Published:Updated:

`பலே' பன்றி விரட்டும் கருவி..! அருப்புக்கோட்டை விவசாயின் முயற்சி!

விவசாயின் நூதன முயற்சி

``அதிகாரிங்க நடவடிக்கை எடுப்பாங்கனு நாங்களும் எத்தனை நாளைக்கு தான் வெள்ளாமை காட்டை வெறுமனே காட்டுப்பன்றிக்கு இரையாக்குறது. எதாவது செய்யனும்னு முடிவு செஞ்சோம். ஊருக்குள்ள சுத்துற நாய் குரைக்கிற சத்தத்துக்கு பன்றிகள் தெறிச்சி ஓடுறதை பார்த்தோம், தீர்வு கிடைத்தது.."

Published:Updated:

`பலே' பன்றி விரட்டும் கருவி..! அருப்புக்கோட்டை விவசாயின் முயற்சி!

``அதிகாரிங்க நடவடிக்கை எடுப்பாங்கனு நாங்களும் எத்தனை நாளைக்கு தான் வெள்ளாமை காட்டை வெறுமனே காட்டுப்பன்றிக்கு இரையாக்குறது. எதாவது செய்யனும்னு முடிவு செஞ்சோம். ஊருக்குள்ள சுத்துற நாய் குரைக்கிற சத்தத்துக்கு பன்றிகள் தெறிச்சி ஓடுறதை பார்த்தோம், தீர்வு கிடைத்தது.."

விவசாயின் நூதன முயற்சி

அருப்புக்கோட்டை அருகே பெரிய புளியம்பட்டி, பாளையம்பட்டி, கோபாலபுரம், கஞ்சநாயக்கன்பட்டி சுற்று வட்டாரப்பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது. இங்கு மானாவாரி பயிராக ஆயிரக்கணக்கான ஏக்கரில் கம்பு, சோளம் உள்ளிட்ட வித்துகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். கடந்த சில வாரங்களாக அருப்புக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதியில் பரவலான மழை பெய்ததால் இந்தப் பயிர்கள் செழித்து வளர்ந்து நிற்கிறது.

காட்டுப்பன்றிகள்
காட்டுப்பன்றிகள்
மாதிரி படம்

பயிர்களில் பால்பிடிக்கும் நேரத்தில் பல இடங்களிலும் இரைக்காக காட்டுப்பன்றிகள் மற்றும் மான்கள் விளைச்சல் காட்டுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதால் விளைச்சல் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். இதனால் செழித்து வளர்ந்த பயிர்களில் விளைச்சல் இல்லாமல் கைநஷ்டத்துக்கு பயிர் அறுவடை செய்யக்கூடிய சூழலை விவசாயிகள் சந்திக்க நேர்வதாக கஞ்சநாயக்கன்பட்டி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் வன விலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அருப்புக்கோட்டை தாசில்தார் அறிவழகன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். ஆனால், மனுவின் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை எனத்தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த விவசாயிகள், தங்களுக்கு தாங்களே உதவி செய்துகொள்ளும் வகையில் மானாவாரி காட்டுக்குள் புகும் வனவிலங்குகளை நூதன முறையில் விரட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, ரீசார்ஜ் செய்துக் கொள்ளும் வகையிலான மைக்செட்டில் நாய் குரைப்பது போன்று ஒலிப்பதிவு செய்து இரவு முழுவதும் ஒலிக்கச்செய்து வருகின்றனர்.

மைக்செட்டுடன் அழகர்சாமி
மைக்செட்டுடன் அழகர்சாமி

இந்த நூதன முயற்சி குறித்து, கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த விவசாயி அழகர்சாமியிடம் பேசினோம். "எங்க வீட்டுல இருந்து விளைச்சல் காட்டுக்கு வரனும்னா சுமார் 2 கி.மீ. நடக்கணும் எனக்கு மொத்தம் 5.36 ஏக்கர்‌ நிலம் இருக்கு. இதுல, ஒரு பகுதியில கம்பு பயிரும், மறுபுறம் சிவப்பு சோளமும் போட்ருக்கேன். விவசாயத்தை நம்பித்தான் பொழப்பு நடத்துறேன்.‌ இதுல கிடைக்குற லாபத்தை வச்சித்தான் அடுத்தது நான் விவசாயம் பார்க்கணும், வீட்டுக்கு தேவையானதை செஞ்சி தரணும்.

ஏற்கனவே, படைப்புழு தாக்குதலால் விவசாயிகள் எல்லாம் ரொம்ப நொடிந்து போயிட்டோம். பிறகு அதை சரிகட்ட பூச்சிமருந்து தெளிச்சோம். பருவமழையும் இந்தமுறை சரியான அளவு பெய்யல. காட்டுமழை தான் கிடைக்குது. மழை பெய்து கண்மாய்க்கு தண்ணீர் வந்தாத்தான் பயிர் செழிப்பாகும். ஆனா, இப்பவரை அதுக்கு வழியில்லாம இருக்கு. இப்போ பயிர்கள் பால்பிடிச்சி வருது. இந்த சமயத்துல, காட்டுக்குள்ள இருந்து காட்டுப்பன்றி, மான்கள் வந்து பயிரெல்லாம் நாசமாக்கிட்டு போயிடுது. ராத்திரி நேரத்துல மலையடிவாரம், காட்டுப்பகுதி ஒட்டியுள்ள மானாவாரி காட்டுக்குள்ள புகுந்து பயிரை இரைக்காக வேட்டையாடுதுக. ராத்திரி அதிகபட்சம் 10 மணி வரைக்கும் தான் எங்களால காவல் காக்க முடியும். அதுக்குப்பிறகு காட்டுக்குள்ள விழுகுற பனிக்குள்ள சத்தியமா நிக்க முடியல. சரி, 4 பேரா சேர்ந்து காவலுக்கு போவோம்னு முடிவு செஞ்சா, அதுல 2 பேரு, ராத்திரி முழுவதும் அங்கேயே இருக்க முடியுமானு கேட்டு ஒதுங்கி போறாங்க.

முடிஞ்ச வரைக்கும் வெடி போட்டு காட்டுபன்றிகளை விரட்டலாம். வெடி இல்லைனா அதுக்குப்பிறகு என்ன செய்யமுடியும். அதனால, அரசாங்கம் தான் தீர்வு சொல்லனும்னு அதிகாரிங்க கிட்ட மனு கொடுத்தோம். அதுக்கு இன்றைக்கு வரைக்கும் பதில் இல்லை. அதிகாரிங்க நடவடிக்கை எடுப்பாங்கனு நாங்களும் எத்தனை நாளைக்கு தான் வெள்ளாமை காட்டை வெறுமனே காட்டுப்பன்றிக்கு இரையாக்குறது. எதாவது செய்யனும்னு முடிவு செஞ்சோம். ஊருக்குள்ள, தெருவுக்குள்ள சுத்துற நாய் குரைக்கிற சத்தத்துக்கு பன்றிகள் தெறிச்சி ஓடுறதை பாத்திருப்போம். அதுக்காக, நாய் கொண்டுபோய் விளைச்சல் காட்டுக்குள்ள கட்டிப்போட முடியாதுதானே. அதனால, நாய் சத்தத்தை ரிக்கார்டு செஞ்சி அதை ஒலிப்பரப்புறது மூலமா காட்டுபன்றிகளை விரட்ட முடிவு செஞ்சோம்.

அழகர்சாமி
அழகர்சாமி

நாய் ஒரிஜினால குரைக்கும் போது, பன்றிகள் பயந்துபோறது சரி. ஆனால், மைக்செட்டுல ஒலிபரப்புற சத்தத்துக்கு பயந்துபோகுமானு சந்தேகம் இருந்துச்சு. சோதனை முயற்சிக்காக, 1700 ரூபாய் மைக்செட், 2 செட் பேட்டரி வாங்குனேன். இதுபோக 350 ரூபாய் பென்டிரைவ், அதுல நாய் குரைக்கும் சவுண்ட் தொடர்ச்சியா வர்ற மாதிரி பதிவு செய்ய 125 ரூபாய் செலவு செஞ்சேன். இனியும், அதிகாரிகளை நம்புனா இனி கதையாகாதுனு, நானே நேரடியா களத்துல இறங்குனேன். முதல் இரண்டு நாள் வீட்டுப் பக்கத்துல பன்றிகள் இருக்குற பகுதியில் அந்த சத்தத்தை ஒலிபரப்பி பார்த்தேன். பன்றிகள் பயந்து ஓடுச்சி. அந்த நம்பிக்கையில 2 பேட்டரிக்கும் சார்ஜ் போட்டு மைக்செட்டை விளைச்சல் காட்டுக்கு எடுத்துட்டு போனேன். அங்க, 3 சோளக்கதிரை ஒன்றாக சேர்த்துக் கட்டி, அதோட உச்சாணியில் மைக்செட்டை கட்டினேன். மைக்செட் கீழே விழாமல் இருக்க இரண்டு பக்கமும் அதை தாங்கி நிக்கிற மாதிரி கம்பு ஊன்றி நிலை நிறுத்தினேன்.

ராத்திரி 10 மணிக்கு நாய் குரைக்கும் சத்தத்தை ஆன் செஞ்சிட்டு வந்தேன். அதிகாலை 5.30 மணிக்கு நான் போயி ஆஃப் செய்ற வரைக்கும் சத்தம் கேட்டுச்சு. இப்படியே இரண்டு நாள் செஞ்சேன். காட்டுப்பன்றி என்னோட வெள்ளாமைக் காட்டுக்கு வரல. மாறாக, என்னோட சோளக்காட்டிலிருந்து சற்று உள்ள வேறொருவரின் காட்டுக்குள்ள புகுந்திருச்சுனு தகவல் கேள்விப்பட்டேன்.

`பலே' பன்றி விரட்டும் கருவி..!
அருப்புக்கோட்டை விவசாயின் முயற்சி!

அந்த விவசாயிகளுக்கும், நான் என்ன செஞ்சேன்னு சொன்னேன். அதைத்தொடர்ந்து, இப்போ அவங்களும் என்னைப்போலவே, மைக்செட் கட்டிவிட்டுருக்காங்க. நாய் குரைக்கும் சத்தம் கேக்குற தொலைவு வரைக்கும் காட்டுப்பன்றிகள், மான்கள் தொல்லை ஏற்படுறதில்லை. சத்தம் கேட்காத தொலைவுல இப்பவும் அட்டகாசங்கள் தொடரத்தான் செய்யுது. ஆனா விவசாயிக்கு எதுவும் கிடைக்காம மொத்தமா நஷ்டம் ஏற்படுறதுக்கு, லாபம் இல்லாத நஷ்டம் எவ்வளவோ பரவாயில்லனு பொறுத்திட்டு போறோம். ஆனாலும் இதெல்லாம் தற்காலிகமான தீர்வுதானே தவிர, நிரந்தரத்தீர்வுக்கு அரசாங்கம் தான்‌ எங்களுக்கு உதவி செய்யனும்" என மருகி பேசினார்.

அருப்புக்கோட்டை தாசில்தார் அறிவழகனிடம் பேசுகையில், "வனவிலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து விவசாயிகளிடமிருந்து புகார் மனுக்கள் வரப்பெற்றுள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளோம்.

`பலே' பன்றி விரட்டும் கருவி..!
அருப்புக்கோட்டை விவசாயின் முயற்சி!

இதுத்தொடர்பாக சமீபத்தில் நடைபெற்ற முடிந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. மாவட்டத்தில் குல்லூர்சந்தை, வத்திராயிருப்பு உள்பட பல பகுதிகளிலும் இதுபோன்று காட்டுப்பன்றி தொல்லை பயிர்கள் சேதமடைவதாக புகார்கள் வந்துள்ளன. எனவே மாவட்ட நிர்வாகம், காட்டுப்பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கைகளை அனுப்பி உள்ளது. அதற்கான‌ உத்தரவுகளை எதிர்பார்த்திருக்கிறோம். அரசின் உத்தரவுகள் கிடைத்ததும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும்" என்றார்.