்படும்.

ஏமாற்றம் அளிக்கிறது!

தமிழகக் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன்: ‘‘ரேஷன் கடைகளில் சிறுதானியம் வழங்கும் அறிவிப்பு பாராட்டுக்குரியது. அதேசமயம் கரும்புக்கு டன்னுக்கு 4,000 ரூபாய், நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு 2,500 வழங்கப்படும் எனத் தி.மு.க தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதி இந்தப் பட்ஜெட்டில் நிறைவேற்றப்படாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.’’

எதிர்பார்த்தோம்!

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி: ‘‘தேங்காய்க்கு லாபகரமான விலை கிடைக்காமல், தென்னை விவசாயிகள் மிகுந்த நஷ்டத்தைச் சந்தித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில்... ரேஷன் கடைகளில் பாமாயிலுக்குப் பதிலாகத் தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கான அறிவிப்பு இந்தப் பட்ஜெட்டில் கண்டிப்பாக இடம்பெறும் என எதிர்பார்த்தோம். மிகுந்த ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. பால் கொள்முதல் விலை உயர்த்தப்படாததும் வருத்தம் அளிக்கிறது.’’

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2023-24 - முக்கிய அம்சங்களும்... விவசாயிகளின் எண்ணங்களும்!

வரவேற்புக்குரியவை!

தூத்துக்குடி கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வரதராஜன்: “முருங்கை, மிளகாய் வத்தலுக்குப் புவிசார் குறியீடு பெறுவதற்காக ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. பனைமர மேம்பாட்டு இயகத்துக்கு ரூ.2.65 கோடியும், பனைமரம் ஆராய்ச்சிக்காக ரூ.15 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்குப் பண்ணைச் சுற்றுலா என்ற அறிவிப்பின் மூலம் மாணவர்கள் விவசாயத்தொழிலை புரிந்துகொள்ள வாய்ப்பாக அமையும். இவை வரவேற்புக்குரியவை.’’

வருமானத்தைப் பெருக்க திட்டங்கள் இல்லை!

தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் அறச்சலூர் செல்வம்: ‘‘வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் வருவாயைப் பெருக்குவதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை. பாரம்பர்ய நெல் ரகங்களை இனத் தூய்மையுடன் பாதுகாக்கும் விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் மானியம் வழங்குவதாக அறிவித்திருப்பது பாராட்டத்தக்கது. அதேசமயம் விவசாயிகளுக்கு இனத்தூய்மை பயிற்சி அளிக்க வேண்டியது மிக முக்கியம். அங்கக வேளாண் திட்டத்தை மேம்படுத்த அந்த கொள்கையில் உள்ள செயல்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்.’’