
சாதனை
‘உலகப் பசுமைப் புரட்சியின் தந்தை’ என அழைக்கப்படுபவரும், நோபல் பரிசு பெற்றவருமான நார்மன் போர்லாக் பெயரில் ஒவ்வோர் ஆண்டும் விருது வழங்கப்படுகிறது. வேளாண் துறையில் சாதனை புரிபவர்களுக்கு வழங்கப்படும் இந்த விருது. இந்தாண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி மகாலிங்கம் கோவிந்தராஜூக்கு வழங்கப்பட்டுள்ளது.
நெல், கோதுமை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களில் ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகளே இந்த விருதை பெறுவது வழக்கம். இந்நிலையில்தான் சிறுதானியமான கம்பு பயிரில் உயிர் செறிவூட்டம் (Bio Fortified) பெற்ற கம்பு ரகங்களை உருவாக்கியதற்காக மகாலிங்கம் கோவிந்தராஜ், இந்த விருதை பெற்றிருப்பது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது.

மகாலிங்கம் கோவிந்தராஜூக்குப் பசுமை விகடன் சார்பில் வாழ்த்துகள் தெரிவித்துவிட்டு, இவருடைய வேளாண் ஆராய்ச்சி பயணம் குறித்துக் கேட்டோம். ‘‘என்னுடைய இயற்பெயர் கோவிந்தராஜ். என்னோட அப்பா பெயர் மகாலிங்கம். அவர் விவசாயி. தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அடுத்த உக்கநாடு மேலையூர் கிராமம்தான் எனது பூர்வீகம். அரசுப் பள்ளியில் படித்துதான் கல்லூரிக்குச் சென்றேன். கிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரியில் இளங்கலை வேளாண்மை படித்தேன். முதுகலை வேளாண்மை கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் படித்தேன். அதன்பிறகு 2011-ல் ஹைதராபாத்தில் உள்ள இக்ரிசாட்(International Crops Research Institute for the Semi-Arid Tropics-ICRISAT) என்னும் ஆராய்ச்சி நிலையத்தில் ரகங்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டேன்.
1990-களின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘கோல்டன் ரைஸ்’ பற்றி நிறையப் பேர் கேள்விப்பட்டிருப்பீர்கள். வைட்டமின்கள் நிறைந்த அரிசியைத்தான் கோல்டன் ரைஸ் என்று சொல்வார்கள். இந்த அரிசியைச் சாப்பிட்டால் கூடுதல் வைட்டமின்கள் கிடைக்கும். ஊட்டச்சத்து பற்றாக்குறைக்காக இந்த அரிசி அறிமுகப்படுத்தப்பட்டது. இதுபோன்ற கூடுதல் சத்துகள் கொண்ட உணவுப் பொருள்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று எண்ணினோம்.
கம்பு உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. ராஜஸ்தான், கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் கம்பு பயிரிடப்படுகிறது. கம்பில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. இதை மேலும் அதிகரிக்கும் பொருட்டு இரும்பு, துத்தநாகம்(ஜிங்க்) கூடுதலாக இருக்கும் வகையில் கம்பில் ஆராய்ச்சியை மேற்கொண்டேன். மூத்த விஞ்ஞானி கே.என்.ராய் என்பவரோடு இணைந்து இந்த ஆராய்ச்சியை இக்ரிசாட்டில் தொடங்கினோம். இந்த ஆராய்ச்சியைத் தொடங்கியதிலும் ஒரு காரணம் இருக்கிறது. தற்போது வெளியிடப்படும் நவீன ரகங்களில் அதிக மகசூலை நோக்கமாகக் கொண்டே வெளியிடப்படுகின்றன. அதேபோல் வெளியிடப்பட்ட ரகங்களில் ஊட்டச்சத்துகளின் அளவு மிகவும் குறைவாக இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில்தான் முதல் முறையாக 2014-ல் தன்சக்தி என்ற பெயரில் அதிகம் இரும்புச்சத்துக் கொண்ட வீரிய கம்பு ரகத்தை வெளியிட்டோம். அதனைத் தொடர்ந்து கம்பில் 9 ரகங்களை எங்கள் குழு சார்பாக வெளியிட்டோம்.

வழக்கமாக 1 கிலோ கம்பில் 40 மில்லி கிராம் இரும்புச்சத்து இருக்கிறது என்றால் நாங்கள் வெளியிட்ட ரகங்களில் 70-80 மில்லிகிராம் இருக்கும். இப்போதெல்லாம் கர்ப்பிணி பெண்களுக்குப் போலிக் ஆசிட் மாத்திரையைச் சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதேபோலக் குழந்தைகளும் சத்துப் பற்றாக்குறையால் பாதிக்கப்படுகிறார்கள். பெண்கள், குழந்தைகள்தான் ரத்தசோகை எனப்படும் அனீமியா நோயால் இந்தியாவில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு நபர், தினமும் தன்னுடைய உணவில் 200 கிராம் கம்பு எடுத்துக் கொண்டால் போதும் உடலுக்குத் தேவையான போதியளவு இரும்புச்சத்து கிடைத்துவிடும். இதன்மூலம் உடலுக்குத் தேவையான 80 சதவிகிதம் இரும்புச்சத்துக் கிடைக்கிறது. 100 சதவிகிதம் ஜிங்க் கிடைக்கிறது.

மகாராஷ்டிரா, ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் உயிர் செறிவூட்டம் பெற்ற கம்பை அதிகம் சாகுபடி செய்கிறார்கள். இந்திய அளவில் 1,20,000 விவசாயக் குடும்பங்கள் இந்தக் கம்பு ரகங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். ஆப்பிரிக்காவிலும் இந்தக் கம்பு ரகத்தை உற்பத்தி செய்கிறார்கள். இந்த ரகத்தைத் தமிழ்நாட்டின் வேளாண்மைத் துறைக்கு அனுப்பியிருக்கிறோம்” என்றவர் நிறைவாக, “ஒரு ரகத்தின் தேவை, சாகுபடி திறன், சத்துகளின் அளவு உள்ளிட்ட பல விஷயங்களைக் கருத்தில் கொண்டுதான் இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. என்னுடைய ஆராய்ச்சிக்கு உறுதுணையாக இருந்த சக விஞ்ஞானிகளுக்கும், எனக்கு ஆதரவு வழங்கிய இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக விஞ்ஞானிகளுக்கும் இந்த நேரத்தில் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். இந்த விருது குறித்து விவசாயியியான என்னுடைய அப்பாவிடம் சொன்னேன். மகிழ்ச்சி அடைந்தார். அனைத்து விவசாயிகளுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். இந்த விருதுக்குப் பிறகு ஒரு கிலோ கம்பில் 42 மில்லிகிராம் இரும்பு, 32 மில்லிகிராம் ஜிங்க் இருந்தால் மட்டுமே இனி உயர் விளைச்சல் ரகங்களை வெளியிட வேண்டும் என மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR) கொள்கை வகுத்திருக்கிறது. இது எங்கள் ஆராய்ச்சிக்குக் கிடைத்த வெற்றி” என்றார் மகிழ்ச்சியுடன்.