
மரத்தடி மாநாடு
வெயில் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது. கோடைக்காலம் என்பதால் குட்டைகளும் வற்றி விட்டன. தண்ணீருக்குத் தவித்தன ஆடுகள். சாலையோரமாக இருந்த அடிகுழாய்ப் பக்கமாக ஆடுகளை ஓட்டி வந்த ‘ஏரோட்டி’ ஏகாம்பரம், அடிகுழாயை அடிக்க அடிக்கக் கீழே விழுந்த தண்ணீரைக் குடித்துக் கொண்டிருந்தன ஆடுகள். அதே நேரம் வெயிலுக்குக் குடை பிடித்தபடி வீட்டை நோக்கிச் சாலையில் போய்க்கொண்டிருந்தார் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி.
குடையைப் பார்த்தவுடன், வாத்தியார் எனக் கண்டுகொண்ட ஏரோட்டி, “வாத்தியாரே....” என்று சத்தமாக அழைத்தார்.
சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்த வாத்தியார், அடிகுழாய் நோக்கி வந்தார்.
‘‘அடிகுழாய்ல ஆடுகளுக்குத் தண்ணி காட்டுறியா? வெயிலுக்கு முன்ன வீட்டுக்கு ஓட்டிட்டுப் போக வேண்டியதுதானே. வெயில் காலத்துல காலையில சீக்கிரமா மேய்ச்சலுக்கு விரட்டி, 11 மணிக்கெல்லாம் ஆடுகளை நிழல்ல அடைச்சிடணும். அதே மாதிரி சாயங்காலம் 4 மணிக்கு மேலதான் மேய்ச்சலுக்கே ஓட்டிட்டுப் போகணும்னு கால்நடை டாக்டருங்க சொல்றாங்கய்யா...” என்றார் வாத்தியார்.
‘‘நானும் அதுமாதிரிதான் செய்றேன். ஆனா, இன்னிக்கு சந்தைக்குப் போயிட்டு வரக் கொஞ்சம் நேரமாகிடுச்சு. ஆடுகளும் கொலை பட்டினியில இருந்துச்சுக... அதான் கொஞ்ச நேரம் மேயட்டுமேன்னு விட்டுட்டேன்’’ என ஏகாம்பரம் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, ‘காய்கறி’ கண்ணம்மாவும் அங்கு வந்து சேர ஆரம்பமானது மாநாடு.
‘‘வா.... கண்ணம்மா. காய்கறிகள் எல்லாத்தையும் வித்துட்ட போல இருக்கு. அதென்ன கூடையில மஞ்சளா இருக்கு’’ என்றார் ஏரோட்டி.
‘‘காய்கறியெல்லாம் வித்துப்போச்சு. சாப்பிடுறதுக்கு ரெண்டு மக்காச்சோள கதிர் வாங்கிட்டு வந்தேன்’’ என்ற காய்கறி, ‘‘இந்தாங்க வாத்தியாரே நீங்க சாப்பிடுங்க’’ என ஒரு கதிரை அவரிடம் கொடுத்தார்.
‘‘எனக்கு வேணாம் தாயீ... ஏகாம்பரம்தான் ரொம்ப நேரமா வெயில்ல ஆடு மேய்ச்சிட்டு இருக்காரு. அவருக்குக் கொடு’’ என்றார் வாத்தியார்.
ஒரு மக்காச்சோள கதிரை ஏரோட்டிக்குக் கொடுத்த காய்கறி, ‘‘நான் போய் மோட்டார் எடுத்து விடணும். கிளம்பறேன்’’ என்றபடி புறப்படத் தயாரானார்.
‘‘அவசரப்படாத கண்ணம்மா, கரன்ட் இல்லாம மோட்டார் போட்டுத் தண்ணி பாய்ச்சிருவியா? கரன்ட் இல்ல... எப்ப வரும்னே தெரியல’’ விரக்தி கலந்த சிரிப்போடு சொன்னார் ஏரோட்டி.
‘‘விவசாயத்துக்கு 24 மணி நேரமும் மும்முனை விவசாயம் கொடுக்கப்படும்னு அரசாங்கம் அறிவிப்புதான் வெளியிட்டுச்சு. ஆனா, அதனால எந்தப் பிரயோஜனமும் இல்ல. தேர்தலுக்காக ஒரு வாரம் கரன்ட் கொடுத்தாங்க. இப்ப அதுவும் இல்ல. திருவள்ளூர் மாவட்டத்துல பல இடங்கள்ல 19 மணி நேரம் மின்தடை இருக்காம். இதனால தண்ணி பாய்ச்ச முடியாம நொந்துப்போன விவசாயிக, சாலை மறியல்ல இறங்கிட்டாங்களாம். தமிழ்நாடு முழுக்க, இப்படித்தான் இருக்காம். மீன் பிடிக்கப் புழுவைப் போடுற மாதிரி, ஓட்டு வாங்குறதுக்காக 24 மணி நேரம் மின்சாரம்னு வெத்து அறிவிப்பு கொடுத்துட்டு, தேர்தல் முடிஞ்ச பிறகு, கண்டுக்காம இருக்காங்க’’ எரிச்சலாகச் சொன்னார் வாத்தியார்.
‘‘ ‘மூச்சுக்கு முந்நூறு தடவை, ‘நான் விவசாயி, சத்தியமா நான் விவசாயிங்கோ’ன்னு தேர்தல் பிரசாரத்துல முழங்கின எடப்பாடி, இப்ப எங்க இருக்காருன்னே தெரியல. கரன்ட் மட்டுமா... உரம் விலையும் ஏத்திட்டாங்கள்ல... விவசாயிக வருமானத்தை ரெண்டு மடங்கு ஆக்குறோம்... மூணு மடங்கு ஆக்குறோம்னு சொல்லிகிட்டு இருக்க மத்திய அரசு, வருமானத்தை ரெண்டு மடங்கு ஆக்குதோ இல்லையோ விலைவாசியை ரெண்டு மடங்கு ஏத்திக்கிட்டே இருக்கு. ரேடியோவுல பேசுற பிரதமர், தமிழ்ல ஒரு வார்த்தை, ஒரு திருக்குறள், தமிழ்நாட்டுல இருக்க ஒரு நபரைப் பத்தி பேசிட்டுப் போயிடுறாரு. ‘ஆஹா தமிழ்ல பேசிட்டாரு’ன்னு ஒரு கும்பல் கொண்டாடுது. ஆனா, உரம் விலை கூடினதைப் பத்தி பேச ஆள் இல்ல. எல்லாமே அரசியல்தான்’’ வெறுப்பாகச் சொன்னார் ஏரோட்டி.
‘‘உண்மைதான்யா. இப்ப கூட்டுறவு வங்கிகள்லயும் உரம் கிடைக்கிறதில்ல. அப்படியே உரம் கிடைச்சாலும் நாம ஒண்ணு கேட்டா அவங்க ஒண்ணு கொடுக்குறாங்க. இதுக்கெல்லாம் ஒரே வழி, இயற்கை வழி வேளாண்மைதான். யாரையும் நம்ப வேண்டியதில்ல’’ என்றார் வாத்தியார்.
‘‘கூட்டுறவு வங்கிகள்ல இப்ப நகைக்கடன் கொடுக்குறதையே நிப்பாட்டிட்டாங்க வாத்தியாரே. தேர்தல் முடிவு வர்ற வரைக்கும் நகைக்கடன் இல்லைன்னு சொல்லிட்டாங்க. அவசர ஆத்திரத்துக்குக்கூட நகைக்கடன் வாங்க முடியாம கஷ்டமா இருக்கு’’ என்றார் காய்கறி.
‘‘12,000 கோடி கடன் தள்ளுபடியில 5,000 கோடிதான் தமிழக அரசு ஒதுக்கீடு பண்ணியிருக்காம். மீதியிருக்க 7,000 கோடியை அடுத்து வர்ற அரசாங்கம்தான் ஏற்பாடு செய்யணும். தேர்தலுக்காக அறிவிச்சிட்டாங்க. ஆனா, எப்படிச் சமாளிக்குறதுன்னு தெரியாம முழிச்சுட்டு இருக்காங்களாம் கூட்டுறவுத்துறை அதிகாரிகள். அதனாலதான் கடனை நிப்பாட்டி வெச்சிருக்காங்களாம்’’ விளக்கம் சொன்னார் வாத்தியார்.

‘‘போன மார்கழியில மழை பெய்ஞ்ச மாதிரி, என்னிக்கும் இல்லாத திருநாளா இந்தத் தடவை சித்திரை முதல் தேதியில மழை பெய்சிருக்கு. நிலத்துல இன்னும் ஈரம் போகல. அதுக்குள்ள கோடை உழவு போடணும். அந்தச் செலவை நினைச்சா மலைப்பா இருக்கு’’ என்றார் ஏரோட்டி.
‘‘கவலையேப்படாதய்யா. நம்மள மாதிரி விவசாயிக பயன்பாட்டுக்காகத்தான், வேளாண் பொறியியல் துறை பல்வேறு கருவிகளை வாங்கிப் போட்டிருக்கு. பல மாவட்டங்கள்ல இப்ப புது டிராக்டர் வந்திருக்கு. தனியாரைவிடப் பாதி வாடகை தான். அதைப் பயன்படுத்திக்க.
நாம பயன்படுத்தாதனால, ரியல் எஸ்டேட் புரோக்கருங்க, கான்ட்ராக்ட்காரங்க பயன்படுத்திகிட்டு இருக்காங்க. விவசாயிகள் அதைப் பயன்படுத்த ஆரம்பிக்கணும். இந்தத் தடவை நான் அங்க இருக்கக் கருவிகள்ல எனக்குப் பயன்படுற கருவிகள் சிலது வேணும்னு இப்பவே பெயர் பதிவு பண்ணி வெச்சிருக்கேன். உங்களுக்கும் வேணும்னா, போய்ப் பெயர் பதிவு பண்ணி வெச்சிக்குங்க. முன்னுரிமை அடிப்படையில கருவிகள் கிடைக்கும்’’ என்றார் வாத்தியார்.
‘‘அங்க என்னென்ன கருவிகள் வாடகைக்குக் கிடைக்கும்னு விளக்கமாச் சொல்லுங்களேன்’’ ஆர்வமாகக் கேட்டார் காய்கறி.
‘‘ ‘12,000 கோடி கடன் தள்ளுபடியில 5,000 கோடிதான் தமிழக அரசு ஒதுக்கீடு பண்ணியிருக்காம். மீதியிருக்க 7,000 கோடியை அடுத்து வர்ற அரசாங்கம்தான் ஏற்பாடு செய்யணுமாம்.’’
‘‘டிராக்டர், தென்னை மட்டையைத் தூளாக்குற கருவி, விதைக்கும் கருவி, சோளத் தட்டை அறுவடை செய்யும் கருவி, செடிகள் நடும் கருவி, 9 கொழு கலப்பை, 5 கொழு கலப்பை, வார்ப்பு இறகு கலப்பை, ரோட்டோ வேட்டர், வைக்கோல் கட்டுற கருவி, வைக்கோல் உலர்த்தும் கருவி எல்லாமே இருக்கு. இப்ப சொன்ன எல்லாக் கருவி களுக்கும் டீசல், உபகருவிகள் உட்பட ஒரு மணி நேரத்துக்கு 340 ரூபாய்தான் வாடகை. மண் அள்ளும் கருவி(ஜேசிபி) 660 ரூபாய், உருளை பட்டை இருக்க ஹிட்டாச்சி கருவிக்கு ஒருமணி நேரத்துக்கு 1,440 ரூபாய், புல்டோச ருக்கு 840 ரூபாய், சக்கரத்துல ஓடுற நெல் அறுவடை இயந்திரத்துக்கு 875 ரூபாய், ரப்பர் உருளைபட்டை நெல் அறுவடை இயந்தி ரத்துக்கு 1,415 ரூபாய் வாடகை. இது எல்லா மாவட்டத்துலயும் இருக்க வேளாண்மைப் பொறியியல் துறையில இந்த மிஷின் எல்லாம் இருக்கு. முன்னுரிமை அடிப்படையிலக் கொடுப்பாங்க’’ என்றார் வாத்தியார்.
‘‘நல்ல தகவல் சொன்னீங்க வாத்தியாரே. நாளைக்கே போய், பதிவு பண்ணிட வேண்டியதுதான்’’ என்ற ஏரோட்டி, வெயில் வாட்டுது. “கிளம்பலாமா’’ என்றபடியே ஆடுகளை ஓட்டிக்கொண்டு கிளம்ப, முடிவுக்கு வந்தது மாநாடு.