ராமநாதபுரம் மாவட்ட பி.ஜே.பி தலைவர் தரணிமுருகேசனுக்கு சொந்தமான நிலம் எட்டிவயலில் உள்ளது. இந்தப் பண்ணைக்கு சென்ற ஆளுநர் ரவிக்கு, இயற்கை பானங்களான இளநீர், நுங்கு, பதநீர் வழங்கப்பட்டன. பின்னர், பண்ணை முழுவதையும் சுற்றி வந்தார். அங்கு இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், கீரைகள், பாரம்பர்ய அரிசி வகைகள் மற்றும் பண்ணையில் வளர்க்கப்படும் அரிய வகையான மாட்டினங்கள் மற்றும் கோழிப்பண்ணையைப் பார்வையிட்டார். பின்னர், பண்ணையில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

அதைத் தொடர்ந்து விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் விவசாயிகள் மத்தியில் பேசிய ஆளுநர் ரவி, ``நான் ஒரு விவசாய குடும்பத்தைச் சார்ந்தவன். விவசாயம் உன்னதமான தொழில். இந்தியா உணவு உற்பத்தியில் சிறந்த விளங்கி வருகிறது.
ஆயிரம் ஆண்டுகளாக விவசாயிகள் விவசாயத்தை பாரம்பர்யமாகக் காத்து இன்றைக்கு உலகத்துக்கே உணவு வழங்கும் அளவுக்கு உயர்ந்துள்ளது. விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபட வேண்டும். அந்தந்த மண் வளத்துக்கு ஏற்ற விவசாயத்தை மேற்கொள்ள முன் வர வேண்டும்.
நமது பாரத பிரதமர் விவசாய குடும்பத்தைச் சார்ந்தவர், விவசாயம் தெரிந்தவர், அதனால்தான் விவசாயிகளையும் விவசாயத்தையும் பாதுகாக்கும் திட்டங்களைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். பல வளர்ந்த நாடுகளால் நமக்கு பயனும் இல்லை. ஆனால், வளர்ந்து வரும் இந்தியா மற்ற நாடுகளுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது. குறிப்பாக, உலக நாடுகள் பலவும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து தாங்களே பயன் அடைந்தனர். ஆனால், இந்தியா கண்டு பிடித்த கொரோனா தடுப்பூசி உலக நாடுகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. `யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற வழியில் அனைத்து நாடுகளையும் ஒரு குடும்பமாக பிரதமர் பார்த்து வருகிறார். இன்னும் 25 ஆண்டுகளில் இந்தியா விவசாயத்தில் பல படிகள் முன்னேறி மற்ற நாடுகளுக்கு முன் உதாரணமாக இருக்கும்'' எனக் கூறினார்.

அதைத்தொடர்ந்து வைகை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பாக்கியநாதன் பேசும்போது, ``வடகிழக்கு பருவ மழை பொய்த்துப் போனதால் பயிர்கள் அனைத்தும் கருகிப் போயின. அதற்கான பயிர் இழப்பீடு கேட்டு நான்கு மாதங்களாகப் போராடி வருகிறோம். ஆனால், இதுவரை நிவாரணத் தொகை கிடைக்கவில்லை. எனவே, கால தாமதமின்றி பயிர் இழப்பீட்டு நிவாரண தொகை வழங்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்'' எனக் கோரிக்கை வைத்தார். அதைத்தொடர்ந்து விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக ஆளுநர் ரவியிடம் வழங்கினர். உங்கள் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக விவசாயிகளிடம் ஆளுநர் கூறினார்.