ஆசிரியர் பக்கம்
மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

காபி, மிக்சர்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக அதிகாரிகள் நடத்திய கூட்டங்களுக்கு காபி, மிக்சர் வாங்க 47 கோடி ரூபாய்!’ என்றொரு செய்தி, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக வெளியாகி, அதிர்ச்சி கிளப்பியது.

இதையடுத்து, ‘விடியல் தி.மு.க அரசின் யோக்கியதையைப் பாருங்கள்’ என்று பலரும் அடித்து நொறுக்க ஆரம்பித்தார்கள்.

இந்நிலையில், ‘அது, 2017-ம் ஆண்டு செய்தி. அ.தி.மு.க ஆட்சியில் நடந்ததை, இப்போது பரப்பவிட்டு தி.மு.க மீது பழிபோடுகிறார்கள்’ என்கிற உண்மை, தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் 2007-ம் ஆண்டிலிருந்து நீர்வள, நிலவள திட்டம் உலக வங்கிக் கடன் உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. பொதுப்பணித்துறை, வேளாண்மை, மீன்வளம் உள்ளிட்ட சில அரசுத் துறைகள் மூலமாக 2007 - 2015-ம் ஆண்டு வரை ரூ.2,544 கோடி செலவில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் திட்டம், 2015-ம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து, அடுத்தகட்டத் திட்டங்களுக்காக 3,042 கோடி ரூபாய் கடன் கொடுங்கள் என்று அப்போதே உலக வங்கிக்கு அனுப்பப்பட்ட திட்ட அறிக்கையில்தான் ‘காபி, மிக்சர்... போன்றவற்றுக்காக சுமார் 47 கோடி ரூபாய்’ என்று குறிப்பிட்டுள்ளனர். இதுதான் அப்போதும் வெளியில் கசிந்து, சர்ச்சை ஆகியுள்ளது.

சுமார் 50 கோடி ரூபாயை காபி, மிக்சர் சாப்பிடுவதற்கு மட்டுமே செலவிட்டால், மேற்கொண்டு அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கான கமிஷன் மற்றும் கான்ட்ராக்டர் வைக்கும் லாபம் இவற்றையெல்லாம் கூட்டிக்கழித்தால்... ‘கடலூரில் கட்டப்பட்ட தடுப்பணை ஒரே ஆண்டில் உடைந்தது’ என்றுதானே நிஜ செய்தியாக மாறும்!

‘அது அ.தி.மு.க ஆட்சியில்...’ என்று சொல்லி தப்பித்துக்கொள்ளாமல், விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டு, ‘காபி, மிக்சர்’ என்று சொல்லியே கோடிகளை ஏப்பம்விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, இன்றைய தி.மு.க அரசு முன் வர வேண்டும். அத்துடன், தி.மு.க ஆட்சியில் அத்தகைய ஏப்பக்குரல்கள் கேட்காது என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

- ஆசிரியர்

கார்ட்டூன்
கார்ட்டூன்