ஆசிரியர் பக்கம்
மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

நஞ்சான நஞ்சராயன் குளம்... பறவைகளைப் பாதுகாக்குமா அரசு?

நஞ்சராயன் குளம்
பிரீமியம் ஸ்டோரி
News
நஞ்சராயன் குளம்

சூழல்

சரணாலயம் என்பது, உண்மையிலேயே பாதுகாப்புத் தரக்கூடிய இடமாக இருக்க வேண்டும். ஆனால், சரணாலயமே உயிருக்கு உலை வைக்கும் அளவுக்கு இருந்தால்..? இந்தக் கதியில்தான் இருக்கிறது, திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நஞ்சாரயன் குளம் பறவைகள் சரணாலயம்.

ஊத்துக்குளி அருகே சுமார் 440 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காட்சியளிக்கிறது நஞ்சராயன் குளம். இது பறவைகளின் சொர்க்கம் எனப் போற்றப்படுகிறது. உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான அரிய வகைப் பறவைகள் வந்து செல்கின்றன. இதனால்தான், இது பறவைகள் சரணாலய மாகத் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நஞ்சராயன் குளம்
நஞ்சராயன் குளம்

இந்தச் செய்திக்குள் நுழைவதற்கு முன்பாக, இந்தக் குளம் சரணாலயமாக அறிவிக்கப் பட்டதன் பின்னணி குறித்துப் பசுமை விகடனில் வெளியான தவறான சில தகவல் களைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். கடந்த 25.05.22 தேதியிட்ட பசுமை விகடன் இதழின் மரத்தடி மாநாடு பகுதியில்தான் இதுகுறித்த செய்தி இடம்பெற்றிருந்தது. அதில், ‘‘அந்தக் குளத்தைச் சில வருஷமா இயற்கை ஆர்வலர்கள் கவனிக்க ஆரம்பிச்சாங்க. குளத்துக்குள்ள வர்ற கழிவுத் தண்ணியைத் தடுக்க, சுத்திகரிப்பு நிலையத்தையும் அவங்களே கட்டுனாங்களாம். இதனால சுத்திகரிக்கப்பட்ட தண்ணி மட்டும் குளத்துல தேக்கப்படுது. இந்தக் குளத்துக்கு 179 வகையான உள்நாட்டு, வெளிநாட்டுப் பறவைகள் வருதாம். இயற்கை ஆர்வலர்கள் பாதுகாத்த அந்தக் குளத்தை, பறவைகள் சரணாலயமா அறிவிச்சிருக்கு தமிழ்நாடு அரசு’’ என்று குறிப்பிட்டிருந்தோம்.

இறந்து கிடக்கும் மீன்கள்
இறந்து கிடக்கும் மீன்கள்

உண்மையில், ‘‘இந்தக் குளத்தில் கழிவுநீர் கலக்காமல் தடுக்க வேண்டும். பறவைகள் அதிக அளவில் வருவதால் இதைச் சரணாலய மாக மாற்ற வேண்டும்’’ என்பதுதான் சூழலியல் ஆர்வலர்கள், பறவை ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினரின் பல ஆண்டுக் கோரிக்கை. மற்றபடி தன்னார்வலர்களே முன்னின்று கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்தார்கள், தூய்மையான நீர் அங்கே தேக்கப்படுகிறது என்று பசுமை விகடனில் இடம்பெற்ற தகவல்கள் தவறானவை.

(சரணாலயமாக அறிவிக்கப்பட்டது குறித்துத் தன்னார்வலர்கள் மத்தியில் பரவிய சில பல தகவல்களின் அடிப்படையில் அது எழுதப்பட்டுவிட்டது. ஆனாலும், உரிய கவனத்துடன் அவற்றை உள்வாங்கி எழுதாமல், தவறான தகவல்களை இடம்பெறச் செய்தமைக் காக வருந்துகிறோம். - ஆசிரியர்). சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்தது தமிழக அரசுதான். ஆனால், அது சரிவர இயக்கப்படவில்லை. ஆக, பறவைகள் சரணாலயமாக அறிவிக்கும் அளவுக்கு அந்தக் குளம் தூய்மையாகப் பாதுகாக்கப்படவில்லை. மேலும் சாயப் பட்டறைகளின் கழிவுநீரால், இந்தக் குளம் நஞ்சாகிக் கிடக்கிறது என்பதுதான் உண்மை.

செயல்படாத சுத்திகரிப்பு நிலையம்
செயல்படாத சுத்திகரிப்பு நிலையம்

இந்த விவரங்களை, அப்பகுதியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் நடராஜன் நம் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

உடனடியாக, நஞ்சராயன் குளத்துக்கு நேரில் சென்றோம். குளத்தின் பிரமாண்ட தோற்றம் நம்மைப் பிரமிக்க வைத்தது. பறவைகளின் வருகை பரவசப்படுத்தியது. ஆனால், குளத்தின் அருகில் செல்லச் செல்ல துர்நாற்றம் குடலைப் புரட்டியது. மீன்கள் செத்து மிதந்துகொண்டிருந்தன. சாயப்பட்டறைகளின் கழிவுநீர் கலப்பதால், குளம் முழுவதும் நஞ்சாகியிருந்தது.

குளத்தைத் தூய்மையாகப் பராமரிப்பதற்காக, 2015-ம் ஆண்டு 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இங்கு சுத்திகரிப்பு நிலையம் அரசாங்கத்தால் அமைக்கப் பட்டது. ஆனால், தற்போது கட்டடம் மட்டும் அப்படியே இருக்க, சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

நடராஜன், ரவீந்திரன்
நடராஜன், ரவீந்திரன்


இதைப் பற்றி ஆதங்கம் பொங்க நம்மிடம் பேசிய நடராஜன், “இந்தக் குளத்தால இப்பகுதி மக்கள் நிறைய பலன் அடைஞ்சுகிட்டு இருந்தாங்க. ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு இந்தக் குளம் கைகொடுத்துக்கிட்டு இருந்துச்சு. இப்ப எந்தப் பராமரிப்பும் இல்லை. முறையா பாதுகாக்கப் படவும் இல்லை. இந்தப் பகுதியில நிறைய சாயப்பட்டறைகள் செயல்பட்டுக்கிட்டு இருக்கு. அங்கயிருந்து வரக்கூடிய ரசாயன நச்சு கழிவுநீரும், குடியிருப்புப் பகுதிகள்ல இருந்து வரக்கூடிய கழிவுநீரும், நஞ்சராயன் குளத்துல கலக்காமல், வேற பகுதிக்குக் கொண்டு போக, வழித்தடம் இங்க அமைக்கப் பட்டிருக்கு. இந்தச் சூழ்நிலையில மூணு மாசத்துக்கு முன்ன அதுல உடைப்பு ஏற்பட்டு, கழிவுகள் எல்லாம் இந்தக் குளத்துல கலந்துகிட்டு இருக்கு. அவிநாசி பக்கத்துல உள்ள நல்லாற்றுல இருந்து தான் இந்தக் குளத்துக்குத் தண்ணீர் வந்தாகணும். அந்த வழித்தடத்துல 200-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் செயல்பட்டுக்கிட்டு இருக்குறதுனால, அங்கயிருந்து வெளியேத்தப்படற கழிவுகளும் இந்தக் குளத்துலதான் கலக்குது. தண்ணீர்ல நச்சுத்தன்மை அதிகமானதால, மீன்கள் செத்து மிதக்குது. இந்தக் குளம் எந்தளவுக்கு மாசுடைஞ்சு மோசமா இருக்குங் கறதுக்கு இதுதான் கண்கூடான உதாரணம்.

கழிவுநீர் இந்தக் குளத்துல நேரடியா கலக்காமல் தடுத்து, சுத்திகரிப்பு செஞ்சு விடுறதுக்காகத்தான் இங்க சுத்திகரிப்பு நிலையம் அமைச்சது அரசாங்கம். ஆனால், அது செயல்பாட்டுக்கு வரவே இல்லை. உடனடியாக இங்க மேம்படுத்தப்பட்ட சுத்திகரிப்பு நிலையம் அமைக்கணும்னு, தமிழக முதலமைச்சர், பொதுப்பணித்துறை, மாவட்ட நிர்வாகத்துக்கும் கோரிக்கை மனு அனுப்பினோம். எந்த நடவடிக்கையும் இல்லை. கழிவுகளைத் தடுக்குறதுக்கும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படல. இதே நிலை தொடர்ந்துகிட்டு இருந்தா, இங்க வரக்கூடிய பறவைகளும் பாதிக்கப்படும். பறவைகள் சரணாலயம்னு பெயரளவுக்குச் சொன்னா போதாது. அதுக்கான தகுதியையும் ஏற்படுத்தணும்’’ என்று சொன்னார்.

கழிவு நீர்
கழிவு நீர்

திருப்பூர் இயற்கைக் கழகம் அமைப்பின் தலைவரும், பறவைகள் ஆர்வலருமான ரவீந்திரன், “2009-ம் வருஷத்துல இருந்து நாங்க இந்தக் குளத்துக்காகக் குரல் கொடுத்துக்கிட்டு வர்றோம். கோடைக் காலத்துலகூட இந்தக் குளம் வறண்டு போகாது. வெளிநாடுகள்ல கடுங்குளிர் சீஸன் இருக்குறப்ப, அங்க இருந்து பல்லாயிரக்கணக்கான பறவைகள் இங்க வருது. இங்க உள்ளூர் பறவை களும் இளைப்பாறுது. இதனாலதான், இந்தக் குளத்தைப் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கணும்னு கோரிக்கை வைச்சோம். இதுக்காக நிறைய முயற்சிகள் எடுத்தோம். இப்ப, இந்தக் குளத்தைப் பறவைகள் சரணாலயமாக அறிவிச்சது மகிழ்ச்சி தான். அதேசமயம், இந்தக் குளத்து நீரைத் தூய்மையா பராமரிக்க, போர்க்கால அடிப்படையில நடவடிக்கை எடுக்கணும். பறவைகள் சரணாலயமா அறிவிக்கப் பட்டதுனால, இந்தக் குளம் பொதுப் பணித்துறையோட கட்டுப்பாட்டுல இருந்து வனத்துறையோட கட்டுப்பாட்டுக்கு போயிடும். அவங்களாவது முறையா பராமரிச்சு பறவைகளைப் பாதுகாப்பாங்கனு நம்புறோம்’’ எனத் தெரிவித்தார்.

பகுதி பொதுமக்களிடம் பேசிய போது, “பொதுப் பணித்துறை அதிகாரிகள் முறையா கண்காணிக் காததால, இந்தக் குளம் பல விதங்கள்லயும் சீரழிஞ்சுகிட்டு இருக்கு. இங்க நிறைய சீமைக் கருவேல மரங்கள் இருந்துச்சு. அதுலதான் பறவைகள் வந்து உட்கார்ந்துகிட்டு இருந்துச்சு. அந்த மரங்களை எல்லாம் யாரோ வெட்டிக்கிட்டு போயிட்டாங்க. மது குடிக்குறவங்க, பாட்டில்களை இங்கேயே வீசிட்டு போயிடுறாங்க.

குளத்தில் கலக்கும் கழிவுநீர்
குளத்தில் கலக்கும் கழிவுநீர்


சாயப்பட்டறை முதலாளிங்க, அதிகாரி களையும் அரசியல்வாதிகளையும் தங்களோட கைக்குள்ள போட்டுருக்குறது னாலதான், குளத்துல கழிவுநீர் கலக்கறது தடுக்கப்படாமல் இருக்கு. இந்தக் குளமே அவங்களோட மறைமுகக் கட்டுப்பாட்டுலதான் இருக்கு. இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டினாதான் குளத்தையும் இங்கவுள்ள பறவைகளையும் பாதுகாக்க முடியும். குளத்தைச் சுற்றிலும் பசுமைப் பரப்பை அதிகரிக்க, குறுங்காடு அமைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கணும்’’ என்கிறார்கள்.

வினீத்
வினீத்

இது குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத்திடம் நாம் பேசியபோது, ‘‘நிலத்தடி கழிவுநீர்த் திட்டத்தை இங்கு செயல்படுத்த அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். அது தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளது. அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், மக்கள் வசிப்பிடங்களில் இருந்து கழிவுநீர் குளத்தில் கலப்பது தடுக்கப்பட வாய்ப்புள்ளது. சாயப்பட்டறைகளைப் பொறுத்தவரை சம்பந்தபட்ட நிறுவனங்களில் தனித்தனியாகச் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, சாயக்கழிவுகள் வெளியேற்றப்படுவது வெகுவாகக் குறைந்து விட்டது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து குளத்தின் நீரை ஆய்வு செய்து வருகிறது” என்று சொன்னார்.

உண்மமைதான், மாசுக்கட்டுப்பாடு வாரியம் தன் கடமையைச் செய்வதும், சாயப் பட்டறைக்காரர்கள் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்திருப்பதும் உண்மைதான். ஆனால், அவையெல்லாம் முறைப்படி செயல் படுகின்றனவா என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது. அவை செயல்படவில்லை, மாசுக்கட்டுப்பாடு வாரியமும் தூங்குகிறது என்பதற்கான உயிர் சாட்சி யாகத்தான் நஞ்சராயன்குளம் சீர்கெட்டுக் கிடக்கிறது. சுற்றுச்சூழல் அணியெல்லாம் வைத்து கட்சியை வளர்த்துக்கொண்டிருக்கும் இன்றைய ஆளும் தி.மு.க அரசு, இதன் மீது கவனத்தைத் திருப்புமா என்று பார்ப்போம்!