மரபணு மாற்றப்பட்ட கடுகை கொண்டு வருவதற்கு இயற்கை விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்ட மரபணு மாற்றப்பட்ட பருத்தியால் கால்நடைகளும், சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனுடைய முழு பாதிப்புகளும் வெளிவராத நிலையில், இப்போது புதிய மரபணு மாற்று கடுகை கொண்டு வர மத்திய அரசு களத்தில் இறங்கியுள்ளது. அதாவது வணிக ரீதியாக சாகுபடி செய்வதற்கான களப் பரிசோதனைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் வரும் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு அனுமதி அளித்துள்ளது.
இதை எதிர்த்து நாடு முழுவதும் கண்டன குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்னை பெஷன்ட் நகர் கடற்கரையில் சுற்றுச்சூழல் மற்றும் சமூக அமைப்புகளால் மரபணு கடுகுக்கு எதிராகப் பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில் இயக்குநர் வெற்றிமாறன், பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் உள்ளிட்ட பிரபலங்களும், பூவுலகின் நண்பர்கள், களஞ்சிய பெண் விவசாயிகள் சங்கம், சேஃப் ஃபுட் அலையன்ஸ் (safe food alliance) சென்னை காலநிலைக்கான செயற்பாட்டு குழு, அகத்தி உள்ளிட்ட சுற்றுச்சூழல் இயக்கங்களும் பேரணியில் கலந்துகொண்டன.
இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், ``மரபணு மாற்றப்பட்ட விதைகள் அறிமுகம் செய்வதால் மரபு விதைகள் காணாமல் போகும் அபாயம் உருவாகியுள்ளது. மரபணு விதைகளால் மகசூல் அதிகமாகாது. இதனால் விவசாயிகளுக்கு எந்த வித லாபமும் இல்லை. மரபணு மாற்றப்பட்ட விதைகளால் பெருநிறுவனங்களுக்கு தான் லாபம் கிடைக்கும். எனவே மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு தமிழக அரசு அனுமதிக்க கூடாது" என்றார்.
பேரணியில் கலந்துகொண்ட பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்து மற்றும் பார்த்தசாரதி (Safe food alliance) பேசுகையில், ``2002, 2003-ம் ஆண்டுகளில் பேயர் என்ற நிறுவனம் மரபணு மாற்றப்பட்ட கடுகை அறிமுகப்படுத்த இருந்தது. மரபணு பொறியியல் மதிப்பீட்டுக்குழு இது குறித்து சில கேள்விகளை முன்வைத்தது. மரபணு மாற்றப்பட்ட கடுகின் விளைச்சல் என்ன? இவ்வகை கடுகுகள் மூலம் குறுக்கு மகரந்த சேர்க்கை ஏற்பட்டு மற்ற கடுக்குக்கு பாதிப்பு ஏற்படுமா?
மரபணு மாற்றப்பட்ட கடுகிற்கு உயிரியல் பாதுகாப்பு (bio safety) உள்ளதா? போன்ற கேள்விகளை மரபணு பொறியியல் மதிப்பீட்டுகுழு முன்வைத்தனர். இந்த கேள்விகளுக்கு சரியான பதில் கிடைக்காதாதால் அனுமதி மறுக்கப்பட்டது. மரபணு மாற்றப்பட்ட கடுகு மற்ற கடுகு வகைகளை விட குறைவான விளைச்சலை தரக்கூடியது. இவ்வகை கடுகுகள் குறுக்கு மகரந்த சேர்க்கைக்கு உள்ளாகிறது. இந்த முறை மரபணு பொறியியல் மதிப்பீட்டுக்குழுவே பரிந்துரைப்பதால் எதிர்க்கிறோம்” என்றனர்.
பேரணியில் கலந்துகொண்ட களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கம் பிரதிநிதி ஷீலு பேசுகையில், ``மரபணு மாற்றப்பட்ட பருத்தியை சாப்பிட்டு எத்தனையோ ஆடு மாடுகளின் கருப்பை பாதித்துள்ளன. மரபணு மாற்றப்பட்ட கடுகு அறிமுகம் செய்தால் கார்ப்பரேட் கையில் விதை சாம்ராஜ்யத்தை கொடுப்பதற்கு சமம். நம் உணவை கார்ப்பரேட் தீர்மானிக்கும். மறைந்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதாவும், கருணாநிதியும் மரபணுமாற்றப்பட்ட விதைகளை அனுமதிக்கவில்லை. அது போல இப்போதைய மாநில அரசும் அதே நிலைப்பாட்டை எடுக்க வேண்டும், கூடுதலாக இயற்கை வேளாண்மைக்கான கொள்கைகளை வரையறுக்க வேண்டும்” என்றார்.